அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு ஆண்டவர் இருக்கிறார்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6415
நகரமொன்றில் செருப்பு தைக்கும் மனிதன் ஒருவன் வாழ்ந்தான். அவனுடைய பெயர் மார்ட்டின் அவ்டேயிச். ஒரு கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் அவனுக்கு ஒரு சிறிய அறை இருந்தது. அதன் ஒரு ஜன்னல் வழியாக தெருவைப் பார்க்கலாம். அதன் வழியாக தெருவில் நடந்து செல்பவர்களின் பாதங்களை மட்டும் ஒருவர் பார்க்கலாம். ஆனால், காலணிகளை வைத்தே மனிதர்களை அடையாளம் கண்டு பிடித்து விடுவான் மார்ட்டின்.
அவன் அந்த இடத்தில் நீண்ட காலமாக வசிப்பதால், ஏராளமான மனிதர்களை அவனுக்கு பழக்கமுண்டு. அங்கிருப்பவர்களின் காலணிகளில் ஒன்றோ இரண்டோதான் அவன் கைபடாதவைகளாக இருக்கும். அதனால் ஜன்னல் வழியாக அவன் தன்னுடைய கைத்தொழிலின் நேர்த்தியை காலணிகளில் பார்க்கிறான் என்றுதான் அர்த்தம். அவற்றில் சில காலணிகளை அவன் நேரடியாகச் செய்திருப் பான். சிலவற்றை ஒட்டு போட்டிருப்பான். சிலவற்றைத் தைத்திருப் பான். வேறு சில காலணி களுக்கு அவன் புதிதாக மேற்பகுதி அமைத்துத் தந்திருப்பான். அவன் எவ்வளவோ காலணி களைச் செய்திருக்கிறான். அவன் எப்போதும் செய்யும் தொழிலை ஒழுங்காகச் செய்வான். நல்ல தரமான பொருட்களை பயன் மார்ட்டின் எப்போதும் ஒரு நல்ல மனிதனாகவே இருந்து வந்திருக்கிறான். எனினும், வயது அதிகமாகி விட்டதால் அவன் தன்னுடைய ஆன்மாவைப் பற்றியும் கடவுளிடம் நெருங்கிச் செல்வதைப் பற்றியும் அதிகமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். தான் தனியாகத் தொழில் பண்ணாமல் வேறொரு முதலாளிக்குக் கீழே பணியாற்றும்பொழுதே அவனுடைய மனைவி மூன்று வயதுள்ள ஒரு பையனை அவனிடம் விட்டுவிட்டு இந்த உலகை விட்டுப்போய் விட்டாள். அவனுடைய மூத்த குழந்தைகள் யாரும் உயிருடன் இருக்கவில்லை. அவர்கள் எல்லாரும் சிறு குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார்கள். முதலில் சிறு வயது மகனை ஊரிலிருக்கும் தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு அனுப்பி வைக்கத்தான் மார்ட்டின் நினைத்தான். ஆனால், பையனைப் பிரிந்து இருப்பதற்கு அவன் மிகவும் கவலைப்பட்டான். அவன் நினைத்தான்: "அறிமுகமில்லாத அந்தக் குடும்பத்துல போய் வளர்றதுன்றது என் சின்னப் பையனுக்கு உண்மையிலேயே ரொம்பவும் கஷ்டமான விஷயம்தான். அவனை என் கூடவே நான் வச்சிருக்குறதுதான் சரி..."
மார்ட்டின் தன் முதலாளியை விட்டு விலகி தன்னுடைய சிறு மகனுடன் தனியே வசிக்கக் கிளம்பினான். ஆனால், அவனுக்கும் பிள்ளைக்கும் சிறிதுகூட அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தச் சிறுவன் படிப்படியாக வளர்ந்து ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து தன் தந்தை மகிழும் வண்ணம் அவனுக்குத் தொழிலில் பக்கபலமாக இருக்கும் நிலையை அடைந்திருக்கும் நேரத்தில் கடுமையான காய்ச்சல் வந்து அவனை பாதிக்க, அவன் ஒருநாள் மரணமடைந்து விட்டான். மார்ட்டின் தன் மகனை மண்ணில் புதைத்தான். அதற்குப் பிறகு வாழ்க்கைமீதே அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. எந்த விஷயத்திற்கும் அவன் சந்தோஷப்படுவதில்லை. கடவுளுக்கு எதிராக அவன் மனதிற்குள் முணுமுணுத்தான். மனம் முழுதும் கவலையுடன் அவன் கடவுளைத் திரும்பத் திரும்ப பிரார்த்தனை செய்தபடி இருப்பான். தான் அன்பு செலுத்திய தன்னுடைய ஒரே மகனின் உயிரை எடுத்துவிட்டு, வயதான மனிதனான தன்னை ஏன் உலகில் இன்னும் வாழவைக்க வேண்டும், தன்னையும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று அவன் கடவுளிடம் கேட்டான். அதற்குப் பிறகு மார்ட்டின் தேவாலயத்திற்குப் போவதை நிறுத்திக் கொண்டான்.
ஒருநாள் மார்ட்டினின் பூர்வீக கிராமத்தைச் சேர்ந்த- கடந்த எட்டு வருடங்களாக புனிதப் பயணம் போய்க் கொண்டிருக்கும் ஒரு வயதான மனிதர் ட்ராய்ட்சா மடத்திலிருந்து வரும் வழியில் அங்கு வந்தார். மார்ட்டின் மனம் திறந்து தன்னுடைய எல்லா கவலைகளையும் கூறினான்.
“எனக்கு இனிமேல் இந்த உலகத்துல வாழவே பிடிக்கல.” அவன் சொன்னான்: “நான் கடவுள்கிட்ட கேட்கணும்னு நினைக்கிறது ஒண்ணே ஒண்ணுதான். நான் சீக்கிரம் சாகணும். எந்தவித நம்பிக்கை யும் இல்லாம நான் இப்போ இந்த உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கேன்.”
அதைக் கேட்டு அந்த வயதான மனிதர் சொன்னார்: “இப்படி யெல்லாம் மனம் போனபடி பேசுறதுக்கு உனக்கு உரிமையே இல்ல, மார்ட்டின். நாம கடவுளோட செயல்களைப் பற்றி தீர்மானிக்கவே முடியாது. நாம அதைப் பற்றி எந்தவித அர்த்தமும் சொல்லக் கூடாது. அவர் தீர்மானிக்கிறாரு. நடக்குது. அவ்வளவுதான். உன் மகன் மரணத்தைத் தழுவி, நீ உயிரோட இருக்கணும்ன்றது கடவுளோட விருப்பம்னா, அப்படித்தான் நடக்கும். நீ உன் சொந்த சந்தோஷத்தை நினைக்கிறே. அதனாலதான் இந்த வெறுமை தோணுது!”
“அப்படின்னா ஒரு மனிதன் எதுக்காக வாழணும்?” மார்ட்டின் கேட்டான்.
“கடவுளுக்காக, மார்ட்டின்.” அந்த வயதான மனிதர் சொன்னார்: “அவர்தான் உனக்கு வாழ்கைன்ற ஒண்ணைத் தர்றாரு. அவருக்காக நீ வாழ்ந்துதான் ஆகணும். அவருக்காக வாழப் பழகிட்டா, உனக்கு எந்தவித வருத்தங்களும் மனசுல உண்டாகாது. எல்லா விஷயங்களும் உனக்கு சாதாரணமானதா தெரியும்.”
மார்ட்டின் அமைதியாக இருந்தான். பிறகு கேட்டான்: “கடவுளுக்காக ஒரு மனிதன் வாழுறதுன்னா எப்படி?”
அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார்: “ஒரு மனிதன் கடவுளுக்காக வாழுறது எப்படின்றதை கிறிஸ்துவே நமக்குக் காட்டியிருக்காரு. அதை நீ படிச்சிருக்கியா? இல்லைன்னா புனித நூல்களை வாங்கிப் படிச்சுப்பாரு. கடவுள் எப்படி உன்னை வாழ வச்சுக்கிட்டு இருக்காருன்றதை நீ தெரிஞ்சுக்கலாம். உனக்கு என்னவெல்லாம் தெரியணுமோ, அவை எல்லாமே அந்த நூல்கள்ல இருக்கு!”
அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மார்ட்டினின் இதயத்திற்குள் ஆழமாக நுழைந்தன. அன்றே அவன் போய் தனக்கென்று பெரிய அளவில் இருந்த ஒரு புனித நூலை வாங்கிக் கொண்டு வந்து படிக்க ஆரம்பித்தான்.
முதலில் விடுமுறை நாட்களில் மட்டும் அதைப் படிக்க வேண்டும் என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால், படிக்க ஆரம்பித்தவுடன் தன்னுடைய மனம் மிகவும் எளிமையாக இருப்பதைப்போல் உணர்ந்ததால் தினந்தோறும் அதைப் படிப்பது என்ற முடிவுக்கு அவன் வந்தான். சில நேரங்களில் அவன் படிப்பதில் மிகவும் ஆழமாக மூழ்கி விடுவான். நூலில் முழு கவனமும் இருக்கும்போது விளக்கில் இருக்கும் எண்ணெய் தீர்ந்து விளக்கு அணைந்துபோன சம்பவம்கூட நடந்ததுண்டு. தினமும் இரவு நேரங்களில் தொடர்ந்து அவன் அதைப் படித்தான். அந்த நூலை மேலும் படிக்கப் படிக்க, அவனிடமிருந்து கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும், தான் கடவுளுக்காக எப்படி வாழ்வது என்பதையும் தெளிவாக அவன் புரிந்து கொண்டான்.