பயணம் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7370
ஆனால், அடுத்த நிமிடத்திலேயே ஒரு சிரிப்புடன் நான் நினைத்துப் பார்த்தேன். இங்கு ஒரு இளைஞர் காலம் வருவதற்கு முன்பே மரணமடைந்திருக்கிறார். அப்படியென்றால், என் ஆடையில் அழுக்கு படிந்ததுதான் விஷயமே!
எனக்கு வெட்கமாக இருந்தது.
சுயநலத்திலிருந்து மனிதன் எந்தக் காலத்திலும் விடுதலை பெறவே முடியவில்லையே!
நடத்துநர் வந்தார்.
நான் சொன்னேன்: 'ஒரு பேராம்ப்ர...'
அவர் சந்தேகத்துடன் என்னையே பார்த்தார்.
'நீங்கள் எங்கேயிருந்து வர்றீங்க?'
நான் கூறினேன்: 'கண்ணூரிலிருந்து... என்ன?'
'பேராம்ப்ரவிற்கு பேருந்து இல்லை, இது தச்சங்குன்னு வரைதான் போகும்.'
அதை நான் எதிர்பார்க்கவில்லை.
சிறிது நேரம் திகைப்படைந்து அமர்ந்து விட்டு, ஒரு முட்டாளைப் போல நான் சொன்னேன்: 'தச்சங்குன்னு...!'
நடத்துநர் டிக்கெட் புத்தகத்தை எடுத்துக் கொண்டே கேட்டார்: 'கிழிக்கட்டுமா?'
எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வயதான முஸ்லீம் பெரியவர் கூறினார்:
'இடிந்த கடவுக்குள் நீர் புகுந்து மூன்று நாட்களாகி விட்டன...'
'குலப்பச்சாலில் இருந்து பேருந்து கிடைக்கும்.'
குலப்பச்சால், தச்சங்குன்னு, பேராம்ப்ர...
பேராம்ப்ர, இடிந்த கடவு, குலப்பச்சால்...
குலப்பச்சால்...
தச்சங்குன்னிலிருந்து இடிந்த கடவிற்கு நடப்பதற்கு நாங்கள் நான்கைந்து பேர் இருந்தோம். அவர்களில் யாரும் பேரம்ப்ரய்க்கு செல்லக் கூடியவர்களாக இல்லை. மூன்று பேர் பய்யோளிக்குச் செல்லக் கூடியவர்கள். இரண்டு பேர் இரிஞ்ஞத்திற்கு. அவர்களில் அந்த வயதான முஸ்லீம் பெரியவரும் இருந்தார். மழையில் நாங்கள் கால்களை நீளமாக வைத்து, வேகமாக நடந்தோம். பாதையில் நீர் இல்லை.
வயதான முஸ்லீம் பெரியவர் கூறினார்:
'கையில் இருக்குற கொஞ்சம் தேங்காய்களைக் கொடுக்கலாம் என்று பார்த்தால், வாங்குறதுக்கு ஆள் இல்லை.'
'தேங்காயே இல்லைன்னு நினைச்சுகோங்க.'
'அப்படியே இல்லைன்னாலும், இந்த வெள்ளத்தில் பறிக்கிறதுக்கு யார் இருக்காங்க? கொண்டு போறதுக்கு யார் இருக்காங்க?
இரிங்ஙத்திற்குச் செல்ல வேண்டிய ஆள் சொன்னார்:
'ஒரு ஆள் ஒரு காரியத்திற்கு உதவி செய்யிறதா சொன்னாரு. மூணு நாட்களாக போய்க் கொண்டிருக்கிறேன். பார்க்க முடியல.'
பய்யோளிக்குச் செல்ல வேண்டிய ஆள் சொன்னார்:
'இந்த வருடம் என் வீடு இடிஞ்சு விழுந்திடும்!'
அவருடைய குரலில் அடக்க முடியாத கவலை நிறைந்திருந்தது.
நான் எதுவும் கூறவில்லை. மழை பெய்து கொண்டிருந்தது. மண் அட்டைகள் முனகின.
நான் நினைத்துப் பார்த்தேன்: எல்லோருக்கும் அவரவர்களுக்கென்று இருக்கக் கூடிய பிரச்னைகள் இருக்கின்றன. அவர்கள் அவை எல்லாவற்றையும் கூறுகிறார்கள்.
நானோ?
எனக்கும் பிரச்னை இல்லையா?
ஆனால், அதை என்னால் வெளிப்படையாக கூற இயலாது, நேற்று... நான் நீண்ட பெருமூச்சை விட்டேன்.
கங்காதரனுக்கு பிரச்னைகள் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கிடைத்திருக்கிறது.
ஒரு வகையில் பார்த்தால் மரணம் எவ்வளவு நல்லது!
தூரத்தில் நதி தெரிந்தது. நான் காலை நீட்டி வைத்து, வேகமாக நடந்தேன்.
சாயங்கால விரைவு பேருந்திலோ இல்லாவிட்டால் இரவு வண்டியிலோ நான் திரும்பி வர வேண்டும்.
ஒரு பாறைக்கும் புதருக்கும் அருகில் பாதை வலது பக்கமாக திரும்பி, படிப்படியாக சரிந்து, நீரில் போய் முடிந்தது.
நான் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றேன். எனக்கு முன்னால் நீர் நிறைந்து காணப்பட்டது. நீர்... நீர்...
அந்த இக்கட்டான சூழ்நிலையில் காணப்பட்ட நீரையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றபோது, என்னுடைய கால்கள் சோர்வடைந்து, பார்வை சக்தி குறைந்து, சரீரமெங்கும் தளர்ச்சி உண்டானது.
மேலே இருண்ட வானம். கீழே விடாது ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளம். அவற்றுக்கு மத்தியில் மனிதன் முற்றிலும் செயலற்றுப் போயிருந்தான்.
நான் யாரிடம் என்றில்லாமல் கேட்டேன்:
'இதுதான் இடிந்த கடவா (உடைந்த ஏரியா?)?'- இடிந்து விழப் போகும் தன்னுடைய வீட்டைப் பற்றி கூறி, வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அந்த இரிங்ஙத்தைச் சேர்ந்த மனிதர் சொன்னார்:'
'பத்திரம்... நீரோட்டமும், ஆழமும் உள்ள இடம். இரண்டு வருடத்துக்கு முன்பு ஒரு ஆள் இறந்து விட்டார்...'
எனக்கு மேலும் களைப்பு உண்டானது.
கிழக்கு திசையிலும், மேற்கு திசையிலும் இருந்த வீடுகளும், தெற்குப் பகுதியிலிருந்த கடைகளும் தெரியக் கூடிய தூரம் வரை நீரில் மூழ்கிக் கிடந்தன. எனக்கு முன்னால் இருந்த கடையின் வாசலில் நீர் வளையமிட்டு மோதிக் கொண்டிருந்தது. கடை மூடப்பட்டுக் கிடந்தது. கடையின் மேற்கு திசையில் சற்று தள்ளி, முக்கால் பகுதி கீழே சாய்ந்து விழுந்திருந்த ஒரு மரத்திற்கு முன்பு சிலர் படகை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
சாலைக்குக் குறுக்கே சுமார் ஐம்பதடி நீளத்தில் நீர் மிகவும் பலமாக ஓடிக் கொண்டிருந்தது.
'வாங்க... உங்களுக்கு இடத்தைப் பற்றி உறுதியாக தெரியாது, வெறுமனே குழம்பிப் போய் நிற்காதீங்க. எங்களோட ஊருக்கு வந்து...'
அந்த கைகள் இரும்பைப் போல இருந்தன.
நாங்கள் நீரைக் கிழித்துக் கொண்டு மற்றவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தோம்.
'இப்ராஹிம், படகு இல்லையா?'
'தெரியலையே, ஆஜிக்கா.'
இரண்டு மணி நேரமாக இந்த நீரில் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறோம்.
தேங்காய் பறிப்பதற்காக போயிருக்கிறாராம்.
'அவனுடைய பெரிய செயல்தான்!'
'அப்படிச் சொல்லாதீங்க...'
'பிறகு... என்ன சொல்றது? அவனோட... யாராவது அழைப்பதற்கு போயிருக்காங்களா?'
தூரத்தில் நீரைத் தொட்டுக் கொண்டிருக்கும் தென்னை மரத்தின் உச்சிகளுக்கு மத்தியில் ஒரு படகு நீங்கி வருவது தெளிவற்று தெரிந்தது.
'ஏய் பு....'
அந்த குரல் அங்கு எல்லா இடங்களிலும் எதிரொலித்தது.
'அது வேறு ஏதோ படகு...'
குளிர்.
இருட்டு.
கடவுளே!
'இரண்டு மணி நேரமாக இந்த நீரில் நிற்க ஆரம்பித்து...'
மீண்டும் யாரோ பெரிய வெறுப்புடன் கூறினார்கள். நாங்கள் மொத்தம் பதினைந்து பேர் இருந்தோம்.
நான் எனக்குள் கூறிக் கொண்டேன்:
'இன்று சேராம்ப்ரயை அடைய முடியும்னு தோணல.'
யாரிடம் என்றில்லாமல் நான் கேட்டேன்:
'இங்கே எப்போதும் படகு இருக்கும்ல?'
நீரில் நின்று கொண்டிருப்பதைப் பற்றி குறைப்பட்டுக் கூறிய மனிதர் சொன்னார்:
'இது ஒரு ஏரி இல்லை சார்...'
அவர் தன்னுடைய பலவீனமான குரலில் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.
'ஆனால், இங்கு ஒரு ஏரிக்கு இருக்க வேண்டிய எல்லா தகுதிகளும் இருக்கின்றன.'
'சரிதான்....'
அவர் சொன்னார்:
'இந்த வழியா போவது உங்களுக்கு இது முதல் தடவையாக இருக்க வேண்டும்.'
நான் கூறினேன்:
'இல்லை... கடந்த டிசம்பரில் வந்திருக்கிறேன்.'
'அன்று வெள்ளப் பெருக்கு உண்டாகவில்லை.'