பயணம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7370
பயணம்
டி.பத்மநாபன்
தமிழில் : சுரா
இறுதியில் பேருந்து வந்தது.
சாய்ந்து கிடந்த சாலையின் தூரத்து எல்லையில் பேருந்து மெதுவாக தோன்றியபோது, முதலில் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருந்தது. பேராம்ப்ரயிலிருந்து பாலுஸ்ஸேரி வழியாக கோழிக்கோட்டிற்குச் செல்லக் கூடிய, நான் பயணம் செய்ய வேண்டிய பேருந்துதானே அது! எட்டு மணிக்கு பேருந்து புறப்பட வேண்டும். ஆனால், பத்து மணி தாண்டியும், பேருந்தைக் காணவில்லை.
இன்று... ஒருவேளை பேருந்து இல்லாமலிருக்கலாம். வழியில் நீர் புகுந்திருக்கலாம், நேற்று வரை பேருந்து இருந்தது. இப்படித்தான் ஆட்கள் எல்லோரும் கூறுகிறார்கள். நேற்று வரை பேருந்து இருந்தது. இன்று... எப்படி கூற முடியும்? ஒரு வேளை வழியில் நீர் உள்ளே நுழைந்திருக்கலாம். கிழக்கு திசையில் கரு மேகங்கள் சூழ்ந்தால் போதும். இங்கே தானாகவே நீர் வந்து புகுந்து கொள்ளும். அப்படித்தான் இருந்தது இங்குள்ள நிலைமை.
சாலையின் அருகில் இருக்கும் நீர் நிலையைக் கடந்து செல்லும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த இடிந்து போன பாலத்தின் வழியாக கடந்து செல்லும்போது... (நீங்களெல்லாம் நகரத்திலிருந்து வருபவர்கள். இந்த நம்முடைய கிராமத்தைப் பற்றி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?)
'ஆனால், நீங்கள் கண்ணூருக்கல்லவா போக வேண்டும்?'
மேனன்தான் கேட்டார்.
(மேனனை முதல் தடவையாக சென்னையில் வைத்துத்தான் பார்த்தேன். ஒரு சாயங்கால வேளையில் கைலியை உடுத்தி, ஒரு இளைஞனையும் அழைத்துக் கொண்டு அப்ப நாயர் வந்தார்.)
'மாதவ மேனன்-பேட்டூர் கன்வென்ஷன் முடிந்து, திரும்பி வருகிறார்.'
மிகவும் நல்லது என்ற எண்ணத்துடன் நான் புன்னகைத்தேன்.
'இரண்டு மூன்று நாட்கள் நம்முடன் இருப்பார்.'
'வெரி வெல்!'
(போடா, உன்னுடைய ஒரு...)
மாதவமேனன் மீண்டும் கேட்டார்: 'நீங்கள் பய்யோளியின் வழியாக போகக் கூடாதா? அதுதானே நல்லது?'
நான் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்தேன்.
'சகோதரரே! நீங்க என்ன சொல்றீங்க?'
ஆனால், அதற்குப் பிறகு நான் நினைத்தேன்: 'ஓ... பய்யோளியிலிருந்து இங்கே எப்படி வந்தேன் என்பதைப் பற்றி இவர்களிடம் கூறவே இல்லையே!'
அப்போது யாரோ சொன்னார்கள் : 'பேருந்து வராமல் இருக்காது.'
நான் எதுவும் கூறவில்லை.
வானத்தில் ஈரமான மேகங்கள் போய்க் கொண்டிருந்தன. காற்று நிறைந்த, சாம்பல் நிறத்திலிருக்கும் ஒரு பாயைப் போல வானம் இருந்தது. சில இடங்களில் பனிக்கட்டியால் ஆன ஒரு பெரிய கோபுரத்தைப் போலவும் அது இருந்தது. மேகங்களுக்கு நடுவில் இருந்த இடைவெளியின் வழியாக சூரியனின் கதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தன. எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு முதல் தடவையாக வெளிச்சத்தைப் பார்க்கிறேன்.
கட்சி அலுவலகத்தின் வாசலில்தான் நாங்கள் நின்றிருந்தோம். வெளிச்சத்தைப் பார்த்ததும், நான் சாலையில் வந்து நின்றேன். என்னுடைய ஈரமான ஆடைகள் இந்த இளம் வெயிலில் சற்று உலர்வதாக இருந்தால், உலரட்டும்!
நான் மனதிற்குள் ஒரு சிரிப்பைத் தவழ விட்டவாறு நினைத்தேன். இந்த வாழ்க்கை எந்த அளவிற்கு வினோதமானதாகவும் துயரம் நிறைந்ததாகவும் இருக்கிறது!
நேற்று காலையில் வீட்டிலிருந்து எப்போதும் போல கிளம்பியபோது, குறும்ப்ரநாடு தாலுக்காவில் வெள்ளத்தில் சிக்கி நீந்துவதற்குத்தான் போகிறேன் என்பதை நான் சிறிதாவது நினைத்திருப்பேனா?
அதே போல... பரிமாறப்பட்ட சோற்றையும், குழம்பையும் மூடி வைத்து விட்டு, கிணற்றின் கரைக்கு நீர் எடுப்பதற்காகச் சென்ற அப்பநாயரின் தம்பி?
இறப்பதற்காகத்தான் செல்கிறோம் என்பதை அவர் நினைத்திருப்பாரா?
மரணம் ஒரு வாரண்ட் சேவகனைப் போல எந்தச் சமயத்திலும் உள்ளே நுழைந்து வருகிறது.
கங்காதரனை நான் பார்த்ததில்லை- உயிருடன் இருந்தபோதும், மரணத்திற்குப் பிறகும்! ஆனால், கங்காதரன் அப்பநாயரின் தம்பியாக இருந்தார். என்னைப் பொறுத்த வரையில் அது போதும்.
ஒரு அரசியல்வாதி எப்படி ஒரு நல்ல மனிதராகவும் இருக்க முடியும் என்பதை கங்காதரன் குறும்ப்ரநாட்டின் மக்களுக்குக் காட்டினார்.
நான் மிகவும் முன்பே அந்த இளைஞரின் கீர்த்திகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னால் பார்க்க முடியவில்லை.
குறும்ப்ரநாடு தாலுக்காவில் இருக்கும் மக்கள் இன்னும் சிறிது காலம் அந்த இளைஞரை நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
நான் அந்த இளைஞருக்காக கண்ணீர் சிந்துகிறேன்!
நேற்று காலையில் அலுவலகத்திற்குக் கிளம்பினேன். அப்போது சங்கரன் வந்து சொன்னார்: 'கேள்விப்பட்டீர்களா? அப்பநாயரின் தம்பி இறந்து விட்டார்.'
'என்ன?'
அந்த செய்தி மேகமே இல்லாத வானத்திலிருந்து இடி விழுந்ததைப் போல இருந்தது.
'நீர் எடுக்கும்போது, பலகை உடைந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டாராம்...'
நான் அதிர்ச்சியடைந்து நின்று விட்டேன். அப்பநாயரின் தம்பி விழுந்து மரணமடைந்து விட்டார். அப்பநாயரின் தம்பி...
மரணம் எவ்வளவு வேகமாக வருகிறது!
'ஒருவேளை... இன்று இல்லாவிட்டாலும் நாளை நானும் மரணமடையலாம். கனமான இதயத்துடன் நான் ஸ்டேஷனை நோக்கி நடந்தேன். சாயங்காலமே திரும்பி வர முடியும் என்பதால், யாரிடமும் எதுவும் கூறவில்லை.
வடகரையில் வண்டியை விட்டு இறங்கியவுடன், பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்தேன். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- அது ஒரு ஓட்டமாகவே இருந்தது. கற்களும் மேடுகளும் மழை நீரும் நிறைந்திருந்த அந்த கிராமத்து பாதையின் வழியாக ஓடியபோது, வழியில் எனக்காக காத்து நின்று கொண்டிருந்த சிரமங்களின் ஒரு மெல்லிய எச்சரிக்கை மட்டுமே அது என்பதை நான் நினைத்துப் பார்த்தேனா?
பேருந்து புறப்பட்டு நின்று கொண்டிருந்தது. தார்ப்பாயை வைத்து மூடியிலிருந்ததால், அதற்குள் கூட்டம் அதிகமாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதையெல்லாம் பார்க்க முடியவில்லை. நான் வேகமாக குடையை மடக்கி விட்டு, எப்படியோ அதற்குள் நுழைந்து விட்டேன். அதற்குள் வெளிச்சமில்லை. காலியாக கிடந்த ஒரு இருக்கையில் சற்று நிம்மதியுடன் உட்கார்ந்தபோது, பேருந்து சிறிது தூரம் போய் விட்டிருந்தது.
பேருந்து பழையதாகவும், ஒழுகக் கூடியதுமாக இருந்தது. அதன் இருக்கைகள் நார்களால் செய்யப்பட்டிருந்தவையாகவும், அழுக்கு படிந்தவையாகவும் இருந்தன. சிறிதும் நிற்காத ஒரு நீரோட்டம் மேலே இருந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த சுவாசம் விட சிரமப்பட வைக்கும் மரக்கூட்டிற்கு உள்ளே இருந்த மெல்லிய வெளிச்சத்தில் என்னுடைய வெள்ளை நிற கதராடைகளில் இருந்த அழுக்கை என்னால் நன்கு காண முடிந்தது. இன்னொரு சூழ்நிலையாக இருந்திருந்தால், எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். ஒன்று அழுக்கானால், மாற்றுவதற்கு இன்னொன்று வேண்டுமே!
உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- எனக்கு நேற்றும் முதல் தடவையாக சிறிது கவலை உண்டானது. வெளுத்த ஆடையில் அழுக்கு படிந்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு அப்படி தோன்றுவதுண்டு.