பயணம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7370
ஆனால், மீண்டும் நீரைப் பார்த்தேன். கிழக்கு திசையிலிருந்த மலைகளிலிருந்து மேற்கு திசையில் கண் பார்வை போகக் கூடிய தூரம் வரை நீர் பரந்து கிடந்தது. சாலையின் இரண்டு பக்கங்களிலுமிருந்த வேலிகளின் மேற்பகுதி சில இடங்களில் நீருக்கு மேலே தெரிந்தது.
அந்த கடலின் கரையில் ஒரு செயலற்ற மனிதனைப் போல நான் நின்றிருந்தேன்.
'இதுதான் குலுப்பச்சால்...'
நான் எதுவும் கூறவில்லை. அது குலுப்பச்சாலாக இருக்கலாம். ஜிப்ரால்ட்டராக இருக்கலாம். வைதரணியாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில், அனைத்துமே நீர்தான். ஆனால், அப்ப நாயர் எதற்கு இங்கு வந்து வசித்தார்? இந்த பிரளய பூமியில்?
'இங்கு நீரோட்டம் குறைவு. ஆனால், நீர் அதிகம் இருக்கு...'
'இன்னைக்கு எதுவும் சாப்பிடல. இல்லையா?'
'நடக்கலாம்... என்ன?'
நாங்கள் நடந்தோம்.
பொதுவாகவே நீர் முழங்கால் வரைதான் இருந்தது. நீரோட்டமும் குறைவுதான். ஆனால், சில இடங்களில் ஆழமும் நீர் போக்குவரத்தும் இருந்தது. இடுப்பு வரையும், மார்பு வரையும் நீருக்க மத்தியில் பதைபதைப்புடன் நடந்தபோது, எனக்குத் தெரிந்தே என்னுடைய கால்களை இழுத்துக் கொண்டு போவதற்கு நீர் முயற்சித்துக் கொண்டிருந்தபோது, நான் நினைத்தேன்: இங்கு இப்போது மரணமடைந்து விழுந்தால், என்னை யாராலும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? மேற்கு திசையிலிருக்கும் ஒரு மண் மேட்டில் எங்காவது என்னுடைய பிணம் மோதிக் கிடக்கும். இல்லாவிட்டால் ஒரு சவுக்குக் காட்டில் கிடந்து, அது அழுகிப் போய் கிடக்கும். முதலில் பார்ப்பவன் என்னுடைய கைக் கடிகாரத்தையும், பேனாவையும் நன்றியுடன் எடுத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டான். அவன்... பிறகு... எப்போதாவது...
'இங்கு இதுவரை யாரும் இறந்தது இல்லை.'
விழப் போகும் வீட்டைப் பற்றி பெருமூச்சு விட்டு பேசிக் கொண்டிருந்த அந்த மனிதர் சொன்னார்.
'இதோ... நான் இறந்து கொண்டிருக்கிறேன்.'
நான் வெறுப்புடன் சொன்னேன்.
எல்லோரும் சிரித்தார்கள். ஆனால், அந்தச் சிரிப்பில் ஏதோ பரிதாப உணர்ச்சி கலந்திருந்தது.
நீர் முடிவடைந்த திசையில் ஒரு மேடு இருந்தது. மேடு தாண்டியவுடன், சில கடைகள் தென்பட்டன. என்னுடன் இருந்தவர்கள் சொன்னார்கள்: 'நீங்கள் இங்கேயே நில்லுங்க. இங்கே இருந்துதான் பேருந்து புறப்படும்.'
அவர்கள் எல்லோரும் புறப்பட்டார்கள்.
விழப் போகும் வீட்டைப் பற்றி கூறி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அந்த வயதான மனிதர் மிகவும் சிரமப்பட்டு நடந்து போய்க் கொண்டிருந்தார். நான் மெதுவான குரலில் சொன்னேன்:
'நண்பரே, வேகமாக நடங்க... வேகமா... உங்களுடைய வீடு ஒருவேளை கீழே விழுந்து கிடக்கலாம்.'
நான் நீண்ட பெருமூச்சை விட்டேன்.
என் வீடு?
என்னுடைய வீடும் மண்ணால் ஆனதுதான். ஆனால்...
காலையில் வீட்டை விட்டு புறப்படும்போது நினைத்தேன்! சாயங்காலமே திரும்பி வர வேண்டும். வர முடியும். எனினும், என்ன நடந்தது? இப்போதே நேரம் மூன்றரையைத் தாண்டி விட்டிருந்தது. இன்னும் எவ்வளவோ மைல்கள் தூரத்தில் இருக்கிறது இந்த பேராம்ப்ர என்று கூறக் கூடிய இடம்.
இன்றே அங்கு போய்ச் சேர முடிந்தால்!
வடகரையிலிருந்து புறப்பட்டபோது, சட்டையில் சிறிது அழுக்கு புரண்டிருந்ததை மிகவும் முக்கியமான விஷயமான நினைத்தேன். அந்தச் சட்டையை இப்போது பார்க்க வேண்டும். ஆனால், இங்கு அறிமுகமானவர்கள் யாருமில்லை... இருந்திருந்தால்...
நான் செயலற்ற நிலையில் இருந்தேன்.
நனைந்து வழிந்து கொண்டிருக்கிறது. நனைந்து வழியட்டும்.
அழுக்கு படிந்திருக்கிறது. அழுக்கு படியட்டும். மேலும் படியட்டும்.
அங்கிருந்த ஒரு தேநீர் கடைக்குள் நுழைந்து, நான் பலவீனமான குரலில் சொன்னேன்:
'ஒரு தேநீர் கொடுங்க... நல்லா சூடா இருக்கணும்.'
பாதி உடை அணிந்தவனும், ஒரு நோயாளியைப் போலவும் இருந்த அந்த கடைக்காரன் சொன்னான்:
'இங்கே பால் இல்லையே!'
இங்கு தண்ணீராவது இருக்கிறதா என்று நான் கேட்கவில்லை.
ஜப்பானிலிருந்து நீண்ட நாட்களுக்கு முன்பு வந்த கண்ணாடி குவளைகள்தான் அங்கு இருந்தவை. பயன்படுத்தி சேதமடைந்த குவளைகள்! அதே போல அந்த மனிதனுக்கும் சேதம் உண்டாகியிருக்கிறது. அந்த கண்ணாடி குவளைகள் விழுந்து உடைவதைப் போல அவனும் ஒரு நாள் உடைந்து போவான்.
நான் அவனுடைய அடுப்பைப் பார்த்தேன். அங்கு நெருப்பே இல்லை.
ஆள் யாருமில்லாத கடையின் வாசலில் நின்று கொண்டு வேலை இல்லாத இளைஞர்கள் 'நாயும் புலியும்' விளையாடிக் கொண்டிருந்தார்கள். சொறி பிடித்த, அவலட்சணமான குழந்தைகள் சிலையைப் போல அசையாமல் இருந்தார்கள். மஞ்சள் நிற தவளையைப் போல இருந்த ஒரு பெண், வயிறு வீங்கிய ஒரு குழந்தையை வைத்தவாறு சாலையில் ஓரத்தில் வெறுமனே நின்று கொண்டிருந்தாள்.
அலைந்து திரிந்து கொண்டிருக்கும் தெரு நாய்கள்... கோழிகள்.
எங்கும் ஓசை இல்லை... அசைவு இல்லை.
பிரியத்திற்குரிய என்னுடைய குறும்ப்ரநாடு தாலுக்காவே!
'பேராம்ப்ரய்க்கு இனி எப்போ பேருந்து?'
'இரண்டு மணிக்கு ஒன்று போனது. இனி ஐந்தரைக்குத்தான்.'
எனக்கு சோர்வு தோன்றவில்லை.
(சோர்வு என்று சொன்னால், என்ன?)
'இங்கேயிருந்து எவ்வளவு மைல்கள் இருக்கும்?'
'ம்... ஒரு பத்து மைல்கள்.'
'ஆறு... ஏழு... எட்டு...'
யாருக்கும் உறுதியாக தெரியவில்லை.
நடக்கலாம்... நடக்கலாம்.
தென்னையும், மாமரங்களும், பலாவும், பனை மரமும் உள்ள நிலங்கள், தேவாலயங்கள், நீரற்ற குளங்கள், பாம்புக் புற்றுகள், பிணம் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள், ஆள் இல்லாத வீடுகள், கருங்கல் பாறைகள், படிப்பகங்கள், ஆரம்பப் பள்ளி, காவல் நிலையம்- எல்லாவற்றையும் தாண்டி, பத்மநாபன் என்ற நான் மாலை நேரத்தில் பேராம்ப்ரயை அடைந்தேன்.
(மனிதர்களையும் தெரு நாய்களையும் நான் வழியில் பார்த்தேனா?)
பய்யோளி வழியாக நான் போயிருக்கக் கூடாதா என்று மாதவ மேனன் கேட்கிறார்.
நண்பரே...
என்னுடைய சரீரம் தளர்ச்சியடைந்து, மனம் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
முடியாது..
அப்ப நாயர் எங்கே?
ஓ... அப்ப நாயர் எதுவும் கூறவில்லை. வெள்ளை அடிக்கப்பட்டிருந்த சுவரையே பார்த்துக் கொண்டு அப்பநாயர் வெறுமனே நின்று கொண்டிருக்கிறார். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆரவாரத்துடன் பின்னோக்கி தள்ளிய அப்பநாயர்! என் அப்ப நாயர்!
அப்ப நாயர் களைத்துப் போயிருக்கிறார். நேற்று இரவு படுத்தபோது, கூறினார்:
'நீங்கள் வருவீர்கள் என்று நான் உறுதியாக நினைத்தேன்.'
நான் எதுவும் கூறவில்லை.
'நீங்கள் கங்காதரனைப் பார்த்ததில்லையே!'
தேம்பித் தேம்பி அழுதார்.
எனக்கு தம்பி இல்லை!
மேகங்களுக்கு மத்தியில் மேலும் வெளிச்சம் தெரிந்தது.