பயணம் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7370
இப்போது என்னுடைய சட்டையில் அழுக்கு இல்லை. அது அந்த அளவிற்கு ஈரமாகவும் இல்லை. இரவில் துவைத்து காய வைத்த பிறகு, இரண்டு தடவைகள் இஸ்திரி போடப்பட்டிருக்கிறது.
நான் கூறி அல்ல.... கூறவும் மாட்டேன்... ஆனால், அப்பநாயர்...
கடந்த முறை இங்கு வந்தபோது...
அப்பநாயரால் சைக்கிள் ஓட்ட முடியவில்லை. (நீங்கள் தோற்றது அங்கு மட்டும்தானே?) நான் சொன்னேன்: 'நீ இங்கேயே நில்லு. நாங்கள் போய் வருகிறோம்.' பாலகிருஷ்ணன், கோவிந்தன், நான். நாங்கள் முழங்கால் வரை மட்டுமே நீர் இருக்கும் காட்டாற்றயும், வாய்க்காலையும் கடந்து மலையின் மீதும் அடிவாரத்தின் வழியாகவும் சென்றோம்.
அடர்த்தியான காடு!
திரும்பி வந்தபோது, இரவாகி விட்டிருந்தது. ஆனால், வானத்தில் நட்சத்திரங்களும் பூமியில் மலர்களும் உள்ள, டிசம்பர் மாதத்தின் ஒரு இரவு. வெளியூரிலிருந்து வந்து குடியேறி வைத்திருந்த ஒருவனின் கடையிலிருந்து மெழுகுவர்த்தி வாங்கி பற்ற வைத்து, சிரட்டைக்குள் வைத்து, சைக்கிளின் முன்னால் கட்டினோம்.
சகோதரா, நீங்கள் திருவல்லாவிலிருந்தா வந்தீங்க? இல்லாவிட்டால், சங்ஙனாசேரியிலிருந்தா?
என் பத்ரோஸ் அண்ணே, அந்த விளக்கை முழுசா இந்தப் பக்கம்...
(கோவிந்தன் திருவிதாங்கூரின் மொழியைப் பின்பற்றி பேசினார்.)
முடியவில்லை.
எல்லோரும் சிரித்தார்கள்.
நாங்கள் பாடினோம்.
'முதுகாடின் வீரரே! தீரரே!...'- பேராம்ப்ரயை அடைந்து, கோவில் குளத்திற்குச் சென்று குளித்து திரும்பி வந்தபோது, பால கிருஷ்ணனும் வர்க்கியும் கோவிந்தனும் அப்ப நாயரும் மேனனும் இருந்தார்கள்.
என்ன ஒரு உற்சாக ஆரவாரமாக இருந்தது!
பேருந்து புறப்பட்டது.
நான் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். அப்பநாயர் பேருந்தின் அருகில் வந்து கையைப் பிடித்து அழுத்தியவாறு கேட்டார்:
'எப்போது பார்ப்போம்?'
'பார்ப்போம்...'- என்னால் வேறு எதுவும் கூற முடியவில்லை.
பேருந்து நகர்ந்தது. ஆனால், எனக்கு முன்னாலிருந்து முரட்டுத்தனமான ஆளாக இருந்தாலும், அன்பு நிறைந்த அந்த முகம் மறையவே இல்லை.
ஒரு இருபது வருட காலத்தின் நினைவுகள்...
பாறையின் வெளிப்பகுதியையும், சந்தனத்தின் உட்பகுதியையும் கொண்டிருக்கும் ஒரு மனிதர்.
நிறைய அன்பு வைத்திருந்தவர்.
நான் நீண்ட பெருமூச்சை விட்டேன்.
பேருந்து புதியதாகவும், சுத்தமானதாகவும் இருந்தது. அது சோர்வாக இல்லை. ஆட்களும் குறைவாகவே இருந்தார்கள். உயர்ந்த சாலையின் வழியாக பேருந்து சீறிப் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது.
சில திசைகளில் மட்டுமே நீர் இருந்தது. அதுவும் செருப்பின் அடிப்பகுதி அளவிற்கே. பேருந்து போகும் போது, சுவாரசியமான ஒரு சத்தத்துடன் நீர் இரண்டு பக்கங்களிலும் தெறித்துக் கொண்டிருந்தது.
பாலுசேரி வழியாக கிழக்கு திசை நோக்கி போவது முதல் தடவை.
நடத்துநர் சொன்னார்: 'பாலத்தைத் தாண்டினால், உள்ளியேரிமுக்கு. அங்கு கனெக்ஷன் பேருந்து இருக்கும்.'
சிதிலமடைந்த பாலத்தின் வழியாக உயிரைப் பணயம் வைத்து நடந்தபோது, போடப்பட்டிருந்த மரப் பலகைகள் 'கடகட' சத்தத்துடன் மேலே உயர்வதும் கீழே இறங்குவதுமாக இருந்தன.
அதிக சுத்தத்துடனும், நல்ல உடல் நலத்துடனும், சந்தோஷத்துடனும் இருக்கக் கூடிய மனிதர்களை உள்ளியேரி முக்கில் சந்தித்தேன். வெள்ளப் பெருக்கு அங்கு எந்த இடத்திலும் கேடுகள் உண்டாக்காமலிருந்தது.
பேருந்து தயாராக நின்றிருந்தது.
நல்ல பேருந்து.
சிறிது தூரம் சென்றதும், கழுத்தில் பாசியும், கையில் மரப்பெட்டிகளும், ஊன்று கோலும், சுமையும் என்று சிலர் ஏறினார்கள். அவர்கள் 'கலபில' என்று சத்தம் உண்டாக்கி கொண்டும், ஒரு கெட்ட நாற்றத்தை (என்ன நாற்றம் அது?) பேருந்திற்குள் பரவச் செய்து கொண்டும் இருந்தார்கள்.
நான் நினைத்தேன்: கோழிக்கோட்டை அடையும்போது இரண்டரை மணி ஆகி விடும். பிரதாபன் நீதிமன்றத்தில் இருப்பான். கேசவன் அண்ணன் ஒரு வேளை வீட்டில் இருந்தால் போதும், ராதாவும் சுமங்கலி அண்ணியும் இருப்பார்கள். குழந்தைகளும் இருப்பார்கள். பிறகு... எல்லோரையும் பார்த்து விட்டு, சாயங்கால விரைவு பேருந்தில் திரும்பி வர முடியுமா? இல்லாவிட்டால் இறுதி வண்டிக்கு...
பேருந்து திடீரென்று நின்றது. சாலையில் சிறிது தூரத்திற்கு பெரிய அளவில் சேறு இருந்தது.
'எல்லாரும் கொஞ்சம் இறங்கணும்...'
'கொஞ்சம் தள்ளி விடுங்க...'
நாங்கள் பேருந்தைத் தள்ளி, நகரச் செய்து, சேற்றைத் தாண்ட வைத்தோம். அப்போதுதான் எங்களுக்கு மத்தியில் ஒரு முழுக்கால் சட்டை அணிந்த ஒரு மனிதர் இருக்கிறார் என்பதே எங்களுக்கு தெரிந்தது. அவர் தன்னுடைய புதிய ஷூக்கள் சேற்றில் படாமல் இருப்பதற்காக பகீரத முயற்சி செய்து கொண்டிருந்தார்.
எனக்கு இரக்கம் உண்டானது.
இங்கு... இதோ ஒரு மகாத்மா.
அவரை என்னுடைய முதுகில் ஏற்றி நான் அந்தப் பக்கம் போகச் செய்வேன். ஆனால், எனக்கு சக்தி இல்லையே! என்னுடைய கால்கள் பலவீனமானவை. முழங்கால்களில் ஊசி உள்ளே நுழைவதைப் போல வேதனையாக இருந்தது. இல்லாவிட்டால் நான் அந்த மனிதரை...
இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, பெரிய ஒரு சம்பவம் நடைபெற்றது.
சாலையின் ஓரத்தில் வயதான பாதி உடை அணிந்த ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும் சேர்ந்து ஒரு இளம் பெண்ணை தாங்கி பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
அவர்கள் பேருந்தை நிறுத்தினார்கள். நடத்துநர் வெளியே இறங்கி, அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த இளம் பெண் தன் தாயின் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டிருந்தாள். தாய் பதைபதைப்புடன் பேருந்தின் உள்ளே பார்த்து, ஈரமான கண்களைத் துடைத்தவாறு, நீண்ட பெருமூச்சை விட்டாள்.
அவர்கள் கோழிக்கோட்டில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்பவர்கள்.
ஒரு அதிர்ச்சியுடன் நான் கேட்டேன்: 'கக்கோடி கடை வீதியில் நீர் புகுந்திருக்கிறது. பேருந்து போகாதே!'
'ஆனால், அவளுக்கு...' - அந்த இளைஞனின் தொண்டை இடறியது.
'உங்களால் நீரைக் கிழித்துக் கொண்டு நடக்க முடியாது.'
'கடவுள் ஒரு வழி...'
'என் பெருமாளே!'
அந்தச் சிறிய குடும்பம் பேருந்திற்குள் ஏறியது.
என்னுடைய கையில் பேராம்ப்ரயிலிருந்து கோழிக்கோட்டிற்கு கிழிக்கப்பட்ட ஒரு த்ரூ டிக்கெட். கக்கோடி கடை வீதியில் நீர் புகுந்திருப்பதைப் பற்றி உள்ளியேரிமுக்கில் நின்றபோது நடத்துநர் புதிய பயணிகளிடம் கூறி இருக்கலாம். ஆனால், நான் கேட்கவில்லை. நான் வேறு என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
கோழிக்கோடு தாலுக்காவில் ஒரு வெள்ளப் பெருக்கு உண்டாகும் என்று நான் நினைத்ததில்லை.
இனி இப்போது... மீண்டும் நீருக்கு மத்தியில் நடக்க வேண்டும். கால் உரசி, தோல் உரியும். 'ப்லகும்' என்று ஆகும். முழுவதும் ஈரமாகி வழியும். சாயங்காலம் கோழிக் கோட்டை அடைய முடியாது.
பய்யோளி வழியே செல்வதற்கு தயங்கி...