பயணம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7370
மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதற்கு எப்போதும் ஆர்வத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கூட்டம் அந்த தாயையும் மகனையும் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தது.
எனக்கு கோபமும் சோர்வும் உண்டாயின. ஒரு ஆள் கோழிக்கோட்டில் இருக்கும் டாக்டர்களின் திறமையைப் பற்றி ஒரு கருத்தரங்கம் ஆரம்பித்தார். இன்னொரு ஆள் தன்னுடைய மாமாவின் மகளின் கணவரின் தாயின் குணமாகாத வயிற்று வலியை ஒரு நாட்டு வைத்தியர் எப்படி ஒரு சாதாரண வித்தையைக் காட்டி குணமாக்கினார் என்பதை விளக்கி கூறிக் கொண்டிருந்தார். விளக்கி கூறிய பிறகு, அவர் பதைபதைப்பிற்குள்ளான அந்த தாய்க்கு அறிவுரை கூறுகிறார்:
'நீங்கள் இந்த உடல் நலக் கேட்டிற்கு எந்தச் சமயத்திலும் டாக்டர்களைத் தேடி போகாதீங்க.'
தொடர்ந்து அருகில் அமர்ந்திருந்த ஆளிடம் கேட்கிறார்:
'என்ன குறுப்பே, அப்படித்தானே?'
குறுப்பு கூறுகிறார்: 'சந்தேகம் இருக்கா?'
அப்போது இன்னொரு ஆள்...
தாய், தன் மகளை வருடிக் கொண்டிருந்தாள்.
அந்த இளம் பெண்ணின் முகம் எனக்கு தெளிவாக தெரிந்தது. அவளுடைய அகலமான கண்களும் உதடும் மிகவும் அழகாக இருந்தன. ஆனால், அந்த இளம் பெண்ணின் முகத்தில் இரத்தம் இல்லாமலிருந்தது. அவள் மூச்சு விடும்போது, சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.
வேதனையுடன் நான் நினைத்துப் பார்த்தேன்: அமைதியானவனும், அன்பு நிறைந்தவனுமான ஒரு விவசாயியின் மனைவி பதவியை அலங்கரிக்க வேண்டிய இந்த இளம் பெண் வாழ்வின் ஓட்டத்தில் ஒரு நோயாளியாக ஆகி விட்டாளே!
பேருந்து நின்றது.
இனி நீர்...
நடக்க வேண்டும்.
ப்லகும் ப்லகும்...
ஓ!
முதலில் சிரமமாக இல்லை. சிறிது தூரம் நீர்... பிறகு நீர் இல்லாமல்... அப்படித்தான் இருந்தது. நாங்கள் ஒரு பெரிய சுற்றுலா குழுவினரைப் போல ஒன்றாகச் சேர்ந்து நடந்தோம். எங்களுக்கு எதிரிலும் ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு முறை நீர் முடியும் போதும், அந்த தாயும் மகளும் எங்களுடன் இருக்கிறார்கள் அல்லவா என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர்கள் ஏழைகளாக இருக்கலாம். அனாதைகளாகவும் இருக்கலாம். கோழிக்கோட்டு மருத்துவமனையின் முதலைகள்...
முதலில் அவர்கள் எங்களுடன்தான் இருந்தார்கள். பிறகு... ஓ... நான் அவர்களைப் பார்க்கவே இல்லை.
அடைக்கப்பட்டிருந்த ஒரு கடையின் வாசலில் நின்று கொண்டு அடர்த்தியான இருட்டைப் போல இருந்த ஒரு இளம் பெண் ஒரு துணியால் ஆன தொட்டியை ஆட்டியவாறு, 'அம்மாவின் அன்புச் சொத்தே...' என்று பாடியபோது, என்னுடைய இதயம் இனம் புரியாத எதையோ நினைத்து கவலைப்படவும், என் கண்கள் ஈரமாகவும் செய்தன. பாடு... என் பிரியமான தங்கையே, பாடு...
கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சாலையைக் கிழித்துக் கொண்டு நீர் பலமாக ஓடியது.
கக்கோடி கடை வீதியில் வாழ்க்கை நின்றிருக்கவில்லை. அங்கிருக்கும் வங்கிகளிலும், பேக்கரிகளிலும், ஆயுர்வேத கடைகளிலும் வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பாலத்திற்கு அருகில் பேருந்து காத்து நின்றிருந்தது. ஆனால், அங்கு அடைந்த பிறகுதான் அது வேறு நிறுவனத்தின் பேருந்து என்பதும், நான் போக வேண்டிய பேருந்து போய் விட்டது என்பதும் எனக்கு தெரிய வந்தது. வேண்டுமென்றால், நான் அதில் போகலாம். ஆனால், என்ன காரணமோ, நான் போகவில்லை.
அந்த பேருந்தும் போய் விட்டது.
என்னுடன் வந்த யாரும் இப்போது இங்கே இல்லை. நான் மட்டும். முடியாது... முடியாது... ஆகாயம் தெளிகிறது.
காற்றும், மழையும் இல்லை. எனினும்......