பயணம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7370
'வருடத்தில் இரண்டு வாரங்கள்தான் இந்த சிரமம்...'
'அது ஒரு சிரமமாக இல்லாமலிருக்கலாம்,'
'இல்லை... அப்படி இல்லைன்னு நான் சொல்றேன். ஆனால்...'
'ஒரு 'ஆனா'லும் இல்லை.'
'இந்த முறை நீர் வேகமாக வற்றிப் போகக் கூடிய அறிகுறி தெரியவில்லை.'
'ஏய்... பு...'
'இப்ராஹிம்...'
'என்ன ஆஜிக்கா?'
'பதினாறில் வந்த வெள்ளப்பெருக்கு ஞாபகத்துல இருக்குதா? இது அதே மாதிரிதான்...!'
'நாங்கள் வரி கட்டுறோம். 'செஸ்' கொடுக்குறோம். கேட்பது எதையும் கொடுக்குறோம். ஆனால், எங்களுடைய அனுபவம் இதுதான்...'
'நாம் குறும்ப்ரநாட்டுக்காரர்கள்தானே?'
'ஏன்? நாங்கள் எல்லாரும் மலபாரைச் சேர்ந்தவர்கள்.'
'நாம இந்தியர்கள்.'
'அந்த அளவிற்கு பரந்த மனதுடன் சிந்திப்பதற்கு என்னால முடியல.'
'வேண்டாம்...'
அதிக கோபத்துடன் அவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.
நான் நினைத்தேன்: இவர்கள் எல்லோரும் கலைஞர்கள். ஆனால், இவர்களுக்கிடையே ஒரு 'இக்னேஷியோ ஸிலோனி' இல்லை. இருந்திருந்தால், முதல் தரமான ஒரு புதினம் கிடைத்திருக்கும்.
மண் அள்ளும்போது ஒரு சிறுவன் உயிருடன் குழிக்குள் சிக்கிக் கொண்டதைப் பற்றியும், இரண்டு சிறிய குழந்தைகளும் அறிவு வளர்ச்சியில்லாத ஒரு தாயும் நீரில் அடித்துச் சென்றதைப் பற்றியும் யாரோ கூறிக் கொண்டிருந்தார்கள்.
கடையின் பின் பகுதியிலிருந்த ஒரு வாழை மரம் சாய்ந்து நீரில் மிதந்து சென்றது. இன்னொன்று கீழே சாய்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தது. அதன் மேற்பகுதியில் நனைந்து கனமான சிறகுகளுடன் இருந்த ஒரு காகம் கவலை நிறைந்த குரலில் கரைந்து கொண்டே, ஓரக் கண்களால் நான்கு பக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தது.
குளிர் என்னுடைய எலும்புகளுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
என்னுடைய முழங்கால்கள் வலித்தன.
நான் ஒரு கனவு கண்டேன்.
கனவிலும் நீர்தான். விசாலமான, கரை காண முடியாத நீர் பரப்பு. அதில் சிறிய ஒரு படகும், களைத்துப் போன சில பயணிகளும். அவர்கள் பதைபதைப்புடன் வானத்தைப் பார்த்தார்கள். அப்போது அதோ... தூரத்தில் வானத்தின் விளிம்பில் அலகில் ஆலிவ் மரத்தின் கிளையுடன் ஒரு புறா கண்களில் படுகிறது!
நோஹாவின் பெட்டகம்!
ஒரு உரத்த சத்தமும் ஆரவாரமும் கேட்டன. படகு வந்து சேர்ந்தது. நான் நீண்ட பெருமூச்சை விட்டேன். அப்பாடா!...
ஈரமானதாகவும், இருண்டு போனதாகவும் இருந்த வானத்திற்குக் கீழே, முழங்கால் வரை இருக்கக் கூடிய நீரில், படகிற்காக காத்துக் கொண்டு நின்றிருப்பது என்ற பொது பிரச்னையை எல்லோரும் சேர்ந்தும், நம்பிக்கையுடனும் சந்தித்த குழுவினர், படகு வந்தவுடன், நான்... நான்... முதலில் என்பதைப் போல சண்டை போட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திற்கு முன்பு அரசாங்கத்தை விமர்சித்தவர்களும் அவர்களுக்கு மத்தியில் இருந்தார்கள்.
நான் சோர்வுடன் விலகி நின்றேன். அந்தச் சிறிய படகில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஏறினால், அது மூழ்கும் என்பது உறுதி. ஆனால், யாரும் அதை நினைக்கவேயில்லை.
பாதி ஆட்களாவது இறங்கினால்தான் தான் படகைச் செலுத்த முடியும் என்று படகோட்டி பிடிவாதம் பிடித்தார்.
'நாம அடுத்த முறை போவோம்'- முஸ்லீம் பெரியவர் கூறினார்.
'பிரச்னை வேண்டாம்...'
கொஞ்சம் ஆட்கள் படகிலிருந்து இறங்கினார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் மனக் கவலை இருந்தது. ஆனால், வேறு வழியும் இல்லை.
படகு திரும்பி வந்து எங்களையும் ஏற்றிக் கொண்டு அக்கரையை அடைந்தபோது, நேரம் மதியத்தைத் தாண்டி விட்டிருந்தது. படகோட்டியின் அதிகமான கூலியைக் கொடுத்த பிறகு - நிறைய தர்க்கமும் வாதமும் நடந்து கொண்டிருந்தன- நாங்கள் மீண்டும் நீரின் வழியாக நடந்தோம். நிலத்திலும் வயல்களிலும் நீர் புகுந்திருந்தது. பெரும்பாலான வீடுகளிலிருந்து ஆட்கள் வெளியேறியிருந்தார்கள். தென்னை மரங்கள் நிறைந்த விசாலமான நிலங்களில் இங்குமங்குமாக குடிசைகள் விழுந்து கிடந்தன.
தென்னை மரங்களுக்கு மத்தியில் பார்த்தபோது, நீரைத் தவிர வேறு எதுவுமே கண்களில் தெரியவில்லை. இந்த நீர் அனைத்தும் எங்கிருந்து வருகிறது என்று நான் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன்.
நீர் உள்ளே நுழைந்து போகும் சத்தம் காதில் கேட்டது.
பூட்டப்பட்டிருந்த ஒரு பெரிய வீட்டின் வாசலில் இருந்தவாறு, சிலர் நெருப்பு பற்ற வைக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்களுக்கு மத்தியில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் இருந்தார்கள்.
அந்த அடுப்பிலிருந்து நெருப்பு அல்ல- புகைதான் வந்து கொண்டிருந்தது.
பதைபதைப்பு நிறைந்த அந்த முகங்களை நான் இப்போதும் பார்க்கிறேன்.
கனோலி ஏரியின் பாலத்தைக் கடந்து, பய்யோளி கடை வீதியை அடைந்தோம். கடை வீதி உயிரற்று கிடந்தது.
முஸ்லீம் பெரியவர் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிச் சென்றார். கடை வீதி முடிவடைந்ததும், நீரும் முடிந்தது. பிறகு... உயர்ந்த இடம். ஆனால், இதுவரை நீரின் வழியாக நடந்ததால், கால்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டன. முழங்கால்களுக்குக் கீழே, சொல்லப் போனால்- கால்கள் பலவீனமான இரண்டு மரத் துண்டுகளைப் போல ஆடிக் கொண்டிருந்தன. நீர் நுழைந்த ரப்பர் ஷூக்கள் 'ப்லகும்' என்று ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ஷூக்களுக்குள் நீர் மட்டுமல்ல- சேறும் மணலும் சிறுசிறு கற்களும் கூட இருந்தன. அவற்றுடன் உரசி, தோல் கிழிந்து வேதனை தர ஆரம்பித்தது.
எனினும், ஷூக்களைக் கழற்றி கையில் பிடித்துக் கொண்டு இருக்கவும் வழியில்லாமலிருந்தது. சாலையில் முற்களும், கூர்மையான கற் துண்டுகளும் இருந்தன.
நான் களைப்புடன் நடந்தேன். நம்பிக்கையும், பக்தியும் இருந்தால் நெருப்பின் மீது கூட நடப்பதற்கு முடியும் என்று கூறுவார்கள். ஆனால், எனக்கு நம்பிக்கையுமில்லை, பக்தியுமில்லை. எனினும் தோல் உரிந்த காலில் மணல் உரசியபோது உண்டான வேதனையைத் தாங்கிக் கொண்டே நடப்பதற்கு என்னால் முடியாதா?
(நெருப்பின் மீது ஆட்கள் நடக்கும் ஒரு காட்சி இருக்கிறது, ஒரு திரைப் படத்தில். 'எலிஃபென்ட் வாக்'கா?
ஞாபகத்தில் இல்லை.
... நல்ல நடிகர் க்ரெகரிபெக். ஜோஸஃப் காட்டனும் நல்ல நடிகரே. ஜோஸ் ஃபெரர் அருமையான நடிகர். டூ யூ ஹியர் மீ? முலான் ரூஷ்? ஆனால், க்ரெகரிபெக்! அழகான தோற்றத்தைக் கொண்டவர், நல்ல உடலமைப்பைக் கொண்டவர், கம்பீரமானவர்... ரோமன் ஹாலிடே...
ஆட்ரி ஹெப்போனை மோட்டார் பைக்கிற்குப் பின்னால் ஏற்றிக் கொண்டு, நான் ரோம் நகரத்தின் தெருக்கள் வழியாக....)
சாலையின் மீது சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்திருந்தன.
நான் சிந்தித்தேன்:
ரோம் நகரத்தில்....