சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்... - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6387
அப்படியென்றால் பெண்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று தாய் இறுதியாக பதில் கூறவில்லை. அதே நேரத்தில் - அப்படி இல்லை என்றும் கூறவில்லை. முக்கி முனகிக் கொண்டு பாதி ஒத்துக் கொண்டும் பாதி ஒத்துக் கொள்ளாமலும் தாய் பதில் கூறினாள். அந்த இடத்திலும் பெண் தன்னுடைய ரகசியத்தை மறைக்கிறாள். தந்தை தொடர்ந்தார். தாயும் இளம் வயதில் அப்படித்தான் இருந்தாளோ என்று பிடியை விடாமல் கேட்டார்.
'ஓ... என்ன இது? இது என்ன கேள்வி? சரிதான்... இவ்வளவு வயதுகள் தாண்டிய பிறகு, இளம் பெண்ணாக இருக்குறப்போ கல்யாணம் ஆகி, மறுநாள் கேட்கும் கேள்விகளைக் கேக்குறதுக்கு வெட்கமாக இல்லையா?'
தந்தையும் விடுவதாக இல்லை.
'என்னிடம் கூற முடியாத அளவிற்கு உன்னிடம் ஏதாவது விஷயங்கள் இருக்குதா? ஏதாவது ரகசியங்கள் இருக்கின்றனவா?'
'ஓ...! மகளுக்கு எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக நல்ல ஒரு பையனைக் கண்டு பிடிங்க.'
தாய் கூறவில்லை. எந்தவொரு பெண்ணும் அதைக் கூற மாட்டாள். ஏனென்றால், ஒருத்தியின் உணர்ச்சிகள் நிறைந்த ஆவேசத்தை தன்னுடைய வார்த்தைகளால் சம்மதிப்பாள். அம்மா அப்படிப்பட்ட ஒருத்திதான்' என்று தன் கணவனுக்கு தோன்றுவதற்குக் கூட அவள் இடம் கொடுக்க மாட்டாள்.
தந்தை அவளுக்குப் பொருத்தமான ஒருவனைத் தேட ஆரம்பித்தார். ஒருவன் கிடைத்தான். ஆனால், அவன் மிகவும் மெலிந்து போய் காணப்பட்டான். அவன் சரியாக வர மாட்டான். அதற்குப் பிறகு கிடைத்த ஒருவனுக்கு சற்று வயது அதிகமாக இருந்தது. மூன்றாவதாக பார்த்த ஆள் பரவாயில்லை... ஆனால், பொருளாதார விஷயத்தில் மோசமான நிலையில் இருந்தான்.
எல்லா விஷயங்களும் மாலதிக்குத் தெரியும். ரகசியம் நிறைந்த அந்த அறை திறக்கப்படப் போகிறது. அவள் பலவற்றையும் தெரிந்து கொள்ள போகிறாள். அதனால் உண்டாகக் கூடிய சந்தோஷம் பெரிதாயிற்றே! அவள் பகல் கனவு கண்டு கொண்டிருப்பாள். ஒரு மனைவியாக ஆன பிறகு எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்ப்பாள். திருமண முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் பெண் பிள்ளைகள் தங்களுக்குள் சில சபதங்கள் செய்து கொள்வார்கள். கணவன் மீது அன்பு செலுத்த வேண்டும், அவனை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்... இப்படிப்பட்ட சில சபதங்களை எடுப்பார்கள். வேறு சிலர், வேறு வகையில் சபதம் செய்வார்கள். என் மீது அன்பு செலுத்தினால், நானும் அன்பு வைப்பேன் என்பதைப் போல, மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் கணவனுக்குப் பிடிக்கிற மாதிரி சாதமும் குழம்பும் வைத்து அன்பைச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்குப் பிறகும் சில பெண் பிள்ளைகள் சந்தோஷம் நிறைந்த, மயக்கக் கூடிய ஒரு உலகத்தை கனவு காணக் கூடியவர்களாக இருப்பார்கள். மாலதி இப்படி எதையும் கனவு காணவில்லை. படுக்கையறையைத்தான்... அங்கு தன் கணவனை அவள் நிர்வாண கோலத்தில் பார்க்க வேண்டும். இவ்வாறு... இவ்வாறு... பலவற்றையும். முன்பு கூறிய பெண் பிள்ளைகள் எல்லோருமே இடையில் அவ்வப்போது படுக்கையறையையும் கனவு கண்டிருப்பார்கள். ஏனென்றால், படுக்கையறை இல்லாமல் திருமண உறவு இருக்கிறதா?
அந்தச் சமயத்தில் அவளின் அன்னை அவளை எப்போதும் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் கவிழ்ந்து படுத்து தூங்கக் கூடாது... அவளின் தாய் வந்து தட்டி எழுப்புவாள். சில நேரங்களில் எழுப்புவதற்கு ஒரு பலமான தட்டு தேவைப்படும். பிறகு... திட்ட ஆரம்பிப்பாள். அப்படி படுத்து தூங்கித்தான் அவள் பழக்கப்பட்டிருக்கிறாள். தன் தாய் எதற்காக அப்படி திட்டுகிறாள் என்று தெரியாமல் அவள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்தாலும், விஷயம் என்னவென்று அவளுக்குத் தெரியும். அவள் மல்லாக்க படுக்கக் கூடாது. அதற்கு என்ன காரணம் என்று அவளுடைய அன்னை கூறுவாள். பெண்கள் அந்த மாதிரி மல்லாக்க படுத்து உறங்கக் கூடாது என்பது சாஸ்திரம். சாய்ந்து படுத்து தூங்கலாம் என்றால், அப்படியே பழகிப் போய் விட்டிருந்தாலும், கால்களுக்கிடையே கையை வைத்து தூங்கக் கூடாது. ஆனால், அப்படி இல்லாமல் தூங்கவும் முடியாது. அதற்குப் பிறகும் இருக்கின்றன தொல்லைகள்... குளியலறைக்குள் நுழைந்து சிறிது நேரம் ஆகியிருந்தால், அவளுடைய தாய் கூப்பிட ஆரம்பித்து விடுவாள். என்ன ஆயிற்றோ என்று! அவளுடைய புத்தகப் பெட்டியில் அவளுடைய அன்னை எதையோ தேடிக் கொண்டிருப்பாள். எப்போதும் அவளுடைய தாய்க்கு அவள் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். அவள் எதை எடுத்தாலும் பார்ப்பாள்.
அவளைப் பற்றி ஒரு விஷயம் தனிப்பட்ட முறையில் கூறி ஆக வேண்டும். இந்த ஆள் போதும் என்று அவள் நாக்கைத் திறந்து வளைத்து கூறியதில்லை. அவளுடைய அன்னை கேட்காமல் இல்லை. அந்த மெலிந்து போய் காணப்படும் மனிதனைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டாள். அவள் வாய் திறக்கவில்லை. நாணம் காரணமாக இருக்க வேண்டும் என்று தாய் நினைத்தாள். சினேகிதிகளைக் கொண்டு கேட்க வைத்தாள். நாணத்தால் அல்ல. அவளுக்கென்று கருத்து இல்லை. ஒரு சினேகிதி அவளைக் கேட்டு விட்டு வந்து, கூறியது இது:
'யாராக இருந்தாலும், சரிதான் என்று அவள் சொன்னாள்.'
அந்த சினேகிதி மாலதியின் வார்த்தைகளைத்தான் கூறினாள். அதே வார்த்தைகள்தாம் மாலதியின் நாவிருந்தும் வெளியே வந்தது. அதன் அர்த்தம் அன்னைக்குப் புரிந்ததோ என்னவோ! ஒரு புன்சிரிப்புடன் அன்னை, மாலதியின் தந்தையிடம் சொன்னாள்:
'அவளுக்கு யாராக இருந்தாலும் சரிதானாம்...'
அர்த்தத்தை முழுமையாக தெரிந்து கொண்டு விட்டதைப்போல தந்தை கேட்டார்:
'அப்படின்னா... யாராக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு ஆணாக இருந்தால் போதுமா?'
தாயும் விடவில்லை.
'அப்படின்னா அப்படித்தான்.'
தந்தை ஆச்சரியத்துடனும், சிறிது ஆர்வத்துடனும் கேட்டார்:
'அப்படியா?'
தாய் அந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாமல் விடவில்லை.
'அதனால்தான் நான் சொன்னேன்- வயசு பார்க்க வேண்டாம். மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இருந்தாலும், பிரச்னை இருக்குதே!'
அதற்குப் பிறகும் மாலதியின் அன்னை தொடர்ந்து சொன்னாள்:
'ஒவ்வொரு நாளும் கடக்க... கடக்க அவளுடைய இளமை அழிந்து கொண்டே இருக்குது. ஆறு மாதங்களுக்குள் அவள் கிழவியைப் போல ஆயிடுவாள்.'
தந்தை தனக்குத் தானே கூறிக் கொண்டார்:
'குறைச்சலை அவளே உண்டாக்கி வைக்கப் போகிறாள்.'
தாய் அதை எதிர்த்தாள்.
'அப்படி நடக்காது. அதற்கான அடக்கமும் பணிவும் அவளிடம் இருக்கு.'