சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்... - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6387
'உனக்கு என்ன ஆச்சு?'
மாலதி அப்போதுதான் முழுமையான சுய உணர்வு நிலைக்கு வந்தாள். அவளுடைய கணவன்தான் முன்னால் நின்று கொண்டிருந்தான். அவள் அவனுடைய கழுத்தில் தன் கைகளைச் சுற்றி, அழுத்தமாக அவனை முத்தமிட்டாள். ஆனால், அவன் ஒரு மரத்தால் ஆன பொம்மையைப் போல அந்த முத்தத்தை வாங்கினான். அவள் அவனுடைய இடது கன்னத்தைக் கடித்தாள். கன்னத்தில் நீல நிறம் படர்ந்ததும், அவன் அவளுடைய பிடியிலிருந்து சற்று பலத்தை பயன்படுத்தி விலகி நின்றான்.
திட்டுகிற குரலில் சுரேந்திரன் கேட்டான்:
'இது என்ன? உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? நீ கனவு கண்டு கொண்டிருக்கிறாயா?'
மாலதி மிகவும் அழகாக, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சற்று புன்னகைத்தாள். மீண்டும் அவள் அவனைத் தன்னுடைய சரீரத்தோடு சேர்த்து பிடித்தவாறு, அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே கூறினாள்:
'ஆமாம்... நான் நல்ல பகல் வேளையில் ஒரு கனவு கண்டேன்.'
சுரேந்திரன் தன்னைச் சுற்றி வளைத்திருந்த அவளுடைய கையை மெதுவாக விலக்கி விட்டவாறு கேட்டான்:
'ம்... அது உனக்கு ஞாபகத்தில் இருக்குதா? சரி... இங்கே ஒரு ஆள் வந்தானா?'
பயங்கரமான ஒரு சம்பவத்தைப் பற்றி நினைக்கும்போது இருக்கக் கூடிய பல உணர்வுகளுடன் மாலதி பதில் சொன்னாள்:
'ம்... ம்... பெரிய மீசையையும் சிவந்த கண்களையும் கொண்டிருந்த தடிமாடு மாதிரி இருந்த ஒரு மனிதன் வந்தான். ஆக்கிரமிக்கும் ஏதோ எண்ணத்துடன்தான் அவன் வந்தான். பயந்து போயிட்டேன். உண்மையாகவே அந்த ஆளுக்கு என் மீது கெட்ட எண்ணம்தான். அந்த ஆளோட பார்வையை நினைக்கிறப்போ இப்போது கூட எனக்கு பயம் தோணுது. நான் பயந்து போய் உள்ளே வந்து கதவை அடைத்துக் கொண்டேன்.'
தொடர்ந்து அவள் கேட்டாள்:
'அந்த ஆள் யார்?'
'அவன் எதுவும் சொல்லலையா? நீ எதுவும் கேட்கவுமில்லையா?'
'இல்லை.'
'நல்லதாப் போச்சு... ஒரு ஆள் வீட்டிற்கு வந்தால், எதற்காக வந்தாய் என்று கேட்க வேண்டாமா? அப்படி யாராவது வந்து உன்னை பலாத்காரம் செஞ்சிடுவாங்களா?'
ஒரு தவறு நடந்து விட்டது என்ற நினைப்புடன் அவள் கேட்டாள்:
'அந்த ஆள் யார்? எதற்காக வந்தான்?'
'நம்முடைய கீழே இருக்கும் வீட்டை வாடகைக்கு எடுப்பதற்காக வந்திருக்கிறான். அப்படி ஒரு ஆள் வந்திருக்கிறான் என்ற தகவல் தெரிந்து, நான் உடனடியாக திரும்பி வந்தேன். நீண்ட நாட்களாகவே அது சும்மாதானே கிடக்குது!'
குற்றம் சுமத்தியவாறு சுரேந்திரன் தொடர்ந்து சொன்னான்: 'நான் இல்லாதபோது யாராவது வந்தால், நீ ஓடி உள்ளே போய் விடுகிறாய். ஏன் அது?'
குற்றத்தை ஏற்றுக் கொண்டு ஒரு குழந்தையைப் போல அவள் சொன்னாள்:
'எனக்கு பயம்...'
கணவனின் வெறுப்புடன் மாலதியை காலிலிருந்து தலை வரை பார்த்துக் கொண்டே சுரேந்திரன் திட்டினான்:
'பயம்...! நல்லதுதான்...'
மாலதி தவறு செய்து விட்டவளாக நின்று கொண்டிருந்தாள். சுரேந்திரனின் அப்போதைய கவலை- இனி எங்கு சென்று அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பதற்காக வந்திருந்த மனிதனைக் கண்டு பிடிப்பது என்பதுதான். நீண்ட நாட்களாகவே அந்த கட்டிடம் காலியாகத்தான் கிடக்கிறது.
* * *
2
அந்த திருமண உறவில் அந்த அளவிற்கு அசாதாரணமாக எதுவுமில்லை. ஊரில் எல்லா இடங்களிலும் நடப்பதைப் போன்ற ஒரு திருமணம்தான் சுரேந்திரனையும் மாலதியையும் இணைத்து வைத்தது. பிறகு... ஏதாவது விசேஷமோ, தனித் தன்மையோ- ஏதாவது இருந்திருந்தால், அது அவர்களுடைய உடலுறவு வாழ்க்கையில்தான். அந்த மாதிரி ஆண், பெண் இரு பாலரின் விருப்பம், விருப்பமின்மைக்கும் ஏற்ற நடவடிக்கைகளும், அசாதாரணத் தன்மையும் உண்டாக்கிய ரசனைகளும் இல்லாத படுக்கையறை உண்டோ? மிருகங்களுக்குக் கூட ஈர்ப்பு... ஒன்றோடொன்றுக்கு ஈர்ப்பு... வேறுபாடு இல்லையா?
சாதாரண முறையில்தான் மாலதியின் திருமணமும் நடந்தது ஒரு பெண் பிறக்கும்போதே தாய், தந்தையின் தலையில் ஒரு பொறுப்பு வந்து விழுகிறது. பிரசவம் நடைபெற்ற இடத்தில் 'குழந்தை... பெண்' என்று பணிப்பெண்களில் யாராவது உரத்த குரலில் கூறும்போதிலிருந்தே தாயும் தந்தையும் ஒரு தேடலுக்கு தயாராகி விடுகின்றனர். எங்கேயோ, சாதாரண முறையில் ஒரு ஆண் குழந்தை பிறந்திருப்பான். அவனைக் கண்டு பிடிக்க வேண்டும். 'ஆண் குழந்தை' என்று சத்தம் போட்டு கூறினால், உண்மையிலேயே வெளியே நின்று கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மன சந்தோஷமல்லவா உண்டாகிறது? பெண் என்று கூறும்போது, தாயும் பிள்ளையும் இரண்டாக பிரிந்து விட்டார்களே என்று பிரசவம் நடைபெறும் வீட்டிற்கு வெளியே இருப்பவர்கள் நிம்மதி அடையும் அதே நேரத்தில், குழந்தை ஆணாக இருந்தால், மேலும் சிறிது சந்தோஷம் அதிகரிக்கும். பெண் பிறந்த இடத்தில் குரவைச் சத்தம் கேட்காது. அங்கு சிரட்டையை உரலில் போட்டு இடிப்பார்கள்.
அப்படி சிரட்டையை உரலில் போட்டு இடித்துத்தான் மாலதியின் உலகத்திற்குள் வந்த வருகையும் அறிவிக்கப்பட்டது. குழந்தையைப் பார்த்து தந்தையும் தாயும் சந்தோஷத்தில் மூழ்கியிருக்கும்போது, யாருடன் சேர்த்து வைத்து அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துத் தருவது என்ற சிந்தனை அவர்களுடைய மனதின் அடித்தட்டில் நுழைந்து விட்டிருக்கும்.
பெண் குழந்தையின் கூந்தலில் நிறங்களைக் கொண்ட ரிப்பனையும் மலர்களையும் ஏன் கட்டி வைக்கிறார்கள்? பெண்ணின் கண்களில் மை இடுவார்கள். பெண்ணுக்கு பொட்டு வைத்து, அழகை அதிகரிப்பார்கள். எதற்கு? தங்கத்தையும் ஆடையையும் அணிவிப்பதில் நோக்கம் இருக்கிறதா? அந்த வகையில் வளர்ந்து வரும் பெண்ணின் கண்களில் அசைவு உண்டாகிறது. அவளால் அந்த வகையில் கண்களால் எறிய முடிகிறது. அதை அவள் செய்கிறாள். அவள் ஏன் வெட்கப்படுகிறாள்? அந்த நாணம், அடக்கம், பணிவு என்று கூறப்படும் கட்டுப்பாடு, இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன? மார்புப் பகுதியில் முலை முளைக்க தொடங்குவதிலிருந்து அவளுடைய மனதில், அல்லது சுய உணர்வு தளத்தில் ஏதோ நுழைந்து பாடாய்படுத்திக் கொண்டிருக்கும். அந்தத் தருணத்திலிருந்து அவள் தன் தந்தை கேட்டால் கூட, ஒரு முத்தம் கொடுப்பதில்லை. அதற்குப் பிறகு அவளுக்கு பயம் தோன்றுகிறது. அவை அனைத்தும் படிக்கப்படுபவைதானே? படிப்பிக்கப்படுபவைதானே?