சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்... - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6387
அந்த வகையில் சுரேந்திரனுடன் நடக்கப் போகும் திருமணம் உறுதியானது. சுரேந்திரனுக்கு பிழைப்பதற்கான வழி இருந்தது. நல்ல பருமனான உடலையும், நல்ல குடும்பப் பின்னணியையும் கொண்டிருந்தான். ஆரோக்கியமாக இருந்தான். எப்படிப் பார்த்தாலும், பரவாயில்லை என்ற நிலையில் இருந்தான்.
திருமணம் முடிந்ததும், தந்தைக்கும் தாய்க்கும் பெரிய நிம்மதி உண்டானது. இருக்க வேண்டியதுதானே!
* * *
3
கீழே இருந்த வீட்டில் ஒரு பெரிய மீசையைக் கொண்டிருந்த இளைஞன் வந்து தங்கினான். அவனுடைய பெயர் பிரபாகரன். அவனுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் இருந்தார்கள். இந்த முறை மாலதி குற்றம் சுமத்தியது- பிரபாகரனின் மனைவியை. அந்தப் பெண்ணுக்கு ஒரு நாகரீகமும் இல்லை என்றாள்! பிறகு ஒரு நாள் அவள் சொன்னாள்- அந்தப் பெண்ணின் நாக்கு நீளமாக இருக்கிறது என்று. அதற்குப் பிறகும் குற்றச்சாட்டுகள் இருந்தன. அவள் ஆணவம் பிடித்தவள்!
மாலதி பிரபாகரனைப் பற்றி இரக்கம் நிறைந்த குரலில் சொன்னாள்!
'பாவம்... அந்த மனிதனுக்கு இப்படிப்பட்ட ஒருத்தி கிடைச்சிருக்காளே!'
சுரேந்திரன் கேட்டான்:
'அப்படியா? இப்போது அந்த மனிதன் பாவமா ஆயிட்டானா? அவன் முதலில் இங்கே வந்தப்போ, நீ என்ன சொன்னே?'
அவள் கொஞ்சலான குரலில் சொன்னாள்:
'அன்னைக்கு நான் பயந்து போயிட்டேன். அந்த மீசையுடனும் தாடியுடனும் பார்த்தப்போ... அதற்குப் பிறகுதானே தெரிஞ்சது?'
வசிக்க ஆரம்பித்து சில நாட்கள் கழித்து, அங்கு வந்தான். அப்போது சுரேந்திரனும் இருந்தான். தான் முதல் முறையாக அங்கு வந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை உரையாடலுக்கு மத்தியில் பிரபாகரன் வெளியிட்டான். அப்போது சுரேந்திரன் தமாஷாக சொன்னான்:
'இப்போது அவளுடைய பயம் போய் விட்டது. உங்களுடைய மீசைதான் அவளை பயமுறுத்தியிருக்கு!'
பிரபாகரன் சிரித்து விட்டான். அவன் சொன்னான்:
'இது கெடுதல் இல்லாத மீசை. வெறுமனே வச்சேன். அப்படியே காடு மாதிரி வளர்ந்திடுச்சு.' தொடர்ந்து அவன் கேட்டான்:
'உங்க மனைவி இங்கேதானே இருக்காங்க? நானே சொல்லிடுறேன்...'
இருக்கிறாள் என்று சொல்வதா, இல்லை என்று சொல்வதா என்று ஒரு நிமிடம் சுரேந்திரன் யோசித்தான். அவன் சொன்னான்:
'இருக்கா... ஆனால், அவள் சமையலறையில் எங்கோ இருப்பாள்...'
உண்மையிலேயே மாலதி பக்கத்திலிருந்த அறையின் கதவுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த ஒற்றை மடிப்பு துணியின் நுனிப் பகுதி வெளியே தெரிந்தது. மேலும் சற்று உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு அவளால் நிற்க முடியவில்லையா என்று சுரேந்திரன் சிந்தித்தான். அந்தத் துணியின் நுனிப் பகுதியை பிரபாகரன் பார்த்தால், பெரிய குறைச்சல்! மனைவியை மறைத்து வைத்திருக்கிறான் என்ற பேச்சு வந்து விடும்.
உண்மையிலேயே சொல்வதாக இருந்தால்- சட்டத்திற்கும் கதவிற்குமிடையே இருந்த இடைவெளி வழியாக பிரபாகரனைப் பார்த்து, தன்னையே மறந்து மாலதி நின்று கொண்டிருந்தாள். அங்கு நடைபெற்ற உரையாடலை அவள் கேட்டிருப்பாளா என்பதே சந்தேகம்.
ஆனால், அந்த துணியின் நுனி மட்டுமல்ல- அந்த இடைவெளியின் வழியாக பிரகாசித்துக் கொண்டிருந்த, தன்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கண்களும் பிரபாகரனின் பார்வையில் பட்டது. அவளுடைய கண்கள் என்னவோ கூறுவதைப் போல சந்தேகம்... ஆனால், அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, கூர்ந்து பார்க்க முடியாது. சுரேந்திரன் அவனுடைய கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பிரபாகரனும் எப்படியோ தன்னை புரிந்து கொண்டிருப்பான் என்பது மாலதிக்கும் புரிந்து விட்டது.
அதற்குப் பிறகு அந்த அளவிற்கு நீளமான உரையாடல் இல்லை. பிரபாகரன் கிளம்பினால் போதும் என்று சுரேந்திரன் ஆசைப்பட்டான். மேலும் சிறிது நேரம் அமர்ந்திருந்தால், அந்தக் கண்களுக்குள் மறைந்திருக்கும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியுமே என்று பிரபாகரனின் உள் மனம் கூறிக் கொண்டிருந்தது. அப்போதும் அந்த துணியின் நுனிப் பகுதி தெரிந்து கொண்டுதான் இருந்தது.
'அப்படின்னா, கிளம்பட்டுமா?' என்று விடைபெற்றுக் கொண்டு பிரபாகரன் வெளியேறினான்.
மாலதி அதே இடத்தில் நின்றிருந்தாள். இடைவெளியின் வழியாக அவளுடைய பார்வைகள் அவனைப் பின் தொடர்ந்து சென்றன. எது எப்படி இருந்தாலும், ஒரு விஷயம் நல்லதாகப் போய் விட்டது. சுரேந்திரன் நுழைந்து வந்ததை அவள் தெரிந்து கொண்டாள்.
'நீ சமையலறையிலோ வேறு எங்கோ இருக்கேன்னு நான் சொன்ன பிறகும், நீ இங்கேயே ஏன் நின்று கொண்டு இருக்கிறாய்? நீ அந்தப் பக்கம் போகக் கூடாதா?'
அவ்வாறு அவன் சொன்னது மாலதியின் மூளையில் பதியவில்லை. எனினும், முன்பு உண்டான அனுபவத்தைக் கொண்டு அவள் சிறிது பாடம் கற்றிருக்கிறாள்.
'நான் மறைந்து நின்று கொண்டிருந்தேன்.'
'உன்னுடைய துணியின் நுனிப் பகுதி நல்லா தெரிஞ்சது.'
'நான் அந்த அளவுக்கு கவனிக்கல...'
மாலதியை பதைபதைக்கச் செய்த ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் பிரபாகரனின் வருகையில் இருந்தது. மிகவும் அருகில் பிரபாகரனைக் காண்பது அல்லது கவனித்தது அன்றுதான். அதற்கு முன்பே ஒரு முறை சற்று பார்த்திருக்கிறாள். தூரத்தில் அவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறாள். அந்த மீசையும் முகமும் கண்களை விட்டு மறையவே இல்லை. கண்களை இறுக அடைத்துக் கொண்ட பிறகும், அவை தெரியவே செய்கின்றன. அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள். மறையவில்லை. மாலதிக்கு பதைபதைப்பு உண்டாகி விட்டது. அன்று இரவு தன் கணவனுடன் சேர்ந்து படுத்திருந்தபோதும், பிரபாகரனின் முகத்தைத்தான் அவள் பார்த்தாள். ஒரு முறை பயந்து போய் பிரபாகரனின் சரீரத்தைத்தான் தன்னுடைய கை சுற்றியிருக்கிறது என்ற நினைப்பு உண்டாகி, அவள் கையை எடுத்துக் கொண்டாள். சுரேந்திரன் கேட்டான்:
'நீ ஏன் பயந்து விட்டாய்?'
அவள் சொன்னாள்:
'ஒண்ணுமில்ல... ஒரு கனவு கண்டேன்.'
* * *