சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்...
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6388
சதையின் நமைச்சல்களுக்கு நடுவில்...
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுரா
திருமணம் முடிந்து மனைவியை சுரேந்திரன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான். மறுநாள் வடக்குப் பக்க வீட்டிலிருக்கும் இளைஞனைப் பற்றி மாலதி ஒரு புகார் கூறினாள். அவன் தன்னுடைய தெற்குப் பக்கத்திலிருக்கும் பலா மரத்தின் கிளையிலிருந்து கீழே இறங்கவேயில்லை. அங்கிருந்தவாறு அவன் உரத்த குரலில் பாடினான். சுரேந்திரன் அந்த விஷயத்தை அந்த அளவிற்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
'அவன் அவனுடைய வீட்டின் பலா கிளையில் இருந்து கொண்டுதானே பாடுகிறான்! நமக்கு என்ன?'
தொடர்ந்து சுரேந்திரன் சொன்னான்:
'அந்த இளைஞனை, அந்த பலா மரத்தின் கிளையில் எப்போதும் பார்க்கலாம். அது ஒரு வழக்கமான விஷயம். பிறகு... இன்றைக்கு பாடியிருக்கிறான். அதற்குக் காரணம்- ஒரு புதிய பெண் தெற்குப் பக்க வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்பதாக இருக்கலாம்.'
அதற்குப் பிறகு கூறப்பட்ட புகார் தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் குடும்ப நாயகனைப் பற்றி. அவன் தன்னுடைய வீட்டின் கிழக்குப் பக்கத்திலிருந்த நிலத்தில் நின்று கொண்டு அதை கிளறிக் கொண்டும், கடப்பாறையை வைத்து குழி தோண்டிக் கொண்டும் இருந்திருக்கிறான். மணிக்கு நாற்பது தடவைகள் தான் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்து கட்டியிருக்கிறான். அதை அவன் வேண்டுமென்றே செய்தான் என்று மாலதி கூறினாள்.
சுரேந்திரன் கேட்டான்:
'நீ எதற்கு அதை நின்று பார்த்துக் கொண்டிருந்தாய்?'
மாலதியால் பதில் கூற முடியவில்லை. எனினும் அவள் சொன்னாள் : 'அந்த மனிதனிடம் பக்கத்தில் பெண்கள் வசிக்கிறார்கள் என்ற ஞாபகம் இருக்கணும்னு சொல்றதுல தப்பு இல்லை.'
அதற்குப் பிறகு சுரேந்திரனின் ஒரு நண்பனைப் பற்றி புகார். அவன் ஒரு முறை வீட்டிற்கு வந்திருக்கிறான். சாலையில் கடந்து சென்றபோது அவன் அவளை அப்படியே வெறித்து பார்த்திருக்கிறான். அவள் கேட்டாள்:
'அவன் மிகவும் மோசமான ஆள். அப்படித்தானே?'
சுரேந்திரனால் அவளுடைய கூற்றை ஒப்புக் கொள்ள முடியவில்லை.
'உனக்கு எப்போதும் ஒரு ஆணைப் பற்றியாவது புகார் இருந்து கொண்டேயிருக்கும். இது ஒரு வகையான பைத்தியக்காரத்தனம்'- தொடர்ந்து அவன் கேட்டான்:
'பக்கத்து வீடுகளில் உள்ள எல்லோருடனும், இப்போது நண்பர்களாக இருப்பவர்களுடனும் என் மனைவியைப் பார்த்து, என் மனைவிக்கு முன்னால் வேட்டியை அவிழ்த்து கட்டினாய் என்றெல்லாம் கூறி நான் அடிதடி சண்டை போடணுமா?'
மாலதி கவலையுடன் காணப்பட்டாள்.
'நான் இப்படிப்பட்ட விஷயங்களைப் பார்த்து பழகியவள் இல்லை. என்னால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் அப்படி வளர்ந்தவள் இல்லை'- பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்:
'இனிமேல் நான் எதுவும் கூறப் போவதில்லை. என்னை யார் வேண்டுமானாலும் வீட்டிற்குள் நுழைந்து பலாத்காரம் செய்து கொள்ளட்டும்..'
சுரேந்திரனுக்கு சிரிப்பு வந்தது.
மாலதியைப் பற்றி சுரேந்திரனிடமும் சில புகார்கள் இருந்தன. ஒரு வகையில் பார்க்கப் போனால்- அவை அனைத்தும் படுக்கையறை சம்பந்தப்பட்ட புகார்கள். அவள் மெல்லிய ஒற்றைத் துணியை அணிந்தே நடக்கிறாள். அவள் அப்படி திரும்பி நடந்து செல்வதைப் பார்ப்பது என்பது அவனுக்கு மிகவும் சுவாரசியம் அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. எனினும், அவன் கேட்பான்:
'நீ ஏன் அப்படி நடக்கிறாய்? இது ஆபாசமில்லையா?'
மனம் விட்டு சிரித்துக் கொண்டே அவள் கேட்டாள்:
'ஏன்? அதைப் பார்த்து மனம் சபலமாயிடுச்சா? அப்படித்தான்னா, அதுக்குத்தான்...'
தொடர்ந்து அவள் கூறுவாள் : 'என்னால் அப்படி இறுக கட்டிக் கொண்டு நடக்க முடியாது. மூச்சை அடைக்கும்...'
மீண்டும் அசைந்து அசைந்து பின்பாகத்தைக் காட்டியவாறு அவள் நடந்து செல்வாள்.
அதற்குப் பிறகும் சுரேந்திரனிடம் புகார்கள் இருந்தன. அவன் ஏதாவது முக்கிய விஷயமாக நடந்து போய்க் கொண்டிருக்கும்போது- கட்டியிருக்கும் அவனுடைய வேட்டியை அவள் அவிழ்த்தெறிவாள். அது திடீரென்று நடக்கும். வேட்டி அவிழ்ந்து பறக்க, நின்று கொண்டிருக்க யாருக்கும் தோன்றாது அல்லவா? முன்னால் நின்று கொண்டிருப்பது மனைவியாகவே இருந்தாலும். அதற்குப் பிறகு அங்கு வேட்டிக்காக நடக்கும் ஒரே போராட்டம்தான். சில நேரங்களில் அவனுக்கு கோபம் வந்து விடும். அப்போது அவள் இவ்வாறு கூறுவாள்:
'என் துணியை அதே மாதிரி பிடிச்சு அவிழ்த்துப் போடுங்க.'
இறுதியில் அந்த காட்சிகள் அதே போல ஒவ்வொருவரின் வேட்டியின் நுனியையும் பிடித்து இழுத்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி சிரிப்பதில்தான் முடியும்.
எனினும் அந்த இல்லற வாழ்க்கையின் படுக்கையறை விஷயத்தில் சிறிது கருத்து வேறுபாடுகள் இருந்தன.
தினமும் அவன் அவளிடம் படுக்கையறையில் இருக்கும்போது கேட்பதைக் கேட்கலாம்:
'உனக்கு வேறு எந்தவொரு சிந்தனையும் இல்லையா?'
அவ்வாறு நடந்து கொண்டிருந்த அந்த வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு சம்பவம் நடைபெற்றது. நல்ல உடல் நலத்துடன் இருந்த கூலி வேலை செய்யும் ஒரு மனிதன் சுரேந்திரனின் நிலத்தில் நின்று கொண்டு ஓங்கி மண் வெட்டியால் வெட்டிக் கொண்டிருந்தான். அவன் முழங்கால் வரை வரக் கூடிய ஒரு துண்டை அணிந்திருந்தான். வேலை செய்து சுருங்கிப் போன அந்த சரீரத்தின் சதைகள் மிகவும் சிரமப்பட்டு வெட்டிக் கொண்டிருந்தபோது உருண்டு திரண்டு கொண்டிருந்தன. அவனுடைய உடலமைப்பு ஆணின் அழகை வெளிப்படுத்தக் கூடிய ஒரு மாதிரியாக இருந்தது. ஒரு ஓவியனுக்கு ஏற்ற மாதிரி...
மாலதி சாளரத்தின் அருகில் அவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். அதிகபட்சம் பத்து பதினைந்து அடிகள் தூரத்தில்தான் அவன் நின்றிருந்தான். அந்த உடலமைப்பைப் பார்த்து அவள் ஒன்றிப் போய் விட்டாள். சுரேந்திரன் வந்ததை அவள் பார்க்கவில்லை. அவன் வேட்டியை மாற்றினான். ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து புகைத்தான். அதற்குப் பிறகும் அவள் கவனிக்கவேயில்லை.
சுரேந்திரன் அழைத்தான்:
'மாலதீ...'
மாலதி அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தாள். அவளை கையும் களவுமாக பிடித்திருக்கிறான். எந்தவொரு சமாதானமும் கூற முடியாது. அவள் வெளிறிப் போய் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தாள்.
சுரேந்திரன் கேட்டான்:
'அப்படியென்றால் வடக்குப் பக்க வீட்டைச் சேர்ந்த கோபியுடனும், மேற்குப் பக்க வீட்டிலிருக்கும் கோவிந்தன் அண்ணனுடனும் நான் சண்டை போட்டிருந்தால், எந்த அளவிற்கு மோசமான ஒரு விஷயமாக அது இருந்திருக்கும்!'
உடனடியாக மாலதியால் சமாதானம் கூற முடியவில்லை. எனினும், அவள் அப்படி பெரிய குற்றம் எதையும் செய்து விடவில்லை.
* * *