பால் குவளையில் ஒரு ஈ - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6342
பேன்டாங்கிற்குச் சொந்தமான அந்தத் தனியார் நிலத்தின் அளவு ஒரு ஹெக்டார் வரும். அந்த நிலத்தின் முன் பகுதியில் மூங்கிலாலும் புற்களாலும் அமைக்கப்பட்ட ஒரு பழைய குடில் இருந்தது. மழை பெய்யலாம்... எத்தனையோ வருடங்களாக சூரியனின் வெப்பம் கூரைகளை தாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனினும், அந்த வீடு எப்போதும் போல உறுதியாக நின்று கொண்டுதான் இருக்கிறது. ஒரு புதிய பங்களாவில் போய் வாழ்வதை விட, அந்த வீட்டில் வாழ்வதைத்தான் பேன்டாங்க் பொதுவாகவே விரும்புகிறார். தங்களுடைய வறுமையான நிலைக்கு மத்தியில் அவருடைய குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
வீட்டிற்கு பின்னால்... மிகவும் தூரத்து எல்லையில் ஆறு மாமரங்கள் இருந்தன. ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் அவற்றில் சதைப் பிடிப்பான பழங்கள் பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கும். சில கொய்யா மரங்களும் இருந்தன. சில ‘சிக்கோஸ்’ மரங்களும், சில ‘ஆட்டிஸ்’ மரங்களும்... அவற்றுக்கு அருகில் பேன்டாங்க் காய்கறிகளையும் பயிரிட்டிருந்தார். தன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியில் கொஞ்சம் பன்றிகளையும்’ கொஞ்சம் கோழிகளையும் அவர் வளர்த்துக் கொண்டிருந்தார். அந்த தம்பதிகளும், அவர்களுடைய பிள்ளைகளும் வாழ்வதற்கு தேவையானவை அவற்றிலிருந்து அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன.
ஒரே நேரத்தில் அந்த கிளைப் பகுதியில் கட்டப்பட்ட பங்களாக்கள் அனைத்தும் முடிக்கப்பட்டன. உடனடியாக அந்தந்த வீடுகளின் உரிமையாளர்களின் விருப்பப்படி, அனைத்து வீடுகளும் வெவ்வேறு வர்ணங்களைக் கொண்டு பூசப்பட்டன. ஒவ்வொரு வீடும் ஒரு ஸ்டீல் வேலியால் மறைக்கப்பட்டது. கம்பி வலைகளைக் கொண்டு ஒரு வேலி அமைக்கப்பட்டது. மிகவும் விரைவாகவே ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைபேசி இணைப்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் டெலிவிஷன் ஆன்டெனாக்கள் முளைத்திருந்தன.
இந்த அனைத்து வேலைகளும் ஐந்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டன. முன்பு புற்களும் செடிகளும் அடர்த்தியாக வளர்ந்து பயனற்ற நிலமாக இருந்த, ஏராளமான மண் குவியல் குவியலாக காட்சியளித்த, மழைக் காலத்தில் சேறு நிறைந்த இடமாக இருந்த, சுற்றிலும் தவளைகள் கத்திக் கொண்டிருந்த அந்த பகுதி விளக்குகளையும் மலர்களையும் கொண்ட அழகான வீடுகள் நிறைந்த ஒரு சிறிய நகரமாக மாறியது. உண்மையான வளர்ச்சியும் வசதியும் அங்கு தென்பட்டன. இவை அனைத்துமே பணம் என்ற ஒன்றின் மந்திர சக்தியால் உண்டானவையே. ஆச்சரியப்படும் அளவிற்கு மனிதர்கள் செயல் வடிவில் செய்து காட்டிய அந்த அதிசயம் ஒரு பிரமையாக இருக்குமோ என்று நினைத்த பேன்டாங்க் பல நேரங்களிலும் தன்னுடைய கண்களை தானே கசக்கி பார்த்துக் கொண்டார்.
வீடுகளில் மனிதர்கள் குடியிருக்கும் அந்த நாள் வந்தது. அங்கு வந்து கொண்டிருந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல லாரிகளில் ஏற்றப்பட்ட சொத்துக்கள் இருந்தன. பியானோ, குளிர் சாதனப் பெட்டி, பனிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, ஷை-ஃபை வானொலி இணைப்பு, சமையலறையிலும் சாப்பிடும் அறையிலும் இருக்கக் கூடிய பொருட்கள், படுக்கைகள், ஸோஃபாக்கள், சாய்ந்து உட்காரும் மெத்தைகள், வீடு முழுவதும் போடக் கூடிய ஃபர்னிச்சர்கள், மொட்டை மாடியிலும் தோட்டத்திலும் போடக் கூடிய ஃபர்னிச்சர்கள், ஏராளமான நிலைக் கண்ணாடிகள், விலை உயர்ந்த விளக்குகள், மின் கருவிகள், ஆடம்பரமான சாப்பிடும் மேஜைகள், டெஸ்க்குகள், புகழ் பெற்ற ஓவியர்கள் வரைந்த விலை அதிகமான ஓவியங்கள், பீங்கான் பாத்திரங்கள், புத்தகங்கள், கனமான தலையணைகள், கண்ணாடி கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் ஞானிகள், ரப்பரால் ஆன தெளிப்பான்கள், தரையைத் துடைக்க பயன்படும் துடைப்பான், குழந்தைகளின் பொம்மைகள், இவை போக... ஓராயிரம் சிறிய பொருட்கள்... அவற்றை பேன்டாங்கும் அவருடைய குடும்பமும் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக அப்போதுதான் பார்க்கிறார்கள். ஆடம்பர முறையில் புதிதாக கட்டப்பட்டிருந்த பங்களாக்களுக்குள் நுழையும் ஒவ்வொரு குடும்பத்தையும் அவர்கள் வெறித்துப் பார்த்தார்கள்.
‘ஒரு வசதி படைத்த வியாபாரி சமீபத்தில் திறந்த கடையைக் கூட இவர்கள் சாதாரணமாக்கி விட்டார்கள்’ -பேன்டாங்க் கூறினார். ‘இவ்வளவு பொருட்களையும் இவர்கள் எங்கே கொண்டு போய் வைப்பார்கள்?’- அவர் தனக்குத் தானே மெதுவான குரலில் கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில் அவர் வேறொரு உண்மையையும் நினைத்துப் பார்த்தார். கடந்த இருபது வருடங்களில் தங்களுடைய சொத்துக்கள் என்று இருக்கும் கொஞ்சம் தட்டுகள், ஒரு துணி துவைக்கும் தொட்டி, தண்ணீர் எடுத்து வைப்பதற்காக இருக்கும் இரண்டு பாத்திரங்கள், ஒரு தட்டையான இரும்புத் துண்டு, ஒரு வெட்டும் இரும்பு, ஒரு மண் வெட்டி, ஒரு மண்ணை கிளற பயன்படும் கருவி, ஒரு ரம்பம், ஒரு கோடாரி, இரண்டு கத்திகள்- இவைதான் அவர்களின் சொத்துக்கள்.
அந்த கிளைப் பகுதிகளுக்குள் நுழைவதற்கான சாலையின் முன் பகுதியில் ஒரு கல்லால் ஆன வளைவு உண்டாக்கப்பட்டிருந்ததை பேன்டாங்க் பார்த்தார். அதில் ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்)’ என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அர்த்தம் பேன்டாங்கிற்குப் புரியவில்லை. பள்ளிக் கூடத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் அவருடைய மகன் அதற்கான அர்த்தத்தை அவருக்கு விளக்கிச் சொன்னான்:
‘அந்த இடம் அதற்குள் வசிப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. வெளி ஆட்கள் யாரும் அதற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை.’
தன் பையனின் விளக்கத்தை வெகு வேகமாக அந்த தந்தை புரிந்து கொண்டார்.
அந்த சாலையின் ஆரம்பத்தில் காவலாளிகளும், சிறப்பு போலீஸ்காரர்களும் இருப்பதற்கான ஸ்டேஷன் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. தங்களின் மார்புகளில் அடையாள அட்டைகள் அணிந்திருந்த, இடுப்பில் ரிவால்வர்களைச் சொருகியிருந்த மூன்று காவலாளிகள் இரவும் பகலும் மாறி மாறி காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே வசிக்காமல் அங்கு நுழைய முயன்ற ஒவ்வொருவரும் அங்கு விசாரிக்கப்பட்டார்கள். குறிப்பாக- அவர்கள் கால் நடையாக நடந்து வந்தாலோ அல்லது ஜீப்களில் வந்தாலோ...
சிறப்பு போலீஸ்காரரை முதல் தடவையாக பார்த்தபோது, அவர் மிகவும் அரக்கத்தனம் கொண்ட மனிதராக இருப்பாரென்றும் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பாரென்றும் பேன்டாங்க் நினைத்தார்.
‘இன்னும் சொல்லப் போனால்- அந்த மனிதரைத்தான் கூர்ந்து கவனிக்க வேண்டும்’- பேன்டாங்க் தனக்குள் கூறிக் கொண்டார்.
இதற்கிடையில் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டார்கள். ஒரு நாள் தங்களுக்குத் தேவைப்பட்ட உணவைச் சமைத்த பேன்டாங்கிடமும் அவருடைய மனைவியிடமும் அவர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். அவர்கள் தாங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை முறைப்படி கொடுத்தார்கள். அவர்களுடைய முழு ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. அந்த இடத்திற்கு அவர்கள் இனிமேல் எந்தச் சமயத்திலும் வர மாட்டார்கள். ‘நன்றி, மேங்க் பேன்டாங்க்... நன்றி, ஆலிங்க் அனா...’- அவர்கள் கூறினார்கள்.
அன்று இரவு கடந்த சில மாதங்களாக தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்ததன் மூலம் கிடைத்த பணத்தை அனா குவியலாக வைத்தாள். அவள் அதில் ஐநூறு பெஸாக்கள் சம்பாதித்திருந்தாள். பேன்டாங்கின் முன்னிலையில் அவள் பணத்தை எண்ணினாள்.