பால் குவளையில் ஒரு ஈ
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6343
பேன்டாங்கிற்கு அது ஒரு ஆச்சரியத்திற்குரிய விஷயமாக இருந்தது.
ஒரு நாள் காலையில் இரண்டு லாரிகளும், ஒரு புல் டோஸர் இயந்திரமும் இடி இடிப்பதைப் போல பயங்கரமான ஓசைகளை உண்டாக்கிக் கொண்டு அவருடைய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தன. முதல் லாரியில் கூட்டமாக தொழிலாளர்கள் வந்திருந்தார்கள். இரண்டாவது லாரியில் அவர்கள் பயன்படுத்தக் கூடிய கருவிகளும், பிற பொருட்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. ஃபோர்மேன் ஒரு ப்ளூ-ப்ரிண்ட்டில் தன் விரலை வைத்துக் கொண்டு, மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தார்.
மதிய நேரம் ஆவதற்கு முன்பே, மரத்தால் ஆன பலகைகளையும், இரும்பையும் கொண்டு ஒரு அறையை தொழிலாளர்கள் உருவாக்கி முடித்தார்கள். அங்கு அவர்கள் தங்களின் கருவிகளையும், மற்ற பொருட்களையும் கொண்டு போய் வைத்தார்கள்.
மறுநாள் பொழுது விடிந்தபோது, அங்கு காட்டுத்தனமாக புற்கள் வளர்ந்திருந்த இடத்தை தொழிலாளர்கள் சீர் செய்ய ஆரம்பித்தார்கள். அங்கு பரவிக் கிடந்த முப்பது ஹெக்டர் விவசாய நிலத்தில் நெருப்பு மிகவும் வேகமாக பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
தன்னுடைய வீட்டின் பின் பகுதியில் நின்று கொண்டு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மிகவும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் பேன்டாங்க். மண்ணைக் கிளறுவதற்காக அந்த விவசாயி காலையிலேயே கண் விழித்து எழுந்திருந்தார். பேன்டாங்க் நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொண்ட, உறுதியான உடலைக் கொண்ட ஒரு மனிதர். வயல்களை உழுவது, பாத்திகள் கட்டுவது, விறகு உடைப்பது, தாவரங்களை நடுவது, நீர் கொண்டு வருவது - இவைதாம் அவர் செய்யும் அன்றாட வேலைகள். அவருக்கு ஐம்பது வயது ஆகி விட்டிருந்தாலும், உணர்வில் வசந்த காலத்தில் இருக்கும் ஒரு இளைஞனாகவே அவர் காட்சியளித்துக் கொண்டிருந்தார். நெல்கதிர்களுக்கு மத்தியில் பாத்திகளில் வளர்ந்திருக்கும் களைகளை இல்லாமற் செய்வதற்கு அவர் எந்தச் சமயத்திலும் நெருப்பை பயன்படுத்தியதில்லை. அதற்கு பதிலாக அவர் புற்களையும், அடர்த்தியாக வளர்ந்திருக்கும் புதர்களையும் வேருடன் பிடுங்குவார். அவற்றை ஒவ்வொன்றாக அவர் வெட்டுவார். ஆனால், அங்கு சீர் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் முன்பு செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்த அந்த இடத்தை நெருப்புக் கொழுந்துகளுக்கு இரையாக்கி விட்டிருந்தனர். அதன் மூலம் மண்ணுக்கு இருக்கக் கூடிய உர சக்தியை அழித்துக் கொண்டிருந்தனர். அந்த மண் இனிமேல் தானியங்கள் வளர்வதற்கு எந்தக் காலத்திலும் உதவப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
மூன்றாவது நாள்- புல்டோஸர் நகர ஆரம்பித்ததை பேன்டாங்க் பார்த்தார். அது வேகமாக சமன் செய்து, போடப்பட்டிருந்த மண்ணை அழுத்தியது. அன்று மதிய வேளையில் லாரிகள் நொறுக்கப்பட்ட கற்களுடன் வந்து சேர்ந்தன. அந்தக் கற்கள் சமன் செய்யப்பட்ட தரையின் மீது கொட்டப்பட்டன. நீளமாக இருந்த தரையின் மீது புல்டோஸர் மீண்டும் உருண்டது.
தங்களுக்குத் தேவையான சாலைகளை வெகு சீக்கிரமே தொழிலாளர்கள் செய்து முடித்தார்கள். தொடர்ந்து நீர் வருவதற்கான குழாய்களை அவர்கள் பதித்தார்கள். சாலையின் ஓரத்தின் அவர்கள் ஒரு ஆழமான சிமெண்டால் ஆன வாய்க்காலை அமைத்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்திருக்கும். தரை தோண்டப்பட்டு, வீடுகளுக்கான தூண்கள் அமைக்கப்பட்டிருப்பதை பேன்டாங்க் பார்த்தார். அந்த தூண்களைத் தொடர்ந்து, ஒவ்வொரு மூலையிலும் அவர்கள் மின் தூண்களை எழுப்பினார்கள். ஒரு கையளவு உயரத்தில் சவுக்கு, வாழை ஆகிய கன்றுகளைக் கொண்டு வந்து சாலையில் ஓரங்களில் அவர்கள் நட்டார்கள்.
பங்களாக்களைப் போல தோன்றும் இரண்டு டஜன் வீடுகள் முதலில் கட்டப்பட்டன. நாட்கள் ஆக... ஆக முன்பு வெற்றிடமாகக் கிடந்த அந்த வயல், தனியாக உண்டாக்கப்பட்ட வேலிக்குள் அடங்கிய இடமாக உருமாற்றம் பெற்றது. அந்த வேலிக்குள் இரண்டாயிரம் சதுர மீட்டர்களோ அல்லது அதற்கும் அதிகமாகவோ இருக்கக் கூடிய இடம் இருந்தது. அதில் மலர்களைக் கொண்ட பூச்செடிகள் வளர்ந்திருக்கும் ஒரு பெரிய தோட்டம், வண்டி நிறுத்துவதற்கான இடம், பணியாட்கள் தங்கியிருக்கக் கூடிய இருப்பிடங்கள், அவற்றுடன் நடுத்தர அளவைக் கொண்ட நீச்சல் குளம்... இவை அனைத்தும்...
இருபத்து நான்கு வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டவுடன், மீதி வீடுகள் அதைத் தொடர்ந்து கட்டப்படும் என்ற தகவலை எப்படியோ பேன்டாங்க் தெரிந்து கொண்டு விட்டிருந்தார்.
வீடுகளே முழுமையாக முடிக்கப்படவில்லை. அதற்குள் ஒவ்வொரு வீட்டிற்கு முன்னாலும் மென்மையான தோட்ட மண் கொண்டு வந்து கொட்டப்பட்டது. அதில் நிழல் தரக் கூடிய சில மரங்கள் கொண்டு வந்து நடப்பட்டன. ரோஜா செடிகளும், பிற அடர்த்தியான செடிகளும் அங்கு கொண்டு வந்து நடப்பட்டன. அவற்றில் மலர்கள் மலரும். அவை நறுமணத்தைப் பரவச் செய்து, அந்த சுற்றுப் புறத்தையே அழகாக்கிக் கொண்டிருக்கும்.
அந்த கிளைப் பிரிவில் பணியாற்றும் சில தொழிலாளர்களுடன் பேன்டாங்க் பழகி நட்பை உண்டாக்கிக் கொண்டார். நீர் வரக் கூடிய குழாய்கள் பதிக்கப்படுவதற்கு முன்னால், அவரை வந்து பார்த்தவர்கள் அவர்கள்தான். தாங்கள் எங்கிருந்து நீர் கொண்டு வருவது என்ற விஷயத்தை அவர்கள் கேட்டார்கள். பேன்டாங்க் தன்னால் ஆன உதவியை அவர்களுக்கு செய்தார்.
அடுத்து வந்த நாட்களில் பேன்டாங்கின் சமையல் விஷயத்தில் தங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி அந்தத் தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டார்கள். தங்களுக்கு சாப்பாடு தயாரிப்பதற்காக ஆகும் செலவு எது வந்தாலும், அதை செலுத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். அதனால், அன்றிலிருந்து காலை நேரம் இன்னும் வெளுக்காமல் இருப்பதற்கு முன்பே, பேன்டாங்கின் மனைவி அனா அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பக்கத்து நகரில் உள்ள மார்க்கெட்டிற்குச் செல்லும் பாதையில் போய்க் கொண்டிருப்பாள். அவள் சாப்பிடும் உணவிற்குத் தேவையான காய்கறிகளையும், பிற பொருட்களையும் இருபதிலிருந்து இருபத்தைந்து பேர் வரை சாப்பிடுகிற மாதிரி வாங்குவாள். அந்தச் சமயத்தில் அந்த கிளைப் பிரிவில் வீடு கட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த மனிதர்களின் எண்ணிக்கை அறுபது அளவில் எட்டியிருந்தது. அவர்களில் பாதிப் பேர். தங்களுடைய சொந்த சாப்பாட்டை கையோடு எடுத்துக் கொண்டு வந்தனர். மீதிப் பேர் தங்களுடைய சாப்பாட்டை தாங்களே சமைத்துக் கொண்டார்கள். ஆரம்பத்தில் புல்டோஸருடன் வந்து இறங்கினார்களே, அவர்கள்தான் பேன்டாங்க் மற்றும் அவரின் மனைவியின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள்.