பால் குவளையில் ஒரு ஈ - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6342
‘ஆனால், இதே விஷயம் முறைப்படி முடிக்கப்படுவதாக இருந்தால்...’- அந்த அதிகாரி தொடர்ந்து சொன்னார்: ‘இங்கிருந்து இன்னொரு இடத்தில் போய் இருப்பதற்கு, அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.’
பேன்டாங்க் தன்னைத் தானே அமைதியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய மனைவியின் விருப்பத்தை முன்னிட்டே தான் இங்கு வந்திருப்பதால் அப்படி இருப்பதே சரி என்று அவர் தன் மனதிற்குள் நினைத்தார். தவிர, மண்டை ஓட்டை உடைத்துக் கொள்ளும் அளவிற்கு கோபப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்று அவர் நினைத்தார்.
தன்னுடைய மூச்சைச் சற்று தளர்த்தி விட்டுக் கொண்ட பிறகு, தனக்குள் அளவற்ற கோபம் இருந்தாலும், அதையெல்லாம் மீறி அவரால் கேள்வி கேட்க முடிந்தது:
‘எந்த இடத்தில் நான் ஒரு மனிதனாக ஆனேனோ, அந்த இடத்தை விட்டு நான் வெளியேற வேண்டும் என்று அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்?’
‘ஏனென்றால்... ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலேயே வேறு எந்தவொரு நிறுவனத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் ஒரு கனவுத் திட்டத்தை இங்கே ஆரம்பித்திருக்கிறார்கள். சுவர்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ‘ராயல் லேன்ஸ்’ உண்மையாகவே மிகவும் அழகு நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். உங்களின் குடில் இந்த இடத்திற்கு வெளியே இருக்கிறது. அது இந்த இடத்தின் அழகையே கெடுக்கிறது.’
தான் அமர்ந்திருந்த இடத்தில் அதற்கு மேல் பேன்டாங்கால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. தன்னுடைய வீட்டைப் பற்றி கேவலமாக பேசியதைக் கேட்டு அவர் வெகுண்டெழுந்தார்.
‘சார்...’ - அவர் கோபத்துடன் கூறினார். அவருடைய தொண்டை எலும்புகள் வீங்கி காணப்பட்டன: ‘நான் இப்போது புறப்படுகிறேன்....’
‘மேங்க் பேன்டாங்க்...’- பெனா அவரைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தார்.
‘மிஸ்டர். பெனா, நான் இங்கு எதற்காக வந்தேன் தெரியுமா’- அந்த கிளை பகுதிக்குள் தான் எதற்காக வந்தோம் என்ற விஷயத்தையே இன்னும் கூறாமல் இருக்கிறோமே என்பதை நினைத்த பேன்டாங்க் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார் : ‘நான் இங்கே வந்ததற்கான காரணமே- எங்களுடைய இடத்தை இன்னும் சற்று மெருகேற்றுவது எப்படி என்பதைப் பற்றி பேசுவதற்குத்தான். ஒரு தண்ணீர் குழாய் அமைத்து, எங்களுடைய வீட்டிற்கு மின்சார இணைப்பு கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நாங்கள் சிந்தித்தோம்...’
‘நடக்காத விஷயம்!’- பேன்டாங்க் கூறிக் கொண்டிருந்த வார்த்தைகளை உடனடியாக குறுக்கிட்டு நிறுத்தினார் பெனா.
‘நிலைமை அதுதான் என்றால், நான் எதுவுமே கூறவில்லை என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்’ - அந்த விவசாயி கதவை நோக்கி நடந்தார்.
‘இருங்க...’- பெனா உரத்த குரலில் கத்தினார்: ‘இன்னும் சொல்லப் போனால்- இங்குமங்குமாக சுற்றிக் கொண்டிருக்கும் உங்களின் பன்றிகளிடமிருந்து வெளிப்படும் தாங்க முடியாத நாற்றத்தையும், உங்களுடைய கோழிகள் உண்டாக்கும் சத்தத்தையும் பற்றிக் கூட அவர்கள் புகார் செய்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.’
‘அந்த அளவிற்கு கூர்மை சக்தி படைத்தவர்களா அவர்கள்!’- பேன்டாங்க் கூறினார்.
‘இங்கே..... ‘ராயல் லேன்’ ஸில் அப்படிப்பட்ட உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன’- பெனா கூறினார். ‘பூனைகள், விலை மதிப்புள்ள நாய்கள், கூண்டில் வளர்க்கப்படும் பாடும் பறவைகள், தங்க மீன்கள்- இவற்றைத் தவிர, வேறு எந்த பிராணிகளுக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை.’
‘சாப்பிட முடியாத உயிரினங்கள்...’- பேன்டாங்க் ஆச்சரியம் கலந்த குரலில் கூறினார்: ‘ஆனால், இங்கே இருக்கும் மக்கள் கோழியையும் பன்றியையும் சாப்பிடுவார்கள். இல்லையா?’
‘ஆமாம்... அவர்கள் சாப்பிடுவார்கள். ஆனால், அவற்றை வளர்க்க மாட்டார்கள்’- பெனா சொன்னார்: ‘மாம்பழம் போன்ற பழங்களைக் கொண்டிருக்கும் மரங்களையும் வளர்க்கக் கூடாது.’
‘ஏன்?’- தன்னுடைய ஆறு மாமரங்களையும் மனதில் நினைத்துக் கொண்டே பேன்டாங்க் கேட்டார்.
‘ஏனென்றால்... அந்த மரங்களில் பூ பூத்து... அவை பழங்களாக மாறும்போது... பகல் நேரங்களில் ஈக்களும், இரவு நேரங்களில் கொசுக்களும் அவற்றை நோக்கி வர ஆரம்பிக்கின்றன...’
‘அவர்கள் மாம்பழங்களைச் சாப்பிடுவார்கள் அல்லவா?’
‘அவர்களுடைய குளிர்சாதனப் பெட்டிகளில் மாம்பழங்கள் இல்லாமல் இருக்காது.’
பேன்டாங்கின் கண்கள் மூடின. அவருடைய சிந்தனை விழிக்க ஆரம்பித்தது. நினைத்துப் பார்க்க முடியாத மனிதர்கள் கற்பனை பண்ணி உருவாக்கிய அந்த ‘கனவு திட்டத்தின் நிர்வாக அதிகாரியுடன் உரையாடிக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்களில், இதற்கு முன்பு தான் எந்தச் சமயத்திலும் கனவு கூட கண்டிராத பல விஷயங்களை பேன்டாங்க் தெரிந்து கொண்டார். அவருடைய கள்ளங்கபடமற்ற மூளையிலும், அவருடைய இயற்கையுடன் ஒன்றிச் செல்லும் இயல்பான குணத்திலும் அந்த மாதிரியான விஷயங்கள் எந்தச் சமயத்திலும் உருவாகவே உருவாகாது.
கசப்பான ஏமாற்றத்துடன் இறுதியில் தன்னுடைய உரையாடலை முடிவுக்குக் கொண்டு வந்தார் பேன்டாங்க். முழுமையாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர் பெனாவிடம் கேட்டார் : ‘நான் இந்த இடத்தை விட்டு வெளியேறினால், என்னுடைய நிலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள்?’
‘அவர்கள் உங்களுடைய குடிலை அழித்து விடுவார்கள்.மாமரங்களை வெட்டி வீழ்த்தி விடுவார்கள். இந்த நிறுவனத்தின் பார்வையில் கூறுவதாக இருந்தால்- ராயல் லேன்ஸுக்கு வெளியே இருக்கும் உங்களின் இடம் ஒரு குவளையில் இருக்கும் பாலில் ஒரு ஈ விழுந்ததைப் போல இருக்கிறது.’
விடை பெறுவதற்கான ஒரு வார்த்தையைக் கூட கூறாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் பேன்டாங்க். தன்னுடைய வீட்டிற்குச் சென்று, அனாவிடம் தான் போய் வந்ததன் விளைவைப் பற்றி கூறியபோது, ஒரு மீனின் முள் சிக்கிக் கொண்டு தன் தொண்டையைக் குத்திக் கொண்டிருப்பதைப் போல அவர் உணர்ந்தார். அந்த மனிதர் கூறிய வார்த்தைகளை அந்தப் பெண் மிகவும் கூர்ந்து கேட்டாள். ஆனால், பதிலெதுவும் கூறவில்லை. அவ்வப்போது அவள் மெதுவான குரலில் என்னவோ முனகினாள். அதே நேரத்தில், அவளுடைய உள் மனம் கையில் வைத்திருந்த துணியை முறைப்படி ஊசி சரியாக குத்தி தைக்கிறதா என்பதில் மிகவும் கவனமாக இருந்தது.
‘நம் பக்கத்தில் இருப்பவர்கள் மீது நாம் எந்தச் சமயத்திலும் வெறுப்புடன் இருந்தது கிடையாது’- அனா மெதுவான குரலில் முணுமுணுத்தாள். அப்போது அவளுடைய வார்த்தைகள் கண்ணீரில் நனைந்திருப்பவை போல தோன்றின: ‘கடவுள் நம்முடைய நிலைமையைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டார்.’
ஒரு நல்ல சந்தோஷமான நாளன்று ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்)’ உற்சாகத்துடன் கண் விழித்தது. நுழைவு வாசலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வளைவு, ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சாளரங்களிலும், பங்களாக்களின் வாசல்களிலும் விளக்குகள் தொங்கி இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தன. இந்த சுண்டி இழுக்கும் அலங்காரங்களுக்குக் காரணம்- ஆடம்பரமான தேவாலயம் அங்கு திறக்கப்பட இருப்பதே. அந்த குடியரசு மற்றும் ‘பாப்பல் நன்சியோ’வின் தலைவர்தான் அந்த நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தாளி.
‘ராயல் லேன்’ஸின் வேலிக்கு வெளியே இருக்கும் பேன்டாங்கின் வீடு மட்டும்தான் எந்தவித விருந்தின் அறிகுறியும் இல்லாமல் இருந்தது. எந்த விருந்தாளியையும் அந்த விவசாயி எதிர்பார்க்காமல் இருந்தாலும், திடீரென்று யாரோ வெளியிலிருந்து அவரை அழைத்தார்கள். அந்த பகுதியின் பொருளாளரின் பிரதிநிதி என்று தன்னை அந்த மனிதர் அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலே கூறப்பட்ட அதிகாரிக்கு முன்னால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பேன்டாங்க் வந்து நிற்க வேண்டும் என்றொரு ஆணையுடன் அவர் வந்திருந்தார்
‘என்ன காரணமாக இருக்கும், சார்?’ - அவர் ஒருவித ஆச்சரியத்துடன் கேட்டார். கடந்து சென்ற இந்த நூற்றாண்டின் பாதியில் அந்தப் பகுதியின் பொருளாளரால் அவர் அழைக்கப்படுவது இதுவே முதல் முறை.
‘இந்த நிலத்தில் குடியிருப்பதற்கான அத்தாட்சி உங்களிடம் இருக்கிறதா?’- அந்த பிரதிநிதி கேட்டார்.
தன்னுடைய ஆதாரம் எங்கே இருக்கிறது என்ற விஷயமே பேன்டாங்கிற்கு ஞாபகத்தில் இல்லை. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- அப்படிப்பட்ட ஒரு அத்தாட்சி தன்னிடம் இருக்கிறதா, இல்லையா என்றே அவருக்கு தெரியாது. ஒரே ஒரு விஷயம் மட்டுமே அவருக்கு தெரியும். அந்த நிலம் அவருடைய தாத்தாவிற்குச் சொந்தமானது என்பதே அது. அவருடைய தாத்தா மரணத்தைத் தழுவியபோது, நிலம் அவருடைய தந்தைக்குக் கை மாறியது. அவர் அதை அவருக்கு கை மாற்றி விட்டார்.
‘இந்த நிலத்திற்கு நீங்கள் வரிகள் கட்டுகிறீர்களா?’- அந்த பிரதிநிதி திரும்பவும் கேட்டார். அந்த பிரதிநிதிக்கு பேன்டாங்கின் மகனின் வயதுதான் இருக்கும். ஆனால், ‘நீங்கள்’ என்று அந்த விவசாயியை கூறும்போது, அந்த அழைப்பில் பணிவு கலந்திருக்கவில்லை.
கடந்த இரண்டு வருடங்களில் தன்னுடைய மனைவியும் பிள்ளைகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதும், சூறாவளி மாமரங்களின் மலர்களைப் பாதிப்பிற்குள்ளாக்கியபோதும், கோழிகளுக்கு பயங்கரமான நோய் உண்டானபோதும் தவிர, அதற்கு முன்பு வரை வரிகள் கட்டுவதில் தான் சிறிதும் தவறியதில்லை என்று பேன்டாங்க் விளக்கி கூறினார்.
‘அப்படியென்றால்... இந்த நிலத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டியதுதான்...’- பேன்டாங்கின் மீது அந்த பிரதிநிதி இந்தக் கேள்வியை எறிந்தார்.
அந்த பிரதிநிதி மிரட்டல் தொனியில் கூறிய வார்த்தைகள் பேன்டாங்கின் செவிகளில் ஒரு ரிவால்வரின் முழக்கத்தைப் போல ஒலித்தன. சமீப காலமாக தனக்கு நேர்ந்து வரக் கூடிய ஒவ்வொரு சம்பவத்தையும் அவர் இணைத்துப் பார்க்க முயற்சித்தார். அந்த பிரதேசத்தின் பொருளாளர் உடனடியாக வரச் சொல்லி அழைத்திருப்பதற்கும், ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்)’ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அதற்கு முன்பு தன்னிடம் கூறியதற்கும் இடையே ஏதோ சம்பந்தம் இருக்கிறதோ என்றொரு சந்தேகம் அந்த விவசாயியின் இதயத்திலும் மூளையிலும் உண்டானது.
‘கனவு திட்ட’த்தில் குடியிருப்பவர்கள் சந்தோஷத்துடன் கொண்டாட்டங்களில் மிதந்து கொண்டிருந்தபோது, ரிஸால் எழுதிய ‘எல் ஃபிலிபஸ்ட்க்ரிஸ்மோ’ என்ற நூலின் பக்கங்களில் மெதுவாக மேய்ந்து கொண்டிருந்தார் பேன்டாங்க். அதன் ஒரு அத்தியாயத்தில் கேப்சாங்க் டேல்ஸ் எப்படி தீவிரவாதியாக ஆனான் என்பதைப் பற்றி கூறப்பட்டிருந்தது. கேப்சாங்க் டேல்ஸ் அவருக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம். அடுத்த பத்தியைப் படித்தபோது, பேன்டாங்கின் குரல் தொடர்ந்து உரத்து ஒலித்துக் கொண்டிருந்தது.
‘நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் பாதிரியார் ஏதோ தமாஷ் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்றுதான் கேப்சாங்க் டேல்ஸ் நினைத்தான். ஆனால், நிலம் யாருக்கு கிடைக்கும் என்பதை பணியாட்களில் ஒருவனிடம் கூறியபோது, அவன் மிகவும் வெளிறிப் போய் விட்டான். அவனுடைய காதுகளில் இரைச்சல் உண்டானது. அவனுடைய கண் பார்வையை ஒரு
சிவப்பு நிற மேகம் வந்து மறைத்தது. தன்னுடைய மனைவியையும், எலும்புக் கூட்டைப் போல மிகவும் மெலிந்து போய் காணப்பட்ட தன் மகளையும், வெளிறிப் போன நிலையிலும், தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தன்மையிலும் பார்த்தான்.
ஒரு காலத்தில் அடர்த்தியான காடாக இருந்து, அதற்குப் பிறகு வளம் கொழிக்கும் நெல் வயலாக மாறிய இடத்தை விட்டு அவன் வெளியேறி ஆக வேண்டும். சூரியன் தன்னுடைய தோலைச் சுட்டு எரித்துக் கொண்டிருக்க, அவன் உழுது கொண்டிருந்தான். அப்போது பாதிரியார் தன்னுடைய சாரட் வண்டியில் ஓய்வாக பயணித்துப் போய்க் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். எந்த பணியாளுக்கு நிலத்தைத் தரப் போகிறாரோ, அவன் தன்னுடைய எஜமானனுக்குப் பின்னால் ஒரு கேவலமான அடிமையைப் போல ஓடிக் கொண்டிருந்தான். நிலத்தை தரவே கூடாது என்று டேல்ஸ் முடிவு செய்தான்.’
கேப்சாங்க் டேல்ஸ் சிமோனின் ரிவால்வரை வாங்கும் காட்சி வரும் வரை பேன்டாங்க் தொடர்ந்து அந்த நூலை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த காட்சியில் மரியா க்ளாராவின் விலை மதிப்பற்ற அரும்பொருள் ஒன்றைக் கொடுத்து, அதற்கு பதிலாக அந்த ரிவால்வரை கேப்சாங்க் டேல்ஸ் வாங்குகிறான். அப்போது அவன் கூறுகிறான்: ‘நான் கொள்ளைக்காரர்களுடன் சேரப் போவதால், எனக்கு இந்த ஆயுதம் வேண்டும்.’
புத்தகத்தை மூடிவிட்டு, பேன்டாங்க் அனாவின் அருகில் வந்தார். அப்போது அவள் வீட்டிற்கு முன்னால் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தாள். அவளிடம் அவர் கேட்டார்:
‘என்னுடைய வெட்டுக்கத்திகளை எங்கே வைத்திருக்கிறாய்?’
‘எதற்கு?’- அந்தப் பெண் தன் பார்வையை உயர்த்தி, கணவனின் செயல்களை ஆழமாக பார்த்தாள்.
‘நான் அவற்றைக் கூர்மைப்படுத்த வேண்டும்.’
வீட்டிற்குப் பின்னாலிருந்த ஒரு பெட்டியில் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த இரண்டு வெட்டுக் கத்திகளையும் கூர்மைப்படுத்துவதற்கான கல்லை பேன்டாங்க் தேடிக் கொண்டிருந்தபோது, ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்’) நிறுவனத்திற்குச் சொந்தமான தேவாலயம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கொண்டாட்டத்தின் இறுதியை அறிவிப்பதைப்போல, தூரத்தில் மணியின் ஓசைகள் தொடர்ந்து ஒலித்து, எதிரொலித்துக் கொண்டிருந்தன.