பால் குவளையில் ஒரு ஈ - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6342
அதனால் டான் ஃபிலிப் என்பவருக்குச் சொந்தமாக முன்பு இருந்த அந்த புற்கள் வளர்ந்த நிலப் பகுதிக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதை பேன்டாங்க்கால் ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. வர்த்தகர்களும், அரசாங்க அலுவலகர்களும் அடங்கிய ஒரு நிறுவனம் அந்த நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும். நல்ல வசதி படைத்த அந்த மனிதர்கள் அங்கு கட்டப்பட்டிருக்கும் வீடுகளில் குடி புகுவார்கள்.
‘அன்று இங்கு நான் பார்த்த மனிதர் ஒரு சீனாக்காரர்’- தான் உரையாடிக் கொண்டிருந்த தொழிலாளியிடம் பேன்டாங்க் கூறினார்.
‘தாங்கள் ஒரு சிறிய ஐக்கிய நாடுகளின் சபையை... பலவகைப்பட்டவர்களையும் கலந்து இருக்கச் செய்து உருவாக்கப் போவதாக அவர்கள் கூறுகிறார்கள்’ - அந்த தொழிலாளி கூறினான்: ‘ஒரு அமெரிக்கன்... ஒரு சீனாக்காரன்... ஒரு யூதன்... ஒரு மெஸ்ட்டிஸோக்காரன்... ஒரு ஃபிலிப்பினோ...’
‘அப்படியா? நான் ஒரு பம்பாய்க்காரரைக் கூட பார்த்தேனே!’
‘ஆமாம்... ஒருவர் இருந்தார். ஒரே ஒரு நிபந்தனைதான். பணம்! வருடத்திற்கு கட்டாயம் முப்பதாயிரம் பெஸாக்கள் சம்பாதிப்பவராகவும், வங்கிக் கணக்கில் அரை மில்லியன் பெஸாக்கள் உள்ளவராகவும் இருப்பவர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்.’
‘அதாவது- ‘பிக் ஸாட்ஸ்’ என்று யார் அழைக்கப்படுகிறார்களோ, அவர்கள்... அப்படித்தானே?’- பேன்டாங்க் உடனடியாக கேட்டார்.
‘சரியாக சொன்னீர்கள். அவர்களின் தலைவர் கோடீஸ்வரரான டான் லேம்பர்ட்டோ லேட்ரன். அவர் நீண்ட காலம் அமெரிக்காவில் வாழ்ந்தவர். தடை இருந்த காலத்தில் அவர் மிகப் பெரிய பணக்காரராக வளர்ந்திருக்கிறார். சட்டத்திற்குப் புறம்பான விஸ்க்கியை திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வருவதில் அவர் மிகப் பெரிய கில்லாடி. ஏற்கெனவே அமெரிக்க பிரஜையாக இருக்கும் அவர் போர் முடிந்ததும், திரும்பி வந்து விட்டார். கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கள்ளக் கடத்தலின் மூலம் சம்பாதித்த மிகப் பெரிய தொகை அவரிடம் இப்போது இருக்கிறது.’
‘அதை வாயால் சொல்ல வேண்டியதே இல்லை.’
‘இப்போது அவரிடம் ஏராளமான பணம் இருக்கிறது. ரசனைகளிலும் அவர் பணக்காரராகத்தான் இருக்க முடியும். அவர் நண்பர்களையும் நெருக்கமானவர்களையும் விலைக்கு வாங்க முடியும். அதனால்தான்... கையில் எதுவுமே இல்லாதவர்கள்... சிறிய மனிதர்கள் இந்த கிளைட் பகுதியில் வாழவே முடியாது...’
‘இந்த லேம்பர்ட்டோ என்ற மனிதர் ஒரு நல்ல மனிதராக இருக்க முடியாது என்று தோன்றுகிறது’ - அந்த விவசாயி துணிச்சலுடன் கூறினார்.
‘நீங்க என்ன சொல்றீங்க?’ - அந்த தொழிலாளி பதிலுக்கு கேட்டான்.
‘அவரிடம் ஏராளமான பணம் இருக்கிறது என்று நீ சொல்வது உண்மையாக இருந்தால், அந்த மனிதரின் வாழ்க்கை தவறுகள் இல்லாத ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.’
‘இந்த பூமியில் வாழ்பவர்களில் யாருடைய வாழ்க்கைதான் ஒரு கறை கூட இல்லாமல் இருக்கிறது! ஹா...?’- அந்த தொழிலாளி தொடர்ந்து சொன்னான்: ‘அவர் ஒரு கோடீஸ்வரர். அது போதாதா? நம்முடைய அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை ஆயிரம் பேர் வெட்கப்படக் கூடிய பயங்கரமான குற்றச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்!’
‘ஆனால், நான் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரனாக இருக்கிறேன். அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம்...’ - பேன்டாங்க் அவனுக்கு ஞாபகப்படுத்தினார்.
‘இருக்கலாம்... ஆனால், நீங்கள் சுவருக்கு வெளியே இருக்கிறீர்கள்’- அந்த தொழிலாளி தொடர்ந்து சொன்னான்: ‘இந்த இடம் முழுவதும் உங்களுக்குச் சொந்தமானதா?’
‘நிச்சயமா...’- பேன்டாங்கின் குரல் மிகவும் அழுத்தம் நிறைந்ததாகவும், கர்வம் கொண்டதாகவும் இருந்தது. அவர் தொடர்ந்து கூறினார்: ‘நான் இங்கேதான் பிறந்தேன். என் தந்தை இந்தச் சொத்தை என்னுடைய முன்னோர்களிடமிருந்து பெற்றார். நான் என்னுடைய தந்தையிடமிருந்து இதைப் பெற்றேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் இது அடர்த்தியான ஒரு காடாக இருந்தது. அவர்கள் இதை சீர் செய்து, சரிப்படுத்தி, மண்ணுக்கு உரமிட்டு அதில் நாற்றைக் கொண்டு வந்து நட்டார்கள். என்னுடைய முன்னோர்கள் ‘காட்டிப்புனேரோஸ்’ இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ‘ஆன்ட்ரே பெனிஃபேஸியோ’யுடன் நட்பு கொண்டிருந்தவர்கள்.
அந்த கிளைப் பகுதி அங்கு வருவதற்காக தான் சிறிதும் மனதில் வருத்தப்படவில்லை என்ற உண்மையை பேன்டாங்க் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இன்னும் சொல்லப் போனால் - அந்த நிலப் பகுதி இனி வரும் நாட்களில் ஆக்கப்பூர்வமான பல திட்டங்களுடன் முன்னேற்றத்தைக் காணும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார். எது எப்படி இருந்தாலும் தானும் தன்னுடைய குடும்பமும் விளையாட்டுத்தனமான விஷயங்களுக்கு இரையாக்கப்பட்டு விடக் கூடாது என்ற விஷயத்தில் தான் மிகவும் கவனமாக இருப்பதாக கூறினார் பேன்டாங்க்.
அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் நகரத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். இன்னொரு மகன் தன் தந்தைக்கு உதவியாக இருக்கிறான். எல்லோருக்கும் இளையவள் மகள். அவள் அன்றாட வேலைகளில் தன் தாய்க்கு உதவியாக இருக்கிறாள். ஒரு அமைதியான, எந்தவித தொந்தரவுகளும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே அவர்களுடைய சந்தோஷத்திற்குரிய ஒரே விஷயமாக இருந்தது. படித்து மகிழ வேண்டும் என்பதற்காக தனக்கென்று சில நூல்களை வைத்திருந்தார் பேன்டாங்க். ஃப்ளாரன்டே, தி ட்வெல் பியர்ஸ் அன்ட் அதர் ரொமான்சஸ், நோலி மீ டேன்ஜர், எல் ஃபிலிபஸ்ட்டெரிஸ்மோ ஆகியவற்றின் பழைய பிரதிகள் ஆகியவையே அவை. அவருக்கு மிகவும் பிடித்தது - கபிஸேங்க் கதைகள்.
‘நாங்கள் திரைப்படங்கள் பார்ப்பதற்குக் கூட செல்வதில்லை’- தன்னுடைய வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவிக் கொண்டிருப்பதற்கான காரணத்திற்கு சான்று கூறுவதைப் போல பேன்டாங்க் கூறினார்: ‘நான் மனிலாவுக்குப் போகும் நாளன்று, மருந்து கொடுத்து குணப்படுத்தும் அளவிற்கு நோய் சூழ்நிலை உண்டாகிவிட்டிருக்கும்.’