பால் குவளையில் ஒரு ஈ - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6342
‘நாம் இப்போதுதான் இவ்வளவு பணத்தையே சம்பாதிச்சிருக்கோம், பேன்டாங்க்...’- அனா மகிழ்ச்சியுடன் கூறினாள்: ‘பள்ளிக்கூடம் திறக்கப்படும் நாள் வர்றப்போ, டோனியிங்கிற்கு அவ்வளவு பணம் தேவைப்படாது.’ அவர்களுடைய மகன்களில் டோனியிங் ஒருவன்தான் அந்த ஊரிலிருக்கும் பள்ளிக் கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தான்.
‘நம்மிடம் இப்போது இந்தச் சிறிய சேமிப்பு இருக்கிறது. இதை வைத்து நாம் என்ன செய்வது என்று பார்ப்போம்...’ -அனா மிகவும் அமைதியாக தன்னுடைய மனதில் இருக்கும் திட்டங்களைக் கூறினாள்: ‘நம்மால் ஒரு தண்ணீர் வரக் கூடிய குழாய் அமைக்க முடியும். அதை அந்த கிளை பகுதியுடன் நிச்சயம் இணைக்கலாம். அதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டியதுதான்...’
பேன்டாங்கிற்கு ஆச்சரியம் உண்டானது. ஆனால், தன்னுடைய மனைவியின் பேச்சுக்கு மத்தியில் அவர் எதுவும் தலையிட்டுக் கூறவில்லை.
‘அதனால்... இதை கொஞ்சம் யோசியுங்க.’- அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘பக்கத்திலிருக்கும் வாய்க்காலிலிருந்து எப்போதும் தண்ணீர் கொண்டு வருவது என்பது மிகவும் சிரமமான விஷயம்...’
‘தண்ணீர் கிடைப்பதைப் பற்றி நான் குறைப்பட்டுக் கொண்டதே இல்லையே!’ -பேன்டாங்க் கூறினார்.
‘சரி... நான் ஆடைகளை எங்கே சலவை செய்கிறேன்? அந்த வாய்க்காலில்தானே?’- அனா அவருக்கு ஞாபகப்படுத்தினாள். ‘என்ன இருந்தாலும்... அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது! மழைக் காலம் வந்து விட்டால், நீங்கள் நீரை எந்தச் சமயத்திலும் குடிக்க முடியாது...’
‘அது இருக்கட்டும்... இப்போ நீ என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாய்?’ - பேன்டாங்க் வெளிப்படையாக கேட்டார்.
‘உள்ளே இருக்கும் குழாய்களுடன், குழாய்களை இணைக்க முடியும்...’ - வசதி படைத்த பணக்காரர்களின் வீடுகளைக் குறிப்பாக உணர்த்திய அவள் சிரித்துக் கொண்டே கூறினாள்: ‘இந்த ஐநூறு பெஸாக்களும் நிச்சயம் அதற்காக மட்டுமே செலவிடப்படாது.’
‘நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்தப் பணம் முழுவதும் அதற்காகத்தான் விரயம் செய்யப்படுகிறது என்றால், நமக்கு அப்படிப்பட்ட குழாய் என்ற ஒன்றே தேவையில்லை’- பேன்டாங்க் தன் உதடுகளுக்கிடையே மிகவும் சிரமப்பட்டு புன்னகையை வெளிப்படுத்தினார்.
‘ஓ... நீங்கள்...’- அனா அங்கலாய்த்துக் கொண்டாள்.
பேன்டாங்க் ‘ராயல் லேன்ஸ் (பிரைவேட்)’நிர்வாகத்தின் அதிகாரியிடம் செல்ல தீர்மானித்தார். காவலாளிகளின் கட்டிடத்தைக் கடந்து செல்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயமாக அவருக்கு இல்லை. எரிச்சலடையும் அளவிற்கு அவர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டார்கள். இறுதியாக அங்கிருந்த காவலாளி, நிர்வாக அதிகாரியின் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ‘ஓகே...’ என்ற சிக்னல் காதில் விழுந்த பிறகுதான் காவலாளி, அந்த விவசாயியை அந்த இடத்திற்குள் நுழைவதற்கே அனுமதித்தார்.
பேன்டாங்கிற்கு முன்னால் அந்த நிர்வாக அதிகாரி மிகுந்த சந்தோஷத்துடன் இருப்பதைப் போல தன்னைக் காட்டிக் கொண்டார்.
‘நானே உங்களுடைய வீட்டிற்கு வர வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தேன்’- தான் வந்திருப்பதற்கான காரணத்தை பேன்டாங்க் கூறுவதற்கு முன்பு நிர்வாக அதிகாரி கூறினார். தன்னுடைய பெயர் ‘பெனா’ என்று கூறினார் அதிகாரி.
‘நான் உங்களுடன் முன்பே பேச வேண்டும் என்று நினைத்தேன்’- பெனா கூறினார்.
‘என்னுடைய புற்களாலும், கூரையாலும் ஆன குடிலின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்’ -பேன்டாங்க் கூறினார். ஆனால், பெனா என்ன காரணத்திற்காக தன்னுடன் பேச நினைத்தார் என்பதைக் கூற கேட்டபோது தன்னுடைய அழைப்பைப் பின் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது.
‘நீங்கள் நீண்ட காலமாக இங்கே இருக்கிறீர்களா?’- அந்த மனிதர் விசாரித்தார்.
‘என்னுடைய முன்னோர்கள் இந்த இடத்தில் வந்து வசிக்க ஆரம்பித்து ஒரு ஆயிரம் வருடங்கள் இருக்கும். அதிலிருந்து....’.பேன்டாங்க் கூறினார்.
‘நீங்கள் இப்போது இருக்கும் நிலம் உங்களுககுச் சொந்தமானதா என்று நான் கேட்கலாமா?’
‘நிச்சயமாக... அதில் எந்தவித சந்தேகமும் இல்லை’- உறுதியான குரலில் பதில் சொன்னார் அந்த விவசாயி.
‘அதாவது... நீங்கள் அதில் வாடகைக்கு குடியிருப்பவர்... அப்படித்தானே?’
அதைக் கேட்டு பேன்டாங்க் அதிர்ச்சியடைந்து விட்டார். எனினும், சாந்தமான குரலிலேயே அவர் பேசினார்.
‘நீங்கள் ஏன் அப்படி கேட்கிறீர்கள்?’- அவர் கேட்டார்.
‘மேங்க் பேன்டாங்க்...’- பெனா தெளிவான குரலில் கூறினார்: ‘இந்த நிறுவனம் உங்களுடைய நிலத்தை விலைக்கு வாங்க நினைக்கிறது.’
தன்னுடைய நிலம் விற்பனைக்காக இருப்பது அல்ல என்று உடனடியாக அந்த விவசாயி பதில் கூறினார். ஆனால், தன் காதில் எதுவுமே விழவில்லை என்பதைப் போல பெனா தொடர்ந்து சொன்னார்-
‘உங்களிடம் தகுந்த ஆதாரம் இருந்தால், அவர்கள் அந்த நிலத்தை விலைக்கு வாங்குவார்கள்’ - அந்த அதிகாரி தான் கூறிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்: ‘அப்படி ஆதாரம் எதுவும் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தை, அத்து மீறி ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர் என்றுதான் அர்த்தம்.’
‘அத்து மீறி ஆக்கிரமித்திருப்பவர்....!’ - பேன்டாங்க் அளவற்ற கோபத்தில் வெறி பிடித்தவரைப் போல கத்தினார். அவர் அப்படி கத்தியதற்குக் காரணம்- ‘அத்து மீறி ஆக்கிரமித்திருப்பவர்’ என்ற வார்த்தையை பெனா மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறியதே. பெனா, பேன்டாங்கின் வேகமாக ஆடிக் கொண்டிருந்த கைகளையே வெறித்துப் பார்த்தார்.
‘கோபப்படாதீங்க, மேங்க் பேன்டாங்க்...’- அந்த அதிகாரி மெதுவான குரலில் கூறினார்: ‘நான் அப்படி தப்பாக எதுவும் கூறிவிடவில்லை. சட்டத்தில் இருக்கும் விஷயத்தை நான் விளக்கிக் கூறுவதற்கு முயன்றேன். அவ்வளவுதான்...’
‘சட்டம்! என்ன சட்டம்!’- அந்த விவசாயி வெடித்தார். அப்போது அவருடைய நெற்றியில் கோபம் இருண்ட சுருக்கங்கள் மூலம் வெளிப்பட்டது.
‘சட்டம் என்று நான் எதைச் சொல்கிறேன் என்றால்... நீங்கள் அத்து மீறி நிலத்தை ஆக்கிரமித்திருப்பவராக இருக்கும் பட்சம், அந்த இடத்தை விட்டு வெளியேறிச் செல்லும்படி நீங்கள் பலவந்தப்படுத்தப்படுவீர்கள்...’- பெனா விளக்கிக் கூறினார்.
அவர் தொடர்ந்து சொன்னார்:
‘அந்த காரியம் நடப்பதற்கு முன்னால்... ஆரம்பத்தில் நீரும் ஆயிலும் ஒன்றாகக் கலந்து விடப்படும்...’
பேன்டாங்க் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அவருடைய பணிவு எல்லை கடந்து விட்டது.