நொறுங்கிய ஆசைகள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6742
நான் கேட்காமலே அந்தப் பெண் எல்லா விஷயங்களையும் விளக்கிக் கூறினாள். அன்றாடச் செலவுகளுக்கு வழியில்லாமல் அந்த அன்னையும் மகளும் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். கடன் கொடுத்தவர்களின் தொந்தரவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத சூழ்நிலை வந்தவுடன், அவர்கள் தாங்கள் இருந்த வீட்டின் நிலத்தை எழுதி விற்றிருக்கிறார்கள். அதில் மீதமாக இருந்த பணத்தைக் கொடுத்து லில்லிக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இறுதியில் நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டே அந்த வயதான பெண் சொன்னாள்:
‘அதுவும் சரியாக வரவில்லை, மகனே.'
நான் கேள்வி கேட்க நினைப்பதைப்போல அவளுடைய முகத்திற்கு நேராக என் முகத்தை உயர்த்தியபோது, அவள் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள்: ‘இரண்டாவது தாரமாக... முதல் பொண்டாட்டிக்குப் பிறந்த மகன்தான் அங்கே இருப்பது...'
என்னை அழைத்துக்கொண்டு வந்த சிறுவனை சுட்டிக் காட்டியவாறு அவள் சொன்னாள்.
‘அந்த ஆளுக்கு என்ன வேலை?'
‘ஓ... வேலை...!' அந்தப் பெண் வெறுப்புடன் சொன்னாள்: ‘சாயங்காலம் வரை சீட்டு விளையாட்டு... சாயங்காலம் கள்ளு குடிச்சிட்டு வந்து வீட்டுக்குள்ளே நுழைவான். பிறகு... இந்த பெண்ணைப் போட்டு அடிப்பான்...'
அவள் சுற்றிலும் பார்த்தாள். வேறு யாரும் கேட்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சொன்னாள்:
‘முதல் தாரமாக கட்டிய பெண்ணை அவன் அடிச்சே கொன்னுட்டான், மகனே!'
எனக்கு வாய்விட்டு அழவேண்டும்போல தோன்றியது. ஒரு இளம் தேவதையைப்போல என்னுடன் புன்னகைத்துக் கொண்டே விளையாடித் திரிந்த லில்லியை நான் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். அந்த குடிசையின் வாசற்படியில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கும் லில்லியா அது? அவள் கனவு கண்ட முல்லை மொட்டு மாலையைப் பற்றி எனக்கு ஞாபகம் வந்தது. ஆனால், அந்த மெலிந்துபோன நீளமான கழுத்தில், ஒரு கறுத்து இருண்டுபோன ‘தாலிக்கயிறு' மட்டுமே இருந்தது.
எழுந்து நடந்துகொண்டே அந்த வயதான பெண் சொன்னாள்:
‘மகனே, உன்னைப் பற்றி அவள் எப்போதும் சொல்லுவாள். எல்லாம் கடவுளோட முடிவு மகனே!'
என்னுடைய கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. நிறைந்த பேரமைதியைக் கிழித்துக்கொண்டு அவள் கேட்டாள்:
‘கல்யாணம் ஆயிடுச்சா?'
அவளுடைய கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்துக்கொண்டே நான் சொன்னேன்:
‘கல்யாணம் பண்றதுக்குத்தான் நான் வந்ததே...'
இதயத் துடிப்பு நின்று போய்விடுமோ என்பதைப் போல எனக்குத் தோன்றியது. நான் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். வானத்தின் விளிம்பில் இறங்கிக் கொண்டிருந்த மறையப் போகும் சூரியன் சிவப்பு வண்ணத்தைப் பரப்பியிருந்த தென்னை மர உச்சியைப் பார்த்தவாறு, நொறுங்கிக் கொண்டிருக்கும் இதயத்துடன் நான் சொன்னேன்:
‘வரட்டுமா லில்லீ?'
கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவள் நான் போவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.
அந்த நிலத்தின் வேலிக்கு அருகில் நான் சென்றபோது, அவள் பின்னாலிருந்து சொன்னாள்:
‘லில்லியை மறந்திடு... ஒரு நல்ல கல்யாணத்தைப் பண்ணி, சந்தோஷமா வாழணும்... தெரியுதா?'
அவளுடைய வாழ்த்துகள் இப்போதும் என்னுடைய இதயத்தில் நெருப்பென எரிவதுண்டு. வாழ்க்கையைப் பற்றி அவள் கண்ட கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போனதற்கு நானும்கூட காரணம்தானே?
பிந்து தன்னுடைய வீட்டின் வாசலில் நின்றுகொண்டு என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அழைத்தேன்:
‘பிந்து...'
அவள் சிறிது நேரம் தயங்கி நின்றுவிட்டு, மெதுவாக... மெதுவாக நெருங்கி வந்தாள். அருகில் வந்ததும் நான் கேட்டேன்:
‘பிந்து, என்மேல கோபமா?'
அவள் எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். நான் மீண்டும் கேட்டேன்.
அவள் ‘இல்லை' என்பதைப்போல தலையை ஆட்டினாள். தொடர்ந்து என்னுடைய கண்களைப் பார்த்துக்கொண்டே கேட்டாள்:
‘துமாரா ஆம்ஹோமேம் பானி கைஸா ஆயா?'
என்னுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்கின்றனவாம்! நான் துவாலையை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு, சிரித்துக்கொண்டே கேட்டேன்.
‘பிந்து...!'
‘ம்...'
‘பிந்து, உன்னை லில்லின்னு அழைக்கட்டுமா?'
‘லில்லி?'
‘ஆமாம்...'
அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். நான்
அழைத்தேன்:
‘லில்லீ...!'
அவள் தன்னுடைய வீட்டை நோக்கி ஓடிக்கொண்டே சொன்னாள்:
‘மே லில்லி நஹி... பிந்து ஹை, பிந்து...'