நொறுங்கிய ஆசைகள்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6741
பதினாறு வருடங்களுக்கு முன்பு, வீடும் பள்ளிக்கூடமும் பந்து விளையாடக்கூடிய இடமும் நண்பர்களும் மட்டுமே இருந்த ஒரு உலகத்தில், இதயம் முழுவதும் சந்தோஷத்துடன் ஓடித் திரிந்த பிள்ளைப் பருவத்தில், என்னுடைய வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துவிட்ட இந்தக் கதையை இப்போது ஞாபகப்படுத்திப் பார்ப்பதற்கு காரணமாக இருப்பவளே என்னுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிந்துதான். ஒன்பது வயது மட்டுமே நிறைந்திருந்த அவள், என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு வடநாட்டு நண்பரின் மகள். நான் இந்த நகரத்திற்கு வந்து சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டிருந்தாலும், பிந்துவுடன் உள்ள பழக்கத்திற்கான காலம் அவ்வளவுதானா என்பதை நம்பமுடியவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்தவுடன், நான் அலுவலகத்திலிருந்து வருவதை எதிர்பார்த்துக் கொண்டு அவள் என்னுடைய அறையின் வாசற்படியில் நின்றிருப்பாள். காலையில் தினமும் ஆறு மணிக்கு என்னை கண் விழிக்கச்செய்யும் வேலையை பிந்து ஏற்றுக்கொண்டிருந்தாள். போர்வையை மூடித் தூங்கிக் கொண்டிருக்கும் என்னைக் குலுக்கி அழைக்கும்போது அவள் கூறுவாள்.
‘பாபு! தும் பொஹத் ஸுஸ்த் ஹை!'
நான் மிகப்பெரிய சோம்பேறி என்று அவள் கூறுகிறாள்.
ஒரு வாரத்திற்கு முன்பு ஒருநாள் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்னால், அவள் ஓடிவந்து என்னிடம் ஒரு முக்கியமான தகவலைச் சொன்னாள்:
‘அகலே மைனாமெ மேரீ தீதீக்கீ ஷாதி ஹை!'
அடுத்த மாதம் தன்னுடைய அக்காவின் திருமணம் நடக்கப்போகிறது என்ற தகவலே அது. நான் கேட்டேன்:
‘அப்படியா? பிந்து, இனி எப்போ உன்னுடைய கல்யாணம்?'
அவள் பதைபதைத்துப்போய் தூரத்திற்கு ஓடிச்சென்று முகத்தை இருள வைத்துக்கொண்டு நின்றாள்.
நான் எழுந்து சென்று அவளுடைய காதிற்குள் முணு முணுத்தேன்:
‘பிந்து, உன்னை நான் திருமணம் செய்து கொள்ளவா?'
அவள் என்னை கையால் விலக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடி மறைந்துவிட்டாள். அன்றிலிருந்து அவள் என்னைப் பார்த்துவிட்டால் முகத்தை ஒரு மாதிரி கோணலாக வைத்துக்கொண்டு ஓடிவிடுவாள்.
இன்று நான் சீக்கிரமே அலுவலகத்திலிருந்து வந்து அறையின் வாசலில் சாலையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஒரு கையில் புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு, இன்னொரு கையால் சுருள்சுருளாக இருந்த அடங்காத கூந்தலை காதுப் பக்கம் ஒதுக்கிவிட்டவாறு பிந்து பள்ளிக்கூடத்திலிருந்து வருவதை தூரத்திலேயே நான் பார்த்துவிட்டேன். அருகில் வந்ததும் கேட்டேன்:
‘பிந்து, ஏன் இவ்வளவு தாமதம்?'
‘மேரீ குஷி...' (நானே விரும்பியதால்!)
அவளுடைய நடைக்கு வேகம் கூடியது. அவள் என்னைக் கடந்து சென்றவுடன், நான் பின்னால் நின்று கொண்டு சொன்னேன்:
‘பிந்து, உன்னை நான்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போறேன்.'
அவள் திரும்பி நின்று கோபத்துடன் சொன்னாள்:
‘தும் பொஹத் கறாப் ஆத்மீ ஹை!'
நான் மிகவும் மோசமான மனிதன் என்று அவள் கூறினாள். தொடர்ந்து ஓடி, தன்னுடைய வீட்டின் கேட்டிற்கு அருகில்போய் நின்று, என்னைப் பார்த்து நாக்கை நீட்டிக் காட்டினாள். நான் உரத்த குரலில் சொன்னேன்:
‘பிந்து, நான்தான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.'
அவள் அதை காதில் வாங்காததைப்போல, ஒரு பட்டாம்பூச்சி பறப்பதைப்போல வீட்டிற்குள் ஓடி விட்டாள். சிரிக்கும்போதும் பதைபதைப்புடன் இருக்கும்போதும் ஒரே மாதிரி அழகாக இருக்கும் அந்த முகம் என் கண்களுக்கு முன்னாலிருந்து மறைவதே இல்லை. அவளுக்கு அந்தப் பெயரை வைத்தவர்கள்மீது எனக்கு மதிப்பு உண்டானது. பிந்து! பிந்து!
என்னுடைய நினைவுகள் கடந்த காலத்தின் தூரத்தை நோக்கி ஓடி... ஓடிப்போய்க் கொண்டிருக்கிறது. பதினாறு வருடங்கள்! அவை எவ்வளவு வேகமாக கடந்து சென்றிருக்கின்றன! காட்டாற்றின் சுறுசுறுப்புடனும் முல்லை மலரின் அழகுடனும் துள்ளிக்குதித்துத் திரிந்த என்னுடைய இளமைக் காலத்தின் இனிய நினைவுகள் வரிசை வரிசையாக கண்களுக்கு முன்னால் வலம் வந்துகொண்டிருந்தன. அன்று எனக்கு ஒரு விளையாட்டுத் தோழி இருந்தாள். அவளிடம் ஒருநாள் நான் ரகசியமாகக் கேட்டேன்.
‘லில்லி, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கட்டுமா?'
நான் மோசனமானவன் என்று அவள் கூறவில்லை. ஒரு புதுமணப் பெண்ணின் வெட்கத்துடன் அந்த பன்னிரண்டு வயதுகொண்ட இளம்பெண் சிறிது நேரம் தலையை குனிந்துகொண்டே நடந்தாள். நான் கேட்டேன்.
‘லில்லி, உனக்கு விருப்பம்தானே?'
விரல் நுனியைக் கடித்துக்கொண்டே அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
‘குஞ்ஞப்பா, உனக்கு வரதட்சணை தருவதற்கு எங்க அப்பா கையில் பணமில்லையே!'
எந்தவொரு வரதட்சணையும் வாங்காமலே நான் அவளைத் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியதும், அந்த பிரகாசமான நீலநிறக் கண்களை உயர்த்தி என்னைப் பார்த்துவிட்டு, அவள் தன் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.
மூன்றாவது வகுப்பில் படிக்கும்போதுதான் எனக்கு அவள் அறிமுகமானாள். அச்சுதன் பிள்ளை சார் இடமாற்றம் பெற்றுப் போனதைத் தொடர்ந்து இன்னொரு ‘சார்' வரும் நாள் அது. பள்ளிக்கூடத்தில் வாசலில் இருந்த புளிய மரத்திற்குக் கீழே நாங்கள் கிளித்தட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, தாடி, மீசை ஆகியவற்றுடன் இருந்த ‘வர்க்கி சார்' அங்கு வந்துகொண்டிருந்தார். அவருடன், எங்களுடைய கிராமப் பகுதியில் சாதாரணமாகப் பார்க்க முடியாத ஒரு வகையான புதிய ‘ஃப்ராக்' அணிந்திருந்த ஒரு சிறுமியும் வந்தாள். வர்க்கி சார் தலைமை ஆசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது மாணவ- மாணவி களுக்கு மத்தியிலிருந்து யாரோ சொன்னார்கள்:
‘அது சாரின் மகள்...'
நாங்கள் எல்லாரும் பொறாமையுடன் அந்தச் சிறுமியையே பார்த்தோம். காதிற்குக் கீழேயே வெட்டப்பட்டிருந்த அவளுடைய சுருள்விழுந்த தலைமுடியும், பட்டாம்பூச்சியைப்போல செய்யப்பட்டிருந்த மலர் வைக்கும் குப்பிகளும், ஆங்காங்கே இளஞ்சிவப்புநிறப் புள்ளிகளுடன் இருந்த நீல வண்ணப் பட்டாடையும் எங்களுக்கு புதுமையாக இருந்தன. அவள் அப்படி நின்றுகொண்டிருந்தபோது, ஒரு துண்டு புளியை நீட்டியவாறு கறுத்த துண்டுத் துணியை அணிந்திருந்த ஒரு சிறுமி சொன்னாள்:
‘புளியம் பழம் வேணுமா? வா குழந்தை...'
அவள் வெட்கப்பட்டுக்கொண்டு நின்றிருக்காமல் அருகில் வந்து அதை வாங்கினாள். பிள்ளைகள் எல்லாரும் அவளைச் சுற்றி கூட்டமாக நின்றார்கள். அந்தக் கூட்டத்தில் யாரோ கேட்டார்கள்:
‘உன் பெயர் என்ன?'
‘லில்லி...'
‘என்ன வகுப்பில் படிக்கிறாய்?'
‘மூணாவது வகுப்பில்.'
கொஞ்சம் புளியம்பழத்தைக் கிள்ளி வாய்க்குள் போட்டு சுவைத்துக் கொண்டே அவள் சொன்னாள்:
‘நாளையிலிருந்து நானும் இங்கே படிப்பதற்காக வரப் போறேன்.'