நொறுங்கிய ஆசைகள் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6742
அன்று மாலை நான் வீட்டிற்கு வந்தபோது, வர்க்கி சார் இருக்கப்போவது எங்கள் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்திலிருக்கும் வீட்டில்தான் என்ற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. இரண்டு நாட்கள் கடந்தபிறகு, ஒரு வண்டி நிறைய வீட்டுச் சாமான்களுடன் அவர்கள் அங்கு வசிப்பதற்காக வந்தார்கள். அவர்கள் வந்த நாளன்றே, என் தாயும் மூத்த சகோதரியும் அவர்களைப் பார்ப்பதற்காகப் போயிருந்தார்கள். மாலை நேரத்தில் லில்லியும் அவளுடைய அன்னையும் எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். சமையலறையில் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது, லில்லி என்னுடைய அறைக்குள் வந்தாள். அவளுடன் உரையாடுவதற்கு எனக்கு கூச்சமாக இருந்தது. மேஜைகளின்மீது மூன்றாவது வகுப்பு பாடப் புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு நான் அவளை கவனிக்காதது மாதிரி, தலையை குனிந்துகொண்டு உட்கார்ந்திருக்க, அவள் மெதுவாக வந்து மேஜையைப் பிடித்துக்கொண்டே கேட்டாள்:
‘மூணாவது வகுப்பிலா படிக்கிறே?'
‘ஆமாம்...'
‘உங்களுக்கு எந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறாங்க?'
‘மீனவனும் பூதமும்.'
அவள் என்னைவிட மிகவும் அதிகமாகப் படித்திருப்பதைப்போல காட்டிக்கொண்டு சொன்னாள்:
‘எங்களுக்கு அதையெல்லாம் ஏற்கெனவே சொல்லித் தந்துட்டாங்க. இப்போ ‘குள்ளநரி அரசனான கதை'யைப் படிச்சிக்கிட்டு இருக்கோம்.'
‘உன் அப்பாவா பாடம் சொல்லித் தர்றாரு?'
‘ஆமா...' அவள் பெருமையுடன் தலையாட்டினாள்.
‘அடிப்பாரா?'
‘ஆமாம்... படிச்சிட்டு போகலைன்னா அடிப்பாரு. பிறகு... வீட்டுப் பாடமான கணக்கு போடாம போனாலும்...' அவள் கேட்டாள்:
‘கணக்கு தெரியுமா?'
ஒன்பதிலிருந்து மூன்றைக் கழித்தால் மீதி என்ன வரும் என்றுகேட்டால், விழித்துக்கொண்டு நிற்கக்கூடிய கணக்குப் பண்டிதரான நான் சொன்னேன்.
‘ஏதோ ஒண்ணு வரும்.'
ஆனால், மிகவும் சீக்கிரமே உண்மை வெளியே தெரிந்துவிட்டது. அது- நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தபிறகுதான். வீட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்ட கணக்கு கேள்விகள் எழுதப்பட்டிருக்கும் நோட்டுப் புத்தகத்துடன் நான் அதிகாலையில் லில்லியின் வீட்டிற்குச் செல்வேன். அந்த நேரத்தில் அவள் அதை தன்னுடைய நோட்டு புத்தகத்தில் செய்து முடித்து மிகவும் அருகில் வைத்திருப்பாள். தொடர்ந்து ஒரு ஆசிரியைபோல காட்டிக்கொண்டு மிடுக்கான குரலில் கூறுவாள்.
‘இன்னும் செய்து பார்...'
நான் கையறு நிலையில் பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, இறுதியில் அவளுடைய நோட்டுப் புத்தகத்தை வலிய வாங்கி விரித்து வைத்து, அதில் இருப்பது மாதிரியே என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் எழுதும்போது, அவள் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவாள்:
‘இந்த குஞ்ஞப்பனுக்கு கணக்கு கொஞ்சம்கூட தெரியல...'
மனக்கணக்கு வகுப்பில்தான் என்னை லில்லி அதிகமாக காப்பாற்றியிருக்கிறாள். கேள்வியைக் கேட்டுவிட்டு சார் என்னை நோக்கி கையை நீட்டும்போது, நான் எழுந்து சிந்தித்துப் பார்ப்பதைப்போல நிற்பேன். எனக்கு நேர் எதிரில் இருக்கும் பெஞ்சில் லில்லி உட்கார்ந்திருப்பாள். தன்னுடைய பத்து விரல்களைக் கொண்டு, அவள் அதன் சரியான விடையை ஒரு நடனப் பெண்ணின் லாவகத்துடன் வேறு யாருக்கும் தெரியாமல் எனக்குத் தெரிய வைப்பாள்.
ஆனால், சிறிதும் எதிர்பார்க்காமல் எனக்கு ஆபத்து வந்தது. ஒருநாள் லில்லியை என்னுடைய பெஞ்சுக்கு அருகில் வேறொரு பெஞ்சில் மாற்றி அமர வைத்து விட்டார்கள். ஒரு கேள்விக்கு பதில் கூறுவதற்காக நான் எழுந்து நின்றேன். என்னைக் காப்பாற்றும் நபரை நோக்கி ஓரக்கண்களால் பார்த்தபோது, அங்கு யாருமே இல்லாமல் இடம் வெறுமனே இருந்தது. நான் மேலே பார்த்தவாறு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, தன்னுடைய தாடியையும் மீசையையும் தடவியவாறு சார் தமாஷாகக் கேட்டார்.
‘பள்ளிக்கூடத்தில் எத்தனை தூக்கு மரம் இருக்கு குஞ்ஞப்பன்?'
அதைக்கேட்டு மாணவர்களும், மாணவிகளும் குலுங்கிச் சிரித்தார்கள். பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்தவுடன், அவர்கள் எல்லாரும் என்னைச் சுற்றி கூட்டமாக நின்று கேலி செய்தார்கள். நானும் லில்லியும் தனியாக இருந்தபோது, என்னுடைய மன வேதனையில் பங்குபெற்று அவள் சொன்னாள்:
‘இனி நான் சிலேட்டில் பதில் எழுதி வைத்து விடுகிறேன். பார்த்துச் சொல்லிடு... தெரியுதா?'
நான் வீட்டிற்குச் செல்ல தயாரானபோது, அவள் உரத்த குரலில் சொன்னாள்:
‘நாளைக்கு எங்க வீட்டில் கொழுக்கட்டை அவிக்கப் போறாங்க. குஞ்ஞப்பா, உனக்கு எடுத்து வைக்கிறேன். வரணும்...'
நான் நினைத்துப் பார்க்கிறேன்- வேதனைகளின் கறை படியாத அந்த நல்ல காலங்கள் எவ்வளவு சீக்கிரமாக கடந்து போய்விட்டது. ஒன்றரை ஃபர்லாங் தூரத்தில் மட்டுமே இருந்த பள்ளிக்கூடத்திற்கு என்னுடன் அல்லாமல், லில்லி ஒருமுறைகூட தனியாகச் சென்றதே இல்லை. எங்களுடைய வேலியின் அருகில் இருந்த பூவரச மரத்தில் ஏறி, படர்ந்திருந்த ஓணச் செடியிலிருந்து எவ்வளவு ஓணப் பூக்களை நான் அவளுக்கு பறித்துத் தந்திருக்கிறேன். அந்த மரம் இன்று இரண்டு ஆட்கள் சேர்ந்து பிடித்தால்கூட, பிடிக்கமுடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டது. சந்தோஷம் நிறைந்த அந்தக் காலங்கள் பல வண்ணங்களுடன் என் கண்களுக்கு முன்னால் தெரிகின்றன. அது இப்போது எந்தச் சமயத்திலும் திரும்பி வராத அளவிற்கு கடந்து போய்விட்டது.
நான்காம் வகுப்பிலும் ஐந்தாம் வகுப்பிலும் நானும் லில்லியும் சேர்ந்து அதே பள்ளிக்கூடத்தில் படித்தோம். அந்த இரண்டு வகுப்புகளிலும் வேறு யாரையும்விட அதிகமான மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்றது அவள்தான். வகுப்பறையில் வேறு யாரும் பதில் கூறாத கேள்வியை இறுதியாக லில்லியிடம்தான் கேட்பார்கள். அவள் எழுந்து நின்று இனிமையான குரலில் பதில் கூறுவாள். ‘அந்தச் சிறுமியைப் பார்த்து படிடா மரமண்டை!' என்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் கூறுவார்கள்.
ஐந்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன், என்னையும் லில்லியையும் ஒரு மைல் தூரத்திலிருந்த ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் சேர்த்ததே வர்க்கீஸ் சார்தான். அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயதும் எனக்கு பதின்மூன்று வயதும் நடந்துகொண்டிருந்தது. முதன்முதலாக ஆங்கில எழுத்துகளை வாசித்தபோது, அதை உச்சரிக்க... உச்சரிக்க அதற்குப் பிறகும் ஆர்வம் சிறிது குறையாமல், எல்லா நேரங்களிலும் திரும்பத் திரும்ப அதை உச்சரித்துத் திரிந்த காட்சியை நேற்று நடைபெற்றதைப்போல என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. அங்கும் லில்லி மாணவ- மாணவிகளுக்கு மத்தியில் அரசியாக இருந்தாள். பொறாமைப்படக்கூடிய அளவிற்கு அவள் எல்லா விஷயங்களிலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருந்தாள்.
வீட்டிலிருந்து புறப்பட்டால் பள்ளிக்கூடம் போய் சேர்வதுவரை, அவள் வீட்டில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டே வருவாள். பன்னிரண்டு வயது மட்டுமே கொண்ட அவளுக்கு வீட்டின் வரவு செலவு கணக்குகள் வரை மிகவும் சரியாகத் தெரிந்திருந்தன. எனக்கு புதிய புத்தகங்கள் அனைத்தும் வாங்கப்பட்ட நாளன்று நான் லில்லியிடம் கேட்டேன்: