ரதி நிர்வேதம் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7526
மரங்கள் இப்படியும் அப்படியுமாக ஆடின. நாங்கள் இரண்டு திசைகளிலும் ஓடினோம்.
சிறிது தூரம் ஓடிவிட்டு, நான் திரும்பிப் பார்த்தேன். மழையின் நூல்கள் வழியாக காட்சி தெளிவாக தெரியவில்லை.
எனினும் நான் அவளைப் பார்த்தேன்.
தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த மழையில் ஓடுவதற்கு சக்தியில்லாமல் முழுமையாக நனைந்து கொண்டு ஒரு காலை இழுத்தவாறு அவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.
தலையைத் துவட்டிக் கொண்டிருந்தபோது, மேற்குப் பக்கத்திலிருந்து ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. அவளுடைய தாயின் குரலை என்னால் அடையாளம் காண முடிந்தது.
தலைமுடியை வாரி, முன் பக்கத்தை அடைந்து எதுவுமே தெரியாதவனைப் போல- எல்லாவற்றையும் அறியாதவனைப் போல பார்த்துக் கொண்டு நின்றிருந்ததேன்.
என் தந்தை மழையில் இறங்கி -ஓடினார்.
நானும் என் தாயும் சித்தியும் அக்காவும் என்ன நடந்தது, என்று தெரியாமல் வாசலையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தோம். எல்லோரும் பதைபதைப்புடன் இருந்தார்கள்.
கோவிந்தன் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை.
சிறிது நேரம் சென்றதும் என் தந்தை நனைந்தவாறு வந்தார்.
"அங்கே இருக்குற பொண்ணை பாம்பு கடிச்சிருச்சு. சுய உணர்வு இல்லாமல் கிடக்குறா."
என் தாய் அதிர்ச்சியடைவதை நான் பார்த்தேன். அக்கா அழ ஆரம்பித்தாள்.
தலையைத் துவட்டுவதற்கு மத்தியில் என் தந்தை சொன்னார்: "விஷயம் எடுக்குற ஆள்கிட்ட கொண்டு போகப் போறாங்க."
மேற்குப் பக்க நிலத்தில் லாந்தர் விளக்குகளும் குடைகளும் தெரிந்தன. பாம்பைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியாக இருக்கும்.
என் தந்தை குடையை எடுத்துக் கொண்டு வெளியேறியபோது என் தாய் ஞாபகப்படுத்தினாள்: "அவங்ககூட போயிடாதீங்க. எங்கே கொண்டு போறாங்கன்னு தெரியாமல் போயிட்டால், காலையில பையனை கல்லூரிக்கு அழைச்சிட்டுப் போகணுமே!"
"இப்போ வந்திடுறேன்"- என் தந்தை சொன்னார். தொடர்ந்து மழையில் இறங்கி நடந்தார்.
"நான் அவருடன் போகட்டுமா?"- தயங்கித் தயங்கி கேட்டேன்.
"எதற்கு?"- என் தாயின் குரல் மிகவும் கடுமையாக இருந்தது.
"பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பாம்பு கடிச்சா, விசாரிக்க வேண்டாமா?"
என் குரலில் கவலையும் செயலற்ற நிலையும் அதிகமாக இருந்தன.
"ஓ... அதற்காக நீ போக வேண்டாம். போய் படு. பொழுது விடிஞ்சவுடன் புறப்படணும்."
என் தாய் என்னையே வெறித்துப் பார்த்தாள். சிறைத் தண்டனை முடிந்து வெளியே வரும் திருடன், அடுத்து திருடுவதற்காகப் போக ஆரம்பிக்கும் போது போலீஸ்காரன் பார்க்கும் பார்வை அப்போது என்னுடைய ஞாபகத்தில் வந்தது.
"ஹா! இவன் போய் விசாரிக்கப் போறானாம்!"- சித்தி, சொன்னாள்: "போய் படுடா."
தூக்கம் வரவேயில்லை.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
மழையின் முடிவற்ற இழைகளை யாரோ அங்கு... மேலே இருந்து அவிழ்த்துவிடுகிறார்கள். இடி முழக்கங்கள் வீட்டை நடுங்கச் செய்தன. மேற்குப் பக்க நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் மின்னல்கள் விழுந்து எரிந்து கொண்டிருந்தது. வேகமாக விழுந்து கொண்டிருந்த மழைக்கு மத்தியில், அணையாமல் பலமாக உயர்ந்து எரிந்து கொண்டிருந்த தீ ஜூவாலைகளைப் பார்த்து நான் அதிர்ந்து போய் நடுங்கினேன்.
என் தந்தை திரும்பி வந்திருந்தார். காலையில் நகரத்திற்குப் போக வேண்டியதிருப்பதால், விஷத்தை எடுப்பவரிடம் ரதியைக் கொண்டு சென்றவர்களின் கூட்டத்துடன் அவரால் போக முடியவில்லை.
இதயம் நின்று விட்டதைப் போல இருந்தது. ரதியின் உருவம் மனம் முழுக்க நிறைந்திருந்தது. பாசம் கொண்டதால் மட்டும் ஒரு ஆண் பிள்ளையின் விருப்பத்திற்குத் தயாரான ஒரு பெண்.
என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு ஆச்சரியமாக அவள் வளர்ந்து கொண்டிருந்தாள்.
படுத்துப் படுத்து எப்போதோ தூங்கிவிட்டேன். தூக்கத்திற்கு மத்தியில் ஒரு கனவு கண்டேன்.
ஒரு சவ அடக்கம்.
பாம்பு கடித்து இறந்த ஒரு இளம்பெண்ணை எல்லோரும் சேர்ந்து குழிக்குள் இறக்கி வைக்கிறார்கள். அவளுடைய முகம் தெரியவில்லை. அழகும் இளமையும் துடித்துக் கொண்டிருக்கும் மார்பின்மீது மண் விழுகிறது. பச்சைப்புல் அவளுக்கு மேலே போர்வையாக ஆகிறது. நல்ல சிவப்பு நிறம் கலந்த சிறுமலர்கள் புற்களுடைய நுனியில் மலர்ந்து வருகின்றன.
அப்போது திடுக்கிட்டுக் கண் விழித்துவிட்டேன். எந்த யாமத்தில் நான் கனவு கண்டேன்? எந்த யாமத்தில் காணும் கனவுகள் உண்மையாகவே நடக்கும்?
பதைபதைப்படைந்த இதயத்துடன் அதையே நினைத்துக் கொண்டு படுத்திருந்தபோது, என் தாய் வருவதைப் பார்த்தேன்.
என்னை எழுப்புவதற்காக.
8
மழை கிட்டத்தட்ட நின்றுவிட்ட புலர்காலைப் பொழுது என் தாயின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றி, பூஜை அறைக்குள் சென்று தொழுது, நான் வெளியேறி நடந்தேன்.
கோவிந்தன் தூக்கக் கலக்கத்துடன் படி வரையில் வந்தான். அவனுடைய கண்கள் நீரால் நிறையத் தொடங்கியிருந்தன.
வேலைக்காரனின் தலையில் பொருட்களை வைத்துவிட்டு, என் தந்தை முன்னால் நடந்து போயிருந்தார். மூன்று பேர் ஒரே நேரத்தில் அந்தப் பாதையில் போகக் கூடாதே!
அதிகாலை நேரத்தின் வெளிச்சம் கிராமத்துப் பாதையில் தெரிந்தது.
சேப்பாட்டு சந்திப்பை அடைய ஒன்றிரண்டு மைல்கள் நடக்க வேண்டும். அங்கு நின்றால் மட்டுமே பேருந்து வரும்.
ரதிக்கு என்ன ஆனது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. என் தாயிடம் கேட்டேன்.
"நான் அங்கே போய், ரது அக்காவின் அம்மாவிடம் போறேன்னு சொல்லிட்டு வரட்டுமா?"
"அங்கே யாரும் இல்ல..."- என் தாய் கவலையுடன் சொன்னாள்: "எல்லோரும் அந்தப் பெண் பிள்ளையை ஹரிப்பாட்டு தம்பியிடம் கொண்டு போயிருக்காங்க."
தம்பிதான் எல்லோருக்கும் தெரிந்த வரையில் மிகப் பெரிய விஷத்தை எடுக்கும் மனிதர்.
நான் இதயத்துடிப்பை அடக்கிக் கொண்டு கேட்டேன்: "ரது அக்காவுக்கு...?"
"எதுவும் தெரியல... ஆயுள் இருந்தால் கிடைக்கும். கஷ்டம்... நல்ல பொண்ணு!"
வயல்களின் முகத்தில் உட்கார்ந்து கொண்டு தவளைகள் கத்தின. வயலில் நீர் முழுமையாக நிறைந்திருந்தது.
காற்றில் குளிர்ச்சி இருந்தது-
இரு பக்கங்களிலும் இருந்த நிலத்தின் ஓரங்களில் விரிந்து வந்து கொண்டிருந்த காளான்கள், மழை நீரின் தழுவல் பட்டு ஒடிந்து விழுந்து கிடந்தன.
நான் முன்னால் நடந்தேன்.
இந்த கிராமம் என்னை விடைகூறி அனுப்பி வைக்கிறது- வேறு பலரையும் பயணத்திற்கு அனுப்பி வைத்ததைப் போல இனி நான் இந்த ஊரைச் சேர்ந்தவன் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களை விட்டு நிரந்தரமாக நான் போகிறேன்.
இளம் சூரியன் வெளிச்சத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருந்தது.