நீ மட்டுமே என் உயிர்! - Page 45
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6612
"அம்மா.. சரண்யாவைப் பார்த்தீங்களாம்மா? உங்களுக்கு அவளைப் பிடிச்சுதா...?"
"தீபக்... இந்தக் கல்யாணம் நடக்காது..."
"அம்மா..." அதிர்ச்சியில் உரக்கக் கத்தினான் தீபக்.
"கத்தாதே தீபக். சரண்யாவை மறந்துடு. உன்னை மறந்துடணும்ன்னு அவட்டயும் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்...."
"ஏம்மா? என்னம்மா ஆச்சு?"
"என்னமோ ஆச்சு. இந்தக் கல்யாணம் நடக்காது. அவ்வளவு தான். இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதே..."
"அப்பாவைப் பத்தி கேட்டா எதுவும் கேட்கக்கூடாதும்பிங்க. அவர் ஏன் உங்களைப் பிரிஞ்சார்னு கேட்டா எதுவும் கேட்கக் கூடாதும்பிங்க. அப்போ நாங்க சின்னப் பிள்ளைங்கம்மா. கேட்கக்கூடாதுன்னு நீங்க சொன்னப்புறம் நாங்க ரெண்டு பேரும் எதுவுமே கேட்கலை. உங்க வார்த்தைக்கு மரியாதை குடுத்தோம். இது என் வாழ்க்கை. இது சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு எதுவும் கேட்கக் கூடாதுன்னு நீங்க சொன்னா...?"
"நான் சொன்னா சொன்னதுதான். இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கவும் கூடாது..."
"அது ஏன்னுதாம்மா கேக்கறேன். சொல்லுங்கம்மா... உங்களுக்குச் சரண்யாவைப் பிடிக்கலையா?"
"எனக்கு யாரையுமே பிடிக்கலை..."
இதைக் கேட்ட ஸ்ரீதர், ஜானகியின் அருகே வந்தான்.
"பாவம்மா, தீபக். நீங்க வர்ற வரைக்கும் எவ்வளவு ஆசையா காத்துக்கிட்டிருந்தான் தெரியுமா?"
"தெரிய வேண்டாம்... எனக்கு எதுவும் தெரியாததுனால தான் அவங்க வீட்டுக்குப் போனேன். இந்த விஷய்ததைப் பத்தி இனிமேல எதுவும் பேசாதே..." நயந்து பேசிய ஸ்ரீதரிடமும் கோபமாகவே பேசினாள்.
தீபக் குறுக்கிட்டுப் பேசினான்.
"அப்போ... என்னோட காதல்?"
"அதான் அவளை மறந்துடுன்னு சொல்லிட்டேனே!"
"காரணம் சொல்லுங்க. மறக்கறதா வேண்டாமான்னு நான் முடிவு செய்யறேன்."
அப்போது குவர்ட்டர்சுக்குள் வந்த சங்கர், அவர்கள் பேசியதைக் கேட்க நேர்ந்தது.
"முடிவு எடுக்கறது அவங்க. ஆனா காரணத்தைச் சொல்லாம வந்துருவாங்க..." ஜன்னல் பக்கமாகத் திரும்பி இருந்த ஜானகி, சங்கரின் குரல் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பினாள்.
"நீங்களா? நீங்க எதுக்காக இங்கே வந்தீங்க?"
"ஜானகி? நீயா... நீயா தீபக்கோட அம்மா?"
ஆமா என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள் ஜானகி.
அப்போது காரில் காத்துக் கொண்டிருந்த சரண்யா, முத்தையா, வசந்தா, அனைவரும் குவார்ட்டர்சுக்குள் வந்தனர். ஜானகியைப் பார்த்த பிரபாகர் ஆச்சர்யப்பட்டான். அதிர்ச்சியடைந்தான். ஜானகி என்று அழைத்தான்.
பிரபாகரைப் பார்த்து மிகவும் கோபமாகக் கத்த ஆரம்பித்தாள் ஜானகி.
"நீங்களா? எதுக்காக இங்கே வந்தீங்க? உங்களாலதானே என் வாழ்க்கை பறி போச்சு? உங்களைப் பத்தி எதுவுமே என் புருஷன் கிட்ட சொல்லலைன்னு சொன்னேனே! கேட்டீங்களா? நம்ப குடும்பத்துல இருந்தப்பவும் உங்களால ஒரு பலனும் இல்லை. வீட்டை விட்டுப் போனப்புறமும் என்னோட குடும்பத்தைப் பிரிக்கணும்ன்னு என்னோட வீட்டுக்கு வந்தீங்க. நீங்கள்லாம் ஒரு அண்ணன்! அதிலயும் கூடப்பிறந்த அண்ணன்! உங்களை என்னோட அண்ணன்னு சொல்லிக்கவே கேவலமா இருக்கு..."
"என்ன? பிரபாகர் உன்னோட அண்ணனா? சங்கர் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாகக் கேட்டான்.
"ஆமா. இதைத்தான் அன்னிக்கு உங்ககிட்ட சொல்லத் துடிச்சேன். கெஞ்சினேன். ஆத்திரப்பட்டு அவசர முடிவு எடுக்கறதே உங்களுக்கு வழக்கமா ஆயிடுச்சு. எங்க அண்ணன் திருட்டுவேலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான். அந்த அவமானமான விஷயம் உங்களுக்கு தெரியக்கூடாதன்னுதான் எனக்கு ஒரு அண்ணன் இருக்கறதை நான் சொல்லலை. அதனாலதான் மதுரையில நம்ப வீட்டுக்கு வந்தப்ப, வீட்டுக்குள்ள சேர்க்காம, 'என் புருஷன் வர்றதுக்குள்ள போயிடுங்கன்னு' கெஞ்சிக்கிட்டிருந்தேன். நீங்க இவர் என்னோட அண்ணன்னு தெரியாம, தெரிஞ்சுக்கவும் முடியாம என்னைக் கேவலமானவளா நினைச்சு, விட்டுட்டுப் போயிட்டீங்க. அன்னிக்கு நீங்க வீட்டுக்குள்ள வந்தப்ப இவர் வெளியே ஓடினாரு. அந்தச் சமயத்துல நீங்க ரெண்டு பேருமே ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கலை. என்னைத் தப்பா நினைச்சு அடிச்சுப் போட்டீங்களே! அப்போ நான் எவ்வளவு கெஞ்சினேன்! சொல்றதைக் கேளுங்கன்னு. இன்னிக்கு என் பிள்ளைங்க கேட்கறாங்க... அப்பா யாரு, அவர் ஏன் நம்பளைப் பிரிஞ்சு போனார்ன்னு? இந்தக் கேவலத்தை நான் எப்படி அவங்ககிட்ட சொல்ல முடியும்? என் முகத்துக்கு நேரா மரியாதையா பேசிட்டு, என் முதுகுக்குப் பின்னால, 'கழுத்துல தாலி... நெத்தியில பொட்டு... கையில பிள்ளைங்க... ஆனா புருஷன் மட்டும் கூட இல்லையா?'ன்னு இளக்காரமா பேசினவங்க எத்தனை பேரு! சின்னக் குழந்தைகளைக் கையில பிடிச்சுக்கிட்டு இந்த பங்களாக்கார மங்களத்தம்மாட்ட வேலைக்கு வந்தேன். வந்த இடத்துல வயித்துக்குச் சோறு கிடைச்சுது. ஆனா மனசுக்கு? வேதனையும், வலியும் தான் கிடைச்சுது. 'இளவயசுப் பொண்ணு! புருஷன் துணை இல்லாதவளா தனியா இருக்காளே... கூப்பிட்டா... வந்துருவா!' இழிவா நினைச்சு என்னைப் பெண்டாள வந்த வேதனையும், வலியும், அவமானமும்... அந்தக் காமுக நாய்கள்ட்ட இருந்து என்னையும், என்னோட பெண்மையையும் காப்பாத்திக்க நான் பட்ட பாடு யாருக்குத் தெரியும்? அடுப்படியில வெந்து, நெஞ்சுக்குள்ள நொந்து போய்... வாழ்க்கையோட ஒவ்வொரு நாளையும் கடத்தறதுக்கு நான் பட்டபாடு! யாருக்குத் தெரியும்? மணவாழ்க்கையில மனைவியோட சேலையைத் தொட்டதுல இருந்து அவள் இறந்த பிறகு அவளோட பிணத்து மேல சம்பிரதாயத்துக்காகப் புதுச்சேலை போடற வரைக்கும் பொண்ணுக்குப் புருஷனோட துணை வேணும். முதல் இரவுல இருந்து முதுமை வரைக்கும் பொண்ணுக்குப் புருஷனோட துணை வேணும். அவனோட வாரிசுகளை வளர்க்கறதுக்கு, வாரிசுகளோட எதிர்காலத்தை உருவாக்கறதுக்குப் பொண்ணுக்குப் புருஷனோட துணை வேணும். பள்ளிக் கூடத்துல 'உங்கப்பா எங்கேன்னு கேக்கறாங்க'ன்னு என் மகனுங்க என்கிட்ட வந்து சொல்லும் போது நான் பட்ட பாடு யாருக்குத் தெரியும்? என் மகன்களைக் கட்டுப்பாடா வளர்க்கறதுக்கு நான் பட்ட பாடு யாருக்குத் தெரியும்?"
அப்போது வசந்தா பேச ஆரம்பித்தாள்.
"என் மகன் சங்கர் மட்டுமென்ன கஷ்டப்படாம சந்தோஷமாவா இருந்தான்?! உன்னைப் பிரிஞ்சப்புறம் தன் உயிரையே பிரிஞ்ச மாதிரி நடைபிணமாத்தான் வாழ்ந்தான். ஒரு மனைவி ஸ்தானத்துல இருக்கக் கூடியவ மட்டுமே தரக்கூடிய சுகங்களை இழந்தான். மனைவிங்கறவ அளிக்கக்கூடிய சேவைகளைத் துறந்தான். தன் குடும்பத்தை இழந்துட்ட அவன், எங்களை மட்டுமே உலகமா நினைச்சு வா£ந்துக்கிட்டிருக்கான். அவனுக்காக அவங்கப்பா ஆரம்பிச்ச நிறுவனத்தை நிர்வாகம் பண்றதுல தன் வேதனைகளை மறந்தான். அதுக்காக எப்பவும் அந்த நிறுவன வேலைகள்ல தன்னை மூழ்கடிச்சுக்கிட்டான். தாய் அறியாத சூல் இல்லைன்னு சொல்லுவாங்க. அவனோட மனக் கவலையும், முக வாட்டமும் எனக்கு மட்டும் தான் தெரியும். உன்னை நெனச்சு கஷ்டப்பட்டான். பிள்ளைங்கள நெனச்சு கஷ்டப்பட்டான். அந்தக் கஷ்டங்களையெல்லாம் சரண்யா முகம் பார்த்து ஆறுதல் அடைஞ்சான். மறுகல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எவ்வளவோ கெஞ்சினேன்.