தெய்வ மகன் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6548
11
ஒரு இரவு வேளையில் தெய்வமகன் மரத்துண்டுகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தான். நீரைக் கொப்பளித்து விட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் ஓய்வெடுப்பதற்காக உட்கார்ந்து கொண்டு யாராவது வருகிறார்களா என்று ஆச்சரியத்துடன் நடைபாதையைப் பார்த்தான். ஆனால், அன்று முழுவதும் யாருமே வரவில்லை. சாயங்காலம் வரை அவன் மட்டுமே தனியாக உட்கார்ந்திருந்தான். தனிமையாக உட்கார்ந்திருந்ததால் உண்டான சோர்வுடன், அவன் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்தான். அந்த கொள்ளைக்காரன் தன்னுடைய பக்தியை வைத்து தான் வாழ்ந்து கொண்டிருப்பதை எப்படி கிண்டலாகக் கூறினான் என்பதையும் அவனுடைய வாழ்க்கையைப் பற்றி அவன் என்ன கூறினான் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். 'துறவி என்ன சொன்னாரோ அதன்படி நான் வாழவில்லை'. அவன் நினைத்தான்: 'அந்தத் துறவி எனக்கு ஒரு தண்டனைத் தந்துவிட்டார். நான் வாழவும் செய்திருக்கிறேன். அதன் மூலம் புகழையும் அடைந்திருக்கிறேன். அந்தப் புகழாசை என்னை அதிகமாகவே ஆட்டிப்படைத்து விட்டிருக்கிறது. என்னைத் தேடிவ மனிதர்கள் யாரும் வரவில்லை என்பதை நினைத்து நான் இப்போது சோர்வடைந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னைத் தேடி வருவதைப் பார்த்ததும், நான் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகிறேன். அதற்குக் காரணம்- அவர்கள் என்னுடைய புனிதத் தன்மையைப் பற்றி புகழ்ந்து கூறுகிறார்கள். ஒரு மனிதன் அந்த மாதிரி வாழக் கூடாது. புகழ்ச்சியின் மீது கொண்ட ஈர்ப்பால், நான் என்னுடைய வாழ்க்கையைத் தாறுமாறாக வாழ்ந்திருக்கிறேன். நான் என்னுடைய கடந்த கால பாவச் செயல்களுக்கு பரிகாரம் காண வில்லை. சொல்லப் போனால்- நான் புதிய பாவச் செயல்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். நான் காட்டின் இன்னொரு பகுதிக்குச் செல்லப்போகிறேன். அங்கு மனிதர்கள் என்னைப் பார்க்க வர மாட்டார்கள். நான் அங்கு என்னுடைய பழைய பாவச் செயல்களுக்கு பரிகாரம் தேடி மட்டும் வாழ்வேன். இனி புதிதாக பாவச் செயல்களைச் சேர்க்காமல் இருப்பேன்.'
இந்த முடிவிற்கு வந்தவுடன், தெய்வமகன் ஒரு பையில் காய்ந்த ரொட்டியை எடுத்துப் போட்டுக் கொண்டு, குழி தோண்டக் கூடிய கருவியைக் கையில் எடுத்துக் கொண்டு, தான் இப்போது தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறி ஒரு சிற்றோடையை நோக்கி நடந்தான். அவனுக்குத் தெரிந்த அந்த சிற்றோடை தனிமையான ஒரு இடத்தில் இருந்தது. அங்கு தனக்கென்று ஒரு குகையை அமைத்துக் கொண்டு, அவன் மற்ற மனிதர்களிடமிருந்து தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ள முடியும்.
அவன் கையில் பையுடனும் குழி தோண்டும் கருவியுடனும் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, தன்னை நோக்கி குதிரையில் அந்த கொள்ளைக்காரன் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். தெய்வமகன் அவனைப் பார்த்து பயந்து போய், அங்கிருந்து ஓட ஆரம்பித்தான். ஆனால், அந்த கொள்ளைக்காரன் அவனைக் கடந்து அவனுக்கு முன்னால் போய் நின்றான்.
"நீங்க எங்கே போறீங்க?" கொள்ளைக்காரன் கேட்டான்.
மனிதர்களிடமிருந்து முழுமையாக விலகிப் போக வேண்டும் என்று தான் நினைப்பதையும் யாருமே தன்னைப் பார்க்க வராமல் இருக்கக் கூடிய அமைதியான ஒரு இடத்தைத் தேடிச் சென்று தான் வாழப் போவதையும் அவன் கூறினான். அந்த விஷயம் கொள்ளைக்காரனை ஆச்சரியம் கொள்ளச் செய்தது.
"மக்கள் உங்களைப் பார்க்க வரவே இல்லையென்றால், நீங்கள் எப்படி உயிருடன் வாழ்வீர்கள்?" அவன் கேட்டான்.
தெய்வமகன் அதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே இல்லை. ஆனால், கொள்ளைக்காரனின் கேள்வி உணவு எந்த அளவுக்கு அவசியம் என்ற சிந்தனையை அவனிடம் உண்டாக்கியது.
"கடவுள் எனக்கு எதைக் கொடுக்க நினைக்கிறாரோ, அது கிடைக்கட்டும்." அவன் சொன்னான்.
கொள்ளைக்காரன் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. அங்கிருந்து குதிரையில் வேகமாகக் கிளம்பிச் சென்றுவிட்டான்.
'நான் ஏன் அவனுடைய வாழ்க்கை முறையைப் பற்றி எதுவுமே அவனிடம் கூறவில்லை?' தெய்வமகன் தன் மனதிற்குள் நினைத்தான்: 'அவன் இப்போது வருத்தப்படலாம். இன்று அவன் மென்மையான மனிதனாக இருப்பதைப்போல தோன்றியது. என்னைக் கொலை செய்வதாக அவன் மிரட்டவில்லை.'
அவன் கொள்ளைக்காரனைப் பார்த்து உரத்த குரலில் கத்தினான்:
"உன்னுடைய பாவச் செயல்களுக்காக நீ இன்னும் வருத்தப்பட வேண்டும். நீ கடவுளிடமிருந்து தப்பவே முடியாது."
அந்த கொள்ளைக்காரன் தன்னுடைய குதிரையைத் திருப்பி, தன்னுடைய உறையிலிருந்து ஒரு கத்தியை உருவி துறவியை அதைக் கொண்டு மிரட்டினான். துறவி அதிர்ச்சியடைந்து இன்னும் சிறிது தூரம் காட்டுக்குள் வேகமாக ஓடினான்.
கொள்ளைக்காரன் அவனைப் பின்பற்றிச் செல்லவில்லை. ஆனால் உரத்த குரலில் கத்தினான்.
"உங்களை இரண்டு முறைகள் வெறுமனே விட்டிருக்கிறேன் பெரியவரே! ஆனால், அடுத்த முறை நீங்கள் என்னுடைய வழியில் வந்தால், நான் உங்களைக் கொன்றுவிடுவேன்."
இதைக் கூறிவிட்டு, அவன் வேகமாக குதிரையில் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான். மாலை நேரத்தில் தெய்வமகன் தன்னுடைய மரத்துண்டுகளுக்கு நீர் ஊற்றுவதற்காகச் சென்ற போது, அவற்றில் ஒன்றில் முளை விட்டிருப்பதை அவன் பார்த்தான். ஒரு சிறிய ஆப்பிள் மரம் அதிலிருந்து வளர ஆரம்பித்திருந்தது.
12
எல்லாரிடமிருந்தும் மறைந்திருக்க வேண்டும் என்று நினைத்த பிறகு, தெய்வமகன் அவன் மட்டும் தனியாக வாழ்ந்தான். அவனுக்கு வர வேண்டிய ரொட்டி நின்று போனவுடன், அவன் தன் மனதில் நினைத்தான்:
'இப்போது நான் வெளியே சென்று சாப்பிடுவதற்கு ஏதாவது கிழங்குகள் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.' அவன் சிறிது தூரம் கூட போயிருக்க மாட்டான்- ஒரு மரத்தின் கிளையில் காய்ந்த ரொட்டி அடங்கிய ஒரு பை தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அதைக் கீழே எடுத்து, எவ்வளவு நாட்கள் அதை சாப்பிட முடியுமோ, அத்தனை நாட்கள் அதைச் சாப்பிட்டு வாழ்ந்தான்.
அவன் அந்த ரொட்டி முழுவதையும் சாப்பிட்டு முடித்தவுடன், இன்னொரு பை அதே மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அதை வைத்துக் கொண்டு அவன் வாழ்ந்தான். கொள்ளைக்காரன்மீது கொண்ட பயம் மட்டுமே அவனுக்கு தொந்தரவான ஒரு விஷயமாக இருந்தது. கொள்ளைக்காரன் அந்த வழியே கடந்து செல்லும் ஓசை எப்போதெல்லாம் கேட்கிறதோ, அப்போது அவன் தன்னை மறைத்துக் கொள்வான். அந்தச் சமயத்தில் அவன் சிந்திப்பான்.
'நான் என்னுடைய பாவச் செயல்களுக்கு பிராயச்சித்தம் செய்வதற்கு முன்பே அவன் என்னைக் கொன்றுவிடலாம்.'
அதே நிலையில் அவன் மேலும் பத்து வருடங்கள் வாழ்ந்தான். ஒரே ஒரு ஆப்பிள் மரம் மட்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. மற்ற இரண்டு மரத்துண்டுகளும் அதே நிலையிலேயே இருந்தன.
ஒருநாள் காலையில் அவன் வெகுசீக்கிரமே படுக்கையை விட்டு எழுந்து தன் வேலைகளைப் பார்ப்பதற்காகக் கிளம்பினான். மரத்துண்டுகள் இருந்த நிலத்தை முழுமையாக நீர் ஊற்றி நனைத்து முடித்தபோது, அவனுக்கு மிகுந்த களைப்பு உண்டாகிவிட்டது. அதனால் ஓய்வு எடுப்பதற்காக அவன் அதே இடத்தில் உட்கார்ந்து விட்டான். அப்படி உட்கார்ந்திருந்தபோது, அவன் தனக்குத்தானே நினைத்தான்.
'நான் பாவம் செய்துவிட்டேன். மரணத்தைப் பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டேன். மரணத்தைத் தழுவுவதன் மூலம் நான் பாவச் செயல்களிலிருந்து விடுபடும் மனிதனாக ஆக முடியும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்.'
இந்தச் சிந்தனை அவனுடைய மனதிற்குள் நுழைந்தபோது, அந்த கொள்ளைக்காரன் குதிரையில் பாய்ந்து வரும் ஓசை கேட்டது. எதையோ அவன் அடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் துறவியின் மனம் நினைத்தது.
'நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும், அது வேறு யார் மூலமும் எனக்கு வராது. கடவுளிடமிருந்து மட்டுமே வரும்.'
அவன் அந்த கொள்ளைக்காரனைச் சந்திப்பதற்காகச் சென்றான். அவன் போய் பார்த்தபோது, கொள்ளைக்காரன் மட்டும் தனியாக இருக்கவில்லை. அவனுக்குப் பின்னால் குதிரையின் மீது இன்னொரு மனிதனும் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. அந்த மனிதன் எதுவும் செய்யவில்லை. ஆனால், அந்த கொள்ளைக்காரன் அவனை வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் கொண்டு பலமாக திட்டிக் கொண்டிருந்தான். தெய்வமகன் அருகில் சென்று, குதிரைக்கு முன்னால் போய் நின்றான்.
"இந்த மனிதனை நீ எங்கே கொண்டு போகிறாய்?" அவன் கேட்டான்.
"காட்டுக்குள்..."கொள்ளைக்காரன் சொன்னான்: "இவன் ஒரு வியாபாரியின் மகன். தன் தந்தையின் பணம் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை எனக்குக் கூற மாட்டேன் என்கிறான். இவன் உண்மையைக் கூறும் வரை, நான் இவனை அடித்து உதைக்கப் போகிறேன்."
கொள்ளைக்காரன் குதிரையைக் கிளப்பினான். ஆனால், தெய்வமகன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து, அவனை அந்த இடத்தை விட்டு நகரவிடாமல் செய்தான்.
"அந்த மனிதனைப் போக விடு." அவன் சொன்னான்.
கொள்ளைக்காரனுக்கு அதிகமான கோபம் உண்டானது. அவன் துறவியை அடிப்பதற்காக கையை உயர்த்தினான்.
"நான் இந்த மனிதனுக்கு எதைத் தரப்போகிறேனோ, அதை நீங்களும் கொஞ்சம் சுவை பார்க்க வேண்டுமா? நான் உங்களைக் கொன்றுவிடுவேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன் அல்லவா? ஒழுங்கா போயிடுங்க..."
தெய்வமகன் சிறிதும் பயப்படவில்லை.
"நீ போகக்கூடாது." அவன் சொன்னான்: "உன்னைப் பார்த்து நான் பயப்படவில்லை. கடவுளுக்கு மட்டும்தான் நான் பயப்படுவேன். வேறு யாருக்கும் பயப்பட மாட்டேன். உன்னை நான் விடக்கூடாது என்று கடவுள் விரும்புகிறார். அந்த மனிதனை வெறுமனே விட்டுவிடு."
கொள்ளைக்காரன் கீழே குனிந்து, இடுப்பிலிருந்து கத்தியை எடுத்து, வியாபாரியின் மகனைக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்து, அவனைப் போகவிட்டான்.
"நீங்கள் இருவரும் இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள்." அவன் சொன்னான்: "என்னுடைய பாதையில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்."
வியாபாரியின் மகன் குதிரையிலிருந்து கீழே இறங்கி ஓடியே போனான். கொள்ளைக்காரன் குதிரையைச் செலுத்துவதற்கு தயாரானான். ஆனால் தெய்வமகன் அவனை மீண்டும் தடுத்து நிறுத்தினான். அவனிடம் திரும்பவும் மோசமான வாழ்க்கையை விட்டுவிடும்படி அவன் கேட்டுக் கொண்டான். கொள்ளைக்காரன் அந்தப் பேச்சை இறுதி வரை அமைதியாக இருந்தவாறு கேட்டான். தொடர்ந்து ஒரு வார்த்தைகூட கூறாமல் அங்கிருந்து குதிரையில் கிளம்பினான்.
மறுநாள் காலையில் தெய்வமகன் தன்னுடைய மரத்துண்டுகளை நீர் ஊற்றி நனைப்பதற்காகச் சென்றான். அடடா! அந்த இரண்டாவது மரத்துண்டு முளைக்க ஆரம்பித்திருந்தது. இரண்டாவது இளம் ஆப்பிள் மரம் வளரத் தொடங்கியிருந்தது.
13
இன்னொரு பத்து வருடங்கள் கடந்து சென்றன. தெய்வமகன் ஒருநாள் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தான். எதற்கும் ஆசைப்படவில்லை. எதற்கும் பயப்படவில்லை. அவனுடைய இதயம் முழுமையான சந்தோஷத்தில் திளைத்திருந்தது.
'கடவுள் மனிதர்கள் எப்படியெல்லாம் ஆசீர்வாதங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறார்!' அவன் நினைத்தான்: 'எனினும், அவர்கள் எப்படியெல்லாம் தங்களைத் தாங்களே தொந்தரவுகளுக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள்? சந்தோஷமாக வாழ்வதிலிருந்து அவர்களை எது தடுக்கிறது?'
மனிதர்களிடம் இருக்கும் எல்லா பாவச் செயல்களையும், தங்களுக்குத் தாங்களே அவர்கள் வரவழைத்துக் கொள்ளும் தொல்லைகளையும் நினைத்துப் பார்த்து அவனுடைய உள்ளம் கவலைகளால் நிறைந்தது.
'நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் முறையே தவறானது'. அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான். 'நான் என்ன கற்றிருக்கிறேனோ, அவற்றை வெளியே சென்று மற்றவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.'
இதை அவன் நினைத்துக் கெகண்டிருந்தபோது, கொள்ளைக்காரன் வந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவன் தன் வழியில் போகட்டும் என்று அவன் நினைத்தான்:
'அவனிடம் பேசுவதில் பிரயோஜனமே இல்லை அவன் புரிந்து கொள்ள மாட்டான்.'
முதலில் அவன் அப்படித்தான் நினைத்தான். பிறகு தன் மனதை மாற்றிக் கொண்டு, வெளியேறி சாலைக்குச் சென்றான். அங்கு கொள்ளைக்காரன் மிகவும் இருளடைந்து போய், கண்களைக் கீழ் நோக்கி வைத்துக் கொண்டு குதிரையில் வந்து கொண்டிருந்தான். தெய்வமகன் அவனைப் பார்த்து, அவன் மீது இரக்கம் கொண்டு, அவனை நோக்கி ஓடி, தன்னுடைய கையை அவனின் முழங்காலில் வைத்தான்.
"அன்பு சகோதரனே!" அவன் சொன்னான்: "உன் ஆன்மா மீது சிறிது இரக்கம் காட்டு. கடவுளின் ஆவி உனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீ துன்பப்படுகிறாய். பிறரைத் துன்பத்திற்குள்ளாக்குகிறாய். எதிர்காலத்திற்கு மேலும் மேலும் அதிகமான துன்பங்களைச் சேர்த்து வைக்கிறாய். எனினும், கடவுள் உன்மீது அன்பு வைத்திருக்கிறார். உனக்காக அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பொழிவதற்கு தயாராக இருக்கிறார். உன்னை நீயே முழுமையாக அழித்துக் கொள்ளாதே. உன் வாழ்க்கையை மாற்றிக் கொள்!"
அந்தக் கொள்ளைக்காரன் குனிந்து தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
"என்னைத் தனியாக விட்டு விடுங்கள்!" அவன் சொன்னான்.
ஆனால், தெய்வமகன் கொள்ளைக்காரனை மேலும் பலமாகப் பற்றிக் கொண்டு, அழ ஆரம்பித்தான்.
தொடர்ந்து கொள்ளைக்காரன் தன்னுடைய கண்களை உயர்த்தி தெய்வமகனைப் பார்த்தான். அவனையே அவன் நீண்ட நேரமாகப் பார்த்தான். பிறகு குதிரையிலிருந்து கீழே இறங்கி, முழங்காலிட்டு தெய்வமகனின் பாதங்களில் விழுந்தான்.
"நீங்கள் என்னை வெற்றி பெற்றுவிட்டீர்கள், பெரியவரே!" அவன் சொன்னான். "கடந்த பத்து வருடங்களாக நான் உங்களை எதிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால், இப்போது நீங்கள் என்னை வெற்றி பெற்றுவிட்டீர்கள். நீங்கள் என்னை என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள். என்னிடம் இதற்குமேல் சக்தியே கிடையாது. நீங்கள் என்னை முதன்முதலாக குத்திக் காட்டியபோது, எனக்கு அதிகமான கோபம் மட்டுமே வந்தது. நீங்கள் உங்களை மற்ற மனிதர்களிடமிருந்து மறைத்துக் கொண்டு வாழ முயற்சித்த போதுதான், நான் உங்களின் வார்த்தைகளை கவனிக்க ஆரம்பித்தேன். நீங்கள் உங்களுக்காக எதையும் கேட்டுக் கொள்ளவில்லை என்பதையும் கவனித்தேன். அந்த நாளிலிருந்து நான் உங்களுக்காக உணவு கொண்டு வந்தேன். அதை மரக்கிளையில் தொங்கவிட்டேன்."
அப்போது தெய்வமகன், அந்தப் பெண் தன்னுடைய துணியைச் சுத்தம் செய்த பிறகுதான் அவளால் அந்த மேஜையை முழுமையாக சுத்தம் செய்ய முடிந்தது என்பதை நினைத்துப் பார்த்தான். அதேபோல, தன்னைப் பற்றி அவன் அக்கறை செலுத்துவதை நிறுத்தி, தன்னுடைய இதயத்தையே சுத்தம் செய்த பிறகுதான், மற்றவர்களின் இதயங்களை அவனால் சுத்தம் செய்ய முடிந்திருக்கிறது.
கொள்ளைக்காரன் தொடர்ந்து சொன்னான்:
"நீங்கள் மரணத்தைப் பார்த்து பயப்படவே இல்லை என்பதைப் பார்த்த பிறகு என்னுடைய மனம் மாறிவிட்டது."
அப்போது தெய்வமகன் அந்த வண்டிச்சக்கரத்தைச் செய்து கொண்டிருந்தவர்களால் அந்த மரத்துண்டின் மையப் பகுதியைப் பொருத்தாமல் ஆரத்தை வளைக்கவே முடியாமல் போனதை நினைத்துப் பார்த்தான். அதே போல மரணத்தைப் பற்றிய பயத்தை தூக்கியெறிந்து விட்டு, தன்னுடைய வாழ்க்கையை கடவுளிடம் அர்ப்பணம் செய்யும் வரை அவனால் இந்த மனிதனின் கட்டுப்பாடற்ற மனதை மாற்றவே முடியவில்லை."
"ஆனால், என் இதயம் சிறிதுகூட இளகவில்லை." கொள்ளைக்காரன் தொடர்ந்து சொன்னான்:
"நீங்கள் எனக்காகப் பரிதாபப்பட்டு, எனக்காக அழும்வரை..."
தெய்வமகன் முழுமையான சந்தோஷத்தில் மூழ்கி, கொள்ளைக்காரனை அந்த மரத்துண்டுகள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அவர்கள் அங்கு போய்ச் சேர்ந்த நேரத்தில், மூன்றாவது மரத்துண்டிலிருந்து ஒரு ஆப்பிள் மரம் வளர ஆரம்பித்திருப்பதை அவர்கள் பார்த்தார்கள். அப்போது தெய்வமகன் அந்த இடையர்களால் நெருப்பு முழுமையாக எரியாமல் இருந்தது வரை, ஈர விறகைப் பற்ற வைக்க முடியாமற் போனதை நினைத்துப் பார்த்தான். அதே போல அவனுடைய இதயம் பிரகாசமாக எரிந்த பிறகுதான், அதனால் பிற இதயங்களைப் பிரகாசத்துடன் இருக்கச் செய்ய முடிந்தது.
இறுதியில் தன்னுடைய பாவச் செயல்களுக்குப் பரிகாரம் கண்டுவிட்டதை நினைத்து தெய்வமகன் முழுமையான சந்தோஷத்தை அடைந்தான்.
அவன் எல்லா விஷயங்களையும் கொள்ளைக்காரனிடம் கூறிவிட்டு, இறந்துவிட்டான். அந்த கொள்ளைக்காரன் அவனைப் புதைத்தான். தெய்வமகன் அவனுக்கு என்ன கூறினானோ, அதன்படி அவன் வாழ்ந்தான். தெய்வமகன் அவனுக்கு கற்றுத் தந்ததை, அவன் மற்றவர்களுக்கு கற்றுத் தந்தான்.