
ஒரு ஏழை விவசாயிக்கு ஒரு மகன் பிறந்தான். விவசாயி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பையனுக்கு 'காட்ஃபாத'ராக இருக்கும்படி கேட்பதற்காக தன்னுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனிதனைத் தேடிச் சென்றான். அந்த மனிதனோ ஒரு ஏழை மனிதனின் குழந்தைக்கு காட்ஃபாதராக இருப்பதற்கு மறுத்துவிட்டான். விவசாயி தன்னுடைய இன்னொரு பக்கத்து வீட்டுக்காரனிடம் போய் கேட்டான். அவனும் மறுத்துவிட்டான்.
அதற்குப் பிறகு அந்த ஏழைத் தந்தை கிராமத்திலிருந்த ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கேட்டான். அவனுடைய மகனுக்கு காட்ஃபாதராக இருப்பதற்கு யாருமே தயாராக இல்லை. அதனால் அவன் இன்னொரு கிராமத்தைத் தேடிப் புறப்பட்டான். போகும் வழியில் அவன் ஒரு மனிதரைச் சந்தித்தான். அந்த மனிதர் விவசாயியைத் தடுத்து நிறுத்திக் கேட்டார்.
"வணக்கம், மனிதனே... நீ எங்கே போகிறாய்?"
"கடவுள் எனக்கு ஒரு குழந்தையைத் தந்திருக்கிறார்." விவசாயி கூறினான். "வாலிப வயதில் என் கண்களில் சந்தோஷம் குடி கொண்டிருப்பதற்காக... வயதான காலத்தில் ஆறுதல் அடைவதற்காக... மரணத்திற்குப் பிறகு என் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்வதற்காக... ஆனால், நான் ஏழை. என் கிராமத்தில் இருக்கும் யாரும் அவனுக்கு காட்ஃபாதராக இருப்பதற்குத் தயாராக இல்லை. அவனுக்கு ஒரு காட்ஃபாதரைத் தேடி வேறு இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்."
"நான் காட்ஃபாதராக இருக்கிறேன்". அந்த வழிப்போக்கர் கூறினார்.
விவசாயி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அந்த மனிதருக்கு நன்றி கூறினான். ஆனால், தொடர்ந்து கேட்டான்.
"சரி... 'காட்பாதராக இருப்பதற்கு நான் யாரைக் கேட்பது,"
"நகரத்திற்குச் செல்..." அந்த வழிப்போக்கர் பதில் சொன்னார்: "செவ்வக அமைப்புக்கு அருகில் நீ ஒரு கல்லாலான வீட்டைக் காண்பாய். அதன் முன்பகுதியில் கடைகளில் இருப்பது போன்ற சாளரங்கள் இருக்கும். வாசலில் நுழைந்தவுடன் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான கடைக்காரரைப் பார்க்கலாம். உன் குழந்தைக்கு காட்மதராக அவருடைய மகள் இருக்கும்படி அவரிடம் கேள்."
அந்த விவசாயி தயங்கினான்.
"நான் எப்படி ஒரு பணக்கார வியாபாரியிடம் போய் கேட்பது?" அவன் சொன்னான். "அவர் என்னை வாய்க்கு வந்தபடி திட்டிவிடுவார். தன் மகளை அனுப்புவதற்கு அவர் சம்மதிக்கவே மாட்டார்."
"அதைப் பற்றிக் கவலைப்படவே வேண்டாம். போய்க் கேள். நாளை காலைக்குள் எல்லாவற்றையும் தயார் பண்ணிவை... நான் ஞானஸ்நானம் செய்யும் இடத்திற்கு வந்துவிடுகிறேன்."
அந்த விவசாயி தன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். தொடர்ந்து நகரத்திற்குச் சென்று வியாபாரியைப் பார்ப்பதற்காக குதிரையில் புறப்பட்டான். குதிரையை லாயத்திற்குள் கொண்டு போய் நிறுத்தக் கூட இல்லை- வியாபாரி வெளியே வந்து கொண்டிருந்தார்.
"என்ன வேண்டும்?" அவர் கேட்டார்.
"அய்யா..."விவசாயி சொன்னான்: "வாலிப வயதில் என் கண்களில் சந்தோஷம் குடிகொண்டிருப்பதற்காகவும்... வயதான காலத்தில் நான் ஆறுதல் அடைவதற்காகவும்... மரணமடைந்த பிறகு என் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்வதற்காகவும் கடவுள் எனக்கு ஒரு மகனை அளித்திருக்கிறார். அவனுக்கு காட்மதராக உங்களுடைய மகள் இருப்பதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்."
"சரி... ஞானஸ்தானம் எப்போது?" வியாபாரி கேட்டார்.
"நாளைக்குக் காலையில்."
"நல்லது... நிம்மதியாகச் செல்லுங்கள்... நாளைக்குக் காலையில் உங்களுடைய நிகழ்ச்சியில் அவள் உங்களுடன் இருப்பாள்."
மறுநாள் அந்த காட்மதர் வந்தாள். காட்ஃபாதரும்... குழந்தை ஞானஸ்தானம் செய்து வைக்கப்பட்டான். அந்த நிகழ்ச்சி முடிந்தது தான் தாமதம்- காட்ஃபாதர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அவர் யார் என்று யாருக்குமே தெரியவில்லை. அதற்குப் பிறகு அவரை யாரும் பார்க்கவும் இல்லை.
2
அவனுடைய பெற்றோர் மகிழ்ச்சியடையும் அளவுக்கு பையன் வளர்ந்தான். அவன் பலசாலியாக இருந்தான். வேலை செய்வதற்குத் தயாராக இருந்தான். புத்திசாலித்தனம் கொண்டவனாக இருந்தான். பணிவுடையவனாக இருந்தான். அவனுக்கு பத்து வயது நடக்கும் போது, அவனுடைய பெற்றோர் அவனை எழுதுவதற்கும் படிப்பதற்கும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். மற்றவர்கள் ஐந்து வருடங்களில் கற்றுக் கொள்வதை அவன் ஒரே வருடத்தில் கற்றான். வெகுசீக்கிரமே அவனுக்கு கற்றுத் தருவதற்கு அவர்களுக்கு எதுவும் இல்லை என்ற சூழ்நிலை உண்டானது.
ஈஸ்டர் பண்டிகை வந்தது. சிறுவன் தன்னுடைய காட்மதருக்கு தன்னுடைய ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைக் கூறுவதற்காகச் சென்றான்.
"அப்பா... அம்மா..." தன் வீட்டுக்குத் திரும்பி வந்தபிறகு அவன் கேட்டான். "என்னுடைய காட்ஃபாதர் எங்கே இருக்கிறார்? என்னுடைய ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை அவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."
அதற்கு அவனுடைய தந்தை கூறினான்:
"உன்னுடைய காட்ஃபாதரைப் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாதடா, அன்பு மகனே. அதற்காக நாங்கள் எங்களுக்குள் அடிக்கடி வருத்தம் கொள்வோம். நீ ஞானஸ்தானம் பெற்ற நாளிலிருந்து நாங்கள் அவரைப் பார்த்ததே இல்லை. அவரைப் பற்றிய தகவல்கள் எதுவுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. அவர் எங்கே வாழ்கிறார் என்பததே எங்களுக்குத் தெரியாது. சொல்லப்போனால்- அவர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறாரா என்பதே எங்களுக்குத் தெரியாது."
பையன் தன் பெற்றோருக்கு முன்னால் தலையை குனிந்து கொண்டு நின்றிருந்தான்.
"அப்பா... அம்மா.." அவன் சொன்னான்:
"நான் போய் என் காட்ஃபாதரைக் கண்டுபிடிப்பதற்கு என்னை அனுமதியுங்கள். நான் அவரைக் கட்டயாம் கண்டுபிடித்து, என்னுடைய ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைக் கூற வேண்டும்."
அதைத் தொடர்ந்து அவனுடைய தந்தையும் தாயும் அவனைச் செல்வதற்கு அனுமதித்தார்கள். சிறுவன் தன்னுடைய காட்ஃபாதரைக் கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்டான்.
3
சிறுவன் வீட்டை விட்டுப் புறப்பட்டு சாலை வழியே நடந்து சென்றான். அவன் பல மணி நேரம் நடந்து சென்ற பிறகு, ஒரு வழிப்போக்கர் அவனைத் தடுத்து நிறுத்திக் கேட்டார்:
"சிறுவனே, இன்றைய நாள் உனக்கு நல்ல நாளாக இருக்கட்டும். நீ எங்கே போகிறாய்?"
அதற்கு பையன் பதில் சொன்னான்.
"நான் என் காட்மதரைப் பார்த்து ஈஸ்டர் வாழ்த்துகளைக் கூறினேன். வீட்டுக்குத் திரும்பி வந்து என் பெற்றோரிடம் என்னுடைய காட்ஃபாதர் எங்கே இருக்கிறார் என்று கேட்டேன். அவரையும் போய் பார்த்து ஈஸ்டர் வாழ்த்துகளைக் கூற வேண்டும் என்று நினைத்தேன். அவரைப் பற்றிய தகவல் எதுவுமே தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டார்கள். எனக்கு ஞானஸ்தானம் முடிந்தவுடனேயே அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார் என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அவரைப் பற்றிய எந்தவித தகவல்களும் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர் இப்போது உயிருடன் இருக்கிறாரா என்ற விஷயம் கூட தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள். ஆனால், நான் என்னுடைய காட்ஃபாதரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அவரைத் தேடி நான் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டேன்."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook