தெய்வ மகன் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6549
"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தானியக் கதிர்களை விட்டு நீங்கள் எல்லாரும் வெளியே வாருங்கள். அந்தப் பெண் தன்னுடைய கன்றுக்குட்டியை வெளியே வரும்படி அழைக்கட்டும்."
அவன் சொன்னபடி அந்த மனிதர்கள் செய்தார்கள். அந்தப் பெண் தானியக் கதிர்கள் வளர்ந்திருந்த வயலின் வரப்பில் நின்றுகொணடு கன்றுக்குட்டியை அழைத்தாள்: ப்ரவ்னி... வா..." அந்த கன்றுக்குட்டி தன் காதுகளை உயர்த்தி, சிறிது நேரம் கூர்ந்து கவனித்துவிட்டு, அந்தப் பெண்ணை நோக்கி தன்னுடைய விருப்பப்படி வந்தது. தன்னுடைய தலையை அது அந்தப் பெண்ணின் ஆடைகளின் மீது வைத்து மோதியது. சொல்லப் போனால் அது அவளை மோதித் தள்ளிக் கொண்டிருந்தது. அந்த மனிதர்கள் மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார்கள். அந்தப் பெண்ணும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். அந்தச் சிறிய கன்றுக்குட்டியும் சந்தோஷக் களிப்பில் மூழ்கியது.
தெய்வமகன் அங்கிருந்து கிளம்பினான். நடந்து செல்லும் போது அவன் தனக்குள் சிந்தித்தான்:
'பாவம், பாவத்தைப் பரவச் செய்கிறது என்ற உண்மையை இப்போது நான் தெரிந்து கொண்டேன். பெரும்பாலான மனிதர்கள் பாவச் செயல்களை விரட்ட விரட்ட, பாவச் செயல்கள் அதிகமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. பாவச் செயல்களை பாவச் செயல்களால் அழிக்க முடியாது என்று தோன்றுகிறது. அப்படியென்றால் எந்த வழியில்தான் அதை அழிப்பது? எனக்குத் தெரியவில்லை. கன்றுக்குட்டி தன்னுடைய எஜமானிக்கு அடி பணிந்தது. எல்லா விஷயங்களும் நல்ல முறையில் நடந்து முடிந்து விட்டன. அதே நேரத்தில், அந்தக் கன்றுக்குட்டி அவள் கூறியபடி நடக்காமல் போயிருந்தால், அதை எப்படி நாம் அந்த தானியக் கதிர்கள் வளர்ந்திருக்கும் வயலுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்திருக்க முடியும்?'
தெய்வமகன் மீண்டும் சிந்தனையில் மூழ்கினான். ஆனால், அவனால் ஒரு இறுதி முடிவுக்கு வரவே முடியவில்லை. அவன் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
8
அவன் ஒரு கிராமத்தை அடையும் வரையில் நடந்து கொண்டேயிருந்தான். கிராமத்தின் எல்லையை அடைந்ததும், அங்கிருந்த ஒரு வீட்டில் அன்றிரவு அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டான். வீட்டின் சொந்தக்காரி மட்டும் தனியாக அங்கு இருந்தாள். அவள் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவள் அவனை உள்ளே வரும்படி சொன்னாள். தெய்வமகன் வீட்டுக்குள் நுழைந்து, செங்கற்களால் கட்டப்பட்ட அடுப்புக்கு அருகில் உட்கார்ந்து, அந்தப் பெண் என்ன செய்கிறாள் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அந்த அறையைச் சுத்தம் செய்துவிட்டு, மேஜையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அவள் மேஜையை ஒரு அழுக்குத் துணியால் சுத்தம் செய்ய முயல்வதை அவன் பார்த்தான். அவள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் வரை சுத்தம் செய்தாள். ஆனால், அவளால் அதைச் சுத்தமாக்கவே முடியவில்லை. அழுக்குத் துணி இங்குமங்குமாக அழுக்குக் கறையைப் படியச் செய்திருந்தது. அவள் அதை மீண்டும் துணியால் துடைத்தாள். முதலில் இருந்த கறை மறைந்துவிட்டது. ஆனால், அதற்கு பதிலாக வேறு கறைகள் வந்து சேர்ந்தன. பிறகு அவள் மேஜையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை துடைத்தாள். மீண்டும் அதேதான் நடந்தது. அழுக்குத் துணி மேஜையை நாசம் செய்தது. ஒரு கறையைத் துடைத்து நீக்கினால், அந்த இடத்தில் இன்னொரு கறை வந்து சேர்ந்து கொண்டிருந்தது-. தெய்வமகன் அந்தக் காட்சியையே சிறிது நேரம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் சொன்னான்:
"அம்மா, நீங்க என்ன செய்றங்க?"
"விடுமுறைக்காக நான் சுத்தம் செய்து கொண்டிருந்ததை நீ பார்க்கவில்லையா? இந்த மேஜையை மட்டும்தான் என்னால் சரியாக சுத்தம் செய்ய முடியவில்லை. அது சுத்தமாகவே ஆக மாட்டேன் என்கிறது. நானே மிகவும் களைத்துப் போய்விட்டேன்.
"நீங்க உங்களுடைய துணியை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்." தெய்வமகன் சொன்னான்: "அந்தத் துணியைக் கொண்டு மேஜையைத் துடைப்பதற்கு முன்னால்..."
அவன் கூறியபடி அந்தப் பெண் செய்தாள். மேஜை சுத்தமாகிவிட்டது.
"எனக்கு இந்த விஷயத்தைக் கூறியதற்கு நன்றி". அவள் சொன்னாள்.
காலையில் அவன் அந்தப் பெண்ணிடம் விடை பெற்றுவிட்டு தன்னுடைய வழியில் பயணத்தைத் தொடர்ந்தான். நீண்ட தூரம் நடந்து சென்ற பிறகு, ஒரு காட்டின் எல்லைப் பகுதியை அடைந்து விட்டிருந்தான். அங்கு சில விவசாயிகள் வளைந்த மரத்துண்டுகளைக் கொண்டு சக்கரத்தின் ஆரங்களை அமைத்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். விவசாயிகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்களே தவிர, அவர்களால் மரத் துண்டை வளைக்க முடியவில்லை என்பதை அவன் அருகில் வந்து பார்த்து தெரிந்து கொண்டான்.
அவன் அங்கு நின்று பார்த்தபோது, மரத்துண்டு இணைக்கப்பட்டிருந்த மையப்பகுதி நிலையாக ஒரு இடத்தில் இருக்குமாறு பொருத்தப்படவில்லை என்பதை அவன் கவனித்தான். அதனால் அந்த மனிதர்கள் சுற்றி வந்தபோது, அந்த மரத்துண்டும் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது தெய்வமகன் சொன்னான்:
"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், நண்பர்களே?"
"நீ நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்க்கவில்லையா? நாங்கள் சக்கரத்திற்கான ஆரங்களைத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இரண்டு முறை முயற்சி பண்ணிப் பார்த்துவிட்டோம். நாங்களே மிகவும் களைத்துப் போய்விட்டோம். ஆனால், மரம் வளையவே இல்லை."
"நீங்கள் மையப்பகுதியை நிலையாக ஒரு இடத்தில் பொருத்த வேண்டும், நண்பர்களே!" தெய்வமகன் சொன்னான்: "இல்லாவிட்டால் நீங்கள் சுற்றும்போது அதுவும் சுற்றும்."
விவசாயிகள் அவனுடைய அறிவுரையைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் அந்த மையப் பகுதியை சரியாகப் பொருத்த, வேலை நல்ல முறையில் முடிந்தது-.
தெய்வமகன் அன்று இரவை அவர்களுடன் கழித்துவிட்டு, தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் இரவும் பகலும் நடந்து, பொழுது புலர்வதற்கு சற்று முன்பு இரவில் தங்கியிருந்த சில இடையர்களைப் பார்த்தான். அவன் அவர்களுடன் சேர்ந்து படுத்துக் கொண்டான். எல்லா கால்நடைகளையும் ஒரு இடத்தில் இருக்கும்படி செய்துவிட்டு, அவர்கள் ஒரு நெருப்பை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர்கள் காய்ந்த சுள்ளிகளை எடுத்து வைத்து, அவற்றின் மீது நெருப்பை வைத்தார்கள். அந்தச் சுள்ளிகள் பற்றி எரிய ஆரம்பித்தவுடன், அவர்கள் ஈரமான விறகை நுழைத்து அதை அணையச் செய்து கொண்டிருந்தார்கள். ஈரமான விறகு ஓசை உண்டாக்கி நெருப்பு குறைந்து, படிப்படியாக அணைந்து கொண்டிருந்தது. பிறகு அந்த இடையர்கள் மேலும் கொஞ்சம் காய்ந்த விறகுகளைக் கொண்டு வந்து நெருப்பைப் பற்ற வைத்தார்கள். மீண்டும் ஈரமான விறகை உள்ளே வைத்தவுடன், திரும்பவும் நெருப்பு அணைந்துவிட்டது.