கோழி - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6635
அவன் அங்கு வந்தபோது, தேவதத்தன் சுய உணர்விற்கு வந்திருந்தான். ஆனால், அவன் அழுது கொண்டிருந்தான்.
“பரவாயில்ல...”- அவனுடைய அண்ணி தேவதத்தனுக்கு ஆறுதல் சொன்னாள். அவள் அவனைச் சோதித்தப் பார்த்தாள்.
கடுமையான காய்ச்சல் இருந்தது: “நாம வீட்டுக்குப் போவோம்.”
ரிக்ஷா வந்தது. நோயால் பாதிக்கப்பட்ட தேவதத்தன் ரிக்ஷாவிலும் மற்றவர்கள் பேருந்திலுமாக வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.
உமாதேவி தேவதத்தனுக்கு மாத்திரைகள் தந்தாள். பால் கலக்காத காபி கொடுத்தாள்: “படுத்துக்கோ, எதையும் நினைக்காம படு...”
“எப்படி அண்ணி நினைக்காம இருக்க முடியும்?”
“நினைச்சா தலைவலி அதிகமாகும். நடந்தது நடந்துருச்சு. நம்மோட கெட்ட காலம். கிரக நிலை நல்லாகுறப்போ எல்லாம் சரியா நடக்கும்”- உமாதேவி அவனைத் தேற்றினாள்.
“நான் எப்படி அண்ணி இதைத் தாங்குவேன்?”- தேவதத்தன் ஒரு குழந்தையைப் போல அழுதான்.
உண்ணி சங்கரன் ஒரு சந்தேகம் கேட்டான்:
“இதுவும் கோழிக்காய்ச்சலா அண்ணி?”
“அதுல என்ன சந்தேகம்? அதேதான்...”- அண்ணி உறுதியான குரலில் அந்தச் சந்தேகத்தை நீக்கினாள்.
சவ்வரிசி கஞ்சியும் பால் கலக்காத காபியும் மாத்திரைகளுமாக ஆர்யன் திருமேனியின் வாரிசு காய்ச்சலில் படுத்துக்கிடந்தான். இடையில் அவ்வப்போது தூங்கவும் செய்தான். தூக்கத்தில் கண்டதையெல்லாம் உளறினான். தூக்கம் கலைந்து எழுந்தபோது வாய்விட்டு அழுதான்.
இரண்டு நாட்களில் காய்ச்சல் நீங்கியது. ஆனால், அழுகை நிற்கவில்லை. உடல் மிகவும் சோர்வடைந்து போயிருந்தது.
உமாதேவி அந்தர்ஜனம் தன் கணவனிடம் சொன்னாள்:
“இனி சரியாயிடும்.”
எனினும், அவள் கவலைப்பட்டாள். கோழிகளுக்காக – கோழிகளின் தெய்வமும் குருவும் நண்பனுமான மிகுந்த அறிவாளியான அய்க்கர மடத்தின் தேவதத்தனுக்காக.
இரவில் சாப்பிட்டு முடித்து, உமாதேவி அந்தர்ஜனம் வெளியில் இருந்த திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். நகரம் உறங்கிக் கொண்டிருந்தது. வீடுகளில் வெளிச்சமில்லை. தெருக்களில் இங்குமங்குமாகப் பாதையோர விளக்குகள் வெளிச்சம் உண்டாக்கிக் கொண்டிருந்தன. வானம் ஆழ்ந்த கவலையில் இருப்பதைப் போல கறுத்துக் காணப்பட்டது. இரவு ஒரு பேய் பிடித்த நாயைப் போல வாலைத் தொங்கவிட்டுக்கொண்டு, வாயிலிருந்து விஷநீரை வழிய விட்டுக் கொண்டு, மூச்சிரைக்க நடந்து கொண்டிருந்தது.
பக்கத்து அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த தேவதத்தனின் தேம்பல்களைக் கவனித்துக் கொண்டு உமாதேவி உட்கார்ந்திருந்தாள்.
நாராயணன் படித்துக் கொண்டிருந்தான். அவன் தான் படிப்பதை நிறுத்தினான்.
“நீ படுக்கலையா?”
“எனக்குத் தூக்கம் வரல.”
“நேரம் அதிகம் ஆயிடுச்சே!”
“பரவாயில்லை... படுங்க. நான் வர்றேன்.”
நாராயணன் படுத்தான்.
உமாதேவி எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்து அறையில் தேம்பல் சத்தம் நின்றது. தேவதத்தன் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் என்பது தெரிந்து உமாதேவி எழுந்தாள். படுக்கையறையை நோக்கி நடந்தாள்.
அவளுடைய கணவன் உறங்கிக் கொண்டிருந்தான். அவள் அவனை எழுப்பவில்லை. விளக்கை அணைத்துவிட்டு படுத்தாள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை.
என்ன ஒரு கெட்ட காலம்! அவள் நினைத்துப் பார்த்தாள். இப்படியொரு சாபமா? இது யாருடைய குற்றம்? தான் இங்கு வந்து சேர்ந்ததுதான் காரணமா? அவள் தன்னைத்தானே குற்றப்படுத்திக் கொண்டாள். தான் ஒரு பாவி. தன்னுடைய பாவங்களுக்கான தண்டனைதான் இது.
எத்தனை கோழிகள் இறந்துபோய்விட்டன? தேவதத்தன் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிறான். நோய் நீங்கி படுக்கையை விட்டு எழுந்த பிறகுகூட அவன், அவனாக இருக்கப்போவதில்லை. அந்த அளவிற்குப் பாவம் அவன் ஒடிந்து போய் இருக்கிறான்.
அவள் கண்களை மூடி தூங்க முயற்சித்தாள். ஆனால், முடியவில்லை. மூடப்பட்ட கண்களுக்கு முன்னால் கோழிகளின் ஊர்வலம். கோழிகளுக்கு மத்தியில் தேவதத்தனும் இருக்கிறான். கோழிகள் ஒவ்வொன்றாகச் செத்து விழுகின்றன.
அந்தக் காட்சியைப் பார்க்காமல் இருப்பதற்காக உமாதேவி தன் கண்களைத் திறந்தாள். அறை முழுவதும் நல்ல இருட்டு. இருட்டில் நட்சத்திரங்களைப் போல கோழிகளின் கலங்கிய கண்கள். அவள் பயந்து நடுங்கிவிட்டாள். தன் கணவனுடன் சேர்ந்து படுத்துக் கொண்டாள். அவனை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
நாராயணன் மெதுவாக முனகினான். திரும்பிப் படுத்தான். எழவில்லை. உமாதேவி தன் கணவனின் மார்பின்மீது தன் முகத்தை வைத்துக் கொண்டாள். திடீரென்று அவள் நடுங்கி எழுந்தாள்.
‘கொக்கரக்கோ... கோ... கோ...’
அருகில் எங்கோ கோழி கூவும் சத்தம். அது எங்கிருந்து வருகிறது? வெளியே தெருவிலிருந்தா? வராந்தாவிலிருந்தா? இல்லாவிட்டால் அறைக்குள்ளிருந்தா? எதுவுமே தெரியவில்லை. கோழிகள் தன்னிடம் பழிக்குப் பழி வாங்க வந்திருக்கின்றவோ?
நிமிடக்கணக்கில் அவள் கவனமாகக் கேட்டவாறு உட்கார்ந்திருந்தாள். ஒரு அசைவும் இல்லை. ஒரு சத்தமும் இல்லை. கோழியின் கொக்கரிப்பும் இல்லை. சிறகடிப்பும் இல்லை.
தெய்வங்களை மனதில் நினைத்துக் கொண்டே உமாதேவி அந்தர்ஜனம் படுத்தாள். அப்போது மீண்டும் கேட்டது: ‘கொக்கரக்கோ... கோ... கோ...’
பகவானே! இது என்ன? சத்தம் மேலும் சற்று உரத்துக் கேட்டது. அப்போது இந்த வீட்டிலிருந்துதான் அந்தச் சத்தம்... இந்த அறையின் இருட்டில் மிகப் பெரிய அளவில் இருக்கும் ஒரு கோழி ஒளிந்திருக்கிறதோ?
கனவாக இருக்குமோ? கண் விழித்து இருக்கும்போது கனவு காண முடியுமா? கனவு கேட்குமா? இப்போது என்ன செய்வது?
எழுந்து வெளியே போய் பார்த்தால் என்ன? திடீரென்று அவளுக்குப் பயம் தோன்றியது. ஒரு காட்டு மிருகத்தைப் பார்த்து பயப்படுவதைப் போல அவள் கோழிக்குப் பயந்தாள். விளக்கைப் போடலாமா? ஆனால், விளக்கைப் போட எழுந்திருக்க வேண்டும்! எமன் கட்டிலுக்குக் கீழேயே உட்கார்ந்திருந்தால்...?
இப்படி பல விஷயங்களையும் நினைத்துக் கொண்டு அவள் படுத்திருந்தபோது, மேலும் சற்று உரத்த குரலில் மீண்டும் கேட்டது:
‘கொக்கரக்கோ... கோ... கோ...’
உமாதேவி அதற்குப் பிறகு எதையும் யோசிக்கவில்லை. அவள் தன் கணவனைக் குலுக்கி எழுப்பினாள்.
“ஏங்க... கொஞ்சம் எழுந்திரிங்க...”
“என்ன? என்ன?”- திடுக்கிட்டு எழுந்த பதைபதைப்புடன் நாராயணன் கேட்டான். தன் மனைவி நடுங்கிக் கொண்டிருப்பதை அவன் அவளைத் தொட்டு தெரிந்து கொண்டான். அவன் எழுந்து விளக்கைப் போட்டான்.
தன் மனைவியைப் பார்த்து அவன் நடுங்கிவிட்டான். அவளுடைய கண்கள் சிவந்து வெறித்துக் கொண்டிருந்தன. கூர்மையான மூக்கு மேலும் சற்று கூர்மையாக இருந்தது. உடம்பு முழுக்க வியர்வை வழிந்து கொண்டிருந்தது. திருவிழாக்களில் வெளிச்சப்பாடு துள்ளுவதைப்போல அவள் உட்கார்ந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.
“உமா...”- அவன் அழைத்தான்.