மழை நாளில் குடையானாய்! - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6834
2
'சப்வே ரெஸ்டாரண்ட்! வெளிநாட்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் அமைந்திருந்த அந்த 'சப்-வே ரெஸ்டாரண்ட், மிக மிக அழகாகவும், நேர்த்தியாகவும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அதன் உள் அலங்காரம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சுத்தத்திற்கு முதலிடம் கொடுத்து பராமரிக்கப்பட்டு வந்த அந்த உணவகத்திற்கு உற்சாகமாய் வந்த வண்ணமிருந்தனர் இளைஞர் கூட்டம். உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கென்று பிரத்தியேகமாய் தயாரிக்கப்படும் அதிக கலோரி இல்லாத உணவுகளை நாடுபவர்களுக்கு வரப்பிரசாதம் அந்த 'சப்-வே’. வெளிநாட்டினர்களும் மிகவும் விரும்பி வருவதுண்டு. அவர்கள் கண்டிப்பாக பின்பற்றும் சுத்தம், சுகாதாரம் இவற்றை மனதில் கொண்டு பரிமாறும் நபர்களுக்கு 'கையுறை அணிந்துதான் பரிமாற வேண்டும்’ என்று கட்டளை இடப்பட்டிருந்தது. அவர்களும் அதை நேர்மையாக கடைப்பிடித்து வந்தனர். இதன் காரணமாகவும், அங்கே வழங்கப்படும் உணவு வகைகளின் தரம் காரணமாகவும், அங்கு வந்து உணவு அருந்தும் கூட்டம் பெருகியது. இளைய தலைமுறையினரின் மிக விருப்பத்திற்குரிய 'சப்-வே’ முதியோருக்கும், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு உள்ளவர்களுக்கும் ஏற்ற உணவு வகைகளை அதன் சுவை குறையாமல் வழங்கி வருவதை அதன் சிறப்பம்சமாகக் கொண்டிருந்தது.
அர்ச்சனா, தன் சிநேகிதிகளுடன் 'சப்-வே’ ரெஸ்டாரண்ட்டில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். அந்த அரட்டை கூட பயனுள்ள விஷயம் பற்றியதாக இருந்தது.
"அர்ச்சனா, இந்த மாசம் நம்ம க்ரூப்ல நாலு பேருக்கு பர்த்டே வருது. நாலு பேரோட பிறந்தநாள் செலவுக்குரிய தொகையில சிவானந்தா ஆசிரமம் அல்லது 'விஸ்ராந்தி போய் அங்கே இருக்கறவங்களுக்கு என்ன உதவி வேணும்னு கேட்டு செஞ்சுடலாமா?" ரமா கேட்டாள்.
"ஓ.கே. என்னிக்குப் போறதுன்னு முடிவு பண்ணுங்க. நான் அப்பாகிட்ட சொல்லி கார் எடுத்திட்டு வந்துடறேன். பணமெல்லாம் ஷேர் பண்ணிக்கலாம்" சொல்லி முடித்த அர்ச்சனா, எழுந்தாள். டாய்லெட் போகும் வழிக்குச் சென்றாள். அங்கே அவளை வழி மறித்தான் ப்ரவீன்.
"ஹாய் ப்ரவீன். இங்கேயா இருக்க? உன்னைப் பார்க்கவே இல்லயே?"
"நீங்க எல்லாரும் இந்த ரெஸ்டாரண்டுக்கு உள்ளே நுழையறதை பார்த்தேன். உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்... அதான் வந்தேன்...."
"என்ன இவ்வளவு தயக்கம்? சொல்லு ப்ரவீன்..."
"அது... வந்து..." திடீரென தன் பாண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு கவரை எடுத்தான். அர்ச்சனாவிடம் கொடுத்தான்.
"என்ன இது?"
"லெட்டர். உனக்குத்தான் அர்ச்சனா..."
ஆச்சர்யப்பட்ட அர்ச்சனா, கடிதத்தை வாங்கினாள். உடனே படித்தாள்.
அது ப்ரவீன், அர்ச்சனாவிற்கு எழுதிய காதல் கடிதம்.
படித்து முடித்த அர்ச்சனா முதலில் கோபப்பட்டாள். சில விநாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டாள். ப்ரவீனை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்தாள்.
"ப்ரவீன்... இந்த வயசுல ஏற்படற பருவக் கோளாறுகள்ல ஒண்ணுதான் உன்னோட இந்த லெட்டர். நீ என் அண்ணனோட ஃப்ரெண்டு. நானும் ஃப்ரெண்ட்லியாத்தான் பழகறேன். உங்க வீட்ல உன்னை நம்பித்தான் மூணு பேர் காத்துக்கிட்டிருக்காங்க. ஐ மீன்... உன் படிப்பையும், அதனால கிடைக்கப்போற வேலையையும், அதன்மூலம் நீ சம்பாதிக்கப் போற வருமானத்தையும் எதிர்பார்த்து உன் அம்மா, அப்பா, தங்கச்சி மூணு பேரும் காத்திருக்காங்க. நீ நிறைய படிக்கணும். முன்னேறணும். உயர்ந்த உத்யோகத்துல சேரணும். இப்போதைக்கு உன் குடும்பத்தை பத்தி மட்டுமே உன் ஞாபகத்துல இருக்கணும். வேற நினைவுகள் எது தோணினாலும் உடனே அழிச்சுடணும். உன் படிப்பு செலவுக்காக உன் அம்மா, அப்பா செய்ற தியாகங்கள் பத்தி நான் சொல்லித்தான் நீ தெரிஞ்சுக்கணுமா? ஐ அம் ஸாரி. நான் இப்பிடி பேசறேன்னு மனசு சங்கடப்படாதே. நான் சொல்றதெல்லாம் வாழ்க்கையோட யதார்த்தங்கள். நிஜங்கள். நிஜங்களோட நம்மை இணைச்சுக்கிட்டாதான் எதிர்காலம் ஒளிமயமா இருக்கும். நிழலா தெரியற பிம்பங்கள் மாயையை உண்டாக்கும். நீ உன் சொந்தக்கால்ல நின்னு உன் தங்கச்சிக்கு பந்தக்கால் போட்டு கல்யாணம் பண்ணனும். இந்த வயசுலயும் உழைச்சு ஓடா தேயற உன் அம்மா, அப்பாவோட கஷ்டத்தை மறந்துடாத. உன்னைப் பெத்தவங்களை உட்கார வச்சு சுகமா பார்த்துக்க, நீ இன்னும் நிறைய உழைக்கணும். சரியா?..."
பிரமித்துப் போய் நின்றான் ப்ரவீன். 'தன்னை விட சிறிய பெண், எத்தனை அர்த்தத்தோடு பேசறா? வசதியான வீட்டுப் பொண்ணா இருந்தாலும் வாழ்க்கையின் கஷ்டங்களைப் புரிஞ்சு வச்சுக்கிட்டு, தெளிவான சிந்தனையில் இருக்கா. இவ சொல்ற மாதிரி நான், இனி படிப்பு, உழைப்பு, அதன் மூலம் உயர்வுன்னு ஒரே மூச்சா இருக்கப் போறேன்...’
"என்ன ப்ரவீன்? நான் கேக்கறேன். என்ன யோசிக்கற?"
"அர்ச்சனா... எனக்கு புத்தி வந்துருச்சு. உன்னோட வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் இல்ல. வேதங்கள். ஐ ஆம் ஸாரி. இனிமே நீ சொன்ன மாதிரி என்னோட குடும்பத்தின் நலம்தான் என் லட்சியம். இது சத்தியம்" அர்ச்சனாவிடமிருந்த கடிதத்தை வாங்கிக் கிழித்தான்.
"தாங்க்ஸ் ப்ரவீன். நீ நல்லா வரணும். நான் உனக்கு எப்பவுமே ஃப்ரெண்டுதான்."
"தாங்க்ஸ் அர்ச்சனா. நான் கிளம்பறேன்" ப்ரவீன் வெளியேறினான்.
அர்ச்சனாவைத் தேடி ரமா வந்தாள்.
"டாய்லெட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு என்னடி இவ்வளவு நேரம்? வா போலாம்."
சிநேகிதிகள் புடை சூழ அர்ச்சனா கிளம்பினாள்.
அன்று நடந்ததை இன்று, தன் கணவன் தியாகுவிடம் விளக்கமாக எடுத்துக் கூறினாள் அர்ச்சனா.
"நம்ப முடியவில்லையே. உருக உருக காதல் கடிதம் குடுத்தானாம். அதைப் படிச்சுட்டு அவனுக்குப் பாடம் நடத்தினியாம். அவனும் அதைக் கேட்டுத் திருந்தினானாம். நீ என்ன பெரிய சீர்திருத்தவாதியா? ஒரு பத்து நிமிஷ போதனை கேட்டு அவன் மனசு மாறிட்டான்னு சொல்றது நம்பற மாதிரி இல்லையே..."
'பேசுங்கன்னு ஆசையா கேட்டா... ரொம்ப நல்லாவே பேசறீங்க. தாலி கட்டின மனைவியை நம்பலைன்னா... இவரெல்லாம் என்ன மனுஷன்’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.
"நீங்க நம்பினாலும், நம்பாட்டாலும் நடந்தது அத்தனையும் உண்மை..."
"அவன்... அந்த ப்ரவீன் நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தானா?"
"இல்லை. அவன் வரலை."
"சரி... சரி... நான் குளிக்கறதுக்கு டிரஸ் எல்லாம் எடுத்து வை. குளிச்சுட்டு வர்றேன்" என்றவன், அருகிலிருந்த அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்தான். தன் தாபத்தீயையும் அணைத்துக் கொண்டான். உடனே எழுந்து குளியலறைக்குச் சென்றான்.