புனிதப் பயணம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
எந்தக் காரணத்தால் அவர் பின்தங்கிவிட்டார்; ஏன் ஜெருசலேமிற்குள் செல்லாமல் அவர் திரும்பி வந்தார் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அவர்கள் மிகவும் விருப்பத்துடன் இருந்தார்கள். ஆனால், எலிஷா அவர்களிடம் எதுவும் கூறவில்லை.
"நான் ஜெருசலேமிற்குப் போறதுல கடவுளுக்கு விருப்பமில்லைன்னு நினைக்கிறேன்"- அவர் சொன்னார்:"நான் என் கையில இருந்த பணத்தை வழியில இழந்துட்டேன். என் நண்பர்கூட என்னால போக முடியாமப் போச்சு. என்னை மன்னிச்சிடுங்க... எல்லாம் கடவுளோட விருப்பம்!"
எலிஷா மீதி இருந்த பணத்தை தன் மனைவியின் கைகளில் தந்தார். பிறகு வீட்டு விஷயங்களைப் பற்றி அவர் விசாரித்தார். எல்லா விஷயங்களும் ஒழுங்காக நடந்திருப்பதைத் தெரிந்து கொண்டார். எல்லா வேலைகளும் முறைப்படி முடிந்திருப்பதையும், ஒன்றுகூட முடியாமல் இருக்கவில்லை என்பதையும், எல்லோரும் மிகவும் மன அமைதியுடனும் ஒற்றுமையாகவும் இருப்பதையும் அவரால் தெரிந்து கொள்ள முடிந்தது.
எலிஷா வீடு திரும்பியிருக்கும் விஷயத்தை அன்றே எஃபிமின் வீட்டைச் சேர்ந்தவர்கள் அறிந்தார்கள். அவர்கள் எஃபிமைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்வதற்காக வந்தார்கள். அவர்களுக்கும் அதே பதில்களைச் சொன்னார் எலிஷா.
"எஃபிம் கிமவும் வேகமாக நடக்கக்கூடிய மனிதர். செயின்ட் பீட்டரோட நாளுக்கு மூணு நாட்கள் முன்னாடியே நாங்க பிரிஞ்சிட்டோம். அவரைத் திரும்பவும் எப்படியாவது பிரிஞ்சிடணும்னு நினைச்சேன்.அதுக்குள்ள எவ்வளவோ விஷயங்கள் நடந்திருச்சு. நான் என் கையில இருந்த பணத்தை இழந்துட்டேன். அதுக்குமேல பயணம் செய்றதுல அர்த்தமே இல்ல... அதனால நான் திரும்பி வந்துட்டேன்..."
அறிவாளியான ஒரு மனிதன் இந்த அளவிற்கு முட்டாள்தனமாக நடந்திருப்பாரா என்பதை நினைத்துப் பார்த்த கிராமத்து மக்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டார்கள். வீட்டிலிருந்து கிளம்பிய மனிதர் சேர வேண்டிய இடத்திற்குப் போய் ஒழுங்காகச் சேராமல் போகும் வழியில் கையிலிருந்த பணத்தை இழந்துவிட்டு திரும்பி வந்திருப்பதைப் பார்த்து அவர்கள் உண்மையிலேயே ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். அவரைப் பார்த்து சிறிதுநேரம் அவர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்களே தவிர, அதற்குப் பிறகு அந்த விஷயத்தையே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். சொல்லப்போனால் எலிஷாகூட அந்த விஷயத்தை முற்றிலும் மறந்தே போனார். அவர் மீண்டும் தன் வீட்டில் உட்கார்ந்து தான் செய்யவேண்டிய வேலைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். தன் மகனின் உதவியுடன் அவர் குளிர் காலத்தில் அடுப்பு எரிப்பதற்கான விறகுகளை வெட்டி சேகரித்தார். அவரும் மற்ற பெண்களும் சேர்ந்து கதிர்களை அடித்து அதிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுத்தார்கள். அவர் வேலிகளை ஒழுங்குபடுத்திக் கட்டினார். தேனீக்களைச் சரியாக மூடிவைத்து, தான் விற்ற தேனீக் கூடுகளை முறைப்படி தேனீக்களுடன் அவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு தேனீக்கூட்டிலும் எவ்வளவு தேனீக்கள் இருக்கின்றன என்பதை அவருடைய மனைவி அவரிடம் கூறவில்லை.மாறாக,எந்தக் கூட்டில் தேனீக்கள் அதிகமாக இருக்கின்றன, எந்தக் கூட்டில் குறைவாக இருக்கின்றன என்பதை எலிஷாவே தெரிந்து கொண்டார். சொல்லப்போனால் பத்து தேனீக்கூடுகளுக்குப் பதிலாக, அவர் பதினேழு தேனீக்கூடுகளை பக்கத்து வீட்டுக்காரரிடம் தந்தார். குளிர்காலத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் முடிந்தவுடன் எலிஷா தன் மகனை வேலை ஏதாவது தேடும்படி அனுப்பி வைத்தார். அவர் காலணிகள் செய்வதிலும் தேனீக்கூடுகளுக்குத் தேவையான மரக்கட்டைகளைக் கொண்டு வருவதிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
8
எலிஷா தன்னைவிட்டுப் பிரிந்து போய் நோய்வாய்ப்பட்ட மனிதர்களுடன் குடிசையில் இருந்த அந்த முழுநாளும் எஃபிம் அவருக்காகக் காத்திருந்தார். சிறிதுதூரம் மட்டுமே நடந்து சென்ற அவர் ஓரிடத்தில் உட்கார்ந்து எலிஷாவிற்காகக் காத்திருந்தார். காத்துக் கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு ஒரு சிறு தூக்கத்தில் மூழ்கினார். பிறகு தூக்கம் கலைந்து எழுந்தார். அதற்குப் பிறகும் எலிஷா வருவார் என்று காத்திருந்தார். ஆனால், அவருடைய நண்பர் வரவேயில்லை. தன் கண்கள் வலிக்கும்வரை அவர் எலிஷா வருகிறாரா என்று பார்த்துக் கொண்டேயிருந்தார். சூரியன் மரங்களுக்குப் பின்னால் முழுமையாக மறைந்து விட்டிருந்தது. அப்போதும் எலிஷா வருவதாகத் தெரியவில்லை.
'ஒருவேளை அவர் என்னைக் கடந்து போயிருப்பாரோ?'-எஃபிம் நினைத்தார்: 'இல்லாட்டி வேறு யாராவது தங்களோட வாகனத்துல அவருக்கு இடம் தந்திருந்தா, அதுல உட்கார்ந்து பயணம் செய்து என்னைத் தாண்டிப் போனாலும் போயிருக்கலாம். நான் சிறு தூக்கத்துல இருந்தப்போ அது நடந்திருக்கலாம். அவர் என்னை பார்க்காமல் போயிருக்கலாம். அவர் என்னை எப்படி பார்க்காம இருந்தார்? தூரத்துல இருந்து பார்த்தாலே நான் இங்கே படுத்திருந்தது நல்லா தெரியுமே! நான் வந்த வழியே திரும்பிப் போனா என்ன? அப்படி நான் ஒருவேளை செஞ்சு அவர் என்னை விட முன்னோக்கி ரொம்ப தூரம் கடந்து போயிருந்தார்னா, நான் அவரைச் சந்திக்க முடியாமலே போயிடுமே! அப்போ நிலைமை ரொம்பவும் மோசமாயிடுமே! நான் முன்னோக்கி நடக்குறதுதான் சரியானது. ராத்திரி தங்குறதா இருக்குற இடத்துல நிச்சயமா நாங்க ரெண்டு பேரும் சந்திச்சுத்தான் ஆகணும்.'
அவர் ஒரு கிராமத்தை அடைந்தார். அங்கிருந்த காவலாளியிடம் எலிஷாவின் அடையாளத்தை விவரித்து, அப்படியொரு மனிதர் அங்கு வந்தால், அவரை நான் ஓய்வெடுக்கும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரும்படி சொன்னார்.ஆனால், இரவுவரை எலிஷா அங்கு வரவில்லை. எஃபிம் நடையைத் தொடர்ந்தார். வழியில் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் வயதான வழுக்கை விழுந்த, குள்ளமான அந்த மனிதரை அவர்கள் பார்த்தார்களா என்று விசாரித்தார். அப்படியொரு வழிப்போக்கரை யாரும் பார்க்கவே இல்லை என்று சொன்னார்கள். எஃபிமிற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.அவர் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவர் தனக்குள் நினைத்தார்.
'நிச்சயமா நாங்க ரெண்டு பேரும் ஒடிஸாவுல சந்திச்சுத்தான் ஆகணும். இல்லாட்டி கப்பல்ல ஏர்றப்பவாவது சந்திச்சுத்தான் ஆகணும்'அதற்குப் பிறகு அவர் இந்த விஷயத்தைப் பற்றி பெரிதாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை.
போகும் வழியில் அவர் ஒரு பக்தரைப் பார்த்தார். அவர் ஒரு நீளமான அங்கியை அணிந்திருந்தார். முடியை நீளமாக விட்டிருந்தார். பாதிரியார்கள் அணிவதைப் போன்ற ஒரு தொப்பியைத் தலையில் அணிந்திருந்தார். அந்த பக்தர் ஏற்கனவே அதாஸ் மலைக்குப் போய்விட்டு வந்தவர். இப்போது ஜெருசலேமிற்கு இரண்டாவது முறையாக போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் ஒரு இரவில் ஒரே இடத்தில் தங்கினார்கள். அப்போது தான் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்தே பணத்தைத் தொடர்ந்தார்கள்.
அவர்கள் இருவரும் மிகவும் பத்திரமாக ஒடிஸா போய்ச் சேர்ந்தார்கள். அங்கு கப்பலுக்காக மூன்று நாட்கள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பல்வேறு இடங்களிலுமிருந்து வந்திருந்த பக்தர்கள் அனைவரும் இப்படித்தான் காத்துக்கிடக்க வேண்டி வந்தது.