புனிதப் பயணம் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
9
எஃபிம் படுக்கும்பொழுது அவர் தனக்குள் கூறிக்கொண்டார்: 'இந்த மனிதர்கிட்டயிருந்து யாரும் எந்தப் பணத்தையும் திருடல. அவர் ஏதாவது பணம் வச்சிருந்தார்ன்றதை நான் நம்பத் தயாரா இல்ல. அவர் எந்த இடத்துலயும் பணம் தரல... என்னைத்தான் அவர் எல்லா இடங்கள்லேயும் பணம் கொடுக்க வச்சார். சொல்லப்போனா என்கிட்ட அவர் ஒரு ரூபிள் கடன் வாங்கினார்...'
இந்தச் சிந்தனை அவர் மனம் முழுக்கத் திரும்ப திரும்ப வலம் வந்து கொண்டேயிருந்தது. பிறகு 'ஒரு மனிதரைப் பற்றி முடிவு பண்றதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு? அப்படி நினைக்கிறதே ஒரு பாவச்செயல்தான். இதுக்குமேல அவரைப் பற்றி நான் நினைக்க மாட்டேன்' என்றெண்ணினார். ஆனால் அவர் அப்படி நினைத்தாரே தவிர, அவர் மனம் மீண்டும் அந்த மனிதரைச் சுற்றித்தான் வந்து கொண்டேயிருந்தது. அவர் பண விஷயத்தில் எவ்வளவு ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். அவர் தன்னுடைய பர்ஸை யாரோ திருடி விட்டார்கள் என்று சொன்னது எவ்வளவு பொருத்தமில்லாமல் அமைந்துவிட்டது என்பதையெல்லாம் அவர் மனம் திரும்பத்திரும்ப நினைத்துக் கொண்டே இருந்தது.
'அவர் கையில நிச்சயம் பணம் எதுவுமே இல்லவே இல்ல...'-எஃபிம் நினைத்தார்: 'எல்லாம் அவரோட கற்பனை.'
மாலைநேரம் வந்ததும் அவர்கள் எல்லோரும் எழுந்தார்கள். கடவுளின் சமாதி இருக்கும் புத்துயிர்ப்பு தேவாலயத்தில் நடைபெறும் நள்ளிரவு பிரார்த்தனைக் கூட்டத்திற்காக அவர்கள் எல்லோரும் புறப்பட்டார்கள்.அந்த பக்தராக வந்த பயணி எஃபிமை விடுவதாக இல்லை. அவருடனே சதா நேரமும் மிகவும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டு இருந்தார். எங்கு சென்றாலும் எஃபிமுடன் அவர் சேர்ந்து கொள்வார். அவர்கள் தேவாலயத்திற்கு வந்தார்கள். ஏராளமான புனிதப்பயணம் வந்தவர்கள் அங்குக் குழுமியிருந்தார்கள். அவர்கள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பலர் கிரேக்கர்களாகவும், ஆர்மேனியர்களாகவும், துருக்கியர்களாகவும், சிரியா நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். எஃபிம் கூட்டதுடன் சேர்ந்து புனித வாயில்களுக்குள் நுழைந்தார். துறவி ஒருவர் அவர்களை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடம்தான் கிறிஸ்து சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட இடம். அந்த இடத்தில் பெரிய ஸ்டாண்டுகளின் மேல் ஒன்பது மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. அந்தத்துறவி அந்த இடத்தை அவர்களுக்குக் காட்டி, அதைப் பற்றி நீண்ட விளக்கம் தந்தார். எஃபிம் அங்கு ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தினார். பிறகு அந்தத்துறவி எஃபிமை வலது பக்கமாகச் சென்று படிகளில் ஏறி கொல்கொதாவிற்குப் போகும்படி செய்தார். அங்குதான் சிலுவை இருந்தது. எஃபிம் அங்கு பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து அங்கு இயேசு கிறிஸ்துவின் கைகளும் பாதங்களும் சிலுவையில் ஆணிகளால்அறையப்பட்ட இடம் எஃபிமிற்குக் காட்டப்பட்டது. அதற்குப் பிறகு எஃபிம் ஆதாமின் நினைவிடத்தைப் போய்ப் பார்த்தார். அங்கு இயேசுவின் ரத்தம் ஆதாமின் எலும்புகளின் மீது சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. தொடர்ந்து எஃபிமிற்குத் தன்னுடைய தலையில் முட்களால் ஆன முடி வைக்கப்பட்டபோது இயேசு அமர்ந்திருந்த இடம் காட்டப்பட்டது. அதற்குப்பிறகு இயேசுவைக் கட்டிவைத்த தூணை எஃபிம் சென்று பார்த்தார். ஒரு கல்லில் இயேசுவின் பாதங்களுக்கு அடையாளமாக இரண்டு குழிகள் இருப்பதை எஃபிம் பார்த்தார். வேறு பலவற்றையும் எஃபிமிற்கு காட்டுவதாக இருந்தது. அதற்குள் கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்பு உண்டானது. மக்கள் எல்லோரும் கடவுளின் சமாதி இருக்குமிடத்தை நோக்கி வேகமாக நகர்ந்தார்கள். லத்தீன் மொழியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டம் முடிந்து, ரஷ்ய மொழியில் பிரார்த்தனை ஆரம்பமானது. எஃபிம் கூட்டத்தினருடன் சேர்ந்து பாறையில் அமைக்கப்பட்ட சமாதிக்குச் சென்றார்.
தன்னுடன் வந்த அந்த மனிதரை விட்டு விலகிச்செல்ல வேண்டும் என்று நினைத்தார் எஃபிம். அந்த மனிதரைப் பற்றி எஃபிமின் மனம் கீழ்த்தரமாக நினைத்துக்கொண்டே இருந்தது. ஆனால், அந்த மனிதர் அவரைவிட்டு விலகினால்தானே! இயேசுவின் சமாதியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்திற்குக் கூட விடாமல் எஃபிமுடன் சென்றார் அந்த மனிதர். அவர்கள் முன்வரிசையில் போய் இருக்கமுடியுமா என்று பார்த்தார்கள். ஆனால், மிகவும் தாமதமாக வந்துவிட்டதால், அது முடியாமல் போய்விட்டது. கூட்டம் பெரிதாக இருந்ததால் அவர்களால் இருந்த இடத்தைவிட்டு முன்னாலோ, பின்னாலோ, சிறிது கூட அசைய முடியவில்லை. எஃபிம் நின்றவாறு முன்பக்கம் பார்த்துப் பிராத்தித்தார். அவரின் கவனம் முழுவதும் அவ்வப்போது அவருடைய பர்ஸின் மீதே இருந்தது. அவர் மனதில் இரண்டுவித எண்ணங்கள் ஆக்கிரமித்திருந்தன. தன்னுடன் இருக்கும் நண்பர் ஒருவேளை தன்னை ஏமாற்றுகிறாரோ என்று நினைத்தார் எஃபிம். அப்படி இல்லாமல் அந்த மனிதர் சொல்வது மாதிரியே உண்மையாகவே அவருடைய பர்ஸ் காணாமல் போயிருந்தால், அத்தகைய ஒரு நிலை தனக்கும் நேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்பதையும் அவர் எண்ணிப் பார்த்தார்.
10
எஃபிம் அங்கு நின்றவாறு தனக்கு முன்னால் இருந்த ஒரு சிறு கூடத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த கடவுள் இயேசுவின் சமாதியையும் அதற்கருகில் எரிந்து கொண்டிருந்த முப்பத்தாறு விளக்குகளையும் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கு முன்னால் நின்றிருந்த மக்களின் தலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு ஒரு விஷயம் மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. விளக்குகளுக்குப் பின்னால் புனித நெருப்பு எரிந்து கொண்டிருந்த இடத்தில்- எல்லாருக்கும் முன்னால் சாம்பல் வண்ணத்தில் கோட் அணிந்த ஒரு வயதான கிழவர் நின்று கொண்டிருப்பதை எஃபிம் பார்த்தார். அவரின் வழுக்கைத் தலை எலிஷாவின் தலையை ஒத்திருந்தது.
'அந்த மனிதர் எலிஷாவைப் போலவே இருக்கிறாரே!' - மனதிற்குள் நினைத்தார் எஃபிம்: 'ஆனா, அவர் எலிஷாவா இருக்க முடியாது. எனக்கு முன்னாடி அவர் எப்படி வந்து நிற்க முடியும்? நாங்க வந்த கப்பலுக்கு முந்தைய கப்பல் ஒரு வாரத்துக்கு முன்னாடி புறப்பட்டு இருக்கு. அந்தக் கப்பல்ல எலிஷா வந்திருக்க முடியாது. நாங்க வந்த கப்பல்லயும் அவர் வரல. நான் தான் கப்பல்ல வந்த எல்லா பயணிகளையும் நல்லா பார்த்தேனே!'
எஃபிம் இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது, முன்னால் நின்று கொண்டிருந்த அந்தக் குள்ளமான மனிதர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். அவர் மூன்றுமுறை தன் தலையைக் குனிந்தார். ஒருமுறை கடவுளை நோக்கியும் இரண்டுமுறை தனக்கு முன்னால் இருபக்கங்களிலும் நின்றிருந்த மக்களைப் பார்த்தும் வலது பக்கம் அந்த மனிதர் தன் தலையைத் திருப்பியபோது, அவரை அடையாளம் தெரிந்து கொண்டார் எஃபிம் அது- எலிஷாதான். அதே கறுத்த சுருள் முடிகளைக் கொண்ட தலை. கன்னப்பகுதியில் சாம்பல் நிறத்தில் மாறி காணப்படும் தாடி, அதே புருவம், அதே கண்கள், மூக்கு… அதே முக பாவனைகள். நிச்சயம் அது அவர்தான்!
தன்னுடைய நண்பரை மீண்டும் காண நேர்ந்ததற்காக எஃபிம் உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தனக்கு முன்னால் எலிஷா எப்படி அங்கு வந்த சேர்ந்தார் என்பதை நினைத்து அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.