புனிதப் பயணம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
மூன்றாவது நாளும் அங்கேயே இருந்தார். அந்த வீட்டு மனிதரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இழந்த சக்தியை அவர் மீண்டும் பெற்றார். எலிஷா எப்போது கீழே உட்கார்ந்தாலும், பையன் மெதுவாக நகர்ந்து வந்து அவருக்கு அருகில் உட்காரத் தொடங்கினான். சிறுமியின் முகத்திலும் பிரகாசம் உண்டாகத் தொடங்கியது. அவள் எல்லா வேலைகளிலும் உதவி செய்தாள். எலிஷாவுக்குப் பின்னால் ஓடி ஓடி வந்துகொண்டிருந்தாள். எப்போது பார்த்தாலும் அவள் “அப்பா... அப்பா...” என்று எலிஷாவை அழைத்தவண்ணம் இருந்தாள்.
கிழவியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகத் தொடங்கியது. வீட்டைவிட்டு வெளியேபோய் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்க்கப்போகும் அளவிற்கு அவள் உடம்பில் தெம்பு உண்டானது. அந்த மனிதரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அவர் சுவரைப் பிடித்தவாறு எழுந்து நடக்கத் தொடங்கினார். அவரின் மனைவியால்தான் படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து நிற்க முடியவில்லை. இருப்பினும் அவள் தன் சுயஉணர்வு நிலைக்கு வந்தாள். மூன்றாவது நாள் அவள் தனக்குச் சாப்பிட ஏதாவது வேண்டும் என்று கேட்டாள்.
‘சரி...’-எலிஷா தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்: ‘வழியில் இப்படி நாட்கள் தேவையில்லாம செலவாகும்னு கொஞ்சம்கூட நான் எதிர்பார்க்கல. இப்போ நான் புறப்பட்டாத்தான் சரியா இருக்கும்...’
6
நான்காவது நாள்தான் கோடை விரதத்திற்குப் பிறகு வரும் விருந்திற்கான நாள். எலிஷா மனதிற்குள் நினைத்தார்.
‘நான் இங்கேயே தங்கி விரதத்தை இவங்களோட இருந்து முடிக்கணும். நான் வெளியே போய் இவங்களுக்காக ஏதாவது வாங்கிட்டுவந்து இவங்ககூட இருந்து விருந்து சாப்பிடணும். எல்லாம் முடிஞ்சதும், நாளைக்குச் சாயங்காலம் புறப்பட வேண்டியதுதான்.’
எலிஷா கிராமத்திற்குச் சென்றார். பால், கோதுமைமாவு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் குடிசைக்குள் வந்தார். அதை வேகவைக்க கிழவிக்கு அவர் உதவியாக இருந்தார். நாளைக்குத் தேவையான கேக் தயாராகிக் கொண்டிருந்தது. விருந்து நாளன்று எலிஷா தேவாலயத்திற்குச் சென்று, பிறகு விரதத்தை தன் நண்பர்களுடன் குடிசையில் முடித்து வைத்தார். அந்த நாளில் அந்தப்பெண் எழுந்து மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அவள் கணவன் தன் முகத்தை நன்றாகச் சவரம் செய்து, கிழவி அவருக்காகச் சலவை செய்து வைத்திருந்த சட்டையை எடுத்து அணிந்தார். அடுத்த நிமிடம் தன்னுடைய வயலையும், புற்கள் வளர்ந்திருக்கும் நிலத்தையும் அடகு வைக்கப்பட்டிருக்கும் கிராமத்திலேயே பெரிய பணக்காரராக இருக்கும் மனிதரைப் பார்த்து ஏதாவது பணம் வாங்கவேண்டும் என்பதற்காகப் புறப்பட்டார். புற்கள் வளர்ந்திருக்கும் வயலையும் நிலத்தையும் தன்னிடம் அறுவடை வரை தரும்படி கேட்பதற்காகத்தான் அவர் சென்றதே. ஆனால், மாலையில் அவர் மிகவும் கவலையுடன் திரும்பிவந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். அந்தப் பணக்கார மனிதர் அவரிடம் சிறிதுகூட கருணை காட்டவில்லை. அவர் ‘எனக்கு பணத்தைக் கொண்டுவந்து கொடு. நிலத்தைத் தர்றேன்’ என்று கூறிவிட்டார்.
எலிஷா தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். ‘இவங்க இப்போ எப்படி வாழ்வாங்க?’ - அவர் மனதிற்குள் நினைத்தார். ‘மத்தவங்க வயல்கள்ல வேலை செய்ய போயிடுவாங்க. ஆனா, இவங்க கிட்டத்தான் எதுவுமே இல்லியே! இவங்களோட நிலம்தான் அடமானத்துல இருக்குதே! விளைச்சல் எடுக்கப்போற நேரம் வந்திடுச்சு. மத்தவங்க விளைச்சலை எடுப்பாங்க. இந்த வருடம் பூமி அன்னை எவ்வளவு அருமையான விளைச்சலைத் தந்திருக்கிறாள்! ஆனா, இவங்க அறுவடை பண்றதுக்கு என்ன இருக்கு? இவங்களோட மூணு ஏக்கர் நிலமும் பெரிய பணக்கார விவசாயிகிட்ட அடமானத்துல இருக்கு. நான் இந்த இடத்தைவிட்டு போயிட்டா, நான் எப்படி இவங்களை பார்த்தேனோ, அதே நிலைக்கு மறுபடியும் போயிருவாங்கன்றதுதான் நிச்சயம் நடக்கப்போறது...’
எலிஷா இரண்டுவித எண்ணங்களுக்குள் சிக்கி அல்லாடிக் கொண்டிருந்தார். ஆனால், இறுதியாக அன்று மாலையில் புறப்படும் எண்ணத்தை அவர் கைவிட்டார். மறுநாள் காலைவரை பொறுத்திருக்க முடிவு செய்தார். வெளியே இருந்த இடைவெளியில் படுப்பதற்காகச் சென்றார். கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்துவிட்டுக் கீழே படுத்தார். ஆனால், அவருக்கு உறக்கம் வந்தால்தானே! தான் இங்கிருந்து சீக்கிரம் புறப்பட்டே ஆகவேண்டும் என்பதை எலிஷா உணர்ந்தார். அவர் எந்த அளவிற்குப் பணத்தையும் நேரத்தையும் செலவிடவேண்டுமோ, அதைவிட அதிகமாகவே செலவழித்துவிட்டார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த வீட்டில் இருந்தவர்களுக்காக மிகவும் கவலைப்பட்டார் அவர்.
‘இதுக்கு ஒரு எல்லையே இல்லாமப் போச்சு...’ -அவர் நினைத்தார்: ‘நான் முதல்ல இவங்களுக்காக கொஞ்சம் தண்ணி கொண்டுவந்து கொடுத்து, ஒவ்வொருத்தருக்கும் ஒரு துண்டு ரொட்டியைக் கொடுக்கணும்னு மட்டும்தான் நினைச்சேன். ஆனா, இப்போ அது என்னை எங்கோ கொண்டுவந்து விட்டுடுச்சு! இப்போ நான் அவங்க அடமானம் வச்ச வயலையும் நிலத்தையும் மீட்டுத்தரணும். அது முடிஞ்சாச்சுன்னா, இவங்களுக்காக ஒரு பசுவை வாங்கித் தரணும். பிறகு ஒரு குதிரையை வாங்கிக் கொடுத்து வீட்டுல இருக்கிற மனிதரை வண்டி ஓட்ட வைக்கணும். சரியான வளையத்துல மாட்டிக்கிட்ட சகோதரர் எலிஷா! நீ உன் கைப்பிடியைத் தவறவிட்டுட்டே! உன் கட்டுப்பாட்டை விட்டு விலகிட்டே!”
எலிஷா எழுந்தார். தலையணையாகப் பயன்படுத்திய தன்னுடைய கோட்டை எடுத்து, அதற்குள்ளிருந்து சிறிது பொடியை எடுத்துப் போட்டார். அப்போதாவது தன்னுடைய சிந்தனை சீராக இருக்காதா என்ற நினைப்பு அவருக்கு.
ஆனால், அதனால் ஒரு பிரயோஜனமும் உண்டாகவில்லை என்பதே உண்மை. அவர் சிந்தித்தார்... சிந்தித்தார்... சிந்தித்துக் கொண்டே இருந்தார். கடைசிவரை அவரால் ஒரு முடிவுக்கும் வரவே முடியவில்லை. அவர் கட்டாயம் புறப்பட்டே ஆகவேண்டும். ஆனால், அதே நேரத்தில் அந்தக் குடும்பத்தின்மீது அவர் கொண்ட பரிதாபம் அவரைப் போகவிடாமல் இழுத்தது. அவருக்கு என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை. அவர் தன் கோட்டை மடித்து மீண்டும் தன் தலைக்குக் கீழே வைத்தார். நீண்டநேரம் அப்படியே படுத்துக் கிடந்தார். சேவல் ஒருமுறை கூவி முடிக்கும் வரை அவர் சிறிதுகூட அசையவில்லை. அதற்குப்பிறகுதான் அவர் சிறிது கண் அயர்ந்தார். அப்போது தன்னை யாரோ தட்டி எழுப்பியதைப்போல் அவர் உணர்ந்தார். இப்போது அவர் தன்னுடைய ஆடைகளை அணிந்துகொண்டு பயணம் செய்வதற்குத் தயாராக நின்று கொண்டிருக்கிறார். அவரின் பை அவருக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்கிறது. கதவு வெளியே திறந்திருக்கிறது, அவர் போக வேண்டியது ஒன்றுதான் பாக்கி. அவர் வெளியே செல்ல முயல்கிறார். அப்போது அவருடைய பை பக்கத்திலிருந்த ஒரு வேலியில் மாட்டிக் கொள்கிறது. அவர் அதை வேலியிலிருந்து நீக்க முயல்கிறார்.