புனிதப் பயணம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
இரண்டு வயதான கிழவர்கள் ஜெருசலேமில் இருக்கும் கடவுளை வழிபடுவதற்காக புனிதப்பயணம் செல்ல தீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவர் வசதி படைத்த விவசாயி. பெயர் எஃபிம். இன்னொருவரின் பெயர் எலிஷா. அவர் அந்த அளவிற்கு வசதியானவர் அல்ல.
எஃபிம் மிகவும் திடகாத்திரமான மனிதர். அவர் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் மிகவும் தீவிரமானவராகவும், உறுதி படைத்தவராகவும் இருப்பார்.
மது அருந்தும் பழக்கமோ, புகை பிடிக்கும் பழக்கமோ, பொடி போடும் பழக்கமோ அவருக்கு என்றும் இருந்ததில்லை. அவர் தன் வாழ்க்கையில் ஒரு முறைகூட கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை. அந்த கிராமத்தின் தலைவராக இரண்டு முறை இருந்திருக்கிறார். அவர் பதவியைவிட்டுச் செல்லும்போது, செலவு கணக்குகள் அனைத்தும் முறைப்படி வைக்கப்பட்டிருந்தன. அவரின் குடும்பம் மிகவும் பெரியது. இரண்டு மகன்களையும் திருமணமான ஒரு பேரனையும் கொண்ட குடும்பமது. எல்லோரும் அவருடன் இணைந்தே வாழ்ந்தார்கள். அவர் பழுப்பு நிறம் கொண்டவராகவும் நீளமாக தாடியை வளர்த்திருப்பவராகவும், நிற்கும்போது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கக்கூடியவராகவும் இருந்தார். அறுபது வயதைத் தாண்டும்போது தான் அவருடைய தாடியில் சற்று நரையே தோன்ற ஆரம்பித்தது.
எலிஷா பெரிய பணக்காரரும் இல்லை. அதே நேரத்தில் ஏழையும் இல்லை. முன்பு அவர் மர வேலைகள் செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தார். இப்போது வயதாகிவிட்டதால் வெறுமனே வீட்டில் உட்கார்ந்து தேனீக்களை வளர்த்துக் கொண்டிருந்தார். அவரின் ஒரு மகன் வேலைதேடி வெளியே சென்றிருக்கிறான். இன்னொரு மகன் வீட்டில் அவருடனே இருக்கிறான். எலிஷா மிகவும் இரக்க குணம் படைத்தவர். எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் காணப்படும் மனிதர் அவர். சில நேரங்களில் அவர் மது அருந்துவதென்னவோ உண்மைதான். பொடி போடும் பழக்கம் கூட அவருக்கு உண்டு. பாட்டு பாடுவது என்றால் அவருக்கு விருப்பம் அதிகம். ஆனால், அவர் எப்போதும் வாழ்க்கையில் மன அமைதியை விரும்பக்கூடிய மனிதர். தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுடனும், பக்கத்து வீட்டுக் காரர்களுடனும் இணக்கமான ஒரு நல்லுறவுடன் அவர் பழகிக் கொண்டிருந்தார். அவர் மிகவும் குள்ளமானவராகவும் கரிய நிறம் கொண்டவராகவும் இருப்பார். தாடியில் சுருள் முடிகள் இருக்கும். வழுக்கைத் தலையைக் கொண்ட மனிதர் அவர்.
பல வருடங்களுக்கு முன்பே இந்த வயதான இரண்டு மனிதர்களும் சேர்ந்து ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வது என்று முடிவெடுத்திருந்தார்கள். ஆனால், எஃபிம்மால் பயணம் போவதற்கான நேரத்தை ஒதுக்கவே முடியவில்லை. எப்போது பார்த்தாலும் கையில் ஏகப்பட்ட வேலைகளை வைத்துக் கொண்டிருந்தார். ஒரு வேலை முடிந்துவிட்டால், உடனே அடுத்த வேலை அவருக்காகக் காத்திருக்கும். வேறு வழியில்லாமல் அதைச் செய்வதற்கு அவர் தீவிரமாக இறங்கிவிடுவார். முதலில் அவர் தன் பேரனின் திருமணத்தை நடத்தியாக வேண்டும். தன்னுடைய கடைசி மகன் ராணுவத்திலிருந்து திரும்பி வருவதை எதிர்பார்த்து அவர் காத்திருக்க வேண்டும். அதற்குப்பிறகு அவர் ஒரு புதிய வீட்டைக் கட்டும் பணியில் தீவிரமாக இறங்கிவிட்டார்.
ஒரு விடுமுறை நாளில் இரண்டு வயதான கிழவர்களும் வீட்டின் முன்னால் சந்தித்தார்கள். இருவரும் அங்கிருந்த மரப்பலகையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்.
"சரி..." எலிஷா கேட்டார். "நாம எடுத்த முடிவை எப்போ செயல்படுத்துறது?"
எஃபிம் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்னார்.
"நாம கொஞ்ச நாட்கள் அதற்காகக் காத்திருக்கணும். இந்த வருடம் எனக்கு மிகவும் கஷ்டமான வருடமா அமைஞ்சிடுச்சு. இந்த வீட்டைக் கட்ட ஆரம்பிச்சப்போ, நூறு ரூபிள்கள்ல இது முடிஞ்சிடும்னு நினைச்சுத்தான் நான் வேலையையே ஆரம்பிச்சேன். இப்போ, இதுவரை இதுக்கு முந்நூறு ரூபிள்கள் செலவாயிடுச்சு. இன்னும் முழுசா வேலை முடியல. கோடைக் காலம்வரை நாம பொறுமையா இருக்கிறதைத் தவிர வேறவழியில்ல. கோடை வந்திடுச்சுன்னா கடவுள் சம்மதத்தோட நாம கட்டாயம் பயணத்தை ஆரம்பிப்போம்."
"நாம இப்படியே நம்ம பயணத்தைத் தள்ளிப்போட்டுக்கிட்டு வர்றது நல்லது இல்லைன்னு நான் நினைக்கிறேன். நாம உடனடியா போறதுதான் நல்லது"- எலிஷா சொன்னார். "வசந்த காலம் தான் நம்ப பயணத்துக்கு சரியான காலம்."
"காலம் சரியா இருக்கலாம். என் கட்டிட வேலை என்னாகுறது? அதை விட்டுட்டு நான் எப்படி வர முடியும்?"
"உங்களுக்கு பதிலா வேற யாருமே இங்கே இல்லையா என்ன? உங்க மகனே அந்த வேலையை எல்லாம் பார்த்துக்குவானே?"
"எதை வச்சு நீங்க சொல்றீங்க? என் மூத்த மகனை அந்த அளவுக்கு நம்பிவிட முடியாது. அவன் சில நேரங்கள்ல அளவுக்கதிகமா குடிச்சிட்டு ஒரு வழி பண்ணிடுவான்."
"நண்பரே, நாம செத்துப்போன பிறகு நாம இல்லாமலே அவங்கதான் எல்லா வேலைகளையும் பார்க்கப்போறது. இப்பவே உங்க மகனுக்கு அதற்கான அனுபவப் பாடம் கிடைக்கட்டுமே!"
"நீங்க சொல்றது சரிதான். ஆனா, விஷயம் என்னன்னா... நான் ஆரம்பிச்ச ஒரு வேலையை நானே முடியிறதுவரை பார்க்கணும்னு நினைக்கிறேன். அவ்வளவுதான்."
"நண்பரே, எல்லா வேலைகளையும் நாமே செய்யிறதுன்னா, அது நடக்காத விஷயம்... எங்க வீட்டுல பொம்பளைங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்து ஈஸ்டர் பண்டிகை வர்றதுனால பாத்திரங்களையெல்லாம் கழுவி சுத்தப்படுத்தி வச்சாங்க. வீட்டை முழுவதும் தண்ணிவிட்டு கழுவி சுத்தம் செய்தாங்க. என் மூத்த மருமகள் ரொம்பவும் புத்திசாலி. அவ சொன்னா 'விடுமுறை நாட்கள் நமக்காகக் காத்திருக்காம, அதாகவே வர்றது ஒரு விதத்துல எவ்வளவு நல்லதா இருக்கு! இல்லாட்டி என்னதான் கடுமையா நாம உழைச்சாலும், இந்த விடுமுறை நாட்களுக்காக நாம தயார் நிலையிலேயே இருக்க மாட்டோம்'னு’ அதைக் கேட்டு எஃபிம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.
"நான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுறதுக்காக எவ்வளவோ பணத்தை இதுவரை செலவழிச்சிட்டேன்"- அவர் சொன்னார். "பயணம் புறப்படுறதுன்னா காலி பாக்கெட்டோட ஒரு ஆளு கிளம்ப முடியாது. குறைந்தபட்சம் நூறு ரூபிள்களாவது நம்ம கையில இருக்கணும். ஆனா, அது சாதாரண தொகை இல்ல..."
அவர் சொன்னதைக் கேட்டு எலிஷா சிரித்தார்.
"இங்க பாருங்க, என் வயதான நண்பரே!"- அவர் சொன்னார். "என்கிட்ட இருக்குறதைவிட உங்கக்கிட்ட பத்து மடங்கு செல்வம் இருக்கு.ஆனா, இப்போகூட நீங்க பணத்தைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க. நாம புறப்படலாம்னு நீங்க சொல்லுங்க. இப்போ என் கையில பணம்னு எதுவுமே இல்லைன்னாக்கூட, அந்தச் சமயத்துல தேவையான பணம் நிச்சயம் கையில இருக்கும்."
அதைக் கேட்டு எஃபிம் சிரித்தார்.