புனிதப் பயணம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
அந்தக் குடிசையின் வாசலுக்குள் நுழைய வேண்டுமென்றால் ஒரு நீளமான இடைவெளியைக் கடந்துதான் செல்ல வேண்டும். எலிஷா அந்த இடைவெளியில் நடந்தார். அப்போது வீட்டிற்குப் பக்கத்திலிருந்து ஒரு மண்மேட்டில் ஒரு தாடி இல்லாத மனிதர் படுத்துக் கிடப்பதை அவர் பார்த்தார். படுத்திருக்கும் அந்த மனிதர் சின்ன ரஷ்யாக்காரர்கள் செய்வதைப் போல மேற்சட்டையை காற் சட்டைக்குள் நுழைத்துவிட்டிருந்தார். நிழலுக்காக அந்த மனிதர் அங்கு படுத்திருக்கலாம். ஆனால், சூரியன் மேலே வந்து 'சுள்'ளென்று அவர் மீது காய்ந்து கொண்டிருந்தது. தூக்கத்தில் இல்லையென்றாலும், அந்த மனிதர் அதே நிலையில்தான் படுத்திருந்தார். எலிஷா அவரை அழைத்து குடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று கேட்டார். ஆனால், அந்த மனிதர் வாயையே திறக்கவில்லை.
'இந்த மனிதர் ஒண்ணு உடம்புக்குச் சரியில்லாம இருக்கணும், இல்லாட்டி யாரைப் பார்த்தாலும் பிடிக்காதவரா இருக்கணும்' என்று மனதிற்குள் நினைத்த எலிஷா நடந்து குடிசைக்கு அருகில் சென்றார். உள்ளே ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்டது. அவர் கதவில் வட்டமாக இருந்த கைப்பிடியைப் பிடித்து, அதன் மூலம் கதவைத் தட்டினார்.
"எஜமானர்களே..."- அவர் அழைத்தார். உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் மீண்டும் கதவைத் தட்டினார்.
"கிறிஸ்தவர்களே..." மீண்டும் எந்த பதிலும் வரவில்லை.
"கடவுளின் வேலைக்காரர்களே..." அதற்குப் பிறகும் எந்த பதிலும் வரவில்லை.
எலிஷா அங்கிருந்து ஓடிவிடலாமா என்று பார்த்தார்.அப்போது உள்ளேயிருந்து ஒரு முனகல் சத்தம் மெதுவாகக் கேட்டது.
'உள்ளேயிருப்பவர்களுக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருக்குமோ? என்னதான் உண்மைன்றதைப் பார்த்துறது நல்லது...' அவர் நினைத்தார்.
4
எலிஷா கதவிலிருந்த கைப்பிடியைப் பிடித்து திருகினார். கதவு மூடப்பட்டிருக்கவில்லை. அவர் கதவைத் திறந்து உள்ளேயிருந்த குறுகிய இடைவெளியில் நடந்தார். அதைத் தாண்டி இருந்த கதவு திறந்தே இருந்தது. இடது பக்கத்தில் ஒரு செங்கல்லால் ஆன அடுப்பு இருந்தது. முன்னால் சுவரையொட்டி ஒரு அலமாரி இருந்தது. அதற்கு முன்னால் ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. மேஜைக்கருகில் இருந்த பெஞ்சின் மீது ஒரு வயதான கிழவி உட்கார்ந்திருந்தாள். அவளின் தலையில் துணி எதுவும் இல்லை. ஒரே ஒரு ஆடையால் தன் உடல் முழுவதையும் அவள் மூடியிருந்தாள். தன் தலையை மேஜை மீது சாய்த்தவாறு அவள் அமர்ந்திருந்தாள். அவளுக்கருகில் மெலிந்து காணப்பட்ட மெழுகு வண்ணத்திலிருந்த சிறு பையன் ஒருவன் உந்தப்பட்ட வயிற்றுடன் உட்கார்ந்திருந்தான். கிழவியின் ஆடையைப் பிடித்து இழுத்து அந்தப் பையன் என்னவோ கேட்டு அழுது கொண்டிருந்தான். எலிஷா அங்கு வந்தார். வீட்டிற்குள் வயிற்றைக் குமட்டும் அளவிற்குத் தாங்க முடியாத நாற்றம் வீசியது. அவர் சுற்றிலும் கண்களை ஓட்டினார். அடுப்பிற்கருகில் தரையில் ஒரு பெண் படுத்திருந்தாள். மல்லாக்கப் படுத்திருந்த அவளின் கண்கள் மூடியிருந்தன. அவளுடைய தொண்டைக்குழி இலேசாக உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. அவள் ஒரு காலை நீட்டி இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தாள். அந்த மோசமான நாற்றம் அவளிடமிருந்துதான் வந்து கொண்டிருந்தது. அவளைப் பற்றி அக்கறை எடுக்க யாரும் அங்கு தயாராக இல்லை என்பது தெரிந்தது. கிழவி தன் தலையை உயர்த்தி தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த மனிதரைப் பார்த்தாள்.
"உங்களுக்கு என்ன வேணும்?"- அவள் கேட்டாள். "மனிதரே, உங்களுக்கு என்ன வேணும்? எங்கக்கிட்ட உங்களுக்குத் தர எதுவுமே இல்ல..."
அந்தக் கிழவி சின்ன ரஷ்யாவின் மொழியில் பேசினாலும், அதை எலிஷாவால் புரிந்து கொள்ள முடிந்தது.
"நான் இங்கே கொஞ்சம் தண்ணி குடிக்கலாம்னு வந்தேன், கடவுளின் வேலைக்காரியே!"
"இங்கே யாருமே இல்ல... யாருமே இல்ல... கொண்டு வர்றதுக்கு தண்ணிகூட இல்ல... நீங்க உங்க வழியைப் பார்த்து போங்க..."
அப்போது எலிஷா கேட்டார்.
"உங்கள்ல யாருமே அந்தப் பெண்ணைப் பார்த்துக்குறதுக்கு இல்லையா?"
"இல்ல... இங்கே யாருமே இல்ல... என் மகன் வெளியே செத்துக்கிட்டு இருக்கான். நாங்க இங்கே செத்துக்கிட்டு இருக்கோம்."
அந்தச் சிறு பையன் வீட்டிற்குள் புதிதாக வந்து நிற்கும் மனிதரைப் பார்த்ததும் அழுகையை நிறுத்தினான். ஆனால், கிழவி பேச ஆரம்பித்தவுடன் அவன் மீண்டும் அழத் தொடங்கிவிட்டான். கிழவியின் ஆடையைக் கைகளால் பற்றியவாறு அவன் அழுதான்.
"ரொட்டி... பாட்டி... ரொட்டி..."
எலிஷா கிழவியைப் பார்த்து என்னவோ கேட்பதற்காக வாயைத் திறந்தார். அந்த நிமிடத்தில் வெளியே தரையில் கிடந்த அந்த மனிதர் தரையோடு தரையாக ஊர்ந்து மிகவும் சிரமப்பட்டு வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தார். அவர் அந்த இடைவெளி வழியாக சுவரையொட்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தார். ஆனால், ஆட்கள் வசிக்கக்கூடிய இடத்தின் வாசலுக்கு வந்தவுடன், அவர் ஒரு மூலையில் படுத்துவிட்டார். அதற்குப் பிறகு எழுந்து பெஞ்சுக்கு வரவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், அவர் பேச ஆரம்பித்தார். பேசுவதற்கே மிகவும் சிரமப்படுவது நன்றாகவே தெரிந்தது. திக்கித் திணறி வார்த்தைகள் வெளியே வந்தன.
"எங்க எல்லாருக்கும் உடல் நலமில்ல...’ 'ஒரே பஞ்சம்... அவன் பசியால செத்துக்கிட்டு இருக்கான்..."
அவர் பையனை நோக்கி மெதுவாக நகர்ந்தவாறு தேம்பித் தேம்பி அழுதார்.
எலிஷா தன் தோளுக்குப் பின்னாலிருந்த சுமையைச் சற்று நகர்த்தி தன் கைகளிலிருந்து அதை விடுவித்து, பெஞ்சின்மேல் வைத்து அதைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்க்க ஆரம்பித்தார். அந்தப் பையை அவிழ்த்து அதற்குள்ளிலிருந்த ஒரு ரொட்டியை வெளியே எடுத்து, தன்னுடைய கத்தியால் அதிலிருந்து ஒரு துண்டை வெட்டியெடுத்து, அந்த மனிதரின் கையில் தந்தார். அந்த மனிதர் அதை வாங்கவில்லை. அவர் அந்தச் சிறு பையனையும், அடுப்பிற்குப் பின்னால் ஊர்ந்து கொண்டிருந்த ஒரு சிறு பெண்ணையும் காட்டி அவர்களுக்கு அந்த ரொட்டியைக் கொடுக்கும்படி சொன்னார்.
எலிஷா ரொட்டியைப் பையனிடம் தந்தார். ரொட்டியின் மணத்தை உணர்ந்ததும், பையன் தன் இரு கைகளையும் நீட்டி அந்த ரொட்டித் துண்டை ஆர்வத்துடன் வாங்கி அதைக் கடித்துத் தின்ன ஆரம்பித்தான். அவனுடைய மூக்கு முழுமையாக ரொட்டிக்குப் பின்னால் மறைந்து போயிருந்தது. அந்தச் சிறுபெண் அடுப்பிற்குப் பின்னாலிருந்து வந்து அந்த ரொட்டியையே வைத்த கண் எடுக்காது பார்த்தாள். எலிஷா அவள் கையிலும் ஒரு துண்டு ரொட்டியைத் தந்தார். ரொட்டியிலிருந்து இன்னொரு துண்டை அறுத்து அதை அந்த வயதான கிழவியிடம் கொடுத்தார். கிழவி அதை மென்று தின்ன ஆரம்பித்தாள்.