ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிஸியன்ஸ் - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7965
அதற்குள் புத்த மத துறவியும், அந்த இளம் பெண்ணின் தந்தையும் மெதுவாக நடந்து, அங்கு வந்து சேர்கிறார்கள். நால்வரும் அந்த இடத்தில் அமர்ந்து, வாகனம் வருவதை எதிர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். அப்போது துறவியைப் பார்த்த அந்த இளம் பெண் ‘மீதி கதையையும் கூறி முடித்து விடுங்கள்…’ என்கிறாள். அதைத் தொடர்ந்து துறவி மீதி கதையை கூற ஆரம்பிக்கிறார்:
‘நாட்கணக்கில் டாஷி அந்த வீட்டில் தங்கியிருக்கிறான். இதுவரை அந்த வீட்டில் அவர்களுடன் வந்து தங்கிய முதல் வெளி மனிதனே அவன்தான். தன் இளம் மனைவி தேகி தயாரித்துத் தரும் மதுவை அருந்தி, எப்போதும் போதையிலேயே இருக்கிறான் கிழவன். இதற்கிடையில் டாஷிக்கும், கிழவனின் மனைவிக்குமிடையே ஒரு நெருக்கமான உறவு உண்டாகி விடுகிறது. உடல் ரீதியான உறவு கூட பலமுறைகள் அவர்களுக்கிடையே நடந்து விடுகின்றன.
ஒருநாள் டாஷியிடம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைக் கூறுகிறாள் அந்த இளம் பெண் தேகி. அவ்வளவுதான் - அதிர்ந்து போகிறான் டாஷி. கிழவனுக்கு விஷயம் தெரிந்தால் இருவரையும் அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் என்ற உண்மையை இருவரும் நன்கு தெரிந்தே இருக்கிறார்கள். ‘இப்போது என்ன செய்வது?’ என்று இருவரும் சிந்திக்கின்றனர். அதைத் தொடர்ந்து டாஷி தனக்குத் தெரிந்ததை வைத்து, ஏதோ விஷ செடியைக் கொண்டு வந்து நசுக்கி, சாறு பிழிந்து தருகிறான். அந்தச் சாற்றை தான் தயாரித்த மதுவில் கலந்து கிழவனுக்குத் தருகிறாள் அந்தப் பெண்.
விஷயம் தெரியாமல் கிழவன் அதை பருகுகிறான். இரவு முழுவதும் முனகிக் கொண்டும், தினறிக் கொண்டும், உளறிக் கொண்டும் இருக்கிறான். உயிர் பிரியவில்லை. ‘அவன் சாவானா என்பது எனக்குத் தெரியாது. நான் எனக்குத் தெரிந்ததைச் செய்தேன்’ என்கிறான் டாஷி. எங்கே போதை முடிந்ததும், கிழவன் சுய உணர்விற்கு வந்து, தன்னை ஒரு வழி பண்ணி விடுவானோ என்று பயப்படுகிறான் டாஷி. அந்த பயத்தில், அவன் அங்கிருந்து தப்பிச் செல்கிறான். கிழவனின் மனைவி தேகி ‘டாஷி… டாஷி… என்னை விட்டுப் போகாதே’ என்கிறாள் உரத்த குரலில். சிறிது நேரத்தில் அந்த குரல் நின்று விடுகிறது.
பதைபதைத்துப் போன டாஷி பின்னால் திரும்பி வருகிறான். மலை ஆறு மிகவும் வேகமாக ‘சளசள’த்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீருக்குள் அந்த இளம் பெண்ணின் ஆடைகள் மிதந்து கொண்டிருக்கின்றன. அவள் ஆற்று நீருடன் போய் விட்டாள். என்ன செய்வது என்று தெரியாத தவிப்புடன் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நிற்கிறான் டாஷி.
அவன் தன் கிராமத்திற்கு வருகிறான். தன் தம்பியைப் பார்க்கிறான். ‘நான் ஒரு உயிரைக் கொன்று விட்ட பாவி’ என்கிறான் கண்ணீர் மல்க.’
கதையை முடிக்கிறார் புத்த மத துறவி. இளம் பெண்ணின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, பாவச் சின்னமாக நின்று கொண்டிருக்கும் டாஷியின் கதை அத்துடன் முடிகிறது. மீண்டும் காத்திருப்பு தொடர்கிறது..
சிறிது தூரத்தில் ட்ராக்டர் ஒன்று வருகிறது. கையை நீட்ட, ட்ராக்டர் நிற்கிறது. இரண்டு பேர் மட்டுமே அதில் ஏற முடியும் என்கிறார் ஓட்டுனர். இளைஞனும் புத்த மத துறவியும் அந்த வியாபாரியையும் அவருடைய ஆசை மகளையும் ட்ராக்டரில் ஏறும்படி கூறுகின்றனர். அதற்கு ‘நாங்கள் பின்னர் போய்க் கொள்கிறோம். நீங்கள் திம்புவில் நடைபெறும் திருவிழாவிற்குச் செல்ல வேண்டும். இவர் அமெரிக்க தூதரகத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் முதலில் செல்லுங்கள்’ என்கிறார் தாள் வியாபாரி புத்த மத துறவியிடம்.
சிறிது நேரம் இனம் புரியாத மவுனம். அந்த இளம் பெண் என்ன சொல்வது என்று தெரியாமல் கவலை நிறைந்த முகத்துடன் இருக்கிறாள். அடுத்த நிமிடம் தன் தோள் பையையும் வானொலிப் பெட்டியையும் கையில் எடுக்கிறான் இளைஞன். புத்த மத துறவியும் தன் பையையும் இசைக் கருவியையும் எடுத்துக் கொள்கிறார். இருவரும் வியாபாரியிடமும், அந்த இளம் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு ட்ராக்டரில் சென்று அமர்கின்றனர். அவர்களைப் பார்த்து கைகளை அசைத்துக் கொண்டு அந்த வியாபாரியும் அவருடைய அழகு மகளும் சாலையின் ஓரத்தில் நின்றிருக்கின்றனர்.
ட்ராக்டர் புறப்படுகிறது. வளைவு ஒன்றில் ட்ராக்டர் திரும்புகிறது. அந்த வியாபாரியும், அந்த இளம் பெண்ணும் அவர்களின் பார்வையிலிருந்து இப்போது மறைந்து விட்டார்கள். புத்த மத துறவி இளைஞனைப் பார்த்து ‘நான் இப்போது இன்னொரு கதை கூறுகிறேன். இந்த கதையில் கிராமத்தில் அரசாங்க வேலை பார்த்த ஒரு இளைஞன் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதற்காக, நேர்முகத் தேர்விற்கு திம்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்குச் செல்வதற்காக பல சிரமங்களுடன் பயணிக்கிறான். வழியில் அவன் ஒரு இளம் பெண்ணைப் பார்க்கிறான்…’ என்கிறார். - சிரித்துக் கொண்டே. அதைக் கேட்ட அந்த இளைஞன் தொடர்ந்து கூறுகிறான்: ‘அந்த இளம் பெண்ணைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு ஊசலாட்டம்… அமெரிக்காவிற்குச் செல்வதா? அல்லது திரும்பவும் அந்த இளம் பெண் இருக்கும் கிராமத்திற்கே திரும்பி விடுவதா? இதுதானே அடுத்து நீங்கள் கூறப் போவது?’ என்கிறான் தன்னை மறந்து சிரித்துக் கொண்டே. அவன் சிரிப்பதைப் பார்த்து புத்த மத துறவியும் சிரிக்கிறார். ட்ராக்டர் அவர்களைச் சுமந்து கொண்டு தன் பயணத்தைத் தொடர்கிறது.
படத்தின் முடிவு இதுதான் என்று காட்டப்படவில்லை. அந்த இளைஞன் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று, நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு விசா பெற்றானா… அல்லது… அந்த இளம் பெண்ணால் ஈர்க்கப்பட்டு, மீண்டும் அந்த மலைப் பகுதி கிராமத்திற்கே திரும்பி வந்து, தன் அரசு வேலையைத் தொடர்ந்தானா என்பதை படத்தின் இயக்குனர், படம் பார்ப்போரின் முடிவுக்கே விட்டு விட்டார். புதுமையான முடிவு!
இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு மிகப் பெரிய தேர்வே நடைபெற்றது. விவசாயிகள், பள்ளிக் கூட சிறுமிகள், பூட்டான் வானொலி நிலைய ஊழியர்கள், அரசாங்க ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என்று பலதரப்பட்டவர்களையும் அழைத்து நடிகர் – நடிகை தேர்வு நடத்தினர். அமெரிக்க மோகத்துடன் இருக்கும் இளைஞனாக நடித்தவர் மட்டுமே நடிப்பு அனுபவம் கொண்டவர்.
கதைக்குள் கதை கூறும் புதுமையான உத்தி கையாளப்பட்டிக்கும் இப்படத்தைப் பார்த்து பல நாட்கள் ஆன பிறகும், பூட்டானையும், அதன் மலைப் பிரதேசத்தையும், இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் இடங்களையும், வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளையும், அதில் செல்லும் வாகனங்களையும், கள்ளங்கபடமற்ற மனிதர்களையும், அவர்களின் சிரமங்களையும், அடர்ந்த காடுகளையும், மலர் செடிகளையும், மக்களின் நல்ல மனங்களையும் நம்மால் மறக்கவே முடியாது… அவை ஒவ்வொன்றும் நம் இதயத்திற்குள் பசுமையாக தங்கிக் கொண்டு, ஒரு சுகமான அனுபவத்தைத் தந்து கொண்டிருக்கும் – என்றென்றைக்கும்…