Category: சினிமா Published Date Written by சுரா Hits: 7842
நேரம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இரவாகி விட்டது. இனி எந்த வாகனம் வரப் போகிறது? அந்த மலைப் பாதையின் ஓரத்திலேயே அவர்களுடைய அன்றைய இரவு கழிகிறது.
பொழுது புலர்கிறது. வெளிச்சம் வர ஆரம்பிக்கிறது. இளைஞனும், ஆப்பிள் பழ வியாபாரியும் பேருந்தோ ஏதாவது வாகனமோ வராதா என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கின்றனர். அப்போது புத்த மத துறவி ஒருவர் சிவப்பு ஆடை தரித்து வருகிறார். அவரின் கையில் ஒரு இசைக் கருவி. திம்புவில் நடைபெறும் திருவிழாவிற்காக அவர் செல்கிறார். அவரும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொள்கிறார். இப்போது மூவராக ஆகிறார்கள்.
மீண்டும் காத்திருப்பு. நேரம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், வாகனம் எதுவும் வருவதாக தெரியவில்லை. இளைஞன் எதற்காக திம்புவிற்குச் செல்கிறான் என்ற விஷயத்தை துறவி தெரிந்து கொள்கிறார். அப்போது சிரித்துக் கொண்டே அவர் ஒரு கதையைக் கூறுகிறார்:
‘ஒரு கிராமம். அங்கு ஒரு மனிதர். அவருக்கு இரண்டு மகன்கள். அந்த ஊரிலிருக்கும் மேஜிக் வித்தைகளைக் கற்றுத் தரும் ஒரு பள்ளிக் கூடத்தில் அந்த தந்தை தன்னுடைய மூத்த மகனான டாஷியைச் சேர்த்து விடுகிறார். ஆனால், அவனுக்கு அந்த படிப்பில் சிறிதும் ஆர்வம் இல்லை. வகுப்பறையில் அமர்ந்து கொண்டு பெண்களைப் பற்றிய கனவில் அவன் மிதந்து கொண்டிருக்கிறான். ஆனால், அவனுடைய தம்பிக்கு மேஜிக் விஷயத்தில் மிகுந்த ஆர்வம். தன் அண்ணனுக்கு மதிய உணவு கொண்டு வரும் தம்பி, வெளியில் நின்று கொண்டே உள்ளே நடக்கும் பாடத்தைக் காதால் கேட்டு, மேஜிக் வித்தைகள் பலவற்றையும் தெரிந்து கொள்கிறான்.
தனக்கு அந்த கிராமத்தில் இருக்க பிடிக்கவில்லை, மேஜிக் கற்றுக் கொள்வதில் சிறிதும் விருப்பமில்லை என்று தன் தம்பியிடம் கூறும் டாஷி, வேறு ஏதாவது ஊருக்கு பறந்து சென்றுவிட வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் தெரிவிக்கிறான். அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தங்களுக்குச் சொந்தமான கழுதையில் ஏறித்தான் செல்வார்கள். இப்போதும் அப்படித்தான் அவர்கள் வந்தார்கள். ஆனால், டாஷியின் தம்பி அந்த கழுதையை குதிரையாக தெரியும்படி செய்திருக்கிறான்.
அவ்வளவுதான் - உற்சாகத்துடன் குதிரையில் ஏறி பறக்கிறான் டாஷி. அந்த கிராமத்தை விட்டு எப்படியாவது தப்பித்து, வேறு எங்காவது செல்ல வேண்டும் என்பதுதானே டாஷியின் ஆசையே! குதிரை மிகவும் வேகமாக புயலென பாய்ந்து செல்கிறது - காடுகள், மேடுகள், பள்ளத்தாக்குகள், மலைகள் அனைத்தையும் கடந்து சூறாவளியாக பாய்ந்து பயணிக்கும் குதிரையின் மீது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான் டாஷி.’
கதையின் இந்த ஆரம்பப் பகுதியுடன் நிறுத்துகிறார் புத்த மத துறவி.
‘நான் கூறிய கதையில் வரும் டாஷி என்ற கிராமத்து இளைஞனைப் போல நீங்கள் இந்த கிராமத்தை விட்டு தப்பித்து ஓட நினைக்கிறீர்கள்’ என்கிறார் இளைஞனைப் பார்த்து துறவி.
ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு மூவரும் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது தூரத்தில் இரைச்சலை உண்டாக்கிக் கொண்டு ஒரு லாரி வளைவில் வந்து கொண்டிருக்கிறது. கையைக் காட்ட, லாரி நிற்கிறது. ‘லாரி திம்புவிற்குச் செல்லாது’ என்று கூறும் லாரி ஓட்டுனர் வழியில் இருக்கும் ஒரு ஊரின் பெயரைச் சொல்லி அது வரைதான் போகும் என்கிறார். அதற்கு சம்மதித்த மூவரும் லாரியின் பின்பகுதியில் ஏறி அமர்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் அதில் ஒரு ‘இருபத்து நான்கு மணி நேர குடிகாரனும்’ ஒரு வயதான கிராமத்துப் பெண்ணும் அமர்ந்திருக்கிறார்கள்.
லாரி புறப்படுகிறது. மலைப் பாதையில் வளைந்து வளைந்து அது பயணிக்கிறது. சிறிது தூரம் பயணித்ததும், ஒரு ஊரில் லாரி நிற்கிறது. அவர்களுடன் பயணம் செய்த வயதான கிராமத்துப் பெண் அங்கு இறங்கிக் கொள்கிறாள். ‘குடிகாரன்’ இப்போதும் மது புட்டியை கையில் வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அருந்திக் கொண்டிருக்கிறான். இப்போது புதிதாக இருவர் லாரியில் ஏறுகிறார்கள் ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய தாள் வியாபாரியும் அவருடைய இளம் பெண்ணான மகளும். அந்த அழகான இளம் பெண் லாரியில் ஏறுவதற்கு கை கொடுத்து உதவுகிறான் நம் இளைஞன்.
லாரியில் ஏறியவுடன் தாள் வியாபாரி இளைஞனிடம் ‘நீங்கள் கிராமத்தில் வேலை பார்க்கும் அரசு அலுவலராயிற்றே! உங்களை நான் பார்த்திருக்கிறேன்’ என்கிறார் மரியாதையுடன். தன் மனைவியை தான் இழந்து விட்டதாகவும், நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளுக்கு படிப்பு சரியாக வரவில்லையென்றும், அதனால் படிப்பை நிறுத்தி விட்டதாகவும், இப்போது அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட தாளை விற்பதற்காக நகரத்திலிருக்கும் சந்தைக்குச் செல்வதாகவும், துணைக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்வதாகவும் அவர் கூறுகிறார்.
லாரி கிளம்புகிறது. பயணம் தொடர்கிறது. வெறுமனே லாரியில் அமைதியாக எவ்வளவு நேரத்திற்குத்தான் உட்கார்ந்து கொண்டே இருக்க முடியும்? அதனால் தான் கூறிக் கொண்டிருந்த கதையை, முன்பு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்கிறார் புத்த மத துறவி:
‘காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாக ஓடிய குதிரையிலிருந்து ஒரு அடர்ந்த காட்டிற்குள் தவறி கீழே விழுகிறான் டாஷி. அவனை தூக்கி எறிந்து விட்டு, குதிரை எங்கோ போய் விடுகிறது. காலில் காயம் பட்ட டாஷி மெதுவாக மரங்களுக்கு மத்தியில் நடந்து, காட்டுக்குள் இருக்கும் ஒரு வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கிறான். அந்த வீடு ஒரு வயதான மர வெட்டிக்குச் சொந்தமானது. அந்த வீட்டில் அந்த கிழவனும், அவனைவிட வயதில் மிகவும் குறைவான இளம் மனைவியும் வாழ்கிறார்கள். பக்கத்தில் பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லை. அவனுக்கு துணை அவள். அவளுக்கு துணை அவன். இப்படித்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டைத் தேடி வந்திருக்கும் முதல் வெளி ஆளே டாஷிதான்.
அவனுடைய நிலையைப் பார்த்து மிகவும் வருத்தப்படுகிறான் மரவெட்டி கிழவன். அவனை உள்ளே அழைத்து, அவனுக்கு உணவளிக்கின்றனர். அவனுடைய காலில் பட்ட காயங்களுக்கு மருந்து போடப்படுகிறது. கிழவனுடைய இளம் மனைவி தேகி அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அன்று இரவு அவன் அங்கு தங்குகிறான். மறுநாள் காலையில் அவன் புறப்படுகிறான். தேகி இன்னொரு நாள் அங்கு தங்கி விட்டு, மறுநாள் போகலாமே என்கிறாள். ஆனால், அவன் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை காட்டிற்குள் வந்து அவனை விடுவதாக கூறுகிறான் மர வெட்டி கிழவன். அதன்படி கிழவன் முன்னால் நடக்க, அவனைப் பின்பற்றி நொண்டிக் கொண்டே நடந்து செல்கிறான் டாஷி. அவன் போவதையே பார்த்துக் கொண்டு வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருக்கிறாள் கிழவனின் இளம் மனைவி தேகி.