Category: சினிமா Published Date Written by சுரா Hits: 7938
கிழவனும் டாஷியும் அடர்ந்த காட்டுக்குள் நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள். நீண்ட நேரம் பயணித்த பிறகு, ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைகிறார்கள்.
‘இனி நான் கிளம்பி வீட்டிற்குச் செல்கிறேன். நீ உன் பயணத்தைத் தொடங்கு...’ என்று கூறிவிட்டு மர வெட்டி கிழவன் அங்கிருந்து பின்னோக்கி கிளம்பிச் செல்கிறான். டாஷி தன் பயணத்தைத் தொடர்கிறான்.’
புத்த மத துறவி கூறிய கதையின் பகுதியை ஆர்வத்துடன் அந்த இளைஞனும், ஆப்பிள் பழ வியாபாரியும், அரிசியின் மூலம் தாள் தயாரிக்கும் வியாபாரியும், அவருடைய பேரழகு பெட்டகமான மகளும் கேட்கின்றனர்.
ஒரு இடத்தில் லாரி நிற்கிறது. ‘இனி லாரி வேறு திசை நோக்கி செல்கிறது. நீங்கள் எல்லோரும் இங்கு இறங்கிக் கொள்ளுங்கள். இங்கிருந்து பேருந்திலோ, வேறு ஏதாவது வாகனத்திலோ திம்புவிற்கு பயணத்தைத் தொடருங்கள்’ என்கிறார் லாரி ஓட்டுனர். எல்லோரும் தங்களின் உடைமைகளுடன் கீழே இறங்குகிறார்கள். லாரியில் அமர்ந்திருக்கும் குடிகார இளைஞனின் கையில் இப்போதும் மது புட்டி இருக்கிறது. அதை பருகிக் கொண்டே சிரித்தவாறு அவர்களுக்கு ‘டாட்டா’ காட்டி விடை பெற்றுக் கொள்கிறான் அவன். லாரி அங்கிருந்து இடது பக்கமாக திரும்பி, தன் பயணத்தைத் தொடர்கிறது.
எல்லோரும் அந்த இடத்திலிருந்து சற்று நடந்து தனியாக இருக்கும் ஒரு இடத்திற்கு வருகிறார்கள். இருட்டி விட்டது. ஏதாவது சாப்பிட வேண்டுமே? புத்த மத துறவி தன் பைக்குள்ளிருந்து அடுப்பை எடுத்து வைக்கிறார். சமையல் செய்வதற்கான உணவுப் பொருட்கள், காய்கறிகள் அனைத்தும் இருக்கின்றன. எல்லோரும் சமையல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த இளம் பெண் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொடுக்கிறாள். சமையல் தயாராகிக் கொண்டிருக்கிறது. சுற்றிலும் கடுமையான குளிர். நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டு எல்லோரும் குளிர் காய்ந்து, ஆறுதல் அடைகின்றனர்.
நெருப்பின் வெளிச்சத்தில் இளைஞனையே ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த இளம் பெண். பதிலுக்கு இளைஞனும் அவளை ஆர்வத்துடன் பார்க்கிறான். அந்த காட்சியை புத்த மதத் துறவி கடைக்கண்களால் பார்த்து ரசிக்கிறார்.
எல்லோரும் புத்த மத துறவியிடம் மீதி கதையை கூறுமாறு கூறுகின்றனர். துறவி கதையைத் தொடர்கிறார்:
‘அடர்ந்த காட்டிற்குள் நடந்து சென்ற டாஷி நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு இடத்திற்கு வந்து சேர்கிறான். அது மரவெட்டி கிழவனுக்குச் சொந்தமான இடமே. கிழவன் மரத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்கு முன்னால் ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய இளம் மனைவி வீட்டிற்கு அருகில் இருந்தவாறு ஆச்சரியத்துடன் டாஷியையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். வழி தெரியாமல் காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது, தனக்கே தெரியாமல் சிறிதும் எதிர்பாராமல் திரும்பவும் அங்கு வந்து சேர்ந்தானா? இல்லாவிட்டால் மரவெட்டியின் இளம் மனைவி இன்னொரு நாள் தங்கிச் செல்லும்படி கூறியும், அதைக் காதில் வாங்காமல் கிளம்பி வந்து விட்டோமே என்பதை மனதில் நினைத்து, அவள் மீது கொண்ட மோகத்தால் மீண்டும் அங்கு வந்து சேர்ந்தானா? இவ்விரண்டு காரணங்களில் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.
பிறகென்ன? மரவெட்டியின் வீட்டிற்கு மீண்டும் வந்து சேர்கிறான் டாஷி. மரவெட்டி கிழவனின் மனைவி தேகி உணவு தயாரித்துத் தர, அதை சாப்பிடுகிறான் டாஷி. வீட்டில் சில நாட்கள் இருந்து, நொண்டிக் கெண்டிருக்கும் காலை சரி பண்ணும்படி கூறுகிறான் கிழவன். அவனுடைய மனைவி தயாரித்துத் தரும் மதுவை அளவே இல்லாமல் எப்போது பார்த்தாலும் குடித்துக் கொண்டே இருக்கிறான் கிழவன். அந்த இளம் பெண் கயிறைக் கொண்டு ஏதோ கலைப் பொருளைச் செய்து கொண்டிருக்கிறாள். அதை அவள் செய்து முடித்து, நகரத்திலிருக்கும் சந்தைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதைக் கொண்டு போகும்போது டாஷியும் அங்கிருந்து கிளம்பலாம் என்கிறான் கிழவன். ஆனால், அதை அவள் சீக்கிரம் செய்து முடித்தால்தானே! வழக்கத்தை விட அவள் அதை மிகவும் தாமதமாகவே செய்கிறாள். அப்படி இழுத்தால்தானே அதிக நாட்கள் டாஷி அந்த வீட்டில் இருக்க முடியும் என்ற எண்ணம் அவளுக்கு. அது தெரியாமல் ‘இந்த பெண்ணுக்கு இப்போது என்ன ஆச்சு? வேலையை முடிக்காமல், நாட்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறாளே!’ என்று டாஷிக்கும் கேட்கும்படி முனகுகிறான் கிழவன். அந்த வார்த்தைகள் அந்த இளம் மனைவியின் காதுகளிலும் விழுகின்றன. ஆனால், அவள் அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.’
புத்த மத துறவி தான் கூறிக் கொண்டிருந்த கதையை இந்த இடத்தில் நிறுத்துகிறார். அதற்குள் உணவும் தயாராகி விடுகிறது. எல்லோரும் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அந்த இளைஞனையே ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த இளம் பெண். ‘நீ ஏன் தொடர்ந்து படிக்கவில்லை?’ என்று அக்கறையுடன் அவன் கேட்க, அதற்கு ‘நான் தேர்வில் நல்ல மதிப்பெண்களை வாங்கியிருக்கிறேன். மதிப்பெண்கள் குறைவாக வாங்கியிருப்பதாக என் தந்தையிடம் பொய் சொன்னேன். அவருக்கு உதவிக்கு அருகில் யாரும் இல்லை. அவருக்கு அருகில் இருந்து உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அப்படிச் சொன்னேன்’ என்கிறாள் அந்த இளம் பெண் – புன்னகை தவழும் உதடுகளுடன். அவளையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் நம் இளைஞன்.
பொழுது புலர்கிறது. எல்லோரும் தங்களின் உடமைகளுடன் ஏதாவது வாகனம் வராதா என்ற எதிர்பார்ப்புடன் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது வளைவைத் தாண்டி ஒரு பேருந்து வருகிறது. கையை நீட்ட, பேருந்து நிற்கிறது. ஒரே இடம்தான் அதில் இருக்கிறது என்கிறார் ஓட்டுனர். புத்த மத துறவியை அதில் ஏறச் சொல்கிறார்கள். அவரோ இளைஞனைப் பார்த்து ‘நீங்கள்தான் அமெரிக்க தூதரகத்திற்கு அவசரமாக போக வேண்டிய நபர். ஏற்கெனவே தாமதமாகி விட்டது. நீங்கள் ஏறிச் செல்லுங்கள்’ என்கிறார். ஆனால், அவனோ ‘ஆப்பிள் வியாபாரி செல்லட்டும். பாவம்… அவர் கூடையில் ஆப்பிள் பழங்களை வைத்திருக்கிறார். இனி மேலும் தாமதித்தால், அவை அழுகிப் போனாலும் போகலாம்’ என்கிறான். அது சரிதான் என்று எல்லோருக்கும் படுகிறது. அதைத் தொடர்ந்து எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு ஆப்பிள் வியாபாரி தன் பழக் கூடையுடன் பேருந்திற்குள் ஏறுகிறார். பேருந்து புறப்படுகிறது.
அங்கிருந்து நால்வரும் சிறிது தூரம் நடக்கின்றனர். அந்த இளம் பெண் முன்னால் நடக்க, அவளைப் பின்பற்றி இளைஞன் நடந்து செல்கிறான். அவர்களுக்குச் சற்று தூரத்தில்…. பின்னால்…. புத்த மத துறவியும், தாள் வியாபாரியும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். நடந்ததால் உண்டான வேதனையால், ஓரத்திலிருந்த ஒரு பாலத்தின் கல்லில் களைப்புடன் அமர்கிறாள் இளம் பெண். சுற்றிலும் அழகான மலைகள், மரங்கள், செடிகள், கொடிகள், வயல்கள்… அவள் மிகவும் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, ‘என்ன கவலை? இதுவரை நம்முடன் இருந்த ஆப்பிள் வியாபாரி நம்மிடமிருந்து பிரிந்து போய் விட்டாரே என்பதாலா?’ என்று கேட்கிறான் இளைஞன். அதற்கு ‘ஆமாம்…’ என்று தலையை ஆட்டுகிறாள் அந்த அழகுச் சிலை.