Category: சினிமா Published Date Written by சுரா Hits: 7725
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Travellers and Magicians - ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிஸியன்ஸ்
(பூட்டானிய திரைப்படம்)
2003ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். பூட்டானின் கால் பகுதி மக்கள் Dzongkha என்ற மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கிறார்கள். இப்படம் அம்மொழியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியவர் Khyentse Norbu. Tibetan Buddhism மதத்தைச் சேர்ந்த lama இவர்.
இப்படத்தின் பெரும்பாலான நடிகர், நடிகைகள் தொழில் ரீதியான கலைஞர்கள் அல்ல. இதில் இளம் அரசாங்க அலுவலராக நடித்திருக்கும் Dendup மட்டுமே நடிப்பு அனுபவம் கொண்டவர். அவர் ஒரு வானொலி நடிகர்.
108 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படம்தான் முழுக்க முழுக்க பூட்டானில் படமாக்கப்பட்ட முதல் முழு நீள படம்.
இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் பூட்டானின் கிராமப் பகுதியையும், மலைச் சாலைகளையும், அங்குள்ள மக்களின் சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையையும் கண்ணாடி என தெளிவாக காட்டியிருக்கும் இந்தப் படம் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும்.
Deauville Asian Film Festival இல் ‘Travellers and Magicians’ திரைப்படம் சிறந்த படத்திற்கான Audience Award ஐப் பெற்றிருக்கிறது. Asian American International Film Festival இல் Best emerging Directorக்கான விருதை இப்படத்திற்காக இயக்குனர் Khyentse Norbu பெற்றிருக்கிறார்.
இத்தகைய சிறப்பு விருதுகள் பெற்ற இப்படத்தின் கதை இதோ...
பூட்டானின் ஒரு சிறிய கிராமம். அங்கு அரசாங்க அலுவலராக வேலை பார்ப்பவன் Dondup. அவன் அந்த கிராமத்தைச் சேர்ந்தவன் அல்ல. வெளியூரிலிருந்து அங்கு பணி செய்வதற்காக வந்திருப்பவன். நாகரீக உடைகள் அணிந்து, நவ நாகரீக பழக்க வழக்கங்களைக் கொண்ட அந்த இளைஞன் அந்த கிராமத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியிருக்கிறான். அவனுடைய அறையின் சுவர் முழுக்க பெண்களின், நடிகைகளின், மாடல்களின் கவர்ச்சிப் படங்கள். மேற்கத்திய இசையைக் கேட்டுக் கொண்டு... மேற்கத்திய சிந்தனைகளில் மூழ்கிக் கொண்டு அவனுடைய ஒவ்வொரு நாளும் நீங்கிக் கொண்டிருக்கிறது.
ஏதோ பிழைப்பிற்காக அவன் அந்த கிராமத்திற்கு வந்து விட்டானே தவிர, அங்கு இருப்பதற்கு அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அமெரிக்காவிற்குச் சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் இருக்கிறான். அதற்கான முயற்சிகளையும் அவன் செய்து கொண்டிருக்கிறான்.
தினமும் அந்த கிராமத்திலிருக்கும் அஞ்சல் நிலையத்திற்குச் செல்வது, திம்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து ஏதாவது தகவல் அடங்கிய கடிதம் வந்திருக்கிறதா என்று விசாரிப்பது என்பது அவனுடைய அன்றாடச் செயலாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அப்படி கடிதம் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டதும், அவன் மிகுந்த கவலையில் மூழ்கி விடுவான். ‘இந்த கிராமம் மிகவும் தூரத்தில் மலை உச்சியில் இருக்கிறது. தகவல் தொடர்புகள் பொதுவாகவே தாமதமாகத்தான் நடக்கும்’ என்று அஞ்சல் நிலையத்தில் கூறுவார்கள். தன் விதியைத் தனக்குத் தானே நொந்து கொண்டு ஏதாவது ஒரு புல்மேட்டில் கவலையுடன் அவன் அமர்ந்திருப்பான்.
ஒருநாள் அமெரிக்க தூதரகத்திலிருந்து அவனுக்கு கடிதம் வருகிறது. ‘விசா’ விஷயமாக நேர்முகத் தேர்விற்கு இரண்டு நாட்களில் அவனை வரச் சொல்லியிருக்கின்றனர். உண்மையான காரணத்தைச் சொல்லாமல், கிராமத்தின் தலைவரிடம் ‘திம்புவில் நடைபெறும் திருவிழாவைப் பார்ப்பதற்காகச் செல்கிறேன். இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும்’ என்று கேட்கிறான். கிராமத்தின் தலைவரும் அதற்கு ஒப்புதல் தருகிறார்.
அறைக்கு வந்து தன்னுடைய தோள் பையை எடுத்துக் கொண்டு அவன் பிற்பகல் வேளையில் அந்த கிராமத்தை விட்டு கிளம்புகிறான். திம்புவிற்குச் செல்வதற்கு எப்போதாவது ஒரு பேருந்து வரும். மிகவும் வேகமாகச் சென்று பேருந்தைப் பிடித்தாக வேண்டும். அவன் பள்ளத்தாக்கில் இருக்கும் அந்த கிராமத்தை விட்டு ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்கிறான். பல நிமிடங்கள் நடந்து சென்ற பிறகு, மேலே பார்க்கிறான். தூரத்தில் - மேலே இருக்கும் சாலையில் பேருந்து வந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறது. இங்கிருந்தே பேருந்தை நிறுத்தச் சொல்லி அவன் உரத்த குரலில் கத்துகிறான். ஆனால், அவனுடைய சத்தம் யாருடைய காதிலும் விழவில்லை. பேருந்து கிளம்பிச் சென்று விடுகிறது.
வேகமாக நடந்து அவன் சாலைக்கு வருகிறான். மலைப் பகுதியில் வளைந்து வளைந்து வரும் சாலை. அவன் ஒரு ஓரத்தில் தன் தோள் பையையும், கையிலிருந்த வானொலி பெட்டியையும் தரையில் வைத்துவிட்டு, ஏதாவது வாகனம் வருகிறதா என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறான். அப்போது அங்கு ஒரு கிராமத்து பழ வியாபாரி வந்து சேர்கிறான். அவன் ஒரு கூடையில் ஆப்பிள் பழங்களை வைத்திருக்கிறான். அவன் அவற்றை திம்புவில் இருக்கும் மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்கிறான். இப்போது நம் இளைஞனும் அந்த பழ வியாபாரியும் ஏதாவது வாகனத்தை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஒரு கார் மலைப் பாதையில் வளைந்து வந்து கொண்டிருக்கிறது. இளைஞன் அதற்கு முன்னால் கையை நீட்டுகிறான். ஆனால், அது நிற்காமல் போய் விடுகிறது. அங்கு நின்று கொண்டிருப்பதை விட, சற்று முன்னால் போய் நிற்பது நல்லது என்று நினைக்கும் இளைஞன், தன் தோள் பையை எடுத்துக் கொண்டு முன்னால் நடக்கிறான். பழ வியாபாரி தன் ஆப்பிள் கூடையில் கால்களை நீட்டி சாய்ந்து கொண்டு ஆப்பிள் பழத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறான்.
சாலையின் இன்னொரு இடத்தில் போய் தன் தோள் பையை தரையில் வைத்து விட்டு, அதன் அருகில் அமர்கிறான் இளைஞன். அவனுடைய சிறிய வானொலி பெட்டியில் மேற்கத்திய இசை முழங்கிக் கொண்டிருக்கிறது. நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கார் வருகிறது. கையை நீட்டுகிறான். காரில் இடமில்லை. அதற்குப் பிறகும் நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. வாகனம் எதுவும் வருவதற்கான அறிகுறியைக் காணோம்.
நேரம் இருட்ட ஆரம்பிக்கிறது. குளிராக இருக்கிறது. குளிரில் நடுங்க ஆரம்பிக்கிறான் இளைஞன். பின்னர் என்ன நினைத்தானோ- நடந்து சென்று முன்பு ஆப்பிள் பழ வியாபாரி அமர்ந்திருந்த இடத்திற்கு வருகிறான். ஆப்பிள் வியாபாரி தலையை கம்பளியால் போர்த்திக் கொண்டு, நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறான். வயதான அந்த ஏழை வியாபாரியுடன், நம் இளைஞனும் கலந்து கொள்கிறான். இருவரும் தாங்க முடியாத குளிரின் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நெருப்பிற்கு முன்னால் அமர்ந்து சுகம் தேடுகின்றனர்.