யுதிஷ்டிரன் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4513
கிராமத்திலேயே மிகவும் வயது அதிகமான கிழவன் தன்னுடைய வழக்கப்படி குச்சியைத் தரையில் ஊன்றியவாறு, சற்று இருமினான். அவன் என்னவோ கூறப் போகிறான் என்பதற்கான அடையாளம் அது. தொண்ணூறு வருடம் பழமையான அந்த தொண்டைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த சத்தத்தையும், தரையில் தட்டிய சத்தத்தையும் கேட்டு மக்கள் உஷாரானர்கள், மிகவும் அமைதியாக அமர்ந்து அவன் கூறப் போவதைக் கேட்பதற்கு காத்திருந்தார்கள்.
ஆனால், இன்று எதுவும் நடக்கவில்லை. அவனுடைய குச்சி அங்கிருந்த சேற்றில் பட்டபோது, சத்தமெதுவும் கேட்கவில்லை. தொண்டைக்குள்ளிருந்து 'கரகர' சத்தமும் வெளியே வரவில்லை.
ஆனால், சுற்றிலும் பலமான பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. யாரையும் அமைதியாக இருக்கச் செய்யும் அளவிற்கு அங்கு எதுவும் நடக்கவில்லை. அப்போது கிழவனின் தளர்ந்து போன குரல் கேட்டது: 'சரி.... இனி என்ன செய்வது?'
எல்லோரின் பார்வையும் அவன் மீது பதிந்தது. அந்த கண்களில் எந்தவொரு விருப்பமோ எதிர்பார்ப்போ தெரியவில்லை.
'ஒரு தடவை பங்களாவின் கதவைப் போய் தட்டலாம்' - அவன் மெதுவான குரலில் சொன்னான்.
எல்லோரும் எழுந்தார்கள். சேற்றின் வழியாக நடந்து பங்களாவின் உயரமான இரும்பு கதவை அடைந்தார்கள். தங்களுடைய தளர்ந்து போன கைகளால் கதவைத் தட்டினார்கள். உள்ளே பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. தொடந்து அவர்கள் இரும்பு கதவை பலமாக தட்டினார்கள். உள்ளே பேரமைதி தொடர்ந்தது.
ஒரு கிராமத்து இளைஞன் கிழவனின் குச்சியை வாங்கி, கதவில் பலமாக அடித்தான்.
'வேண்டாம், மகனே. குச்சி ஒடிந்து விட்டால், நான் எப்படி நடப்பேன்?' - கிழவன் கூறினான். ஆனால், இளைஞன் அதைக் கேட்கவில்லை. அவன் குச்சியால் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தான். மேலே இருந்து பங்களாவின் பெரிய எஜமானர் எட்டிப் பார்த்து விட்டு, திட்டினார்.
'என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு இந்த நேரம்தான் கிடைத்ததா? நள்ளிரவு வேளையில் வந்து எங்களுடைய வீட்டை வந்து ஆக்கிரமிக்கிறீர்களா?'
'ஆக்கிரமிக்கவில்லை, எஜமான். நாங்கள் ஒரு கோரிக்கையுடன் வந்திருக்கிறோம்' -- கிழவன் ஒரு வகையில் கூறி முடித்தான்.
'இப்படித்தான் கோரிக்கையை வெளிப்படுத்துவதா? கதவை இப்படி தட்டியா? தூக்கத்தைக் கெடுத்து விட்டீர்கள், நாசமாய் போனவர்கள்....!'
கிழவனின் தொண்ணூறு வயதைக் கொண்ட மெலிந்த சரீரம் நடுங்கியது. நரைத்த முடியும் தாடியின் உரோமங்களும் சிலிர்த்தன. அவனுடைய குரல் நடுங்கியது:' 'ஆக்கிரமிப்பு அல்ல, எஜமான். நாங்கள் பசியின் காரணமாக...'
'பசி! அதற்கு உங்களுக்காக இங்கு தர்மசாலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறதா? எங்களுடைய நிலம் முழுவதும் நாசமாகி விட்டது. விளைச்சல்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. அவற்றையெல்லாம் தாண்டி, நீங்கள்... நள்ளிரவு வேளையில்...' - பங்களாவின் பெரிய எஜமானரின் குரல் கோபத்தால் உயர்ந்து ஒலித்தது.
அதுவும் உண்மைதான். கிராமத்தில் பாதியையும் தாண்டி அதிகமான நிலம் அந்த பங்களாவில் இருப்பவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. அங்கு இருந்த விளைச்சல்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், அந்த மண்ணில் விவசாயம் செய்யும்போதும், விளைச்சல்களை எடுக்கும்போதும், அறுவடை முடிந்து உள்ளே தானிய அறையை நிறைக்கும்போதும் கிராமத்திலிருக்கும் சாதாரண மக்களின் வியர்வை அதில் இருந்தது. அவர்கள் பெரிய ஜமீன்தார்களின் பணியாட்களாக இருந்தார்கள். சொந்தத்தில் நிலம் வைத்திருப்பவர்களும் அறுவடை காலத்தில் ஜமீந்தாரின் நிலத்திற்கு வேலைக்குச் செல்வார்கள். நான்கு கட்டு தீவனைத்தையும் சிறிது தானியத்தையும் கொண்டு வருவார்கள்.
'எஜமான், நீங்க கொஞ்சம் தானியத்தைக் கடனாகத் தந்தால்....?'
'கடன்? இந்த மோசமான நேரத்தில் கடனாகக் கொடுப்பதற்கு எங்கே தானியம் இருக்கிறது? இங்கேயிருந்து சீக்கிரமா கிளம்புங்க.'
'எங்கே போவது எஜமான்? வீடும் இல்லை.... அடுப்பும் இல்லை. விளைச்சலும் இல்லை. உணவும் இல்லை. சாப்பிடுவதற்கு எதுவுமில்லை.'
அப்போது பங்களாவின் பெரிய எஜமானரின் இளைய மகன் துப்பாக்கியுடன் தன் தந்தையை நோக்கி வந்தான்.
'போறீங்களா? இல்லாவிட்டல்.... துப்பாக்கியால் சுடணுமா?' -- அவன் துப்பாக்கியின் குழாயை அவர்களை நோக்கி நீட்டினான்.
எல்லோரும் பயந்து கதவுக்கருகிலிருந்து விலகினார்கள்.
இளைஞர்கள் சொன்னார்கள். 'நாங்கள் போக மாட்டோம். எல்லோரும் இங்கேயே நில்லுங்க. இது ஒரு கதவு. இதே போன்ற பத்து கதவுகளை அடித்து நொறுக்கக் கூடிய பலம் எங்களுடைய பசிக்கு இருக்கிறது.'
'ஆனால், அவர்களின் கையில் துப்பாக்கி இருக்கிறது' -- வயதானவர்கள் ஞாபகப்படுத்தினார்கள்.
'ஒரே ஒரு துப்பாக்கியை வைத்து எவ்வளவு பேரைக் கொல்வார்கள்? எப்போதாவது குண்டு தீரும். தீர்வதற்கு முன்பே நாம் கதவை அடித்து நொறுக்குவோம். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பிடித்தால், கதவு தகர்ந்து விடும்.'
'வேண்டாம், மகனே, நான் ஏற்கெனவே இறந்து விட்டேன். '
'இறந்து போயிருந்தால், பிறகு... ஏன் மரணத்தைப் பார்த்து பயப்படுகிறீர்கள்?'
சிறிது நேரம் அவர்கள் அதே இடத்தில் நின்று தங்களுக்குள் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு கிராமத்திலேயே மிகவும் வயதான கிழவன் குச்சியை இறுக பிடித்தவாறு திரும்பி நடந்தான். அவனுக்கு தன்னுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் இரத்தத்தைப் பார்க்கக் கூடிய தைரியம் இல்லை.
அவன் திரும்பி நடந்ததும், மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குப் பின்னால் நடந்தார்கள். பங்களாவிலிருந்து பின்னோக்கி திரும்பி நடந்த அவர்களில் யாருக்கும் தங்களுடைய தலைவனின் வார்த்தையை மீறக் கூடிய தைரியம் இல்லை.
அவர்கள் மீண்டும் திரும்பி வந்து தங்களுடைய பழைய கட்டிலில் அமர்ந்தார்கள். கிழவன் தன் நெற்றியில் கையை வைத்தவாறு வானத்தைப் பார்த்தான். அங்கு ஒளி குறைவான நிலவு தெரிந்தது. வானத்தில் நெஞ்சுப் பகுதியில் இருக்கக் கூடிய ஒரு காயத்தைப் போல நிலவு அவனுக்குத் தெரிந்தது. சுற்றிலுமிருந்த நட்சத்திரங்கள் வேதனையை வெளிப்படுத்தக் கூடிய துளிகளாக தெரிந்தன.
'எனக்கு தோன்றுவது -- நாம் ஆற்றின் அந்தக் கரைக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள பெரிய நகரத்தில் வேலை தேடுவோம் பிள்ளைகள் பசியால் இறந்து போய் விடாமல் பார்ப்போம்... என்ன?' -- அவன் மற்றவர்களிடம் தன்னுடைய கருத்தைத் தொடர்ந்து எதிர்பார்த்த சம்மதத்தைக் கேட்டான்.
'அந்த மாளிகையின் சுவர்களைத் தகர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. உள்ளே எல்லோருக்கும் வசிப்பதற்கு இடம் இருக்கிறது. தேவைப்படும் அளவிற்கு தானியமும்.....' -- ஒரு இளைஞன் மீண்டும் தன் மனதிற்குள் இருக்கும் விஷயத்தை உரத்த குரலில் கூறினான்.
'ஆமாம்... இதுவும் ஒரு வழி. ஆனால், இதில் ஏராளமான பேரின் உயிர்களை இழக்கப்பட வேண்டியிருக்கும். தவிர, உங்களில் இறக்கக் கூடிய ஆட்களின் இறந்த உடலின் மீது ஏறி அமர்ந்து தப்பிக்கும் ஆட்கள் எப்படி வயிறு நிறைய உணவு சாப்பிடுவார்கள்? நல்லது... நாம் இப்போதே ஆற்றின் அந்தக் கரைக்குச் செல்வோம். நகரத்தில் கஷ்டப்பட்டு, வயிறை நிறைப்போம். பிறகு.... சக்தியைப் பெற்று விட்டு, ஆலோசிப்போம். மாளிகையிலிருக்கும் அயோக்கியர்களை என்ன செய்வது? அவர்களை உண்மையிலேயே நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். ஆனால், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை' -- கிழவன் நடுங்குகிற குரலில் தன் கருத்தை வெளியிட்டான்.