யுதிஷ்டிரன் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4513
அது பொய் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், வேறு எந்தவொரு வழியும் இல்லாமலிருந்தது. அந்த படகு நோஹாவின் பெட்டகமொன்றும் இல்லை. பசுவையும் எருமையையும் ஒட்டகத்தையும் குதிரையையும் காளையையும் முயலையும் சிங்கத்தையும் நரியையும் நாயையும் அணிலையும் காகத்தையும் நத்தையையும் மனிதர்களையும் ஏற்றி அக்கரைக்குக் கொண்டு செல்லக் கூடிய பெட்டகம்...
எல்லோரும் படகில் ஏறி அமர்ந்தார்கள். அமர்வதற்கு இடம் கிடைக்காதவர்கள் பாய்மரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அந்த அழகான தோற்றத்தைக் கொண்டிரருந்த இளைஞனின் பெயர் மங்கது. அவனுடைய தாய் ஏராளமான கடவுள்களை வணங்கி, வழிபாடு செய்த பிறகு பிறந்தவன் அவன். அவன் தன்னுடைய கருப்பு, வெள்ளை நிறத்தைக் கொண்ட மோத்தி என்ற நாயுடன் படகில் ஏற முயற்சித்தபோது, படகோட்டி கூறினான்: 'இப்போதே எடை அதிகமாகி விட்டது. இந்தச் சூழ்நிலையில் நீ நாயையும் கொண்டு வந்திருக்கிறாய். இந்தப் படகில் மனிதர்களுக்கே இடமில்லை. அப்படிப்பட்ட நிலையில் நீ நாயையும் அழைத்துக் கொண்டு வந்து...'
மங்கது தர்மசங்கடமான நிலையில் இருந்தான் அவன் கூறினான்: 'இது.... மோத்தி.'
அப்போது படகோட்டி கூறினான்: 'மோத்தியாக இருந்தாலும், ஹீராவாக இருந்தாலும், தேவையில்லை. என் படகில் நாய்களைக் கொண்டு போக முடியாது. இதை விட்டுட்டு வா.'
மங்கது இரண்டடிகள் பின்னால் வைத்தான். 'மோத்தியைக் கொண்டு போக முடியவில்லையென்றால், நானும் வரவில்லை.'
மங்கதுவின் தாய் நீண்ட காலத்திற்கு முன்பே மரணமடைந்து விட்டாள். அவனுடைய தந்தை ஏதோ ஒரு காலத்தில் எஜமான்களிடமிருந்து பணம் கடனாக வாங்கியிருந்தான். அதற்காக இன்று அவன் அந்த பழைய கடனை அடைப்பதற்காக அவர்களுக்கு பணி செய்து கொண்டிருக்கிறான். அவர்களுடைய மிருகங்களைப் பார்த்துக் கொள்கிறான். எஜமான்மார்களின் மாளிகையில் அவனுக்குக் கிடைக்கும் உணவை அவன் மோத்திக்கும் தந்து கொண்டு, சாப்பிடுகிறான்.
இரவில் தனியாக இருக்கும்போது மனம் நிறைவாக இருப்பததைப் போல தோன்றும். அப்போது மோத்தியிடம் அவன் தன்னுடைய துயர கதையைக் கூறுவான்.
படகிலிருந்து யாரும் அவனை அழைக்கவில்லை. 'எதற்காக நீ அந்த நாய்க்காக உன்னுடைய உயிரைப் பணயம் வைக்கிறாய்? வா... வந்து படகில் ஏறு. நல்ல நிலை உண்டான பிறகு, திரும்பி வருவோம். உன் மோத்தி இங்கேயே உன்னை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கும். அதற்கு உயிர் கொடுத்த கடவுள், அதற்கு....'
யாரும் எதுவும் கூறவில்லை. வயதான மனிதன் மட்டும் அவனை ஒரு முறை அழைத்தார். ஆனால், அந்த மனிதனின் பலவீனமான குரல் அலைகளில் காணாமல் போய் விட்டது.
படகு புறப்பட்டது.
பசுக்களும் எருமைகளும் காளைகளும் கரையிலேயே விடப்பட்டு விட்டன. இருட்டில் அவற்றின் கண்களை யாராலும் பார்க்க முடியவில்லை. அவை அழுதனவா...? அல்லது.... அவர்கள் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்களா? தெரியவில்லை.
எல்லா ஆசைகளும் முடிவுக்கு வரும்போதும், ஒரு எதிர்பார்ப்பு எஞ்சியிருக்கும்.
அந்த மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தபோது, புத்த பகவானுக்கும் இதே போன்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியிருக்க வேண்டும்.
மங்கது மோத்தியைக் கையில் தூக்கியவாறு, படகு நகர்ந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
படகில் அமர்ந்திருந்தவர்கள் உண்மை, உண்மையற்ற தன்மை ஆகியவற்றின் நடுவில் உள்ள ஒரு தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். தாங்கள் உண்மையிலேயே படகில்தான் அமர்ந்திருக்கிறோம் என்றும், படகு நீரில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் சில நேரங்களில் அவர்களுக்கு தோன்றும். சில நேரங்களில் தோன்றும்.... இப்போதும் கரையில் சேற்றில்தான் அமர்ந்திருக்கிறோம் என்று தங்களுடைய எஞ்சிய கால்நடைகள், சொறி நாய்களுக்கு மத்தியில் முன்னால் ஆற்றின் பரந்த வடிவத்தைப் பார்க்கும்போது, காலம் நின்று போய் விடுமோ என்ற உணர்வு அவர்களுக்குள் உண்டாகும்.
படகோட்டியும் மிகவும் களைத்துப் போயிருந்தான்.
தங்களுடைய கரையிலிருந்து எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பதோ, அக்கரை இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதோ அவர்களுக்கு சிறிதும் தெரியாது. நான்கு திசைகளிலும் பயங்கரமான இருட்டு பரவியிருந்தது. நான்கு பக்கங்களிலும் கீழேயும், மேலேயும்.
நட்சத்திரங்களையும் பார்க்க முடியவில்லை, மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்க வேண்டும்.
நீண்ட காலம் கடந்து சென்றது. மணிகள், வாரங்கள், மாதங்கள், சகாப்தங்கள், யுகங்கள்.... எல்லோரும் அதை உணரவும் செய்தார்கள். ஆனால், இரவு அதே போலத்தான் இருந்தது. அந்த இரவு வேளையின் இருட்டு நான்கு திசைகளிலும் பரவியிருந்தது.
அப்போது படகோட்டி இரண்டு துடுப்புகளையும் கீழே போட்டான். மனப்பூர்வமாக அதைச் செய்தானா? அல்லது அவனுடைய கைகள் மரத்துப் போய், துடுப்பு கையிலிருந்து நழுவி கீழே விழுந்து விட்டதா?
துடுப்பு நீரில் விழும் சத்தம் கேட்டது. மெல்லிய சத்தம்....
துடுப்புகளை நீரில் போட்டு விட்டு, அவன் தளர்ந்து போய் அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.
அவன் தளர்ந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஆட்கள் அவனுடைய கைகளையே பார்த்தார்கள். 'என்ன....? இனி கையை வைத்து படகைச் செலுத்தலாம் என்ற எண்ணமா? துடுப்பை கையில் காணோமே?'
துடுப்பைப் பற்றி விசாரிக்க முயற்சித்தவர்களின் வாய்களிலிருந்து ஒரு கூப்பாட்டைப் போன்ற சத்தம் உயர்ந்து ஒலித்தது. அது நீரில் எதிரொலித்தது.
எல்லோரும் அந்தச் சம்பவத்தைப் பற்றி தங்களுக்குள் விவாதித்தார்கள். அவர்கள் பயத்தில் இருந்தார்கள்.
அப்போது ஒரு ஆள் எழுந்தான். அவன் எப்போதும் திருவிழாக்களில் குஸ்தி சண்டையில் போட்டி போடக் கூடியவன். எண்ணெய் தேய்த்து, மரக் கட்டையைச் சுழற்றியவாறு நடப்பான்.
உடல் முழுவதிலும் மண்ணைப் பூசிக் கொண்டு, குஸ்தி போடுவதற்காக தன்னைத் தயார் பண்ணுவான். அந்தக் காலமெல்லாம் கடந்து போய் விட்டது. இளமையின் அந்த இரத்தத் துடிப்பு நின்று போயிருந்தாலும், அவனுக்குள் இப்போதும் பழைய உற்சாகமும், தைரியமும் எஞ்சியிருந்தன.
அவன் தன்னுடைய சட்டையைக் கழற்றி விட்டு, கைலியைத் தார் பாய்ச்சி கட்டிவிட்டு, தொடையைத் தட்டியவாறு எஞ்சியிருந்தவர்களிடம்: 'நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் நீந்தி அக்கரைக்குச் செல்வேன். அங்கிருந்து துடுப்புடனோ, படகுடனோ திரும்பி வருவேன். நீங்கள் அனைவரும் மன அமைதியுடன் இருங்க, அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ திரும்பக் கூடாது. படகு கவிழ்ந்து விடக் கூடாது. நான் இப்போதே போய் விட்டு, வருகிறேன்.'