யுதிஷ்டிரன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4513
யுதிஷ்டிரன்
(பஞ்சாபி கதை)
அஜீத் கவுர்
தமிழில்: சுரா
இந்த முறை மீண்டும் வெள்ளப் பெருக்கு வந்தது. கிராமம் முழுவதும் கலங்கிய நீரால் நிறைந்து காணப்பட்டது.
ஏரிகள் கரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்க, அருகிலிருந்த மரங்களால் உறுதியுடன் நிற்க முடியவில்லை. அவை சிறிதும் எதிர்பாராமல் பெயர்ந்து விழுந்தன. பெரிய மரங்கள் மட்டும் தப்பித்தன. ஆனால், நீரின் பலமான ஓட்டம் அவற்றை அசைப்பதைப் போல தோன்றியது. எனினும், அவை தைரியம் கொண்ட வீரர்களைப் போல உறுதியாக நின்றிருந்தன.
கிராமத்தின் பலம் குறைவாக இருந்த வீடுகள் இடிந்து விழுந்தன. மின்னல், இடி முழக்கம் ஆகியவற்றுடன் மிகப் பெரிய அளவில் மழை பெய்தபோது, வீடுகளின் சுவர்கள் குளிரில் பயந்து நடுங்குவதைப் போல தோன்றியது.
விளைந்த பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளுக்குள் தானியக் கிடங்குகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த தானியங்களும், சமையலறைகளிலிருந்த அடுப்புகளும் நீரில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டன. விரிப்புகளும் போர்வைகளும் மெத்தைகளும் ஆடைகளும் கட்டில்களும் பாத்திரங்களும் கலப்பைகளும் நீரில் மிதந்து சென்றன.
ஆட்கள் ஏதாவது உறுதியாக இருந்த வீட்டில் சுருண்டு கொண்டு அமர்ந்திருந்தார்கள். இல்லாவிட்டால் பலம் கொண்ட பெரிய மரக் கிளைகளில் ஏறி அமர்ந்தார்கள்.
நாய்கள், காகங்கள் ஆகியவற்றின் சத்தம் கேட்கவில்லை. நாலா திசைகளிலும் பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. ஆழமான அமைதியும் இரைச்சலுடன் வந்து கொண்டிருந்த நீரோட்டமும்...
குழந்தைகள் மட்டும் அவ்வப்போது தேம்பித் தேம்பி அழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பசியாலும் பயத்தாலும்... சுற்றிலும் நீர் நிறைந்து காணப்பட்டது. ஆனால், பருகுவதற்கு ஒரு துளி நீர் கூட இல்லை. பலமாக மழை பெய்ய ஆரம்பித்து விட்டால், ஆட்கள் பயந்து போய் வானத்தைப் பார்ப்பார்கள். ஒன்றோ இரண்டோ துளிகள் வாயில் வந்து விழும். தொண்டையிலிருக்கும் பலமான வேதனை தற்காலிகமாக குறையும்.
அவர்களுடைய வாழ்க்கையை அடித்துக் கொண்டு சென்ற நீர்.... அதே நீரின் இரண்டு துளிகளுக்காக அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.
பல நேரங்களில் வரும் நீரிலிருந்து ஒரு கை நிறைய எடுத்து பருக வேண்டும் என்று மனம் ஆசைப்படும். ஆனால், அதே நீரில் மிதந்து வரும் பிணத்தையோ, இறந்து விட்ட கன்றுக்குட்டிகளையோ பார்த்து விட்டு, ஏமாற்றத்துடன் எச்சிலை உள்ளே போகும்படி செய்வார்கள்.
ஐந்தாவது நாள் நீர் வடிய ஆரம்பித்தது.
கிராமத்தின் தெருக்களில் சேற்றையும், குழிகளையும் பரிசாக தந்து விட்டு, நீர் வடிந்தது.
ஆட்கள் உறுதியான வீடுகளிலிருந்தும், மரங்களின் உச்சிகளிலிருந்தும் கீழே இறங்கினார்கள். அவர்களுக்கு கடுமையான பசி இருந்தது. ஆனால், சாப்பிடுவதற்கு சிறிதளவு தானியம் கூட மீதமில்லாமலிருந்தது.
நீர் உறுதியான வீடுகளிலிருந்து தோல்வியடைந்து, திரும்பி வந்தது. சுவர்களின் கீழ்ப் பகுதிகளில் மட்டும் ஈரம் படிந்திருந்தது. கீழேயிருந்த அறைகளிலும் கூடங்களிலும் இருந்த பொருட்களை எடுத்து மேலே கொண்டு போய் வைத்தார்கள். அந்த பங்களாவின் தானிய அறை நீரால் நிறைந்திருந்தது. அந்த மாளிகையின் எஜமானி சொன்னாள்: 'கொஞ்சம் நல்ல வெயில் வந்தால், மொட்டை மாடியில் தானியத்தைக் கொண்டு போய் காய வைக்கலாம். வெயிலும் காற்றும் பட்டால், கிருமிகளோ, புழுக்களோ இருக்காது.'
ஆனால், தற்காலிகமாக தானியத்தை மறைத்து வைக்க வேண்டியதிருந்தது. காரணம் -- சுற்றிலும் எண்ணற்ற பசிக்கக் கூடிய வயிறுகள் இருந்தன. பசிக்கும் வயிறுகளுடன் பயத்துடன் இருந்த ஆட்கள்...
இறுதியில் பங்களாவில் இருந்தவர்கள் தங்களுடைய உயரமான இரும்புக் கதவை உள்ளேயிருந்து இறுக அடைத்துக் கொண்டார்கள்.
ஆனால், ஆட்களின் சத்தம், தேம்பித் தேம்பி அழும் குழந்தைகளின் வேதனை நிறைந்த முனகல்கள், பெண்களின் அழுகை -- அனைத்தும் காற்றில் கலந்து பங்களாவைச் சுற்றி மோதிக் கொண்டிருந்தன. காற்றில் பறந்து வந்த அவர்களின் கையற்ற சத்தத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
சேற்றிலும் குழிகளிலும் சிக்கிக் கொண்ட ஆட்கள் மெல்ல.... மெல்ல நடந்து இழந்து விட்ட தங்களுடைய வீடுகளை நோக்கி சென்றார்கள். வெள்ளப் பெருக்கு அவர்களுடைய வீடுகளை ஒட்டு மொத்தமாக தகர்த்து விட்டிருந்தது.
ஆட்கள் தங்களுடைய இடிந்த வீடுகளிலிருந்து ஒடிந்து போன கட்டில்களை வெளியே கொண்டு வந்தார்கள். சேறு படிந்த கிராமத்தின் மண்டபத்தில் வந்து அமர்ந்தார்கள்.
ஏராளமான கட்டில்கள் நீரில் மிதந்து போய் விட்டிருந்தன. ஆனால், சிலரின் கட்டில்கள் வாசற் படியில் சிக்கிக் கொண்டதால், திரும்பவும் கிடைத்தன. அவற்றின் கயிறுகள் அறுந்து போயிருந்தன. அவர்கள் அமர்ந்து ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தார்கள்.
எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பங்களாவிற்குச் சென்று அவர்களை அழைக்கலாம் என்பது இளைஞர்களின் கருத்தாக இருந்தது. ஒருவேளை இரும்புக் கதவுகளுக்கு அப்பால் தங்களுடைய சத்தம் கேட்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த கடினமான இதயம் கொண்டவர்களிடம் சிறிது கனிவு கூட தோன்றலாமே! ஒரு வேளை அவர்கள் தங்களுடைய பாதுகாத்து காப்பாற்றி வைத்திருக்கும் தானியத்தில் ஒரு பகுதியைத் தங்களுக்குக் கடனாக தந்தாலும் தரலாமே என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இருக்காது என்று வயதில் மூத்தவர்கள் நினைத்தார்கள். காரணம் -- அவர்கள் வாழ்க்கை முழுவதும் இரும்புத் திரைக்குள் இரும்பு மனிதர்களுடன் வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் இறந்தவர்களுக்காக் கூட அழ மாட்டார்கள். அவர்களின் மிடுக்கான பேரமைதிதான் அவர்களுடைய கலாச்சாரம். விவரமில்லாதவர்கள் பட்டினி கிடப்பவர்கள்தான். நாகரீகம் இல்லாதவர்கள் சுவர்கள் இடிந்த, மேற்கூரை பெயர்ந்து விழும் வீடுகளின் உரிமையாளர்கள்தாம்.
ஆனால், அவர்களுக்கு பசி இருந்தது. என்ன செய்வார்கள்? எங்கு செல்வார்கள்?
இந்த அளவிற்கு பெய்து ஒரு வழி பண்ணி விட்டு, வானம் தெளிவான நிலையில் இருந்தது. நீல வானம் மிக சுத்தமாக இருந்தது. எல்லாவற்றையும் கழுவி நீக்கி விட்டதைப் போல. இந்த அளவிற்கு பலமாக பெய்த பிறகு, இந்த வானம் இப்படி கள்ளங்கபடமற்ற தன்மையுடன் எப்படி தோன்றுகிறது?
ஒடிந்து போன கட்டில்களில் அமர்ந்து ஆட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளும் அழுது... அழுது சோர்வடைந்து போய் காணப்பட்டார்கள். ஏதாவது குழந்தையின் தாய் எப்போதாவது சற்று முனகுவாள்.
சாயங்காலம் ஆனது. வானத்தில் நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டின.
பிரளயம் முடிந்தது. எனினும், அது உண்மையிலேயே முடிந்ததா? அது இப்போதும் அவர்களைச் சுற்றி இருந்தது. இன்னொரு வடிவத்தில். இனி என்ன நடக்கும் என்ற பயத்துடன் இரைச்சலிட்டவாறு பாய்ந்து வரும் அலைகளின் பெயர் மட்டுமல்ல பிரளயம் என்பது. புதர்களுக்குள் மறைந்து இருந்து திடீரென்று வேகமாக தாவிக் குதிக்கும் ஒரு பயங்கரமான மிருகத்தைப் போன்றது பிரளயம்.