யுதிஷ்டிரன் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4513
இரவின் பாதி வேளை கடந்து விட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மிகவும் அமைதியாக கட்டிலை விட்டு எழுந்து ஆற்றின் கரையை நோக்கி நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பசியால் வாடிய பசுக்களும் எருமைகளும் காளைகளும் கிராமத்தைச் சேர்ந்த நாய்களும் சென்றன.
அவர்கள் ஆற்றின் கரையை அடைந்தார்கள். அங்கு நிறைய சேறு காணப்பட்டது. வெள்ளப் பெருக்கால் கரையிலிருந்த மணல் முழுவதும் அரிக்கப்பட்டு கொண்டு போகப்பட்டிருந்தது.
இரவின் இருட்டில் நிலவும், மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களும் தந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் நீர் மிகவும் கறுத்துப் போய் காணப்பட்டது. அதில் எவ்வளவோ பிணங்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தன. எவ்வளவோ அடுப்புகளும், கால் நடைகளும், கால் நடைகளின் தீவனங்களும், பாத்திரங்களும், மண் சுவர்களும், ஒடு வேய்ந்த மேற் சுரைகளும், குழந்தைகளின் பைகளும், நோட்டு புத்தகங்களும் அடித்துக் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், இன்று அந்த நீர் மிகவும் அமைதியாக காணப்பட்டது.
சேறு நிறைந்த நீரில் நிலவின் நிழலோ, நட்சத்திரங்களின் பிரகாசமோ தெரியாது. அந்தக் கரையையும் பார்க்க முடியவில்லை. கறுப்பு நிறத்தில் நீர்... ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் ஆட்களுக்கு இருந்தது. அந்தக் கரையில் இருக்கும் மண் இங்கிருப்பதை விட சிறந்ததாக இருக்கும்.
அந்தக் கரைக்குக் கடந்து செல்வதற்கு படகு எதுவும் இல்லை.
அருகில் எந்த இடத்திலும் யாரும் இல்லை. சுற்றிலும் ஒரு வெறுமை மட்டும்....
ஆனால், அவர்களுக்கு எதிர்பார்ப்பிற்கு வழிவகை இருந்தது. புலர் காலைப் பொழுதிற்கான எதிர்பார்ப்பு, படகிற்கான எதிர் பார்ப்பு, பயணத்தின் நோக்கம் என்பதற்கான எதிர்பார்ப்பு....
கொஞ்சம் கொஞ்சமாக வானத்திலிருந்த கறுப்பு விலகத் தொடங்கியது. நட்சத்திரங்களும் மறைந்தன. பறவைகள் சத்தம் உண்டாக்கவோ, கோழிகள் கூவவோ இல்லை. பால்காரனின் அழைப்பு ஒலியும் கேட்கவில்லை. ஆனால், பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பறவைகளும் காகங்களும் வெறுமையைப் பார்த்து விட்டு, தூர இடங்களை நோக்கி சென்றன. பால் குடங்கள் வெள்ளப் பெருக்கிக் அடித்துச் செல்லப்பட்டிருந்தன.
பொழுது புலர்ந்தது. சூரியனின் தோற்றம் மேலே தெரிந்தது. குழந்தைகள் பசியின் காரணமாக, செயலற்று போயிருந்தனர். இப்போது அவர்கள் அழவில்லை. பசியை நிறைய தாங்கி, பெரியவர்களுக்கு பழகிப் போய் விட்டிருந்து. ஆனால், தாகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எல்லோரின் உதடுகளும் வறண்டு போய் விட்டிருந்தன. அவர்களுக்கு முன்னால் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், அதிலிருக்கும் நீரைக் கையில் எடுத்து வாய்க்குள் ஊற்றுவதற்கான தைரியம் யாருக்கும் இல்லாமலிருந்தது. காரணம் -- ஆற்றில் இறந்த உடல்கள் மிதந்து வந்து கொண்டிருந்தன. பசுக்ளும் எருமைகளும் சேற்றில் சரிந்து கிடந்தன. நாய்களும் களைத்துப் போய் படுத்திருந்தன.
எல்லோரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அந்தக் கரைக்குச் செல்லக்கூடிய படகை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர். அக்கரை மண் இதை விட சிறந்ததாக இருக்கும். அங்கிருந்து நகரத்திற்குச் செல்வதற்கு வழி இருக்கும். நகரத்தின் உயர்ந்த மாளிகைகளில் நீர் புகாது.
நகரத்தில் பருகுவதற்கு வேறு நீர் இருக்கும். பிரகாசித்துக் கொண்டிருக்கும் விளக்குகளும் இருக்கும். பணிக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். உணவும்... உணவும்... உணவும்.
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள், நூறு நாட்களாக தோன்றும்.
இறுதியில் பகல் மங்கலானது. இறுதியில் மங்கித்தான் ஆக வேண்டும். ஆனால், மிகவும் தாமதமாகத்தான் மங்கியது.
இரவு வந்தது. கறுத்து இருண்ட இரவு.
நீண்ட நேரம் கடந்தது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் -- ஏராளமான நூற்றாண்டுகளும் ஏராளமான யுகங்களும் இருட்டில் கடந்து சென்ற பிறகு, தூரத்தில்... மிகவும் தூரத்தில் ஒரு பிரகாசம் ஆடியவாறு வருவதைப் பார்த்து, வயதான மனிதர்கள் அந்த திசையில் கூர்ந்து பார்த்தார்கள். வயது சற்று குறைந்தவர்களும் குழந்தைகளும் எழுந்து அந்த பிரகாசத்தைப் பார்த்தார்கள்.
வயதான ஆள் நடுங்கும் குரலில் கூறினான்: 'ஏதாவது படகாக இருக்கும்.'
'ஆமாம்... ஏதோ படகில் தொங்க விடப்பட்டிருக்கும் லாந்தர் விளக்குதான்' -- எல்லோரும் கூறினார்கள்.
அந்த பிரகாசம் நெருங்கி வந்ததும், எல்லோரும் எழுந்து நின்றார்கள். படகுதான். ஆமாம்... படகேதான். அதில் ஒரு மனிதன் இருந்தான். துடுப்பின் சத்தமும் கேட்டது. ஆடிக் கொண்டிருந்த லாந்தர் விளக்கும் தெரிந்தது. படகு கரையை அடைந்தது. எல்லோரும் படகோட்டியைச் சுற்றி நின்றார்கள். தங்களை அக்கரையில் கொண்டு போய் விட வேண்டுமென்று அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள்.
அவன் மிகவும் சோர்வடைந்து போய் காணப்பட்டான். அவன் சொன்னான்: 'நான் தூங்கட்டுமா?'
'தூங்குவதா? இது தூங்குவதற்கான நேரமா? எங்களுடைய வீடுகள் இடிந்து போய் விட்டன. நிலம் முழுவதும சேறாக ஆகி விட்டது. நீ எங்கே உறங்குவே? எங்களைப் பார். நாங்கள் தூங்கி எவ்வளவு நாட்களாகி விட்டன! பசித்து, தாகமெடுத்து முதலில் மரங்களின் உச்சிகளில் ஏறி உட்கார்ந்திருந்தோம். இப்போது உன்னை எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். நேற்று இரவிலிருந்து...'
'நான் வழி தவறி இங்கு வந்து விட்டேன். இருள் மிகவும் கடுமையாக இருக்கிறது. நட்சத்திரங்களைப் பார்த்து முதலில் நான் வழியைக் கண்டு பிடித்தேன். ஆனால், இன்று என்ன நடந்ததோ என்னவோ? இந்த ஆற்றுக்கே அகலம் அதிகமாக ஆகி விட்டிருக்கிறது. ஒருமுறை கரையிலிருந்து கிளம்பினால், நீர் நம்மை எங்கு கொண்டு செல்லும் என்பதைப் பற்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை.'
'வா... பரவாயில்லை. நாம் எல்லோரும் சேர்ந்து அக்கரைக்குச் சென்று ஓய்வு எடுக்கலாம், உணவு சாப்பிடலாம். நீ எங்களை அக்கரையில் கொண்டு போய் விட்டால் மட்டும் போதும்...'
'அக்கரையில் அதற்காக தர்மசாலை திறந்து வைத்திருக்கிறார்களா என்ன? எல்லா இடங்களிலும் இருட்டும், பசியும்தான். நீங்களும் இங்கேயே தங்குங்க. நானும் கொஞ்சம் தூங்குறேன்.'
வயதான ஆள் நடுங்கிக் கொண்டிருக்கும் குரலில் கூறினான்: 'காலை வரை இங்கு இருந்தால் நாங்கள் இறந்து விடுவோம். யாருமே எஞ்சியிருக்க மாட்டோம். அக்கரையில் உணவு இல்லையென்றால், நீராவது கிடைக்குமல்லவா? உன் குழந்தைகளை மனதில் நினைத்துக் கொண்டு, நீ எங்களை அந்தக் கரையில் கொண்டு போய் விடு.'
படகோட்டியின் இதயம் கனிவானதாக மாறியது. அவன் சொன்னான்: 'சரி... அப்படியென்றால் ஏறுங்க. ஆனால், பத்திரம்... இந்த பசுவையும் எருமையையும் இங்கேயே விட்டுடுங்கள். இவற்றிற்கு உயிர் அளித்த கடவுள் உணவையும் தருவார்.'