யுதிஷ்டிரன் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4513
எல்லோரையும் விட வயதான ஆள் மிகவும் பலவீனமான குரலில் கூறினான்: 'ஒரு பிரயோஜனமும் இல்லை. நீர் நிறைந்த இந்த ஆற்றைக் கடப்பது என்பது எளிதான விஷயமல்ல.'
'நாம் செய்வது எளிய காரியம் மட்டுமில்லையே, மாமா!'
பல வருடங்களுக்கு முன்பு குஸ்தி பயில்வானாக இருந்த அவன் மிகவும் பணிவுடன், அதே நேரத்தில் உறுதியான குரலில் கூறி விட்டு, ஆற்றுக்குள் குதித்தான்.
பிறகு... சிறிது நேரம் நீருடன் போராடி, அவன் நீந்தித் துடிக்கும் சத்தம் கேட்டது. படிப்படியாக அது நகர்ந்து சென்றது.
ஆனால், ஆற்றின் அகலம் மிகவும் அதிகமாக இருந்தது. வெறும் தைரியத்தை மட்டும் வைத்துக் கொண்டு அக்கரைக்குச் செல்வது என்பது சிரமமான விஷயமே! தன்னுடைய கைகளும் கால்களும் கொஞ்சம் கொஞ்சமாக, மரத்துப் போவதைப் போல அவனுக்குத் தோன்றியது. கறுத்து, வெற்றிப் பெருமிதத்துடன் இருக்கும் அந்த நீருடன் போராடுவது என்பது கஷ்டமான ஒரு விஷயம். அதன் சக்தி அஞ்சக் கூடிய விதத்தில் இருந்தது.
நீந்தி... நீந்தி தான் ஒன்றிரண்டு முறைகள் மூழ்குவதைப் போல அவனுக்குத் தோன்றியது. மரணம், பிணங்கள் ஆகியவை நிறைந்த நீரின் ஒன்றிரண்டு மடக்குகளை, தெரியாமலே அவன் குடித்து விட்டான். அவன் நீரின் அடிப் பகுதிக்குச் சென்றபோது. மூக்கிலும் வாயிலும் நீர் நிறைந்தது. அதைத் துப்பக் கூடிய பலம் அவனுக்கு இல்லாமற் போயிருந்தது.
அவன் மூழ்க ஆரம்பித்தபோது, அவனுடைய வாயிலிருந்து ஒரு பயங்கரமான கூப்பாட்டுச் சத்தம் வெளியே கேட்டது. வானத்தையே கிழித்து அறுக்கக் கூடிய சக்தி அதற்கு இருந்தது. அந்த கூப்பாட்டுச் சத்தம் சூறாவளியைப் போல, இடி முழக்கத்தைப் போல, பெரும் புயலைப் போல, பூகம்பத்தைப் போல பூமியெங்கும் முழங்கியது. தூரத்தில் நகரத்தின் விளக்குகள் பட்டாசு போல வெடித்து, அணைந்து போயின. கடுமையான இருட்டு. நான்கு திசைகளிலும் பூமியிலும் வானத்திலும் முழுமையான இருட்டு....
அந்த இருட்டில் நீருக்கு மத்தியில் படகில் அமர்ந்து, மரணத்தைப் பார்த்து ஆட்கள் அஞ்சினார்கள்.
நீரில் மூழ்கி தாழ்ந்து கொண்டிருக்கும் ஏதோ தைரியம் கொண்ட மனிதனின் பூகம்பத்தை நினைவுபடுத்தும் உரத்த சத்தம். அதில் அனைத்து சக்திகளும் அடங்கியிருந்தன.
அவன் மூழ்கி கீழே சென்றாலும், அவனுடைய கூப்பாட்டுச் சத்தம் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கரையில் மங்கது நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கடுமையான இருட்டில் படகு எங்கே இருக்கிறது என்று அவன் தேடிக் கொண்டிருந்தான். பிறகு... அவன் தன்னுடைய மோத்தியை, தன் ஒரே நண்பனை நெஞ்சோடு சேர்த்து வைத்தவாறு எங்கோ நடந்து சென்றான்.
அவன் தனி மனிதனாக, ஒழுங்காக காலடிகளை எடுத்து வைத்து இருட்டிற்கு எதிராக நடந்தான். நடக்கும்போது அவன் மோத்தியை முத்தமிட்டான். மோத்தியின் கண்கள் நிறைவதைப் போல அவனுக்குத் தோன்றியது.
'நீ என் அழறே, மோத்தி? நாம் இரண்டு பேரும் எங்காவது போய் சேர்வோம். நீ தனியாக இல்லையே! நானும் தனியாக இல்லை, இரண்டு பேரும் சேர்ந்திருக்கிறோம். ஏன் அழறே?'
மோத்தியின் கழுத்தில் ஒரு அசைவு தோன்றியது. அவன் ஒத்துக் கொண்டதைப் போல முனகுவதாக தோன்றியது. அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
திடீரென்று மங்கதுவிற்கு மிகவும் பழைய ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது. கருவேல மரத்திற்கு அருகிலிருக்கும் வீட்டில் வசித்த வயதான பெண் ஒரு நாள் அவனிடம் சொன்னாள்: 'நாய்கள் மீது அன்பு வைத்தால், அவை நன்றியுடன் இருக்கும். நமக்கு கவலை உண்டாகும்போது, அவை அழும், சத்தம் உண்டாக்காது. அழுது கொண்டிருக்கும்.'
மங்கது மோத்தியை அன்புடன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக் கொண்டு நடந்தான். அந்த பாதையில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமலிருந்தது. வாழ்க்கை இல்லாமலிருந்தது. மரணமும் இருக்காது. சொர்க்கமும், நரகமும் இருக்காது.