இருள் நிறைந்த வானம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5160
'நேற்று நான் குறிப்பாக சொல்லிட்டுப் போனேன்ல, விஜயா... இதை படிச்சிருக்கணும்னு.'
'வாசலில் கட்டம் போட்டு குதித்துத் தாண்டுறதுதான் சாயங்காலம் அவளோட வேலையா இருக்கு'- சமையலறையிலிருந்து தாய்.
'சொல்லலைன்னா, இன்னைக்கு அவளுக்கு இரவு உணவு கிடையாது. பெண்ணை செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கா'- தந்தை.
தந்தை மீது பயம் இல்லாமலிருந்த காரணத்தால், ஏதாவது ஒன்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று என்னையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவள் விஷயத்தில் தன் அளவிற்கு எனக்கும் பொறுப்பு இருக்கிறது என்று தாமோதரன் நம்பினான். இன்னும் சொல்லப் போனால்- தன்னை விட, உணர்ச்சி மயமாக ஆரம்பித்து, வளர்ந்த அந்த நட்பு உறவைப் பற்றிய நினைவு எந்த அளவிற்கு ஆழமாக இதயத்தில் பதிந்து கிடக்கிறது! ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து... அரை இலட்சம் பேர் என்ற எண்ணிகை பலம் கொண்ட ஒரு பட்டாளப் பிரிவின் பதிவு மையத்தில் அன்று இரண்டாயிரம் க்ளார்க்குகள் இருந்தார்கள். அதில் பாதிக்கும் மேல் மலையாளிகள். மத்திய இந்தியாவிலிருந்த அந்த முகாமில் அந்த வகையில் ஒரு சிறிய கேரளம் உருவாக்கப்பட்டது. எல்லோரும் பதினேழுக்கும் இருபத்து ஐந்துக்கும் இடையில் உள்ள வயதைக் கொண்ட, எதற்கும் தயாராக இருக்கும் இளைஞர்கள். போர் தலையை உயர்த்திக் கொண்டு நிற்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத போர் நடக்கும் இடங்களுக்கு தினமும் 'ட்ராஃப்ட்' செல்கிறது. போனவர்களைப் பற்றி அதற்குப் பிறகு எதுவும் தெரிவதில்லை. எனினும், முகாமில் இருப்பவர்களின் உற்சாக பொங்குதலுக்கு எந்தவித குறையும் இல்லை. அது அந்தச் சூழ்நிலையின் தனித்துவ குணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் வயது காரணமாக இருக்குமோ? முகாமில் முதல் முறையாக ஒரு மலையாள நாடகத்தில் நடிப்பதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தது யார்? குட்டன் பிள்ளையா? ஃபிலிப்பா? முன்பு நாடக கம்பெனிகளில் நாயகர்களாக அரங்குகளில் கொடி கட்டிப் பறந்த வீரர்கள் அவ்விருவரும். சிறிய இலக்கியவாதிகளும் ரசிகர்களும் முகாமில் நிறைய இருந்தார்கள். நடிப்பதற்கான நாடகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒத்திகை ஆரம்பமானது. தலைமைப் பொறுப்புகளெல்லாம் நடிகர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும்தான். எனினும், ஒத்திகை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நான் தினமும் செல்வேன். பின்னால் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருப்பேன். என்னை யாரும் கவனிக்க மாட்டார்கள். கவனிக்கும் அளவிற்கு, நான்கு பேர் தெரிந்து கொள்ளும் அளவிற்கு சரக்கு எதுவும் என்னிடம் இல்லை. ஒத்திகை நடந்து கொண்டிருக்கும்போது, சோகம் நிறைந்த ஒரு காட்சியில் நாயகி பாடுவதற்கு ஒரு பாடல் வேண்டும் என்ற கருத்து வந்தது. பாடலை உருவாக்கக் கூடிய பொறுப்பை அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு இலக்கியவாதி ஏற்றுக் கொண்டான். ஆனால், அவன் எழுதிய பாடலைப் பாடி, திருப்தியை உண்டாக்க முடியவில்லை. நான்கைந்து நாட்கள் அதைச் சோதித்துப் பார்த்து தோல்வியை அடைந்ததும், நான் வெட்கத்துடன் கூறினேன்:
'நான் ஒரு பாடலை எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன்.'
தொடர்ந்து பாகெட்டிற்குள்ளிருந்து ஒரு தாளை எடுத்து நீட்டினேன். இலக்கியவாதிகளும் நடிகர்களும் சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆனால், நாயகியாக நடித்த ஆள் மெல்லிய, இனிய குரலில் அதைப் பாடியபோது அவர்களுடைய சந்தேகம் ஆச்சரியமாக மாறியது. பையன் பரவாயில்லையே! தொடர்ந்து அந்த நாடகத்திற்கு நான் நான்கைந்து பாடல்களை எழுதினேன். நாடகம் வெற்றி பெற்றது. வெற்றிக்கு முக்கியமான காரணம் பாடல்கள்தாம் என்று யாரோ கூறினார்கள்.
நாடகம் நடைபெற்ற மறுநாள்... சாயங்காலம் உணவு சாப்பிட்டு விட்டு, அறையில் வந்து அமர்ந்திருந்தபோது வெளுத்து, அழகாக இருந்த ஒரு ஆள் அறையின் கதவிற்கு அருகில் வந்து நின்று கொண்டு கேட்டான்:
'மாத்யூ என்பதுதானே பெயர்?'
'ஆமாம்...'
அவன் சிரித்தான். பிறகு உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தான். அப்போதுதான் தோளில் சிவப்பு நிற கோடுகளுக்கு மத்தியில் இருந்த சிறிய நட்சத்திரத்தைப் பார்த்தேன். ஜமேதார்... இதற்கு முன்பு அறிமுகமாகியிராத ஒரு ஜமேதார் சாதாரண ஒரு க்ளார்க்கைத் தேடி வந்திருக்கிறான். நான் எழுந்து நிற்க முயற்சித்தபோது, என்னைப் பிடித்து அமர வைத்துக் கொண்டு அவன் சொன்னான்:
'பெயர் ஜமேதார் ஹெட் க்ளார்க் தாமோதரன். பதினெட்டாவது ஸ்டாலியனிலிருந்து நேற்றுதான் வந்திருக்கிறேன். இரவில் நாடகம் பார்த்தேன். அந்த பாடல்கள் என்னைக் கவர்ந்து விட்டன. இந்த அளவிற்கு திறமை வைத்திருக்கும் ஒரு ஆள் பட்டாளத்தில் இருப்பான் என்று மனதில் நினைக்கவில்லை. வாழ்த்துக்கள்.'
தொடர்ந்து நலம் விசாரிப்புகள் நடந்தது. நான் அந்த ஆளை விட மிகவும் மரியாதைக்குரிய மனிதன் என்ற நிலையில்தான் உரையாடலும் நடவடிக்கைகளும்... அந்தச் சந்திப்பும் நலம் விசாரிப்பும் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களாக ஆயின. சாயங்காலம் ஆகி விட்டால், தாமோதரன் தேடி வருவான். அதற்குப் பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பாதையிலோ, மைதானத்தின் வழியாகவோ நடந்து செல்வோம். ஆச்சரியப்படும் வகையில் வேகமாக அந்த நட்பு உறவின் கண்ணிகள் பலம் கொண்டதாக ஆயின. ஒருவரை விட்டு ஒருவரிடம் ரகசியங்கள் இல்லை. இதயத்தில் மறைத்து வைத்திருப்பதற்கு எதுவுமில்லை. மனைவியின் கடிதங்கள் வந்தால், என்னிடம் காட்டுவான். குடும்ப விஷயங்களைப் பற்றி கருத்துக்கள் கேட்பான். அப்படித்தான் விஜயா அறிமுகமானாள். அப்போது விஜயாவிற்கு ஏழு வயதல்லவா? ஆமாம்... மூன்றாவது வகுப்பில் அவள் படித்துக் கொண்டிருந்தாள். தந்தை எழுதிய கடிதத்தின் அடிப் பகுதியில் அவள் எனக்கு தனியாக எழுதினாள்:
'அங்கிளுக்கு,
உங்களின் பாடலை எனக்கும் அம்மாவிற்கும் பாட தெரியும். அப்பாவுடன் நீங்களும் விடுமுறை எடுத்து வர வேண்டும். நான் பார்க்க வேண்டும்.'
ஆனால், நான் அங்கு சென்று பார்ப்பதற்குப் பதிலாக அவளும் தாயும் சேர்ந்து இங்கு வந்தார்கள். தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டில் அது நடந்தது...