இருள் நிறைந்த வானம் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5160
பின்னால் கூட்டத்தில் நின்றிருந்தவர்களில் யாரோ ஒருவரின் கிண்டல் நிறைந்த சத்தம். அந்த குள்ளமான மனிதன் எனக்கு நேர் முன்னால் இரண்டு மூன்று அடிகள் தூரத்தில் நின்று கொண்டிருந்தான். கள்ளின் தாங்க முடியாத வாசனை. கையிலிருந்த சிறிய கழியைச் கழற்றியவாறு அவன் கேட்டான்:
'நீயாடா அம்மாவுக்கும், மகளுக்கும் புருஷன்?'
திகைப்படைந்து நின்று விட்டேன். அந்த கேள்விக்கு பதில் கூறக் கூடிய மன தைரியத்தைக் கொண்டு வர முயற்சித்தேன். முயவில்லை. பதிலை எதிர்பார்த்து அவன் அதைக் கேட்கவில்லை. பின்னால் நின்றிருந்தவர்கள் நெருங்கி வந்தார்கள். விஜயா கடந்து வந்ததை நான் பார்க்கவில்லை. சத்தம் மட்டும் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, அவளுடைய கையில் கறியை அறுக்கும் கத்தி இருந்தது. பிரசவித்த புலியைப் போல அவள் உரத்த குரலில் கத்தினாள்:
'எந்த நாய்க்குடா என் வீட்டின் விஷயங்கள் தெரிய வேண்டியது? வாங்கடா... நான் ஒவ்வொண்ணா அறுத்து எறியிறேன்...'
ஒரு நிமிடம் அவன் உறைந்து போய் நின்று விட்டான். அப்போது பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் யாரோ ஓடி வந்து அமைதி உண்டாக்க முயற்சித்தார்கள். அதனால் தப்பிக்க முடிந்தது. ஓடினேனோ? நடக்கவில்லை. அது மட்டும் உண்மை. கால்கள் சிறகுகளாக வடிவமெடுத்திருக்கக் கூடாதா என்று மனதிற்குள் ஆசைப்பட்டேன். சாலையில் கால் வைத்த பிறகுதான் திரும்பிப் பார்ப்பதற்கே தைரியம் வந்தது.
'சார்...'
'என்ன?'
'உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கு. அதோ... வண்டி வர்றதை பார்க்குறீங்கள்ல...'
'ஓ... வண்டி!'
முற்றத்திற்கு வந்தேன். மழை எப்போது நின்றது? மழை மேகங்கள் அகன்று, தெளிவாக இருந்த மேற்கு திசை வானத்தில் சிவப்பு நிற மேகங்கள் சிதறிக் கிடந்தன. வண்டி 'செங்ஙாட'த்திலிருந்து (நீரில் பயணிக்கும் மிதவை. அக்கரையிலிருந்து இக்கரைக்கும், இக்கரையிலிருந்து அக்கரைக்கும் மனிதர்கள், பொருட்கள், வாகனங்கள் போய்ச் சேர்வதற்கு அது பயன்படும்) இறங்கிக் கொண்டிருந்தது. வேகமாக ஏறி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.