இருள் நிறைந்த வானம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5160
மழைத் துளிகள் விழுந்து கொண்டிருக்கின்றன அல்லவா? மழை மேகம் சுற்றிலும் பரவி விட்டிருக்கிறது. வண்டி வருமா?... லாரியும் மாட்டு வண்டிகளும் இப்போதும் தாங்கள் செல்லக் கூடிய நேரத்திற்காக காத்து கிடக்கின்றன. கார்களுக்குத்தான் முதலிடம். அது சரியா? மாட்டு வண்டியாக இருந்தாலும், லாரியாக இருந்தாலும் முன்னால் வந்தவர்களை முன்னாலேயே போகச் சொல்வதுதானே சரியானது? என்ன இந்த தவறும் சரியும்? இயற்கையிலேயே அப்படிப்பட்ட ஒரு சட்டம் பின்பற்றப்படுகிறதா? முன்பே வாழ்க்கை என்ற வட்டத்திற்குள் இறங்கியவர்கள் பார்த்துக் கொண்டு நின்றிருக்க, பின்னால் வந்த எவ்வளவு பேர் அவர்களைத் தாண்டிச் செல்கிறார்கள்! தாமோதரனைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். அவன் எவ்வளவு அருகில் மரணத்தைச் சந்தித்தான்! கையை நீட்டி எட்டிப் பிடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு நெருக்கத்தில்... இரவு பத்து மணி வரை நான் அந்த வீட்டில் இருந்தேன். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு முடித்து, தமாஷாக பேசி சிரித்துக் கொண்டிருந்து விட்டு, திரும்பி வந்தேன். பொழுது புலரும் நேரத்தில் கேள்விப் படுகிறேன்: ஜமேதார் தாமோதரன் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறான் என்று. பார்ப்பதற்காக சென்றிருந்தபோது, மருத்துவமனையின் சிவப்பு நிற கம்பளி போர்வைக்குள் தளர்ந்து போய் படுத்திருந்தான். புன்னகைக்க முயற்சித்தது, பலனில்லாமல் போனது. பேசியபோது நாக்கு குழைந்தது. அன்று சாயங்காலமே தூரத்திலிருந்த பெரிய மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது கூட, மரணம் இந்த அளவிற்கு அருகில் இருக்கிறது என்று சந்தேகப்படவில்லை. ஆனால், மறுநாள் காலையில் மிகவும் சீரியஸாக இருப்பதாக தந்தி கிடைத்தது. சாயங்காலம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும். அணிந்திருந்த ஆடைகளுடன் விஜயாவும் அவளுடைய அன்னையும் என்னுடன் சேர்ந்து புறப்பட்டார்கள். போய்ச் சேர்ந்தபோது, எங்கள் மூன்று பேரையும் மாறி மாறி பார்த்தான். அந்தப் பார்வையில் கவலையும் பயமும் முன்னால் நின்று கொண்டிருந்தன. நேராக படுக்க முடியவில்லை. மிகவும் சிரமத்துடன்தான் மூச்சு விட முடிந்தது. டாக்டர் என்னை மட்டும் வெளியே அழைத்து கேட்டார்:
'நண்பரா?'
'ஆமாம், சார்.'
'அளவுக்கு மேல குடிப்பாரோ?'
'இல்லை, சார்.'
'உங்களுக்குத் தெரியாது. முன்பு குடித்திருப்பார். ஈரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனி காப்பாற்ற முடியாது.'
'என்ன சார்?'
'இந்த இரவை விடியச் செய்வாரா என்பதே சந்தேகம்தான்.'
வெடித்துக் கொண்டு வந்த அழுகையை அடக்குவதற்கு முயற்சித்தபோது, டாக்டர் தாழ்ந்த குரலில் சொன்னார்:
'டோன்ட் டெல் ஹெர் நவ்.'
மெதுவாக காலடிகளை எடுத்து வைத்து ஏறிச் சென்றேன். அந்த முகத்தைப் பார்க்க முடியவில்லை. விஜயாவைப் பார்க்க முடியவில்லை. அவளுடைய தாயை...
'மாத்யூஸ்...'- மெல்லிய பலவீனமான குரல்.
'கொஞ்சம் இந்தப் பக்கம் வா.'
அருகில் சென்றேன். மிகவும் சிரமத்துடன் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன.
'இவளுக்கு யாருமே இல்லை என்ற விஷயம் தெரியும்ல? நான்... இனி... இனி... இங்கே இல்லை.'
நடுங்கிப் போகும் அளவிற்கு உரத்த குரலில் அழுகைச் சத்தம்... விஜயா தன் தாயின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்திருக்கிறாள். அந்த அழுகையில் கரைந்து போகும் பலவீனமான குரல் கட்டிலில் இருந்து கேட்டது.
'மாத்யூஸ் இருக்கிறான். அழாதே.'
தெளிவற்ற, பயங்கரமான ஒரு கனவைக் காண்பதைப்போல அனைத்தும் இருந்தன. இறுதியில் அது நடந்தது. விஜயாவின் பிஞ்சுக் கைகள் தன் தந்தையின் நடுங்கிக் கொண்டிருந்த கைகளுக்குள் நெரிக்கப்பட்ட நிலையில் இருந்தன.
'சார்!'
'.........'
'சார்!'
'ம்... என்ன?'- அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன். பீடி சுற்றும் மனிதன். சுற்றப்பட்ட பீடிகளை எண்ணி ஒப்படைத்து விட்டு, அவன் இலைகளை வெட்டிக் கொண்டிருக்கிறான்.
'சார், எதையோ ஆழமாக நினைத்துக் கொண்டிருந்தீர்களோ?'
'ம்... ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டிருந்தேன்.'
'சரி... இனிமேல் வண்டியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். பிறகு... எங்கே தங்குவீங்க?'
'இல்லை... தங்க வேண்டியது இல்லை. மழை பெய்து நின்ற பிறகு, நடந்து போகலாம்னு நினைக்கிறேன்.'
'அது சரி...'
அப்படி கூறியது நன்கு சிந்தித்துக் கூறிய கருத்து அல்ல. எதையும் தீர்மானிக்க முடியாத அளவிற்கு மனம் முற்றிலும் குழம்பிப் போய் கிடந்தது. விஜயா இப்போது என்ன படித்துக் கொண்டிருப்பாள்? அவளுடைய தாய்? அவளால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்த பிறகுதான் அவர்களால் என்னைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வருடத்தின் விடுமுறையும் கழிந்து திரும்பி வரும்போது, விஜயா எழுதுவாள்: 'இப்படி நடக்கிற அளவிற்கு... அங்கிள், உங்களுக்கு நாங்கள் எதுவும் செய்து விடவில்லையே! நீங்கள் எங்களை மறந்து விட்டீர்கள். ஆனால், நாங்கள் எந்தச் சமயத்திலும் மறக்க மாட்டோம்.' மறந்து விட்டேன் என்று அவள் எழுதுவது, அந்த வார்த்தையைக் கொண்டு நினைக்கப்படும் அர்த்தத்தில் அல்ல. அதற்கு மாறாக, அவர்களைப் பற்றி, யாருக்காவது ஞாபகம் என்ற ஒன்று இருந்தால், அது எனக்கு மட்டும்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு கூறுவதற்கு இல்லையென்றாலும், ஒரு நண்பனின் இறுதி ஆசைகளை நிறைவேற்ற முயற்சித்திருக்கிறேன். அவர்களைப் பற்றி என் அளவிற்கு அறிந்திருக்கக் கூடிய இன்னொரு நண்பன் அவனுக்கு இல்லை. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவனுடைய தந்தை எப்போதோ அவனுடன் கொண்டிருந்த அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டார். பாகம் பிரித்ததில் கொடுத்த பத்து சென்ட் நிலத்தை, படிப்பிற்காக செலவழித்த பணத்தைக் கணக்கு வைத்து அந்த தந்தை திரும்ப வாங்கிக் கொண்டார். அதற்குப் பிறகு எஞ்சியிருந்த உறவினர்கள் அவனுடைய மனைவியின் வழியில் வந்தவர்களே. விஜயாவிற்கு ஐந்து மாமன்மார்கள். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் அந்த அன்னையும் மகளும் அங்கு திரும்பிச் சென்றார்களோ? அப்படி இருக்க வழியில்லை. காரணம்- அவர்கள் அனைவரும் ஏற்கெனவே அவர்களுக்கு துரோகம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். தாமோதரன் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் காரணம். ஐந்து மருமகன்கள் இருக்க, அவன் தன் மனைவியையும் மகளையும் வாடகை வீட்டில்தான் இருக்கச் செய்திருக்கிறான். ஐந்து பேரில், கள்ளுக் கடை நடத்தும் ஒரு ஆளைப் பற்றி தாமோதரன் கூறியது ஞாபகத்தில் இருக்கிறது. மற்ற நான்கு பேரும் கள்ளு இறக்கும் தொழிலாளிகளாகவும், சுமை தூக்கும் தொழிலாளிகளாகவும் இருந்தார்கள். எதிர்பாராத வகையில், தாமோதரனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டதும், கடை வைத்திருந்தவன் சகோதரியையும் மகளையும் அங்கு வரும்படி அழைத்தான். வேறு எங்கும் போவதற்கு வழியில்லாமலிருந்ததால், அவர்கள் அங்கே சென்றார்கள்.