இருள் நிறைந்த வானம் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5160
ஆனால், அவர்கள் சென்று ஒரு மாதத்திற்குள் கேள்விப்பட்டது எந்த அளவிற்கு அதிர்ச்சியைத் தரக் கூடிய செய்தியாக இருந்தது! முகாமில் இருப்பவர்கள் நன்கொடையாக ஒவ்வொருவரிடமும் வாங்கி ஒப்படைத்த தொகையைக் கூட அவன் கடனாக வாங்கியிருக்கிறான். அந்த மனிதனின் நினைவுடன் மிகவும் நெருக்கமாக நட்பைக் காட்டப் கூடிய சில பொருட்களைக் கூட அந்த ஆள் கைப்பற்றிக் கொண்டான். தன் அன்னை கூறக் கூற, விஜயா எழுதும், கண்ணீரில் நனைந்த கடிதங்கள் என்னை அதிர்ச்சியடையச் செய்தன. என்ன செய்ய முடியும்? 'வேறு யாருமில்லை. எல்லாவற்றையும் விஜயாவின் அங்கிளிடம் கூறாமல் நான் யாரிடம் கூறுவது?' இறுதி நிமிடத்தில் அவன் கூறிய வார்த்தைகள் இதயத்தில் பதிந்து நின்றிருக்கின்றன....
ஓ... மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறதே! கடையின் தட்டி சாய்ந்து குத்தியபோது, நதியும் வானப் பரப்பும் கண்களுக்கு முன்னாலிருந்து மறைந்து விட்டன. மழைத் துளிகளுக்குத்தான் என்ன சக்தி! சுற்றி வீசிக் கொண்டிருந்த காற்றில் நீர் கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. தன்னுடைய அறிவுரையைக் கேட்காததால் உண்டான வருத்தம் காரணமாக பீடி சுற்றுபவன் பேசாமல் இருக்கிறானோ?
என்ன மோசமான நிமிடத்தில் இங்கு கிளம்பி வருவதற்கு தீர்மானித்தேன்? ஐந்தெட்டு வருட காலமாக மனதின் தூண்டுதலை தடை செய்து வைத்திருந்தேன். 'இந்த ஊருக்கு வந்தால் உன்னுடைய எலும்பு உன்னிடம் இருக்காது' என்ற மிரட்டல் கடிதம் கிடைத்ததுதான் காரணமோ? 'சகோதரியும் மருமகளும் என்ற நிலையில் வேண்டாம். மனிதப் பிறவிகள் என்ற நிலைக்காவது அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்' என்று கடையின் சொந்தக்காரனுக்கு எழுதியதற்குப் பதிலாகத்தான் அந்த மிரட்டல் கடிதம் வந்தது. அப்போது அந்த தாயும் மகளும் பட்டினி கிடந்தார்கள். அவர்களுடைய பென்ஷன் வேண்டுகோளைப் பற்றி என்ன தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதே தெரியவில்லை. கடை உரிமையாளருக்குச் சொந்தமான ஒரு இடத்தில் தென்னை மடல்களையும், கொம்புகளையும் கொண்டு உண்டாக்கப்பட்ட வீட்டில்தான் அவர்கள் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த தாயும் மகளும் பட்டினி கிடக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அந்த மனிதன் ஊரில் பெரிய மனிதனாகவும் பணக்காரனுமாக நடந்து திரிந்தான். அதைத் தெரிந்து கொண்டுதான் நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன். அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு அது வழி வகுத்தது. நான் முற்றிலும் தவறாக நினைக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு விஜயாவின் அன்னையுடன் இருக்கும் உறவு தவறான உறவு. ஊரில் என்னைப் பார்த்தால் கொன்று அழித்து விடுவதாக ஒரு மிரட்டல் வேறு. மீண்டும் விஜயாவின் அன்னையின் கடிதம் கிடைத்தபோதுதான், அந்த மிரட்டலுக்கான அர்த்தம் புரிந்தது. கடன் வாங்கிய பணத்தைத் திருப்பி கேட்டதே நான் கூறியதால்தானாம். கிடைக்கக் கூடிய சூழ்நிலையில் இருக்கும் பென்ஷன் தொகையையும் ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்று போட்டிருந்த திட்டத்திற்கு நான் தடையாக இருந்து விட்டால்...?
அந்த மிரட்டலால் நான் பின் வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அவர்களின் விஷயத்தில் மேலும் பொறுப்புணர்வு உண்டானது. இயலக் கூடிய பொருளாதார உதவிகளைச் செய்தேன். 'இயலக் கூடிய' என்று கூறுவது சரியா? சொந்த விஷயங்களை ஒதுக்கி வைத்து விட்டுக் கூட நான் அவர்களுக்கு உதவியிருக்கிறேன். சற்று தாமதமானாலும், பென்ஷன் அனுமதிக்கப்பட்டு, வந்து சேர்ந்தது. அதை எந்த அளவிற்கு நிம்மதிப் பெருமூச்சுடன் தெரிந்து கொண்டேன்! 'அரியர்ஸ்'ஸாக நல்ல ஒரு தொகை இருந்தது. பிறகு ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய செலவிற்குத் தேவைப்படும் பணம் கிடைக்கும். அந்த தகவல்கள் தெரிந்தவுடன், நான் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்:
'எல்லா விஷயங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இனி உங்களுக்கு என்று இருப்பது நீங்கள் மட்டுமே. உதவிக்கு கடவுளும். வேறு எந்த ஆளையும் எதிர்பார்க்க வேண்டாம்.'
அதைத் தொடர்ந்து அவர்கள் அந்தச் சிறிய வீட்டையும் நிலத்தையும் விலைக்கு வாங்கினார்கள். அதற்காக அவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிய எதிர்ப்பு எந்த அளவிற்கு பெரிதானது! அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள நேர்ந்தபோது இதய உறவுகளின் அடிப்படை குணங்களைப் பற்றியே சந்தேகம் உண்டாக ஆரம்பித்து விட்டது. சிறிது பணம் உண்டாக்கும் ஈர்ப்பிற்காக ஒரு சகோதரியுடன் இந்த அளவிற்கு கொடூரமாக நடந்து கொள்வதற்கு தைரியம் இருப்பது என்பது ஆச்சரியமான விஷயம்தானே? அந்த சகோதரனால் சந்தோஷத்துடன் வாழ முடிகிறது என்பதையும், சகோதரி விதவையாகவும் யாருமற்ற அனாதையாகவும் இருக்கிறாள் என்பதையும் மனதில் நினைக்கும்போது...
அந்த எதிர்ப்பைத் தாண்டி அவர்கள் வாழத்தான் செய்தார்கள். எதற்கும் சிரமப்படவில்லை. கிடைத்ததில் ஒரு பகுதியை மிச்சப்படுத்தி வைத்தார்கள். இதயத்தில் முழுமையான திருப்தியும் பெருமையும் உண்டாயின. ஆமாம்- தோற்கவில்லை. அந்த நண்பனின் இறுதி விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில் எனக்கு உள்ள பங்கு மிகச் சிறியதாகவே இருந்தாலும், இருக்கட்டுமே!
இறுதியில் அது நடந்தது. மிரட்டல் கடிதத்தைப் பற்றி மறக்கவில்லையென்றாலும், அந்த தாயையும் மகளையும் பார்ப்பது என்று முடிவெடுத்தேன். அது ஒரு தவறான முடிவோ? கேட்டும் கூறியும் ஒற்றையடிப் பாதையைக் கடந்து சென்றபோது, முற்றத்தில் தாயும் மகளும் காத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். சுத்தமும் ஐஸ்வர்யமும் உள்ள அந்தச் சிறிய வீடு இதயத்தில் குளிர்ச்சியை உண்டாக்கியது. விஜயாவின் தாயால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஆனால், எதிர்பார்த்திருந்ததை விட விஜயாவிடம் தைரியமும் செயலாற்றும் திறமையும் இருந்தன. தரையில் கால் ஊன்றாத வயதிலேயே, துயரங்கள் நிறைந்த வாழ்க்கையின் பக்கங்களைக் கடந்து வந்தபோது, அவையெல்லாம் அவளுக்குக் கிடைத்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால்- அந்தச் சிறிய வீட்டின் ஐஸ்வர்யத்திற்குப் பின்னால் இருக்கக் கூடிய உழைப்புகள் கூட அவளுடையதாகத்தான் இருக்க வேண்டும்...
திடீரென்று முற்றத்தில் சத்தம் கேட்டது:
'வீட்டுக்குள்ளே யாருடீ?'
நடுங்கிக் கொண்டே விஜயா சொன்னாள்:
'சங்கர் மாமா.'
எனக்கு முன்பே விஜயாவும் அவளுடைய அன்னையும் முற்றத்திற்கு வந்தார்கள். கறுத்து தடிமனாக இருந்த ஒரு குள்ளமான மனிதன் முற்றத்தில் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் எட்டு, பத்து ஆட்கள் இருந்தார்கள். வேலிக்கு அருகில் ஆண்களும் பெண்களுமாக நிறைய வேடிக்கை பார்ப்பவர்களும்... எல்லாவற்றையும் நான் தெளிவாக பார்த்தேனா? இல்லை... சூழ்நிலையின் தீவிரத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு தாமதமாகி விட்டது. என்ன...? என்ன செய்ய வேண்டும்?
'கொஞ்ச காலமாகவே சற்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.'