இருள் நிறைந்த வானம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5160
இருள் நிறைந்த வானம்
பாறப்புரத்து
தமிழில் : சுரா
நேரம் அதிகமாக ஆகி விட்டிருந்தாலும், கடைசி வண்டி வரும் என்று வெற்றிலை, பாக்கு கடைக்காரன் கூறுகிறான். இனியும் வண்டியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம் என்று பீடி சுற்றும் மனிதன் கூறுகிறான்.
பீடி சுற்றும் மனிதனின் கருத்துதான் மனதில் முன்னிலை வகிக்கிறது. கருத்துக்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்காமலேயே சராசரி அறிவைக் கொண்ட ஒரு ஆள் அதைச் செயல்படுத்த வேண்டும். மேற்கு திசை வானத்தின் விளிம்பு இருண்டு போய் காணப்படுகிறது. நான்கைந்து நாழிகைகள் பகல் இருந்தும், மாலையில் இருக்கக் கூடிய அளவிற்கு இருள் பரவியிருக்கிறது. பலமான காற்றில் கறுத்த மேகங்கள் வானப் பரப்பில் நீந்தி வந்து கொண்டிருப்பதைத் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆற்றில், ஏரியிலிருந்து வரும் அலைகளை ஞாபகப்படுத்தும் நீர் வளையங்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த நீர் வளையங்களை கீறி பிரித்துக் கொண்டு, சற்று சரிந்த நிலையில் பாய்மரப் படகுகள் பாய்ந்து வருவதைப் பார்ப்பதென்பது சுவாரசியமான விஷயமாகவே இருக்கிறது. எந்த நிமிடத்திலும் மழை ஆரம்பிக்கலாம். பருவ மழைக் காலத்தில் மாலையில் ஆரம்பமாகும் மழை எப்போது நிற்கும் என்பதைக் கூறவே முடியாதே! அதற்குப் பிறகும், ஆற்றின் படகுத் துறையிலிருந்த அந்த வெற்றிலை, பாக்கு கடையின் முற்றத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாத ஒரு மனிதனைப் போல நான் அமர்ந்திருந்தேன். போக முடியவில்லையென்றாலும், மழை பெய்யட்டுமே என்று மனதில் நினைக்கிறேன். ஒரு நல்ல மழை பெய்து நின்றால், இதயத்தின் கனமும் வெப்பமும் இல்லாமற் போய் விடும் என்ற வெற்று ஆசைதான் காரணமாக இருக்குமோ? கண்களை மூடிக் கொண்டு இருட்டு உண்டாக்க முயற்சிப்பதைப் போல. நிராயுதபாணியான ஒரு மனிதன், மனதில் நினைத்திராத நேரத்தில் எதிரியின் வளையத்திற்குள் மாட்டிக் கொள்வதைப் போல அந்த அனுபவம் ஏற்பட்டது. மறக்க முயற்சிக்க... முயற்சிக்க பிடிவாத குணம் கொண்ட குழந்தையைப் போல அது மனதில் உறுதியாக நின்று கொண்டிருந்தது. இந்த வயதிற்குள் இப்படிப்பட்டஒரு சூழ்நிலையைச் சந்திக்க வேண்டி நிலை உண்டாகியிருக்கிறதா? பதினைந்து வருடங்கள் ஒரு பட்டாளக்காரனாக ஊர் ஊராக சுற்றித் திரிந்த மனிதன்தான் இப்படி சந்தேகப்படுகிறான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தன்னுடன் முகாமில் தூங்கிக் கொண்டிருந்த நண்பனின் சரீரத்திலிருந்து பிரித்தெடுத்த தலை புழுதி படிந்த மண்ணில் கிடந்து துடிப்பதைப் பார்த்த, முன் வரிசையில் இருந்தவர்கள் குண்டடி பட்டு விழுந்து கிடக்க, அவர்கள் மீது நடந்து சென்ற ஒரு பட்டாளக்காரன். ஆனால், கண்காட்சியைப் பார்ப்பதற்காக என்பதைப் போல கூட்டமாக நின்று கொண்டிருந்த மனிதர்களுக்கு மத்தியில் தன்னை நிறுத்திக் கொண்டு, 'நீயாடா அம்மாவுக்கும், மகளுக்கும் புருஷன்?' என்று ஒரு பொறுக்கி கேள்வி கேட்டது இதுவே முதல் முறை. அவனுக்குப் பின்னால் எதையும் செய்யக் கூடிய கைத்தடிகளின் ஒரு கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள்? அப்போது நாக்கு சுருண்டு கொண்டது. தைரியம் விலகிச் சென்று விட்டது. அது என்னுடைய பலவீனத்தின் காரணமாகவா? என்னுடைய கண்களுக்கு முன்னால் இறுதி மூச்சை விட்ட ஒரு நண்பனின் விதவையான மனைவியையும், மகளையும் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். மேலும் சற்று விளக்கமாக கூறுவதாக இருந்தால்- ஆதரவற்ற அந்த தாயையும் மகளையும் என்னிடம் ஒப்படைத்து விட்டுத்தான் அந்த நண்பன் இறந்தான். 'மாத்யூஸ் இருக்கிறான். அழாதே.' என்று இறுதி நேரத்தில் அவன் திரும்பத் திரும்ப கூறினான். அப்படி கூறக் கூடிய அளவிற்கு அந்த நட்பு உறவிற்கு நெருக்கம் உண்டான கால கட்டத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, ஆச்சரியமும்...
வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்கிறது. தப்பித்து விட்டேனா? ஓ... லாரி. படகுத் துறைக்கு அப்பால் மாட்டு வண்டிகளும் கார்களும் செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றன. பேருந்து மட்டும் வரவில்லை...
'பிறகு?'
'ஓ...'
'தெற்கு பக்கம் போறீங்களா?'
'ஆமாம்.'
'எங்கே போறீங்க?'
'......'
'இங்கே... எங்கே போயிட்டு வர்றீங்க?'
'அந்தக் கரையில் ஒரு ஆளைப் பார்க்க வேண்டியதிருந்தது.'
'இனி வண்டி வராதுன்னு சொல்றாங்க.'
'அப்படியா?'
பெஞ்சின் தலைப் பகுதியில் இந்த ஆள் எப்போது வந்து உட்கார்ந்தார்? வண்டி வராதாமே! அது அப்படித்தான் நடக்கும், சாதாரண லைன் பேருந்துகளைப் பற்றிய எண்ணத்தை வைத்துக் கொண்டு இந்தச் சாலையில் பேருந்திற்காக காத்திருப்பது என்பது முட்டாள்தனமான செயல்தான். பத்து மைல் தூரத்திற்குள் மூன்று நதிகளைக் கடக்க வேண்டியதிருக்கிறது. புஞ்சை வயல்களுக்கு மத்தியில் உயர்த்தி அமைக்கப்பட்ட அணைக்கட்டின் வழியாகத் தான் பெரும்பாலும் பாதை. ஒரு நல்ல மழை பெய்தால், அணைக்கட்டு உடைய ஆரம்பித்து விடும். எங்கேனும் அணைக்கட்டு உடைந்திருக்குமோ?
'நாம நடக்கலாமே? வேகமாக நடந்தால் நான்கைந்து நாழிகைகள்ல இருட்டுற நேரத்திலாவது வீட்டை அடைந்து விடலாம். என்ன?'
நான் உரையாடவில்லை. அவர் மீண்டும் கேட்டார்:
'அக்கரையில் எந்த வீட்டுக்குப் போனதா சொன்னீங்க?'
'ஒரு... ஒரு நண்பனைப் பார்ப்பதற்காக போயிருந்தேன்.'
'வீட்டின் பெயர் என்ன?'
'வீட்டின் பெயர் ஞாபகத்தில் இல்லை.'
அவர் சற்று மிடுக்குடன், அர்த்தத்தை வைத்துக் கொண்டு பார்த்தார். பெயர் தெரியாத வீட்டிற்கு நண்பனைப் பார்ப்பதற்காகச் செல்வது! அப்போதுதான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். நடுத்தர வயதைக் கொண்ட, திடகாத்திரமான சரீரத்தைக் கொண்டிருக்கும் ஒரு ஆள். தலைமுடி முழுவதும் நரைத்திருந்தன. சேர்க்கைக்கு சரியான ஆள் அல்ல என்று தோன்றியிருக்க வேண்டும்- அவர் எழுந்து நடந்தார். போய்க் கொள்ளுங்கள். எனக்கு சிறிது தனிமை வேண்டும். மழையோ காற்றோ விருப்பம்போல வந்து கொள்ளட்டும். வேதனை நிறைந்த ஒரு கட்டு முள் இதயத்திற்குள் மாட்டிக் கிடக்கிறது. அந்த வேதனையை எப்படி அகற்றுவது?
'என் வீட்டில் எந்த நாய்க்குடா அதிகாரம்? தைரியம் இருந்தால், வாடா. ஒவ்வொண்ணையும் நான் அறுத்து எறியிறேன்' என்று கூறிக் கொண்டு விஜயா வெளியே வராமல் இருந்திருந்தால் அவன் என் உடலுக்கு பாதிப்பு உண்டாக்கியிருப்பானோ? 'ஆமாம்' என்று உள் மனம் பதில் கூறுகிறது. அப்போது காப்பாற்றியது அவள்தான்- விஜயா. சிறிய கண்களில் உதிர்ந்து விழுவதற்காக காத்திருக்கும் இரண்டு துளி கண்ணீருடன் ஒன்பது வயது கொண்ட ஒரு சிறுமி இதோ... என் கண்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறாள். திறந்து வைத்த ஆங்கில புத்தகத்திலும் என் முகத்திலும் அந்த கண்கள் மாறி மாறி பதிகின்றன.