
எங்களின் நல்ல உணர்வுகளையும் அவளுக்கு நாங்கள் தந்திருந்தோம். அதில் மிகப் பெரியது ஒரு பிச்சைக்காரனின் கெஞ்சல். நாங்கள் இருபத்தாறு பேர்கள் இருந்தோம். அவள் ஒரே ஒருத்தி. அவளுடைய தவறு காரணமாக இதைவிட வேதனை அனுபவிக்க எங்களால் முடியாது. நாங்கள் அவளை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினோம்! ஆனால், ஒரு வார்த்தைகூட அவள் வாய் திறந்து கூறவில்லை. பயம் காரணமாக உடல் முழுவதும் நடுங்க எங்களையே வெறித்துப் பார்த்தவாறு அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள்.
நாங்கள் கிண்டலாக அவளைப் பார்த்து சிரித்தோம். உரத்த குரலில் கத்தினோம். கோபத்தை வெளிப்படுத்தினோம். உள்ளேயிருந்து ஆட்கள் வெளியே வந்தார்கள். எங்களில் ஒருவன் டானியாவின் ப்ளவ்ஸின் கைப்பகுதியைப் பிடித்து இழுத்தான்.
திடீரென்று அவளுடைய கண்கள் சிவப்பாயின. கைகளால் அவள் தன்னுடைய கூந்தலைச் சரி பண்ணினாள். பிறகு எங்களைப் பார்த்து மிகவும் சாந்தமான குரலில் அவள் கேட்டாள்:
‘‘ஓ... என்னோட கேவலமான சிறைப் பறவைகளே!’’
தன்னைச் சுற்றி யாரும் இல்லை என்பது மாதிரி அவள் முன்னோக்கி நடந்தாள். அவளைப் பொறுத்தவரையில் அவளுக்கு முன்னால் யாரும் இல்லை. ஆமாம்- அவளுடைய பாதையில் யாருமில்லைதான்.
எங்களின் வளையத்தை விட்டு வெளியே வந்ததும், திரும்பிப் பார்க்காமல், ஆணவமும், கோபமும் கலந்த குரலில் அவள் சத்தமாகச் சொன்னாள்:
‘‘ஓ... அசிங்கம் பிடித்தவர்களே... நீங்க மிருகங்கள்...’’
மிடுக்குடன் தலையை உயர்த்தியவாறு அவள் முன்னோக்கி நடந்தாள்.
அந்த வாசலில் தேங்கியிருந்த சேற்றில், மழையில் நனைந்தவாறு சூரியன் வருவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாத இருண்ட ஆகாயத்திற்குக் கீழே நாங்கள் வெறுமனே நின்றிருந்தோம்.
பிறகு ஈரமான கற்சிறைக்குள் நாங்கள் திரும்பி நடந்தோம். முன்பு மாதிரி சூரிய வெளிச்சம் ஒரு முறை கூட அந்த சாளரத்தின் வழியாக எங்களின் அறையை எட்டிப் பார்க்கவில்லை. அதற்குப் பிறகு ஒரு நாள் கூட டானியா அந்தப் பக்கம் வரவேயில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook