ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும் - Page 7
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9194
கடந்த சில நாட்களாகவே டானியாவின் கவனத்தை ஈர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அந்தப் பட்டாளத்துக்காரன் செய்துகொண்டுதானிருந்தான். ஆனால், என்ன காரணத்தாலோ நாங்கள் யாரும் அந்த ஆளைப் பற்றிய அவளுடைய கருத்தைக் கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை. வழக்கம்போல எல்லா நாட்களிலும் பிஸ்கட் வாங்குவதற்காக அவள் உள்ளே வருவாள். அந்தச் சமயங்களில் அவளிடம் ஏதாவது மாறுதல் உண்டாகியிருப்பதாகவும் எங்களுக்குத் தோன்றவில்லை.
அன்றும் நாங்கள் அவளின் குரலைக் கேட்டோம்:
‘‘ஹலோ... சிறைப் பறவைகளே... நான் இதோ வந்துட்டேன்...’’
அவளை உள்ளே வர வைக்க நாங்கள் மிகுந்த வேகம் காட்டினோம். வழக்கத்திற்கு மாறாக அவளை நாங்கள் மவுனமாக வரவேற்றோம். அவளிடம் என்ன கேட்பது என்றோ என்ன சொல்ல வேண்டும் என்றோ தெரியாமல் நாங்கள் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அமைதியான பிரகாசமற்ற ஒரு மனிதர்களின் கூட்டமாக நாங்கள் அவளுக்கு முன்னால் வரிசையாக நின்றிருந்தோம். வழக்கத்தைவிட மாறுபட்டு இருந்த அந்த வெளிப்பாட்டைப் பார்த்த அவளின் முகம் வெளிறிப் போனதையும், ஒருவிதத் தடுமாற்றத்திற்கு ஆளாவதையும் எங்களால் உணர முடிந்தது. சிறிது தடுமாறிய குரலில் அவள் கேட்டாள்:
‘‘உங்களுக்கு என்ன ஆச்சு...? எப்போதும்போல இல்லாமல்...?’’
‘‘உனக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு...’’ - அவளுடைய முகத்தில் பார்வையைப் பதித்தவாறு தெளிவற்ற குரலில் பேக்கர் கேட்டார்.
‘‘எனக்கென்ன?’’
‘‘ஒண்ணுமில்ல...’’
‘‘எனக்கு பிஸ்கட் தாங்க சீக்கிரம்...’’
இதற்கு முன்பு அவள் ஒருமுறை கூட இப்படியொரு வேகத்தைக் காட்டியதில்லை.
‘‘நேரம் நிறைய இருக்கே!’’ என்று கூறியவாறு பேக்கர் அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
அடுத்த நிமிடம் அவள் கதவைத் திறந்து விட்டு வெளியேறினாள்.,
பேக்கர் தன்னுடைய கரண்டியை எடுத்து சுடுகல்லை நோக்கி நடந்துகொண்டே மெதுவான குரலில் சொன்னாள்:
‘‘அவ மாட்டிக்கிட்டா... அந்தப் பரட்டை பட்டாளத்துக்காரன் தன் வேலையைக் காட்டிட்டான்.’’
திக்குமுக்காடிப் போய் நிற்கும் செம்மறியாடுகளைப்போல மேஜையைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு, அமைதியாக சோர்வடைந்து போய், நாங்கள் எங்கள் வேலையை ஆரம்பித்தோம். அப்போது எங்களில் ஒருவன் சொன்னான்:
‘‘அவள் அப்படி செய்ய மாட்டா.’’
‘‘பேசாதே, இனி யாரும் அதிகமா இதைப்பற்றி பேச வேண்டாம்.’’
பேக்கர் உரத்த குரலில் சொன்னார்.
அவர் எங்களைவிட அனுபவசாலி என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். பட்டாளத்துக்காரனின் வெற்றியைப் பற்றிய உறுதி அவளுடைய வார்த்தைகளிலேயே வெளிப்பட்டது. எங்களுக்கு அதைக் கேட்டு கவலையும், வெறுப்பும் உண்டாயின.
பன்னிரண்டு மணிக்கு - மதிய உணவு வேளையின்போது பட்டாளத்துக்காரன் அங்கு வந்தான். எப்போதும் போல மிகவும் உற்சாகமாகக் காணப்பட்ட அவன் எங்களின் முகத்தையே உற்று பார்த்தான். அவனை நேருக்கு நேராக பார்ப்பதற்கு எங்களுக்குக் கூச்சமாக இருந்தது.
‘‘நண்பர்களே... ஒரு பட்டாளத்துக்காரனால் என்ன செய்ய முடியும்னு நான் உங்களுக்கு காண்பிச்சுத் தரணுமா என்ன?’’ - ஆணவத்தின் சீற்றத்துடன் அவன் கேட்டான்: ‘‘நீங்க கூடத்துக்கு வந்து அங்கே இருக்குற விரிசல் வழியா பாருங்க. நான் சொல்றது புரியுதா?’’
கூடத்திற்கு நாங்கள் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு சென்றோம். அங்கிருந்து மரப்பலகைகளால் ஆன சுவரில் முகத்தை வைத்துக் கொண்டு அதன் விரிசல் வழியாக நாங்கள் வாசலைப் பார்த்தோம். நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாகிவிட்டது. சிறிது நேரத்தில் சேறும் பனியும் நிறைந்திருந்த வாசல் வழியாக வேகமாக, ஆர்வம் பொங்கிய மனநிலையுடன் டானியா முன்னோக்கி நடந்து போனாள். நிலவறையின் படிகள் வழியாக டானியா மறைந்து போனாள். சிறிது நேரம் சென்றதும் அந்தப் பட்டாளத்துக்காரன் அவளுக்குப் பின்னால் வேகமாக நடந்து போனான். நிலவறைக்குள் அவனும் நுழைந்து மறைந்தான். அவன் தன் கைகளை காற்சட்டை பாக்கெட்டிற்குள் வைத்திருந்தான். மீசையின் ஒரு நுனியை அவன் நீவிக்கொண்டிருந்தான்.
அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. மழைத் துளிகள் சேற்றில் விழுந்து தெறித்தது. நனைந்து இரண்ட நாளாக இருந்தது அது. பனிப்படலம் மேற்கூரைக்கு மேலே பரந்து கிடந்தது. இருண்ட நிறத்தைக் கொண்ட பனியும் சேறும் சேர்ந்து உண்டாக்கிய தோற்றங்கள் பல இடங்களிலும் இருந்தன. அந்தக் கூடத்தில் பனியையும் குளிரையும் சகித்துக் கொண்டு ஒரே இடத்தில் நின்றிருப்பது என்பது ஒரு சந்தோஷமான விஷயமாக இல்லை.
அந்த நிலவறையை விட்டு முதலில் வெளியே வந்தது பட்டாளத்துக்காரன்தான். அவன் அலட்சியமாக வாசல் வழியாக நடந்து போனான். அவனுடைய கைகள் காற்சட்டையின் பாக்கெட்டிற்குள் இருந்தன. அவன் மீசையின் நுனியைத் தடவி விட்டுக் கொண்டிருந்தான். எப்போதும் இருக்கக்கூடிய அதே உருவம்... அதே நடவடிக்கைகள். அந்த ஆளைத் தொடர்ந்து டானியா வெளியே வந்தாள். அவளுடைய கண்கள் உற்சாகத்தாலும், ஆனந்தத்தாலும் பிரகாசித்தன. அவளுடைய உதடுகளில் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. ஒரு கனவில் நடப்பதைப் போல ஆடியவாறு பற்றிய எட்டுக்களுடன் அவள் நடந்தாள்.
இனிமேலும் அசையாமல் இருக்க எங்களால் முடியவில்லை. கதவைத் தள்ளித் திறந்து நாங்கள் வாசலுக்குச் சென்றோம். அவளைப் பார்த்து நாங்கள் உரத்த குரலில் கூப்பாடு போட்டோம். சீட்டி அடித்தோம்.
எங்களைப் பார்த்ததும் அவள் பதைபதைத்துப் போனாள். அந்தச் சேற்றில் அவள் அசையாமல் நின்றாள். அவளைச் சுற்றி கூட்டமாக நின்று கொண்டு அசிங்கமான சிரிப்புடன், கெட்ட வார்த்தைகளால் நாங்கள் அவளை அபிஷேகம் செய்தோம்.
அவளைச் சுற்றி நாங்கள் போட்ட வளையத்தை விட்டு தன்னால் தப்பித்து ஓட முடியாது என்பதை அவளுக்கு புரிய வைத்தோம். சிறிதும் அவசரப்படாமல் நாங்கள் அதைச் செய்து முடித்தோம். போதும் என்று கூறுகிற அளவிற்கு நாங்கள் அவளிடம் எதிர்ப்பைக் காட்ட முடிந்தது. நாங்கள் அவளை உடல் ரீதியாகத் தாக்காமல் இருந்தோம் என்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான். எங்களின் எதிர்ப்பு வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் தன்னுடைய தலையைச் சாய்த்தவாறு அவள் அமைதியாக நின்றிருந்தாள். அவளுக்கு நிகராகக் கோபத்தால் உண்டான விஷத்தையும் கெட்ட வார்த்தைகளையும் நாங்கள் மேலும் மேலும் துப்பிக்கொண்டேயிருந்தோம்.
அவளுடைய முகத்திலிருந்த ஒளி இருந்த இடமே தெரியாமல் காணாமல் போயிருந்தது. சிறிது நேரத்திற்குப் முன்பு வரை சந்தோஷம் தங்கியிருந்த அந்தக் கண்கள் பேந்தப் பேந்த விழித்தன. மூச்சு விடவே அவள் சிரமப்பட்டாள். உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
அவளைச் சுற்றிலும் கூட்டமாக நின்று அவளைப் பழிக்குப் பழி வாங்கிக் கொண்டிருந்தோம். அவள் எங்களை ஏமாற்றி விட்டாள் அல்லவா? அவள் எங்களுக்குச் சொந்தமானவளாக இருந்தாள்.