ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9194
சாட்டின் துணியால் ஆன கோட்டும், தங்கச் செயின் உள்ள கைக்கடிகாரத்தையும் அவன் அணிந்திருந்தான். அந்த பச்சை காமதேவனைப் பார்ப்பதற்காக நாங்கள் ஆர்வத்துடன் காத்திருந்தோம். அவனைப் பார்ப்பதற்கான விருப்பத்துடன், எங்களில் பலரும் பல நேரங்களில் அந்த வாசலில் ஓடிப்போய் நிற்போம்.
ஆனால், அவன் தானே எங்களின் பேக்கரி கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே வந்தான். கதவுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு புன்னகை செய்தவாறு அவன் சொன்னான்:
"ஹலோ... நலமாக இருக்கீங்களா, பையன்மார்களே?"
அந்தக் கதவு வழியாக உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கும் புகை போன்ற பனிப்படலம், வாசலில் நின்றிருக்கும் அந்த மனிதனின் பாதங்களைச் சுற்றி ஒரு போர்வையைப் போல படர்ந்து கொண்டிருக்கும். அவனுடைய வளைந்த, ஆடிக் கொண்டிருக்கும் மீசைக்கு நடுவில் மஞ்சள் நிறத்தைக் கொண்ட பற்கள் தெரியும். அவனுடைய மேல் கோட்டைப் பற்றி சில குறிப்பிடத்தக்க விஷயங்கள் இருந்தன. நீல நிறமுள்ள அந்தக் கோட்டின் மீது மின்னிக் கொண்டிருக்கும் பூக்கள் தைக்கப்பட்டிருந்தன. பொத்தான்கள் சிவப்பு நிற ரத்தினங்களைப் போல ஒளிர்ந்தன. கோட்டின் மீது பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு செயினும் இருந்தது.
அந்தப் பட்டாளத்துக்காரன் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தான். உயரமான, உறுதியான உடம்மையும், சிவந்த கன்னங்களையும், கறுத்த நிறத்திலிருந்த பெரிய கண்களையும் அவன் கொண்டிருந்தான். மிகவும் கூர்மையான, மென்மையான பார்வையை அவன் கொண்டிருந்தான். கஞ்சிப் பசை போட்ட எழுந்து நிற்கும் தொப்பியை அவன் தலையில் அணிந்திருந்தான். ஆச்சரிரியப்படும் வகையில் மிகவும் சுத்தமாகக் காணப்பட்ட அந்த ஆடைகளுக்குக் கீழே பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு ஜோடி புதிய ஷூக்களின் முனைகள் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.
கதவை அடைக்க வேண்டுமென்று மிகவும் பணிவான குரலில் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த தலைவன் அவனிடம் சொன்னான். எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அந்தக் கதவை அடைத்துவிட்டு அவன் முதலாளியைப் பற்றி எங்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். முதலாளி ஒரு மோசமான ஆள் என்றும், கொடூரமான மனிதன் என்றும், கஞ்சத்தனமான ஆள் என்றும் கூற நாங்கள் போட்டி போட்டோம். அவனிடம் முதலாளியைப் பற்றி நாங்கள் சொன்ன விஷயங்களை இங்கு எழுத முடியவில்லை. நாங்கள் கூறிய ஒவ்வொன்றையும் பட்டாளத்துக்காரன் மிகவும் கவனமாகக் கேட்டான். அவன் எங்கள் ஒவ்வொருவரையும் பார்த்தவாறு தன் மீசையைக் கையால் தடவிக் கொண்டிருந்தான்.
"உங்களோட இந்தக் கட்டிடத்திற்குள்ளே நிறைய இளம் பெண்கள் இருக்காங்கன்னு நினைக்கிறேன்..."- அவன் சொன்னான்.
எங்களில் சிலர் அதைக் கேட்டு பணிவாகச் சிரித்தார்கள். வேறு சிலரின் முகங்கள் அதைக் கேட்டு மலர ஆரம்பித்தன. நிறைய அருமையான உருப்படிகள் இருக்கக்கூடிய இடம்தான் அது என்று எங்களில் யாரோ ஒருவன் அந்த ஆளிடம் சொன்னான்.
"அப்படின்னா அவர்களைப் பயன்படுத்த வேண்டியதுதானே?" கண்களைச் சிமிட்டியவாறு பட்டாளத்துக்காரன் கேட்டான்.
நாங்கள் மீண்டும் சிரித்தோம். பதைபதைப்பு நிழல் பரப்பியிருக்கும் அடக்கிய ஒரு சிரிப்பு பட்டாளத்துக்காரனைப் போல சந்தோஷமான சூழ்நிலைகளை உண்டாக்க முயற்சி செய்தவர்கள்தான் எங்களில் பலரும் என்றாலும், எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. யாரோ ஒருவன் மெதுவாகத் தன்னுடைய மனதிற்குள் இருப்பதைத் தயங்காமல் வெளிப்படுத்தினான்:
"அவங்க எங்களுக்காக உள்ளவங்க இல்லையே!"
"இல்ல... நீங்க அதை விட்டு ரொம்பவும் தூரத்துல இருக்கீங்க..." - முழுமையான நம்பிக்கையுடன் பட்டாளத்துக்காரன் தொடர்ந்து சொன்னான்: "நீங்க அதுக்கு லாயக்கு இல்ல. உங்களால் அது முடியாது. அதாவது... உங்களுக்கு அதுக்குத் தேவையான கண்கள் இல்ல. ஒரு மனிதனின் பார்வையும் உடம்பும்தான் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். யாராவது ஒரு பெண்ணுக்கு நிரந்தரமா ஒரு ஆணோட உடம்பைக் கொடுத்துப் பாரு அவ்வளவுதான் வேணும். அவங்களுக்கு அப்பப்போ முரட்டுத்தனமான ஆளுங்களும் வேணும். நல்ல முரட்டுத்தனமா, சதைப்பிடிப்பான கைகளை வச்சிக்கிட்டு... இதை மாதிரி..."
பட்டாளத்துக்காரன் காற்சட்டை பாக்கெட்டிற்குள்ளிருந்து தன்னுடைய வலது கையை வெளியே எடுத்து, சட்டைக் கையை மேலே சுருட்டி விட்டுக் கொண்டு, அதை நாங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தூக்கிக் காட்டினான். நல்ல உறுதி படைத்த வெளுத்த கைகளுக்கு மேலே பொன் நிறத்தில் ரோமங்கள் பிரகாசித்தன.
‘‘காலும் நெஞ்சும் நல்லா உறுதியா இருக்கணும். நல்லா ஆடைகள் அணியணும். நல்லா ‘ஸ்டைலா’ நடக்கணும். என் விஷயத்தையே எடுத்துக்கங்களேன் பெண்கள் என்னைப் பார்த்தா விட மாட்டாங்க. ஆனா, நான் அவங்க பின்னாடி போக மாட்டேன். அவங்களைக் காதலிக்கிறது இல்ல. சில நேரங்கள்ல ஒரே நேரத்துல ஐந்து பெண்கள் என் உடம்பு மேல ஒட்டிக் கிடப்பாங்க’’ - கோதுமை நிறைக்கப்பட்ட மூட்டையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, பெண்கள் தன்னைத் தேடி வருவதைப் பற்றியும், அவர்களைத் தான் சமாளித்த விதம் பற்றியும் ஒரு நீளமான சொற்பொழிவையே அந்த ஆள் நடத்தினான். அதற்குப் பிறகு அவன் எழுந்து கதவைத் திறந்து வெளியேறினான். ‘கரகர’ சத்தத்துடன் கதவு மூடியது.
அந்த ஆள் போன பிறகும், அமைதியாக உட்கார்ந்து, அவன் சொன்ன விஷயங்களை நினைத்து நினைத்து நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்தோம். எங்களுக்கு அந்த ஆள் மீது இனம் புரியாத ஒரு பிரியம் உண்டாகத் தொடங்கியது. அவன் உள்ளே நுழைந்து வந்து எங்களுடன் பேசிய அந்த முறை மிகவும் இயல்பான ஒன்றாக இருந்தது. அதைப்போல வேறு யாரும் எங்களைத் தேடி வந்ததில்லை. பேசியதில்லை. நட்பை வெளிப்படுத்தியதில்லை. நாங்கள் வாசலுக்கு வருகிறபோது, மேல் மாடியில் வேலை செய்து கொண்டிருக்கும் தையல்காரிகளைப் பார்ப்போம். ஆனால், அவர்கள் எங்களை நிராகரிக்கவோ, எங்களைப் பார்த்துக் கோபப்படவோ, நாங்கள் மனிதர்களில்லை என்பது மாதிரி நடக்கவோ செய்யத்தான் செய்தார்கள். அந்தப் பெண்களை எப்படி வசப்படுத்துவது என்பதைப் பற்றித்தான் அன்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அழகான ஆடைகளும், கவர்ச்சியான ஒரு தொப்பியும் அணிந்து அவர்கள் வாசல் வழியாக நடந்துபோவதை சாளரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த எங்களுக்கு அவர்கள் மீது ஒரு வழிபாட்டுணர்வே தோன்றிவிட்டிருந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை அவர்கள் கேட்டிருந்தால், அவர்களுக்கு மிகுந்த வெட்கமும் வெறுப்பும் எங்கள் மீது உண்டாகியிருக்கும். பேசும்போது அந்த அளவிற்கு வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.
‘‘நம்ம டானியா மேல அந்த ஆளோட கண் விழாம இருந்தா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்’’ - கவலையுடன் எங்களின் தலைமை பேக்கர் சொன்னார்.