ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9195
நாங்கள் இருபத்தாறு ஆண்கள். ஒரு இருட்டு நிறைந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு காலை முதல் இரவு வரை கோதுமை மாவைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிப்பதுதான் வேலை. செங்கற்களால் ஆன, அழுக்கும் பாசியும் பிடித்த சுவரிலிருக்கும் துவாரங்கள் தான் அந்த அறையின் சாளரங்கள். வெளியே நோக்கியிருக்கும் சாளரத்தின் பலகைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அதன் வழியாகச் சூரிய ஒளி உள்ளே வரமுடியாமல் இருந்தது. சாளரத்தின் பலகைகளுக்கு மேலே பிசையப்பட்ட மாவு ஒட்டியிருந்தது.
தன்னுடைய நிறுவனத்தில் தயாராகும் ரொட்டியும், பிஸ்கட்டும் வெளியிலிருக்கும் பிச்சைக்காரர்களுக்கோ வறுமையின் பிடியில் சிக்கி பட்டினி கிடக்கும் எங்களின் உடன்பிறப்புகளுக்கோ கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக எங்களின் முதலாளி அந்தச் சாளரங்களுக்கு மேலே கம்பி வலையை இணைத்துக் கட்டியிருந்தார். திருடர்களின் கூட்டம் என்றுதான் முதலாளி எங்களை அழைத்தார். மிருகங்களின் அழுகிப்போன குடல்களைத்தான் மாமிசத்திற்குப் பதிலாகச் சாப்பிட எங்களுக்கு அவர் தந்தார். கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும் எட்டுக்கால் பூச்சியின் வலையும் சிலந்தி வலையும் ஆக்கிரமித்திருக்கும் அந்தக் கூரைக்குக் கீழே, இவ்வளவு ஆட்கள் மிகவும் நெருக்கமாக அந்தச் சுரங்கத்திற்குள் வாழ்க்கை மிகவும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.
பாசியும் அழுக்கும் பிடித்த அடையாளங்களும் நிறைந்த அந்தச் சுவர்களுக்குள் வாழ்க்கை மிகவும் கடுமை நிறைந்ததாகவும் கொடூரமானதாகவும் இருந்தது. தூக்கக் கலக்கம் காரணமாக வீங்கிப்போன முகத்துடன் அதிகாலை ஐந்து மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் நாங்கள்; நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எங்களின் சக நண்பர்கள் பிசைந்து வைத்திருக்கும் மாவைப் பயன்படுத்தி, சரியாக ஆறு மணிக்கு பிஸ்கட் தயாரிக்கும் வேலை ஆரம்பமாகிவிடும். காலை முதல் இரவு பத்து மணி வரை உள்ள அந்த நாள் முழுவதும் அந்த நீளமான மேஜைக்கு அருகில் அமர்ந்து கொண்டு, கட்டியாகப் பிசைந்து வைத்திருக்கும் மாவிற்கு பிஸ்கட் வடிவம் கொடுப்பதுதான் எங்களின் வேலை. உடல் வேதனைத் தீர வேண்டும் என்பதற்காக நாங்கள் உடலை நிமிர்த்தவும் சாய்க்கவும் செய்வோம். அப்போது மற்ற வேலைக்காரர்கள் கோதுமை மாவில் நீரைச் சேர்த்துப் பிசைந்து கொண்டிருப்பார்கள். பிஸ்கட்டுகள் உண்டாக்குவதற்காக அந்தப் பெரிய பாத்திரங்களில் கொதித்துக் கொண்டிருக்கும் நீர் இரைந்து கொண்டிருக்கும்போது, பேக்கரின் கரண்டி அடுப்பில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய சூடான கல்லைத் தட்டி ஓசை உண்டாக்கிக் கொண்டிருக்கும். அமைதியான கிண்டலைப்போல சிவந்த ஜுவாலைகள் அந்தப் பேக்கரியின் சுவர்களில் பிரகாசமாகத் தெரியும். பாதாளத்திற்குள்ளிருந்து தலையைத் தூக்கிப் பார்க்கும் ஒரு சைத்தானின் தலையை அந்த அடுப்பு ஞாபகப்படுத்தும். அதன் பிளந்த உதடுகளுக்கு நடுவில் நெருப்பு ஜுவாலைகள் தெரியும். மேலே இருக்கும் இரண்டு துவாரங்கள் வழியாக மூச்சு உஷ்ணக் காற்றாக மாறி எங்கள் மீது வீசிக் கொண்டிருக்கும்.
எங்களின் குறையாத கஷ்டங்களும் புலம்பல்களும் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களைப் போல இருந்தன. அந்தத் துவாரங்கள். சைத்தானின் இரக்கமற்ற, ஒன்றுமே செய்ய முடியாத பார்வைகளைப் போல அவை எங்களையே பார்த்துக் கொண்டிருந்தன. வெறுப்பு கலந்த, மனிதத்தன்மை சிறிதும் இல்லாத கண்களைப் போலிருந்த அந்தத் துவாரங்கள் எங்களையே வெறித்துப் பார்த்தன.
வாசலிலிருந்து எங்களின் கால்கள் மூலமாக உள்ளே வரும் அழுக்குக்கு மத்தியில், கடுமையான உஷ்ணம் நிலவிக் கொண்டிருக்கும் பேக்கரியின் அடுப்பிலிருந்து தயாராகும் பிஸ்கட் வாசனைக்கு நடுவில், பகல் முழுவதும் பிசையப்பட்ட மாவைப் பதப்படுத்துவதும் அதிலிருந்து பிஸ்கட்டிற்கு வடிவம் கொடுப்பதும்தான் நாங்கள் செய்து கொண்டிருந்தது. அதில் எங்களின் வியர்வை கலந்திருந்தது. அந்தக் கடினமான வேலையை நாங்கள் வெறுத்தோம். நாங்கள் உண்டாக்கிய அந்த பிஸ்கட்டுகளை நாங்கள் ஒருமுறை கூட தின்றதில்லை. பிஸ்கட்டிற்குப் பதிலாக கம்பு மாவால் தயாரிக்கப்பட்ட ரொட்டிதான் எங்களுக்கு விருப்பமான உணவு. ஒரு நீளமான மேஜையின் இரண்டு பக்கங்களிலும் ஒருவரையொருவர் பார்ப்பது மாதிரி உட்கார்ந்து கொண்டு ஒரு பக்கத்திற்கு ஒன்பது பேர் வீதம்- இயந்திரத்தைப் போல பல மணி நேரங்கள் எங்களின் கைகள் செயலாற்றிக் கொண்டேயிருக்கும்.
வேலையுடன் மிகவும் ஒன்றிப் போய் விடுவதன் காரணமாக, எங்களின் யாருக்கும் எங்களின் உடல் அசைவுகளைப் பற்றி நாங்கள் சுயஉணர்வுடன் இருப்பதேயில்லை. ஆனால், நண்பர்களின் நெற்றியின் ஒவ்வொரு சுருக்கமும் எங்களுக்கு மனப்பாடமாக இருக்கும். நாங்கள் பேசுவதற்கு எதுவுமேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்க நாங்கள் நன்கு பழகிக் கொண்டோம். எங்களின் ஒரு ஆள் இன்னொரு ஆளைத் திட்டும் நேரம் தவிர- திட்டுவது என்ற விஷயம் மிகவும் சாதாரணமானது- மீதி நேரங்களில் நாங்கள் அமைதியாகவே இருப்போம்.
நாங்கள் ஒருவரையொருவர் திட்டிக்கொள்வது எப்போதாவது ஒருமுறைதான் நடக்கும். ஏராளமாகப் பேசக்கூடிய மனிதர்களுக்கு அமைதியாக இருப்பது என்பது உண்மையிலேயே வேதனை அளிக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால், எதுவுமே பேச இல்லாதவர்களுக்கு மவுனமாக இருப்பது என்பது ஒரு சுகமான அனுபவம்தான். சில நேரங்களில் நாங்கள் பாட்டு பாடுவோம். பாட்டு ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை இப்படித்தான் வரும். வேலைக்கு மத்தியில் சோர்ந்து போன ஒரு குதிரையைப் போல யாராவது ஒருவர் நீண்ட பெருமூச்சை விடுவார். தொடர்ந்து பாட்டு பாடுபவனின் மனச்சுமையைக் குறைக்கிற மாதிரி ஏதாவது ஒரு பாட்டின் ஆரம்ப வரிகள் ஆரம்பமாகும். ஒரு ஆள் பாடும்போது மற்ற தொழிலாளிகள் அவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
நெருப்பு குண்டத்தின் ஜுவாலைகளைப் போல அந்தப் பாட்டு அப்படியே வெளியே செல்லும். முதலில் பாடியவனுடன் சேர்ந்து இன்னொரு ஆள் பாட ஆரம்பிப்பான். இரண்டு குரல்களும் இணைந்து அந்தத் தகித்துக் கொண்டிருக்கும் வெப்பச் சூழ்நிலையில் ஒலித்துக் கொண்டிருக்கும். திடீரென்று அந்தப் பாட்டுடன் மேலும் பல குரல்கள் சேர ஆரம்பிக்கும். அத்துடன் அந்தப் பாட்டு ஒரு அலையைப் போல மேலும் தீவிரமடைந்து உரத்த ஸ்தாயியில் கேட்டுக் கொண்டிருக்கும் அது எங்களுடைய சிறையின் கனமான சுவர்களைத் தகர்த்தெறிவதைப் போல் இருக்கும்.
அத்துடன் நாங்கள் இருபத்தாறு பேர்களும் சேர்ந்து பாட ஆரம்பிப்போம். நீண்ட நாட்கள் அப்படியே பாடிப் பாடிப் பழக்கமாகி விட்டதன் காரணமாக உரத்த குரலில் பாடுவதற்கு ஏற்றபடி எங்களின் குரல் தயாராகிவிட்டிருக்கும். நாங்கள் வேலை செய்யும் இடத்திற்குள் அந்தப் பாட்டுச் சத்தம் நிறைந்து நிற்கும். தேம்பி அழுது, சிறு சிறு வேதனைகளால் இதயத்தை ரணமாக்கி, பழைய காலங்களை மீண்டும் குதறி, அந்த அறிவில் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்து, இன்னும் விசாலமான இடம் இருக்க வேண்டும் என்று பாடல் வேண்டிக் கேட்டுக் கொள்ளும்.