ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9194
அதன் மூலமாக அவர்கள் மற்றவர்களின் எண்ணத்தைத் தெரிந்து கொள்ள முயல்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் மற்றவர்களின் பரிதாபத்தைப் பெற முயற்சிப்பார்கள். அது மட்டுமே அவர்களின் வாழ்க்கை முறையாக இருக்கும்.
அப்படிப்பட்ட மகிழ்ச்சி அளிக்காத ஒரு விஷயத்தை அவர்களிடமிருந்து பறித்துவிடால், அவர்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்களாக ஆகிவிடுவார்கள். அவர்களின் வாழ்க்கையின் மூலத்தையே இழந்துவிட்டதைப் போல் அவர்கள் உணர்வார்கள். அவர்கள் காலியாகிவிட்ட கூடைகளைப் போல ஆகிவிடுவார்கள். சில மனிதர்கள் எப்போதாவது ஏதாவதொரு கெட்ட பழக்கத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டானால், அவர்கள் அதற்கு அடிமைகளாகி விடுவார்கள். விரக்தியிலிருந்துதான் மனிதர்களுக்கு கெட்ட பழக்கங்கள் உண்டாகின்றன என்று கூறுவதில் தவறே இல்லை.
-பட்டாளத்துக்காரன் தன்னுடைய கருத்தில் உறுதியாக நின்று கொண்டிருந்தான். கவலையுடன் அவன் தலைமைப் பேக்கரையே வெறித்துப் பார்த்தான்.
‘‘இல்ல... யார் அவள்? நீங்க சொல்லணும்.’’
‘‘நான் சொல்லணுமா?’’ - பட்டாளத்துக்காரன் பக்கம் திரும்பியவாறு பேக்கர் கேட்டார்.
‘‘ஆமா...’’
‘‘உங்களுக்கு டானியாவைத் தெரியுமா?’’
‘‘தெரியாம என்ன?’’
‘‘அப்படின்னா... அவளைப் பற்றித்தான் சொன்னேன். அவள்கிட்ட நீங்க என்ன செய்ய முடியும்?’’
‘‘நானா?’’
‘‘பிறகு யாரு?’’
‘‘அது அவ்வளவு எளிது! பழம்... சாதாரண பழம்...’’
‘‘அப்படின்னா... அதையும்தான் நாங்க பார்க்குறோமே!’’
‘‘சரி... பாருங்க... நாம பார்ப்போம்...’’
‘‘ஏய்... அவள்கிட்ட அது நடக்காது.’’
‘‘இன்னொரு விஷயம்.... அதுக்கு ஒரு மாசமாவது எனக்கு வேணும்.’’
‘‘பிறகு என்ன பட்டாளத்துக்காரன்டா... உன்னால என்ன முடியுதுன்னுதான் பார்க்குறோமே!’’
‘‘அப்படியா? அப்போ... ரெண்டு வாரம் போதும். நான் யாருன்னு உனக்குக் காட்டுறேன். நீ சொன்ன பெண்ணோட பேர் என்ன? ஓ... டானியா!’’
‘‘நீ போயி வேலையைப் பாருடா.’’
‘‘பார்த்துக்கோ... பதினாலே நாட்கள்ல...’’
‘‘போடா...’’
பேக்கர் கோபத்துடன் தன்னுடைய கரண்டியை உயர்த்தி சுழற்றினார். அதைப் பார்த்து பட்டாளத்துக்காரன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். சிறிது நிராசை கலந்த குரலில் ‘‘சரி’’ என்று சொல்லிவிட்டு அவன் வெளியேறினான். நீண்ட நேரமாக மிகவும் கூர்ந்து இந்த விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், பட்டாளத்துக்காரன் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் நாங்கள் ஒருவரோடொருவர் உரத்த குரலில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம்.
யாரோ பேக்கரிடம் சொன்னார்கள்.
‘‘பாவல்... அது நடக்காத விஷயம்.’’
‘‘நீ உன் வேலையைப் பாரு’’ - பேக்கர் கோபத்துடன் சொன்னார்.
பட்டாளத்துக்காரனின் ஆணவத்தின் மீது துளை விழுந்துவிட்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அத்துடன் டானியா ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதையும் எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அது மனதிற்குள் ஒருவித புகைச்சலை உண்டாக்கிக் கொண்டிருந்தாலும், அதன் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வத்துடன் நாங்கள் இருந்தோம். அந்தப் பட்டாளத்துக்காரனுக்கு எதிராக டானியாவால் உறுதியாக நிற்க முடியுமா? எனினும் ஏகோபித்த குரலில் நாங்கள் எங்களுடைய கருத்தை உரத்த குரலில் சொன்னோம்:
‘‘டானியா... அவள் உறுதியாக நிற்பாள். யாராலும் அவளைக் காதல் வலையில் விழ வைக்க முடியாது.’’
எங்களின் ஆராதனை விக்கிரகத்தின் மீது ஒரு சோதனை நடத்துவது குறித்து நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தோம். எங்களின் வழிபாட்டு கடவுள் மிகவும் பிடிவாதமானது என்றும், எந்த வகையான சோதனைகளையும் சர்வ சாதாரணமாகக் கடந்து அது இறுதியில் வெற்றி பெறும் என்றும் நாங்கள் உறுதியாக நம்பினோம். பட்டாளத்துக்காரன் மிகவும் கோபமாகி விட்டிருப்பானா என்று கூட நாங்கள் சந்தேகித்தோம். அவன் இந்த விஷயத்தை மறந்துவிட்டிருப்பானா என்ற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. அப்படி நடந்திருந்தாலும் இன்னும் ஒன்றிரண்டு தடவைகள் அவனை இதே மாதிரி கோபம் கொள்ளச் செய்தால் என்ன என்று கூட நாங்கள் எண்ணினோம். முன்பு எப்போதும் உண்டாகாத அளவிற்கு ஒருவித வெறி எங்களிடம் உண்டானது.
ஒவ்வொரு நாளும் நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தோம். நாங்கள் எல்லாரும் திடீரென்று சுயநலவாதிகளாக மாறிவிட்டதைப்போல், அழகாகத் தெளிவாகப் பேச தொடங்கினோம். டானியாவிற்காக யாரோ ஒரு சைத்தானுடன் போர் புரிவதைப் போல் நாங்கள் உணர்ந்தோம். டானியாவிற்காக அந்தப் பட்டாளத்துக்காரன் ஒரு வலை விரித்திருக்கிறான் என்று பன் பேக்கரியில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் சொன்னதைக் கேட்டு முன்பு எப்போதும் இருந்ததைவிட பல மடங்கு அதிகமாக ஒரு ஜுரம் உண்டானதைப் போன்ற ஆவேசம் எங்களின் நரம்புகளுக்குள் படர்ந்தது.
அந்த ஆவேசத்தை மூலதனமாக வைத்து எங்களின் முதலாளி பதினான்கு மூட்டைகள் கோதுமை மாவை அதிகமாக எங்களுடைய மேஜை மேல் கொண்டு வந்து வைத்ததைக்கூட நாங்கள் ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த அதிகமான பணிச்சுமை எங்களைச் சிறிதும் பாதிக்கவில்லை. நாள் முழுவதும் ‘‘டானியா’’ என்ற மந்திரச் சொற்கள் மட்டும்தான் எங்களின் உதடுகளில் இருந்தன. அசாதாரணமான ஆர்வத்துடன் அவளுடைய காலை நேர வருகைகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் அவள் வரும்போது, நாங்கள் இதுவரை பார்த்திராத புதிய ஒரு டானியாவாக அவள் இருப்பாள் என்று நாங்கள் மனதில் நினைத்துக் கொள்வோம்.
அந்தப் பந்தயத்தை பற்றி நாங்கள் அவளிடம் எதுவும் கூறவில்லை.
நாங்கள் அவளிடம் எதையும் கேட்கவில்லை. எப்போதும் வழக்கமாக வரவேற்பதைப் போலத்தான் நாங்கள் அவளை வரவேற்றோம். ஆனால், புதிதாக ஏதோவொன்று எங்களுடைய மனதிற்குள் நுழைந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்தது. டானியாவிடம் முன்பு இருந்ததை விட மாறுபட்ட ஒரு உணர்வு எங்களுக்குள் உண்டாகியிருந்தது. அவள் மீது நாங்கள் கொண்ட பயம்தான் அது. குளிர்ந்த, கூர்மையான, குத்தி நுழையும் உருக்கு கத்தியைப்போல அது எல்லோருக்குள்ளும் நுழைந்திருந்தது.
‘‘டேய் பசங்களா... அந்த நாள் வந்திருச்சு...’’
ஒரு நாள் நாங்கள் வேலையை ஆரம்பித்தபோது எங்களின் தலைமை பேக்கர் சொன்னார்.
ஞாபகப்படுத்த வேண்டிய தேவையே இல்லாமல் நாங்கள் அதைப் பற்றி மனதில் நினைத்து வைத்திருந்தோம். எனினும் அதைக் கேட்டு நாங்கள் ஒரு மாதிரி ஆகிவிட்டோம்.
‘‘நீங்க அவளைக் கவனிங்க. அவள் இப்போ உள்ளே வருவா...’’- பேக்கர் சொன்னார்.
‘‘அது கண்ணால பார்க்கக்கூடிய ஒரு விஷயமில்ல...’’ - சிறிது கவலையுடன் யாரோ சொன்னார்கள்.
உரத்த குரலில் விவாதங்களும், சண்டைகளும் மீண்டும் ஆரம்பமாயின. மிகவும் சுத்தமானது என்றும் புனிதமானது என்றும் நாங்கள் நினைத்திருந்த அந்த விக்கிரகத்தின் உண்மை நிலை எதுவென்று இன்று தெரிந்துவிடும். அந்தச் சோதனையின் மூலம் அந்த விக்கிரகம் ஒரே நொடியில் தூள் தூளாக நொறுங்கிப் போய் விடுமோ என்ற நினைப்பு அன்று காலையில் எங்களின் மனதிற்குள் முதல் தடவையாக நுழைந்தது.